முன் குறிப்பு: இப்பதிவினை எழுதுவதற்கு முன் நான் ஒன்றை கூறிக்கொள்ள விரும்புகிறேன். நான் கிரிக்கேட் விளையாட்டினை தவிர வேறு எந்த விளையாட்டினையும் தீவிர ஈட்டுபாட்டுடன் கவனித்தவனும் அல்ல தொடர்ந்து கவனித்தவனும் அல்ல. அவ்வப்போது சில விளையாட்டுகளை தொலைக்காட்சியில் பார்த்திருக்கிறேன். அவ்வளவு தான். பொதுவாக தனி நபர் (Athletics) விளையாட்டுகளுக்கான உலக பிரபல விளையாட்டு போட்டி என்றால் அது ஒலிம்பிக்ஸ் (Olympics) தான். எனக்கு விவரம் தெரிந்து அட்லாண்டா (Atlanta) 1996 தான் நான் முதல் முறையாக கேள்விப்பட்ட ஒலிம்பிக்ஸ். அதன் பின் பல ஒலிம்பிக்ஸ் வந்தாலும் 2008 பிஜீங் (Beijing) ஒலிம்பிக்ஸ்-இன் துவக்கம் மற்றும் நிறைவு நிகழ்ச்சிகளை கண்டுகளித்திருகிறேன். அதன் பின் அவ்வளவு பார்த்தது இல்லை. ஈடுபாடு இல்லை. பொதுவாக கடைசியில் இந்தியா ஏதாவது பதக்கம் வென்றதா என்று செய்திகள் மூலம் தெரிந்துக்கொள்வேன். இந்த ஆண்டு ரியோ (Rio) 2016வும் அப்படித்தான். ஆனால் லான்ஸ் ஆர்ம்ஸ்ட்ராங்க் (Lance Armstrong - Cycling) மற்றும் அண்ட்ரி அகாசி(Andre Agassi) போன்றோரின் சுய வாழ்க்கை வரலாறு புத்தகத்தை வாசித்து உள்ளேன். அவ்வளவுதான் எனக்கும் விளையாட்டுக்கும் உள்ள உறவு.
இந்த ஆண்டு ரியோ 2016 ஒலிம்பிக்ஸில் தீபா கர்மாகர் (Dipa Karmakar) என்கிற இருபத்தி மூன்று வயது பெண் ஜிம்னாஸ்டிக்கில் (Gymanstics) பங்கேற்று உள்ளார் என்று செய்தி அறிந்தேன். அதற்கு முன் எனக்கு தீபாவை தெரியாது. அதுமட்டும் அல்லாமல் இந்தியாவில் ஜிம்னாஸ்டிக்கில் இருந்து ஒருவர் ஓலிம்பிக்ஸில் பங்கேற்கும் அளவுக்கு இந்தியாவில் அதை பயில்கிறார்கள் என்பதே புதிய செய்தி. ஆக தீபா ஜிம்னாஸ்டிக்ஸில் விளையாட்டு பிரிவில் பங்கேற்கிறார் என்பதே எனக்கு ஆச்சர்யம் தான்!
தீபா கர்மாகர்
இந்தியாவின் வடகிழக்கு மாநிலமான திரிப்புராவின் (Tripura) தீபா கர்மாகர் ஜிம்னாஸிட்டிக்கில் ப்ரொடுனோவா (Produnova) என்னும் மிகவும் அபாயம் வாய்ந்த விளையாட்டு பிரிவில்/முறையில் சிறப்பாக (வெற்றிகரமாக நிறைவு செய்தார்) பங்கேற்றார் என்று அறிந்தேன். இந்த ப்ரோடுனோவாவில் ஒரு பிசிரு ஆனாலும் உயிருக்கே ஆபத்தாக விளைவுகள் அமைய வாய்ப்பு உள்ளது. இந்த ஆண்டு ஒரு ஆண் விளையாட்டில் காலினை ஊன்றும் பொழுது உடைத்துக்கொண்டார்.அவ்வளவு அபாயகரம். ஆனால் இதனை 1980 ஒலிம்பிக்ஸில் முதன் முதலாக வெற்றியின்றி முயற்சி செய்து உள்ளார் ஒரு விளையாட்டு வீரர். முதல் முறையாக 1999’இல் எலீனா ப்ரோடுனோவா (Elena Produnova) என்னும் பெண்மணி வெற்றிகரமாக முடித்து உள்ளார் (ஆதலால் ப்ரொடுனோவா என்று இவ்விளையாட்டு பிரிவுக்கு அப்பெயர்). அதன் பின் உலகில் மூன்றாவதாக முறையாக தீபா கர்மாகர் வெற்றிகராமாக உலக மேடைகளில் செய்து உள்ளார்.
தீபா கர்மாகர் - தகுதி சுற்றுகளில் ப்ரோடுனோவா
இந்தியாவில் இருந்து முதல் முறையாக ஒலிம்பிக்ஸில் ஜிம்னாஸ்டிக்ஸின் இறுதி சுற்றிற்கு (பாலினம் பாகு பாடு இன்றி) இந்த ஆண்டு தீபா கர்மாகர் நுழைந்தார். எட்டாவது இடத்தில் இருந்தார். ஆனால் இறுதி சுற்றில் நான்காவது இடத்தில் முடித்தார். அவர் எடுத்த புள்ளிகள் 15.066. மூன்றாவதாக எடுத்தவரின் புள்ளிகள் 15.216. வெறும் 0.15புள்ளிகளில் வெங்கல பதகத்தை கைபற்ற முடியவில்லை. ஆனால் இவர் கைப்பற்றிய நெஞ்சங்கள் லட்சோப லட்சம், கோடான கோடி என்று சொல்லலாம். கிரிக்கேட்டை தவிர எந்த விளையாட்டிற்கும் போதிய பயிற்சிகளும் வசதிகளும் ஊக்கமும் பார்வையாளர்களும் இல்லாத இந்திய நாட்டில் இந்த இடம் மிக முக்கியமானது. இது போன்ற பெயர் தெரியாத விளையாட்டில் நுழைந்தாலே இவர்களின் ஊக்கத்தை குறைக்க ஒரு கும்பல் இருந்துக்கொண்டே இருக்கும். வெற்றி பெற்றால் கூட இவர்களின் எதிர்க்கால வேலை வாய்ப்பு கேள்விக்குறியே. கனவுகளையும் லட்சியங்களையும் சுமந்துக்கொண்டு வசதி இல்லாமல் இவர்கள் படும் பாடு இவர்களுக்கு மன வேதனை அளிக்கும். ஊக்கம் இழக்க அதிக வாய்ப்பு உண்டு.
ஆனால் இத்தனை இடர்களையும் மீறி இவ்வீரர்கள் தோடும் சிகரங்கள் அதிகம். இவர்கள் தொட நினைக்கும் சிகரத்தின் உயரங்களும் அதிகம். இவர்களின் உழைப்பு அசாத்தியம். தன்னுள் நிகழ்வதை ஒருவன் கவனிப்பான் என்றால் தன் சாத்தியங்களும் எல்லைகளும் தெளிவாகும். இத்தகையவர்கள் வெளி உலகம் போடும் இடர்களை பொருட்டாக எண்ணாமல் தங்களை அவதானிக்கிறார்கள். ஆகச்சிறந்த சாத்தியங்களை நோக்கி நாம் ஏன் அடி எடுத்து வைக்கக்கூடாது என்று என்னுகிறார்கள். விளைவுவாக இவ்விளையாட்டுகளில் இவர்கள் மானுட சாத்தியத்தின் எல்லைகளை ஒரு அடி விரிவு படுத்துகிறார்கள். விதி சமைக்கிறார்கள்!!
இப்பெண் என் வாழ்வில் நான் நினைவில் வைத்துக்கொள்ளும் நபர்களில் ஒருவராக அமைவார்!!
2020 டொக்யோ (Tokyo) இவரின் கனவுகளுக்கு மகுடம் சூட்டும்!