சமீபத்தில் எழுத்தாளர் திரு.ஜெயமோகன் அவர்களின் வலையத்தில் ‘ஆன்மீகம், போலி ஆன்மீகம்,மதம்’ என்ற ஒரு கட்டுரையை படித்தேன். அதில் ரத்த பீஜாசுரனை அம்பிகை கொன்ற புராணத்தில் உள்ள தியானம் சம்மந்தமான ஒர் ஆழமான தத்துவ குறியிடு உள்ளதை அவர் சுட்டிக்காட்டியதை படித்தேன். அதனை நகலெடுத்து இங்கு எழுதுகிறேன்.
ரத்த பீஜாசுரனை அம்பிகை கொன்ற புராணம்
அந்த அசுரனின் ஒவ்வொரு துளி குருதியும் ஒரு தனி ரத்த பீஜாசுரனாக முளைக்கும். அவனிடம் அம்பிகை போர்புரிய புகுந்தபோது அவள் ஆயுதத்தால் அவன் தாக்கப்பட்டபோதெல்லாம் பலவாக வளர்ந்தான். ஆகவே அம்பிகை இரண்டாக பிரிந்தாள். ஒரு அம்பிகை ரத்த தாகம் மிக்க ஒரு பூதமாக ஆனாள். அவள் இன்னொரு தெய்வீக அம்பிகை விட்ட அம்புகளால் ரத்த பீஜாசுரன் கொட்டிய குருதியை தன் நாவால் நக்கிக் குடித்தாள். அசுரன் அழிந்தான்.
நம் தாய்தெய்வ உருவகத்தில் இருந்து அம்பிகை என்ற பெருந்தெய்வம் உருவாகி வந்தது அதன் வரலாற்றுப்பின்னணி. ஆனால் இக்கதை ஆழமான ஒரு தத்துவக் குறியீடு. தியான மரபில் மிக முக்கியமானது. அடிப்படை இச்சைகளுடன் நேருக்குநேராக நின்று போர் புரிய முடியாது என்று சொல்கிறது இது. போர்புரியும்தோறும் அது பெருகும். ஆகவே நம் போதமே இரண்டாக பிரியவேண்டியிருக்கிறது, அம்பிகையாகவும் பூதமாகவும். தியானம் பழகியவார்களுக்கு மேலும் புரியும்.
இப்படித்தான் நாம் புராணங்களைப் பார்க்க வேண்டும். இப்படித்தான் புராணங்கள் சொல்லிக் கொடுக்கப்பட்டன. ஆனால் பத்தொன்பதாம் நூற்றாண்டுடன் நமக்கு பௌராணிக மரபு அழிந்தது. புராணத்தை தத்துவத்துடன் இணைத்து எளிமையாகச் சொல்லிக்கொடுக்கும் பெரும் புராணிக சொற்பொழிவாளர்கள் இல்லாமல் ஆனார்கள்.
விளைவாக புராணங்கள் மிக மேலோட்டமாக , வெறும் அற்புதக் கதைகளாக மட்டுமே வாசிக்கபப்டும் புரிந்துகொள்ளப்படும் சூழல் உருவாகியது. இன்று எந்தக்கோயிலில் சென்றாலும் அங்குள்ள அர்ச்சகர் அவருக்கு தோன்றிய ஓர் அற்புதக் கதையை சொல்வார். பல கதைகள் மக்குத்தனமாகவே இருக்கும்.
மூலம் : http://www.jeyamohan.in/?p=3720 [சுட்டியை தட்டுக]