எத்தனை வகையான மழை, இந்த ஒரே கவிதைக்குள்! முதலில் கரிய வேங்கை மரத்தில் வண்டுகள் மொய்ப்பது போல ரீங்கரிக்கும் இளம் மழை. பின்பு மலைச்சரிவுகள் அதிரும் யானைப் பிளிறல் போன்ற பெருமழை. கடல் முழுக்கக் குடித்து உமிழும் மழை. மண்ணை மூடும் நீலமணி அருவி . இடிநாதம் சேவை செய்ய ஊர்வலம் வரும் மழை.
இந்த உக்கிரமழை ஒரு காத்திருப்பின், எதிப்பார்ப்பின், ஒரு கற்பனைக் கூடலின் பேருருவம். எல்லா அலங்காரங்களும் கட்டுப்பாடுகளும் அறுந்து தெறிக்கும் வெறிமழை. அப்படிப்பட்ட ஒரு மழையில்தான் யுகங்களாக மண்ணில் பதிந்து, மௌனத்தின் பரு வடிவங்களாக ஆன மாமலைகள் தங்கள் ஒளி காக்கும் கண்களைக் திறக்கும் போலும். உறவை அப்படி அதன் உக்கிரத்துடன் அறிய வேண்டும். பிறகு நாசூக்கான மௌன மழைகள் வம்மை நினைப்பதில்லை. வாழ்க்கையில் எது முக்கியம் என்ற கேள்விக்குப் பிறகு இடமே இல்லை.
நற்றிணை - 112. குறிஞ்சி
பருவ வரவின்கண்ஆற்றாளாய தலைவியைத் தோழி வற்புறுத்தியது.
விருந்து எவன்செய்கோ- தோழி!- சாரல்
அரும்பு அற மலர்ந்த கருங் கால் வேங்கைச்
சுரும்பு இமிர் அடுக்கம் புலம்பக் களிறு அட்டு,
உரும்பு இல் உள்ளத்து அரிமா வழங்கும்
பெருங் கல் நாடன் வரவு அறிந்து, விரும்பி,
மாக் கடல் முகந்து, மணி நிறத்து அருவித்
தாழ் நீர் நனந் தலை அழுந்து படப் பாஅய்,
மலை இமைப்பது போல் மின்னி,
சிலை வல் ஏற்றொடு செறிந்த இம் மழைக்கே?
- பெருங்குன்றூர் கிழார்
(எளிய வடிவில்)
அரும்புகள் முழுக்க விரிந்த
கரிய கால் கொண்ட
வேங்கை மரத்தில்
வண்டுகள் ரீங்கரிக்கின்ற,
மலைச்சரிவுகள் எதிரொலிக்க
யானை மத்தகம் பிளந்து
சிம்மம் உலவுகின்ற,
மாமலையின் அதிபன் வருவத்தைச் சொல்ல
பெருங்கடல் நீர் அள்ளி ,
நீலமணியருவியென
மண் நிறைத்து ஒழுகி,
மலை கண்ணிமைப்பதுபோல
மின்னல் ஒளிர
இடிமேளம் முழங்க
வரும் இந்த மழையை
எப்படி வரவேற்பது தோழி!
(நன்றி: ஜெயமோகன் / சங்கச்சித்திரங்கள்)