கடந்த 2019 ஆண்டு ஏப்ரல் மாதம் 14ஆம் தேதி எழுத்தாளர் ஜெயமோகன் வலைத்தளத்தில் ஒரு 1000 மணிநேர வாசிப்பு சவால் அரைக்கூவப்பட்டது. ஆயுர்வேத டாக்டர் சுனில் கிருஷ்ணன் முன்னெடுத்தார் என்று நினைக்கிறேன். அவர் தொடர் வாசிப்பை வளர்க்க, வாசிப்பை தொடர் பழக்கமாக ஆக்கிக்கொள்ள இந்த மராத்தான் பயணத்தை துவங்கினார்.
இந்த சவால் எனக்கு பயனுள்ளதாக அமையும் தோன்றியது. ஏனெனில்
1) சில ஆண்டுகளாக நிறைய புத்தகங்கள் (ஒரு ஆண்டுக்கு 30-40 புத்தகம்) வாசிக்க வேண்டும் என்று goodReads.com தளத்தில் சபதம் ஏற்பேன். ஆனால் 25 புத்தகங்கள் படித்து முடிப்பதற்குள்ளாகவே நாக்கு தள்ளிவிடும். சில சமயம் டிசெம்பர் மாதங்களில் 100-150 பக்கங்கள் மட்டுமே கொண்ட குட்டி குட்டி புத்தகங்கள் படிப்பேன்.
2) வாசிப்பு பழக்கதை ஒரு அன்றாட பழக்கமாக மாற்றிக்கொள்ள வேண்டும்
3) கவனம் சிதராமல் நெடுந்நேரம் படிக்க வேண்டும்
4) பேரிலக்கிய படைப்புகளை படிக்க வேண்டும்
5) வீட்டில் வாங்கி வைத்து தூங்கும் 100+ புத்தகங்களை படித்து முடிக்க வேண்டும். (அதில் தேராது என்று இப்பொழுது தோன்றுவதை ஒதுக்கிவிட வேண்டும்).
விதி 1) வாங்கு குவித்துள்ளவற்றையெல்லாம் படித்து முடிக்கும் வரையில் புது புத்தகங்கள் வாங்கக் கூடாது என்னும் வைராக்கியத்தையும் சேர்த்துக்கொண்டேன் (கடைகளில் கிடைக்க அரிதான புத்தங்களை வாங்க அனுமதி உண்டு)
விதி 2) எனது கிண்டிலிலும்(Kindle) ஆடிபலிலும் (Audible) காட்சியாய் நிற்கும் புத்தகங்களை படித்து முடிக்கும் வரையில் புதிதாய் எதையும் வாங்க கூடாது என்று சபதமிட்டுக்கொண்டேன். விலை தள்ளுபடிகளை கண்டுக்கொள்ள கூடாது என்றும் விதிக்கொண்டேன்.
மேற்சொன்ன காரணங்களுக்காக நான் 1000 மணிநேர வாசிப்பு சவாலில் பங்கேற்றேன். முதலில் இரு வாரங்கள் படித்தேன். பிறகு ஒரு தொய்வு. பின்பு மறுபடியும் தொடர்ந்தேன். முதலில் வெல்ல வேண்டும் என்ற எண்ணமெல்லாம் இல்லை. ஆனால் தொடர்ந்து பயணிக்க வேண்டும் என்று மட்டுமே தோன்றியது. ஆதலால் தினமும் வாசித்தேன். ஒரு 30 நிமிடமாவது வாசித்திவிட வேண்டும் என்பதே எனது இலக்காக இருந்தது. பிறகு தினமும் வாசித்தேன்.
2019 அக்டோபர் நவம்பர் மாதங்கள் ஒரு தொய்வு. ஆனால் விட்ட இடத்தில் துவக்குவதில் ஒரு கசப்பும் இல்லை. அப்படியே விட்டால் தான் தவறு. யாரும் என்னை ஏன் என்று கேட்டு குற்ற உணர்வு ஏற்படுத்தவில்லை. [இச்சவாலின் நோக்கமே ஒருவரை ஒருவர் உற்சாகப்படுத்தி வாசிப்பு பழக்கத்தை வளர்த்துக்கொள்வதே ஆகும். ஆதலால் யாரும் என்னை இகழவில்லை] தொடர்ந்து வாசிக்க வாசிக்க முதலாம் வெற்றியாளர் சாந்தமூர்த்தி அவர்கள் ஒவ்வொரு 100 மணிநேரங்கள் கடக்கும் பொழுதும் ஊக்கபடுத்தினார். அவருக்கு எனது நன்றிகள். பின்பு வாசித்துக்கொண்டே இருப்பேன்.
சில சமயங்களில் விட்டுவிடலாம் என்று தோன்றும். ஆனால் என்றும் நான் சொல்லிக்கொள்ளும் ஆபத் வாக்கியம் “எண்ணித் துணிக கருமம் துணிந்தபின் எண்ணுவம் என்பது இழுக்கு” என்றென்பதே ஆகும். அதையும் நான் இங்கு சொல்லிக்கொண்டேன். இப்பொழுதும் சொல்லிக்கொண்டேன். நீ விரைவாக முடிக்க வேண்டாம். ஒரு 30-45 நிமிடம் படித்தால் போதும். ஆனால் சராசரியாக 2 மணி நேரம் படிப்பேன். பெரும்பாலும் காலையில் எழுந்த உடன் 90 நிமிடங்கள் படிப்பேன். பின்பு நடைப்பயிற்சி செய்யும் பொழுது ஒலிவடிவில் (Audible (மாத சந்தா உறுப்பினராக்கும் நான்)) 30 நிமிடங்கள் கேட்பேன். இப்படி தினமும் படித்தேன்.
இப்படி தொடர்ந்து வாசித்ததால் நான் செப்டம்பர் ஒன்று அன்று 1000 மணி நேர வாசிப்பு சவாலை அடைந்தேன்.
இப்பயணத்தில் நான் கற்றவை
1) தொடர்ந்து ஒன்றை முயற்சி எடுத்து செய்தால் அது ஒரு நல்லொழுக்கமாக மாறும். அந்த நல்லொழுக்கத்தை நாம் மற்ற பழக்கங்களுக்கும் செலுத்தினால் பயன் கிடைக்கும் என்ற நம்பிக்கை உண்டாகியது. நாமே நமக்கு ஒரு முன்மாதிரி
2) இப்போட்டியில் இலக்கியம் என்றில்லை துறைசார் புத்தகங்களை வாசிக்கலாம் என்று அனுமதி இருந்தது. ஆதலால் நான் Audible-இல் மாத சந்தா உறுப்பினராகி பல தரப்பட்ட புத்தகங்களை கேட்டேன். வாழ்க்கை வரலாறு, உடல் ஆரோக்கியம், சுயமுன்னேற்றம், வணிகம், மேலாண்மை, என்று எல்லா தளங்களிலும் கேட்டேன். அப்படி கேட்கையில் உடல் ஆரோக்கியம் பற்றி ஆர்வம் பிறந்து தினமும் நடைப்பயிற்சியும் ஓட்டப்பயிற்சியும் சிறிது உடல் எடை பயிற்சிகளும் யோகாவும் செய்தேன். மேலும் உணவு பற்றியும் சற்று அறிந்துக்கொண்டு எனது உணவு பழக்கத்தையும் கண்காணித்து மாற்றிக்கொண்டேன்.அங்கேயும் வாசிப்பு பயணத்தில் இருந்த ஏற்றத் தாழ்வுகள் தொய்வுகள் இருந்தன. ஆனால் பயணத்தை விட்ட இடத்தில் தொடர்ந்தேன். கிட்ட தட்ட 13 கிலோ எடை குறைத்துள்ளேன். தக்கவைக்கக்கொள்ளக் கூடிய எடை குறைப்பாகவே ( sustainable weight loss ஆக) மாற்றிக்கொண்டு இருக்கிறேன். ஆனால் அதற்கு ஒழுக்கம் மிக அவசியம் என்பதை உணர்ந்தேன். அதற்கு நான் படித்த புத்தகங்களும் உதவின. ஒவ்வொரு நாளும் 1% முன்னேற்றம் ஒரு வருடத்தில் 360% சதவிகித முன்னேற்றத்தை கொடுக்கும். ஒரே நாளில் 50% முன்னேற்றம் கொள்வது தான் கடினம். ஒவ்வொரு அடியாக அடிமேல் அடி வைத்து முன்னேறலாம்.
3) இவ்விரு பழக்கங்களும் ஒழுக்கத்தின் அவசியத்தை உணர்த்தின. நமக்கு எக்காலமும் உந்துதல் இருக்காது. சலிப்பும் அவசியமின்மையும் வரும். நமது ஆழ்மனது 1000 தந்திரங்களை செய்து நம்மை தோல்வி அடைய செய்யும். ஆனால் அதனை எதிர்க்கொள்ள ஒழுக்க தேவை. சிறுக சிறுக நமது ஆழ் மனதை மாற்ற முடியும் என்று.
4) பல துரைகளில் நான் பலவற்றை கற்று, அவற்றை குறிப்புகளாக எழுதி வைக்கும் பழக்கம் எனக்கு எனது கவனத்தை அதிகப்படுத்தியுள்ளது. எனது எழுத்தின் ஆழத்தையும் சிந்தனை திறனையும் அதிகப்படுத்தியுள்ளது. பல நேரங்களில் நான் படித்த பலவற்றை ஒன்றுடன் ஒன்று தொடர்பு படுத்திப் பார்க்கும் பொழுது எனக்கு அவை நன்றாக மனதில் பதிகின்றன
5) ஒரு நேர்காணல் உரையாடலில் எழுத்தாளர் எஸ்.ராமகிருஷ்ணன் அவர்கள் "எனக்கு எழுத்து பணி. தான் அதை திட்டமிட்டே செய்வேன். அதுப்போலவே வாசிப்பையும் திட்டமிட்டே செய்வேன்" என்றார். எனக்கு அப்பொழுது நான் வாசித்த/கேட்ட ஒரு புத்தகம் (Measure What Matters) நினைவுக்கு வந்தது. நாமும் வாசிப்பைத் திட்டமிட்டு செயல்படுத்த வேண்டும் என்று. அப்படிச் செய்வதனால் எந்தப் புத்தகத்தை அடுத்து வாசிப்பது என்று தேர்வு செய்வதில் நேரவிரயத்தை குறைக்கலாம் மற்றும் ஒவ்வொரு காலாண்டும் ஒரு குறிப்பிட்ட எண்ணிக்கையில் படித்து சீராக படிக்கலாம் என்னும் ஒழுங்கு உருவாகியது. அது மிகவும் பயனுள்ளதாக அமைந்தது.
6) GoodReads.com இல் 2019 ஆம் ஆண்டு 45 புத்தகம் (44 புத்தகம் இலக்கு) படித்தேன. இப்பொழுது 2020 ஆம் ஆண்டு ஏற்கனவே 40 புத்தகம் படித்துள்ளேன் (60 என்பதே எனது இலக்கு. இன்னும் 4 மாதங்கள் உள்ளன).
7) என்னை அறிந்துக்கொள்ள இந்த வாசிப்புகள் உதவியது. பல புத்தங்களில் என்னைப்பற்றி அறிந்துக்கொண்டேன். இந்த சவாலை முடிக்கையில் நான் ஒரு குறிக்கொளை எடுத்துக்கொண்டால் அதை முடிப்பவன் அதற்கான மனதிடம் உள்ளவன் என்பதை மீண்டும் நிறுபித்துக்கொண்ட நேரம் இது. இந்த ஊக்கம் எனக்கு மிகவும் தேவையான ஒரு காலக்கட்டமும் கூட.
8) நான் திருக்குறள் கற்கும் ஒரு திட்டத்தை 2013 இறுதியில் துவங்கினேன். பல்வேறு காரணங்களால் அது இழுத்துக்கொண்டே சென்றது. ஆனால் இந்த வாசிப்பு சவாலுக்கு வந்த உடன் திருக்குறள் கற்பதை ஒரு தவம் போலவே செய்தேன். இன்னும் சுமார் 53 நாட்கள் மட்டுமே இருக்கிறது. 2020 அக்டோபரக்குள் திருக்குறளை கற்று அதற்கான உரையினையும் முடித்துவிடுவேன். திருக்குறளில் நான் கற்றவற்றின் பயணத்தை நவம்பரில் எழுதவேன்.
இச்சவாலில் 2019 ஏப்ரல் 18ஆம் தேதி முதல் பங்கேற்று 2020 செப்டம்பர் 1ஆம் தேதி 1000 மணிநேரம் வாசித்து முடித்தேன். நான் நான்காவதாக வாசித்து முடித்தேன். (முதலில் முடித்தவர் ஒரு வருடம் முன்பே முடித்து இப்பொழுது 2800 மணிநேரங்கள் கடந்து சென்றுக்கொண்டு இருக்கிறார்) நான் எடுத்துக்கொண்டது மொத்தம் 502 நாட்கள். சராசரியாக 2 மணிநேரம் ஒரு நாளைக்கு.
இப்பதிவை எழுதும் பொழுது என் மனதுக்குள் வரும் ஒரு திருக்குறள் ஆபத்வாக்கியமாய் தோன்றியது
குறள் 611
அருமை உடைத்தென்று அசாவாமை வேண்டும்
பெருமை முயற்சி தரும்
நம் குறிக்கோள்கள் அருமையானது என்று மனதிற்கு தோன்றுமளவு ஒரு குறிக்கோளை அமைத்துக்கொண்டு தளராது முயற்சி செய்தால் நமக்கு பலனும் பெருமையும் கண்டிப்பாய் கிட்டும்.
இதுப்போல் சவால்களை வாழ்வில் ஒவ்வொரு விஷயத்திலும் அமைத்துக்கொண்டால் வாழ்வில் பல விஷயங்கள் எவ்வளவு சீர் படும். நன்மை பயக்கும். செய்வோம்.
அடுத்த 87 நாட்களில் மற்றுமொரு சுய குறிக்கோளை அடைய முற்பட்டுள்ளேன். இறைவனின் துணைபுரியட்டும்.
பி.கு: 2-3 மாதங்கள் முன்பு கூட சிலர் புதிதாய் இந்த சவாலில் சேர்ந்து 200 மணிநேரங்களை கடந்துள்ளனர். ஒரு 8ஆவது படிக்கும் மாணவிக்கூட (ஒரு வாசகரின் பேத்தி) இதில் தீயாய் படித்து 300 மணி நேரங்களை கடந்துள்ளாள். ஆதலால் இந்த வாசிப்பு சவாலில் இப்பொழுதுக் கூட யார்வேண்டுமானாலும் சேரலாம். அவர்கள் செய்யவேண்டியது எல்லாம் சுனீல் கிருஷ்ணன் அவர்களுக்கு ( முகவரி: drsuneelkrishnan@gmail.com) ஒரு மின் அஞ்சல் அனுப்பவேண்டியது தான்.
========================================================
முதலில் சவாலை கடந்து இன்றும் தொடர்ந்து சென்றுக்கொண்டு இருக்கும் திரு.சாந்தமூர்த்தி அவர்களின் வாழ்த்து
@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@
சுரேஷும்,ராஜேஷும் அருகருகே இருந்தனர். 996 மணியில் இருவரும் அசைவற்று நின்று விட்டனர்."நீங்கள் முதலில் செல்லுங்கள்." "இல்லையில்லை நீங்கள் முதலில் செல்லுங்கள்." என்பது போல் இருவரும் பெருந்தன்மையுடன் தயங்கினர்.ஒரு வழியாக இன்று ராஜேஷ் 1000 மணி நேரத்தைக் கடந்தார். இன்றிரவோ நாளையோ சுரேஷ்பிரதீப்பும்
இலக்கை அடைந்து விடுவார்.எனவே இருவருமே நம் வாழ்த்துகளுக்கு உரியவர்கள்.
@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@
வணக்கம்!"சரியான போட்டி! (வெல்வதற்கல்ல) " என்ற புதிய கட்டுரை இன்று என் வலைப் பூவில் வெளியாகியுள்ளது. அதன் சுட்டி:
https://wp.me/patmC2-r0
சாந்தமூர்த்தி
அவரது கட்டுரை கீழே
சரியான போட்டி! (வெல்வதற்கல்ல)
@ இன்று (02-09-2020) காலையில் நான் பார்த்த பதிவுகளின் படி ராஜேஷ் ஆயிரம் மணி நேர வாசிப்பு சவாலில் வெற்றிகரமாக ஆயிரம் மணி நேர இலக்கைக் கடந்து சாதனை புரிந்திருக்கிறார். அவருக்கு நெஞ்சம் நிறைந்த வாழ்த்துக்கள்!சுரேஷ் பிரதீப்புக்கு அதை விட அதிக வாழ்த்துக்கள்!
@ ராஜேஷ் 900 மணி நேரத்தைக் கடந்தவுடன் அவரை வாழ்த்தும் போது சிக்ஸரும்,பவுண்டரியுமாக விளாசி முடியுங்கள் என்று நான் குறிப்பிட்டேன். அவர் தனக்கு டெஸ்ட் மேட்ச் தான் பிடிக்கிறது என்றார்.மெதுவாகவே இலக்கு நோக்கி நகர்ந்தார்.ஆனால் கடைசி நேரத்தில் போட்டியில் தீ பற்றத் தொடங்கியது.
@ சுரேஷும்,ராஜேஷும் அருகருகே இருந்தனர். 996 மணியில் இருவரும் அசைவற்று நின்று விட்டனர்.”நீங்கள் முதலில் செல்லுங்கள்.” “இல்லையில்லை நீங்கள் முதலில் செல்லுங்கள்.”என்பது போல் இருவரும் பெருந்தன்மையுடன் தயங்கினர்.ஒரு வழியாக இன்று ராஜேஷ் 1000 மணி நேரத்தைக் கடந்தார். இன்றிரவோ நாளையோ சுரேஷ் பிரதீப்பும் இலக்கை அடைந்து விடுவார்.எனவே இருவருமே நம் வாழ்த்துகளுக்கு உரியவர்கள்.
@ சுனீல் கிருஷ்ணன் இதைத் தொடங்கும் போது சவால், போட்டி என்று சொன்னார்.சுரேஷும்,ராஜேஷும் இது இரண்டுமில்லை;ஜெயமோகன் சொன்னது போல் வாசிப்பு தவம்.இதில் முதலென்ன,முடிவென்ன? என்று அழகூட்டியுள்ளனர்.போட்டி என்று சொல்வதெல்லாம் ஒரு நடிப்பு தான்,பாவனை தான்.
@ இளம் எழுத்தாளர் சுரேஷ் பிரதீப் திட்டம் தொடங்கும் போது முதல் இடத்தில் இருந்தார். அலுவலகப் பணியோடு இலக்கியப் படைப்பு,உரை,திறனாய்வு என்று இவ்வளவு பரபரப்பில் வாசிப்பை இத்தனை தீவிரமாகத் தொடர்வது என்பது நாம் கற்கத் தகுந்தது. ஒரு முறை ஒரே நாளில் பன்னிரெண்டு மணி நேரம் வாசித்தார். அந்த அசுர சாதனையை என்னால் நினைத்துக் கூட பார்க்க முடியாது.
@ ராஜேஷ் போட்டி தொடங்கியவுடன் இணைந்து விட்டார். என்றாலும் பின் நடுவில் கொஞ்சம் காணவில்லை.பின்னர் நிதானமாக தொடர்ந்து சீராக முன்னேறினார். நான்காவது வாசகராக இலக்கைக் கடந்துள்ளார். அவர் எழுத்தாளரா என்று எனக்குத் தெரியவில்லை. ஜெயமோகனின் வாசகராக இருப்பவர் எழுத்தாளராக இல்லாதிருப்பது கடினம். ராஜேஷிடம் எனக்குப் பிடித்தவை இரண்டு பண்புகள். ஒவ்வொருவரின் வெற்றிக்கும் வாழ்த்து தெரிவிப்பார்.பெறும் வாழ்த்துக்களுக்கு நன்றி தெரிவிப்பார். ஆட்டோ கார மாணிக்கம் போலவே ராஜேஷுக்கு இன்னொரு பெயர் உண்டு. பாலசுப்ரமணியன்.
@ எப்போதோ முடித்திருக்க வேண்டிய ராதாவும், சரவண குமாரும் பிறரும் என்ன நினைக்கிறார்கள் என்று தெரியவில்லை. யாரோ ஸ்டேச்சூ என்று சொன்னது போல. நிச்சயம் எல்லோரும் நிறைய வாசிக்கிறார்கள். பொதுவாக நம் தமிழ் மக்களுக்கு எதிலும் ஆவணம் பராமரிப்பதிலும், அதற்காக சிறிது மெனக்கெடுவதிலும் ஆர்வமின்மையும், சோம்பலும் உண்டு. இந்த அலட்சியத்தால் தேசிய அளவிலான வரை இழப்பு நேர்ந்திருக்கிறது. அதை மாற்ற முயல்வது நல்லது.
@ மூன்றாவது முறையாக எல்லோரையும் முந்திச் செல்லப் போகிறேன் என்ற இந்தக் கிழவரின் மிரட்டல்களைக் கணக்கில் எடுத்துக் கொள்ளாத இளைய போட்டியாளர்கள் என் பேத்தியின் வேகம் கண்டு வெருண்டு விரைவது நன்று. என் வாசகிப் பேத்தி–மதுமிதா! பத்தாமிடத்தில் உள்ள, தலைவர் போல எப்போதாவது எட்டிப் பார்க்கிற சுனீல் கடந்திருப்பது 392 மணி நேரம். நேற்று வந்த மதுமிதா இப்போது கடந்திருப்பது 377 மணி நேரம். அவர் வாசிக்கத் தொடங்கியிருப்பது ஜெயமோகனின் உலக சாதனையான வெண்முரசு காவியம்.இந்திர நீலம் நிறைவடையப் போகிறது.
@ குழுவில் உள்ள எல்லோரையும் ஊக்குவித்துக் கொண்டே இருப்பதற்கு ராமானுஜம் நன்றி தெரிவித்துள்ளார்.எங்கோ சொன்னதை மீண்டும் சொல்கிறேன்: வயது முதிர்ந்தவர்கள் எல்லோரையும் வாழ்த்திக் கொண்டே இருக்க வேண்டும். ஆசிரியர்கள் தகுதியுள்ள எல்லோரையும் பாராட்டிக் கொண்டே இருக்க வேண்டும். நான் இரண்டும். நான் அப்படி இல்லாவிட்டால் தான் தவறு.
@ வாசிப்பு மாரத்தனில் முதல் பத்து இடங்களில் உள்ளவர்கள்:
சாந்தமூர்த்தி ஜெகநாதன் …… 2739
அருண்மொழி நங்கை …….1000
லாவண்யா சுந்தர்ராஜன் …….1102
பாலசுப்ரமணியன்/
ராஜேஷ் …….1000
1.சுரேஷ் பிரதீப் ………996
2.V.ராதா ………800
3.சரவணகுமார் ………771
4.கமலாதேவி ………721
5.GSSV நவீன் ……..614
6.முத்துகிருஷ்ணன் ……. 526
7.ஜெயந்த் …….. 521
8.சௌந்தர்ராஜன் ……..452
9.வேங்கட பிரசாத் ……..410
10.சுனீல் கிருஷ்ணன் ……..392