என் அன்னை ஜூலை-31-2018 அன்று பணி நிறைவு பெற்றார். அன்று அவ்விழாவில் நாள் அளித்த சிறப்புரையின் எழுத்து:
என்/எங்கள் அன்னை சாந்தி
௨
அன்புள்ள அனைவருக்கும் நமஸ்காரம் வந்தனம் வணக்கம் சுஸ்வாத்தகம்!
இந்த பிரிவு உபசார விழாவிற்கு என் அன்னையை வாழ்த்தக்கூடியுள்ள அனைவருக்கும் எனது மனமார்ந்த நன்றியையும் வணக்கத்தையும் தெரிவித்துக்கொள்கிறேன்.
எங்களது அன்னையைப் பற்றி எனக்கு பொதுவெளியில் பேசிப் பகிர்ந்துக்கொள்ள உங்கள் வாழ்வில் ஒரு 20 நிமிடம் அளித்து வாய்ப்புக் கொடுத்த அனைவருக்கும் எனது நெஞ்சார்ந்த நன்றிகள்.
திருமதி.சாந்தி என்பவர் கணவரை இழந்து மூன்று பிள்ளைகளை வளர்த்து பொறியாளர்களாய்/Engineeer-களாய் ஆளாக்கி கல்யாணம் செய்து கொடுத்த சித்திரம் மட்டுமே பலர் மனதில் இருக்கக்கூடும். ஆனால் தற்போதைய இவ்வலுவகத்தில் என் அன்னையின் 1990 முதலான 20 ஆண்டுகளை அறிந்தவர்கள் சிலரே இருக்க வாய்ப்பு உண்டு. அதனை சொல்கிறேன் உங்கள் அனுமதியுடன்.
13 ஆண்டுகளுக்கு மேல் ஆகிவிட்டது மிகக் கடுமையான நாட்களைக் கடந்து. ஆதலால் அனுதாபம் வேண்டியோ அல்லது சுயசரிதை புத்தகங்கள் குவிந்துள்ள இந்நாட்டில் ஒரு பாடம் சொல்ல முற்பட்டோ இவற்றை நான் இங்கு கூறபோவதில்லை. ஒரு சாமானிய பெண்ணின் பயணமும் குறிப்பிடத்தக்கது என்பதை கூறவே.
காதலித்தவரை மணம்புரிவதில் இருந்தே வாழ்வின் போராட்டம் துவங்கியது. திருமணத்தை முதலில் ஏற்க மறுத்தாலும் மனம் வேறு கதியில்லை எனும்போது மெல்ல சமரசமடைந்து பழகிக் கொள்கிறது. அதுபோல பெற்றோர்கள் சமரசமடைந்தார்கள். கடலில் முத்துக்கள் போல் மூன்று பிள்ளைகள் இப்பிறவிப்பெருங்கடலில் இவர்கள் மூலம் இணைந்தனர்.
ஆனால் வாழ்விலே ஒரு புயல் வார்த்தைகளில் வசப்படமுடியாத துயரத்தை இடியாய் தாக்கியது. மறுநாள் இருள் நீங்கி ஒளி உயிர்த்தெழும் தீபாவளி. ஆனால் எங்கள் வாழ்வில் மேற்கில் வெள்ளி (சுக்கிரன்) மறைந்த நாள். நீர்குமிழி உடைந்த நாள். அப்போது வாடாத பூப்போன்ற மங்கை நல்லாள் இவள் வயது 32. சரியாக சொன்னால் நடுவயது. ஆங்கிலத்தில் மனதினால் வரக்கூடிய Mid-Life Crisis என்பது உண்மையாகவே வந்தது. அசாதாரணமான ஒரு வாழ்க்கையை வாழ விதிக்கப்பட்டவளானாள்.
“கோரிக்கை அற்றுக் கிடக்குதண்ணே இங்கு வேரிற் பழுத்த பலா - மிகக் கொடியதென்று எண்ணிடப் பட்டதண்ணே - குளிர் வடிகின்ற வட்ட நிலா” என்று பாரதிதாசன் கூறியது முழுவதும் உண்மை. மூன்று பிள்ளைகளுடன் இவள் கோரிக்கை அற்றுக் கிடந்தாள். அவல நிலை என்றே சொல்லவேண்டும். இந்த கைம்பெண்ணை கண்டு இளகவில்லை. மாறாக இவளையும் இவள் அன்னையையும் ஏசியது. இந்த அவல நிலை ஒரு விஷயமாகவே அவர்களுக்கு தோன்றவில்லை. வார்த்தைகள் உயிருள்ளவை என்பதை அறிந்தோ அல்லது மறந்தோ பேசினார்கள். (பே/)போராயுதங்களைவிடவும் வார்த்தைகள் விஷம் உள்ளவை. அப்படிப்பட்ட வார்த்தைகள் கொண்டு ஏசினார்கள். “பார்த்து பிள்ளைகளை வீணாக வளர்த்துவிடாதீர்கள்” என்ற ரணமான வார்த்தைகளை இவர்கள் முகத்தின் நேரே வாய்க்கூசாமல் உரக்க சொல்லியது (அவை நாகரிகம் கருதி தறிநிலைக்கு வீண் என்று கூறியுள்ளேன்). அன்று பிறந்தது கர்வம். “எண்ணிக துணிக கருமம் துணிந்தப்பின் எண்ணுவம் என்பது இழுக்கு” என்று வள்ளுவர் கூறினார். அக்குறளை அன்று அறியாதவர்கள் எனது அன்னையும் பாட்டியும்.
ஆனால் அன்று இவர்கள் கொண்ட கர்வம், பிள்ளைகளை நன்கு படிக்க வைத்து அவரவர்களுக்கு என்று ஒரு நல்வாழ்விற்கான அடித்தளத்தை அமைத்துக்கொடுக்க வேண்டும் என்று. எண்ணங்கள் ஆட்டுமந்தைபோல. அதில் முதன்மையான ஆடு எது என்று அறியவேண்டும். அந்த எண்ணத்தை நம் வசப்படுத்தி மெல்ல இட்டுச்செல்லவேண்டும். அனைத்து எண்ணங்களும் அதைத் தொடர்ந்து வரும். அப்படி இவர்கள் இவர்களுக்கும் எங்களுக்கும் வசப்படித்திய முதல் எண்ணம் கல்வி. ஏன் என்றால் விதைப்பவர்களுக்கு விதையே சிறந்தது. இவர்கள் விதைத்தது கல்வி. “எண்ணென்ப ஏனை எழுத்தென்ப இவ்விரண்டும் கண்ணென்ப வாழும் உயிர்க்கு”. “கேடில் விழுச்செல்வம் கல்வி யொருவற்கு மாடல்ல மற்றை யவை”.
என் தந்தை இறக்கும் பொழுது எனது வயது 6, என் தங்கைக்கு 4, என் தம்பிக்கு 2 தான். பூகம்பம் வரும் முன்பே இரவில் உறங்கும் எறும்புகளும் விழித்துக்கொண்டு தன் இடத்தைவிட்டு வேறு இடத்திற்கு சென்று ஒளிந்துக்கொள்ளும். மனிதனை மனித உறவுகளை பற்றிக் கேட்கவே வேண்டாம். எனது தந்தை வழி சில உறவினர்கள் இரக்கமற்று தன்னறமற்று நீதிமன்ற படியேற வைத்தார்கள். செழிப்பாய் இருந்தும் அவர்களுக்கான எங்கள் தந்தையின் gratuity-ஐ நீதிமன்றம் மூலம் பெற்றுக்கொண்டார்கள். எங்கள் பங்குகளையும் படிப்பிற்குப் பயன்படுத்த முடியாமல் வங்கிகளில் முடக்கினார்கள். துவலவில்லை இவர்கள். போராடினார்கள். துணையற்ற இவர்களுக்கு வலியே ஓர் நல்ல துணைவன். வலியே வலிமை தந்தது. விருப்பு, வெறுப்பு, ஏற்பு, மறுப்பு என்ற அந்த உணர்ச்சியும் அற்றவர்களானார்கள் இவர்கள். ஒரு Atlas சைக்கிளில் முன்னே எனது தங்கை வளைவான பார்-இல் நிற்க பின்னே நானும் எனது தம்பியும் அமர இப்படியாக இரண்டு ஆண்டுகள் சைக்கிளை மிதித்து சென்றாள். இதைக் கண்டு ஒரு நொடி நிற்காத மனம் அன்றில்லை என்று என் அகம் இன்று சொல்கிறது. 1991 TVS-50 எங்களுடன் வந்து எனது அம்மாவிற்கு சைக்கிளில் இருந்து சிறு ஓய்வு கொடுத்தது. பின்பு சில ஆண்டுகளில் எங்கள் மூவர் கால்களும் சைக்கிளை மிதித்தது.
எனது தம்பியும் தங்கையும் St.Patricks இல் படித்தார்கள். எனக்கு அங்கு அனுமதி கிடைக்கவில்லை. நான் Seventh Day பள்ளியில் இருந்து Bright School பள்ளிக்கு மாறுவதாக இருந்தது. ஆனால் அங்கு ஒரு வகுப்பில் 15 மாணவர்களே இருந்தனர். கடைசி நிமிடத்தில் எனது அம்மா என்னிடம் கூறியது நீ இந்த பள்ளியில் படித்து முதல் rank எடுப்பதை விட ஒரு வகுப்பில் 50 மாணவர்கள் படிக்கும் Don Bosco வில் படித்து உன்னை நிருபித்துக்கொள்வது தான் உனக்கு தன்னம்பிக்கையையும் ஆரோக்கியாமான போட்டி மனப்பான்மையையும் வளர்க்கும். அச்சூழல் மெத்தனமாய் இருக்க வாய்ப்பு கொடுக்காது. ஆதலால் அங்கு தான் நீ படிக்க வேண்டும்.
ஆக 1994 முதல் மூன்று பேரும் Don Bosco மற்றும் St.Patricks போன்ற அதிக பணம் செலவாகும் உயர்ரக பள்ளிக்கூடங்களில் படித்தோம். அதுவும் நான் SSLC யில் இருந்து Matriculation சென்றவன். அப்பாடத்திட்டத்திற்கு என்னால் அவ்வளவு எளிதாக பொருத்திக்கொள்ள முடியவில்லை. ஆனால் எனது அன்னை எனக்கும் எனது தங்கை தம்பிக்கும் 1994 முதலே Tuition வைத்தார்கள். இப்படி எங்களுக்கு தரமான கல்விக்கான அடிப்படைகளை மிக இளவயதிலேயே எங்களது அன்னை அமைத்துக்கொடுத்தார்கள்.
கடந்துசெல்லும் காற்றில் மரங்களின் முட்கள் மெல்ல சீறிக்கொண்டிருந்தன. நூற்றுக்கணக்கான பழுத்த இரும்பு ஊசிகள் மேல் நீர் விழுந்ததுபோல. அப்படியிருக்கையில், புயலிலே ஒரு தோனி கிடைத்தால் எப்படி இருக்கும். அப்படித் தான் எங்களது பாட்டி எங்கள் வாழ்விலும் என் அன்னையின் வாழ்விலும் ஒரு அன்னையாய், தந்தையாய், ஆசிரியையாய், விவேகமாய், உண்மையில் பதட்டமான நேரங்களில் பக்குவம் வாய்ந்த நமது M.S.Dhoni-ஆய் வந்து சேர்ந்தார்கள். கிருஷ்ணன் அர்ச்சுனனிடம் தன்னைக் கொடுத்தான். கிருஷ்ணன் அவனுடைய கைகளால் செய்த நன்மைகளை கைகளின் விரல்கள் கூட அறியாமல் செய்தான். விரல்நகங்களும் அறியாது செய்தான். ஆயுதம் ஏந்தாமல் தன் புத்தி, தன் தந்திரங்களையே ஆயுதமாகக்கொண்டு குருசேத்திர யுத்தம் செய்த முதல் மாயாவி கிருஷ்ணன். இறுதிவரை, கிருஷ்ணன் பாண்டவர்களின் குடும்பத் தலைவனாகச் செயல்பட்டான். கிருஷ்ணன் பாண்டவர்களுக்கு போன்று எங்கள் பாட்டியும் எங்கள் அனைவருக்கும். இன்னும் சொல்லப்போனால் கிருஷ்ணனுக்கு ஆயர்பாடி முதல் யுத்த பூமி வரை உயிருள்ள நிழலாக இருந்து, கிருஷ்ணனின் இன்னொரு உருவமாக தன் வாழ்க்கையை அமைத்துக்கொண்டு, கிருஷ்ணர் நினைத்ததை எல்லாம் நினைத்து முடிக்கும் முன்னே செய்து முடித்த சாத்யேகி எங்கள் பாட்டி. தன் பேரமைதியே தன் தகுதிக்கான பதிலாகக் கொண்டவர் எங்கள் பாட்டி என்பதை குறிப்பாக சொல்லிக்கொள்ள விரும்புகிறேன். நாங்கள் வளரும் பொழுது தந்தை இருந்திருந்தால் நன்றாக இருக்குமே என்று ஒருநாளும் நினைக்காத அளவிற்கு இருவரும் எங்களை பார்த்துக்கொண்டார்கள். ஆதலால் அன்னையிற்கும் பட்டுவிற்கும் இங்கு நான் கூறும் ஒவ்வொரு சொல்லிலும் கிடைக்கும் வாழ்த்துகளிலும் சரிசமான பங்கு உண்டு.
காலத்தின் கைகள் இவர்களைப் பந்துகளாக்கி எறிந்து விளையாடின. கங்கை காவேரி ஆறுகள் போன்று என் அன்னையின் வாழ்வும் பல பாறைகளைத் தடையாகச் சந்தித்தது. ஆனால் பாறைகள் இல்லாமல் ஆறுகளுக்கு சங்கீத ஓசை இல்லை. அப்பாறைகளை இருவரும் அறுத்தெறிந்து முன்னே சென்றார்கள். அது இவர்களின் மனதிட்பம் மட்டும் அன்று அது விடாமுயற்சியின் விஸ்வரூபம் கூட. மூன்று பேரும் Convent என்றால் சும்மாவா ? ஆண்டுக்கு ஆண்டு கல்வியின் விலை உயரும். சிறுக சேர்த்த செல்வம் எப்படி வந்து சேர்ந்ததைவிட விரைவாக நம்மை விட்டுப்போகும் என்பதை "செல்வம் போகும் விளிந்தற்று" என்று சொன்னான் வள்ளுவன். அதுப்போல் இவளின் தேங்காய் பத்தைப் போன்ற மாதச்சம்பளம் பூசணிக்காய் பத்தைப் போல் கல்விக்கென்று சென்றது. PF, Gratuity என்ற எதனையும் எங்கள் அம்மா சேர்த்ததில்லை. எல்லாவற்றையும் எங்கள் கல்வியிலேயே முதலீடு செய்தார்கள். ஆயினும் ஒரு சம்பளம் போதவில்லை. போதவும் போதாது. பகுதிநேர வேலைகளே கரம் கொடுத்தன. ஆதலால் இவள் செய்த வேலைகளை மட்டும் பட்டியிலிடுகிறேன். காலையிலெழுந்து துணி துவைத்து, எங்களை பள்ளிக்கு ஆயுத்தமாக்கி, பாட்டி சமையல் செய்தப்பிறகு பாத்திரத்தை கழுவி, பள்ளியில் விட்டுவிட்டு, பகுதிநேரமாக ஒரு வீட்டில் ஒரு பாட்டி தாத்தாவுக்கு சமையல் செய்துவைத்து, அரசு வேலைக்கு சென்று, மாலையில் 6:00 மணி முதல் 10:00 மணி வரை எலும்பு நிபுண மருத்துவர் Dr.Sivadasan இடம் Receptionist ஆக பகுதிநேர வேலை அல்லது Accountant வேலைகள் செய்துவிட்டு வந்து, மறுபடியும் வீட்டில் வந்து பாத்திரம் கழுவி, வீட்டை சுத்தம செய்து, கொஞ்சம் உறங்கி, மறுபடியும் காலையில் சுவாமி அறையைத் துடைத்துக் கோலம் போட்டு வாழ்வின் அன்றாட Vicious cycle (துஷ்ட சுழற்சியில்) விழிகள் பிதுங்கி சிக்கித் தவித்தார்கள். ஆண்டுக்கு ஆண்டு அந்த பகுதிநேர சம்பளமும் போதவில்லை. பச்சோபதாபப்படும் மதமாற்ற ஓநாய்களையும், வட்டியை உரிஞ்சும் அட்டைகளையும் முழுங்கும் முதலைகளையும் ஒரு இருபதடித் தள்ளியேவைக்க வேண்டியிருந்தது. ஆதலால் மற்ற வேலைகளும் நாங்கள் செய்தோம். Soap Powder, Pepsi Cola Packet, பஜ்ஜி பக்கோடாவுக்கு பயன்படுத்தப்படும் பேப்பர் ஒட்டிக்கொடுப்பது என்று எல்லாவற்றையும் செய்தோம். நேர்மையாக!!
பாடும் தேனீக்களும் உலாவும் தென்றல் நம்மையும் தாக்காமல் இருக்காது. ஆனால் சுற்றமும் நட்பும் உறவுகளும் அப்படியில்லை. ஏனெனில் தவிர்க்கமுடியாதச் சந்திப்புகளான குலதெய்வக் கோயில்களிலும் கல்யாணங்களிலும் குசலம் விசாரித்துத் தங்கள் கடமையை அத்துடன் முடித்துக்கொண்ட உறவுகளே பெரும்பாலும். கர்ணனுக்கு துரியோதனன் இருந்தும், பேசுகின்ற எல்லா வாய்களையும் மூடமுடியவில்லை. ஆனால் செல்லப்பிள்ளை பாண்டவர்கள்கள் (அர்ஜுணன்) பெரிய தவறு செய்தாலும் அதில் பிழையில்லை என்று வாதிட ஓர் கூட்டமே அன்று திரண்டுவந்தது ஏனெனில் தம்பிகளையும் மனைவியையும் வைத்துச் சூதாடிய ஒரு மனிதரையே யாரும் இங்கே விமர்சிக்கவில்லை. ஆனால் கர்ணனுக்கோ ஒவ்வொரு இடத்திலும் அவன் சிறுபிழை செய்தாலும் அதனை பூதக்கண்ணாடி கொண்டுப் பேசுவார்கள். கர்ணனுக்கு தலையில்லை. பாண்டவர்களுக்கு கோட்டை சுவர்களாய் பலர் இருந்தனர். கர்ணனைப் போல என் அன்னையும் என் பாட்டியும் கைவிடப்பட்டவர்கள். தலையில்லாவிட்டால் வாலும் ஆடும். அடிக்கடி வந்துப்போகும் மின்வெட்டு இம்சைகள் போல் வந்து பிறருக்கு கொடுப்பதற்கு எதுவும் இல்லாத உடன்பிறப்புகள் நஞ்சைக் கக்கினார்கள் - சகுனியைப் போல் பிறர் துன்பத்தில் மகிழ்ச்சி அடைபவர்கள். இப்படிச் சுற்றமும் உறவுகளும் தந்த மன அழுத்தம் சும்மா வேற Level என்றே சொல்லலாம். அதனால் ஒரு இராணுவ தலைவருக்கு உண்டான கண்டிப்பும் கோபமும் அன்னையிடம் இருந்தது. ”நெடிதாக்கம் வேண்டி கடிதோச்சினாள் ஆனால் மெல்ல எறிக என்பதை உணர நேரம் இல்லை என்று தான் சொல்லவேண்டும்”. அதுயாவும் நாட்டின் மீதான பாதுகாப்பு போல் எங்கள் வருங்காலத்தின் மீதான அக்கறையே. அது மட்டுமின்றி தாய் பறவை மிதித்தால் சேய் பறவைக்கு நோவதுமில்லை காயம் ஆவதுமில்லை. அது தேவையும் கூட ஏனெனில் நிலத்தியல்பால் நீராகும், நன்றிக்கு வித்தாகும் நல்லொழுக்கம், தீயொழுக்கம் என்றும் இடும்பை தரும். ஆதலால் சிற்றினம் அஞ்சிய நீங்கள் எங்களை சிறுமை சூழாமல் பார்த்துக்கொண்டீர்கள். அதனை எங்கள் ஆழ்மனதிற்கு எங்களுக்கு அறியாமலே கற்றும்கொடுத்தீர்கள். ஆதலால் தீ நட்பிலிருந்து பத்தடி விலகியே இருந்தோம். வள்ளுவன் கூறியதுப்போல “தம்மைவிட பெரியவர்களுடன் தங்களின் உறவினர் என்றெண்ணி நெருங்கிப் பழகி ஒழுங்குபடுகிறோம் (தம்மிற் பெரியார் தமரா ஒழுகுதல் வன்மையு ளெல்லாந் தலை)”
ஊரில் அனைவரும் விடுமுறையில் உறவினர் வீட்டிற்கு சென்றார்கள். நாங்களோ பெரும்பாலும் வீட்டில் இருந்து நாட்களை கடத்தினோம். சொந்தத்தை தினம் சந்திக்க எங்கள் நிழல் கூட ஏங்கிய நாட்கள். அவர்கள் நிழல்கள் (கடிதங்கள்) கூட வேடிக்கை கூட பார்க்காமல் வேறெங்கோ பார்த்தது. ஆனால் எங்கள் அம்மாவும் பாட்டியும் எங்களை ஏதாவது ஒரு புனித ஷேத்தரத்திறகு, இறைவனிடமே நம் உறவு என்று கூட்டிச் செல்வார்கள். அப்படி எங்களில் இறை நம்பிக்கையை விதைத்து நன்கு நீரூற்றி எங்களை ஒழுங்கு படுத்துவதற்கொரு அணையாகவே ஆன்மீகத்தை பயன்படுத்தினார்கள். அப்படியில்லை என்றால் "அவர்கள்" சொன்னது போல் “வீணாக போய்விடுவோமே”. ஆனால் சீர்கெட்டுப்போக அனைத்து சாத்திய கூறுகளையும் ஐஸ்கிரீம் போன்று வண்ண வண்ணமாய் குளிர்ச்சியாய் கொண்டது சினிமா. ஆனால் எங்கள் வீட்டில் சினிமாவை முழுவதுமாய் ஒதுக்கவில்லை. “குணமும் குற்றமும் நாடி அவற்றுள் மிகை நாடி” கே.பாலசந்தர், மணிரத்னம், பாலுமகேந்திரா, பாரதிராஜா, ஷங்கர், ரஜினி, கமல், பாக்கியராஜ் படங்களுக்கு கூட்டிப்போவதை வாடிக்கையாக கொண்டிருந்தனர். அவ்வப்போது பிச்சாவரம் வேடந்தாங்கல், ஆரோவில், மகாபல்லி்புரம், பூம்புகார் என்று வன போஜனங்களுக்கும் (picnic) சென்றுவருவோம்.
எவ்வளவு கஷ்ட நஷ்டங்கள் இருந்தாலும் எங்கள் வீட்டில் இன்பத்திற்கு குறைவில்லை. ஆவணி அவிட்டம், விநாயகர் சதுர்த்தி, படைப்பூக்கத்திற்கு வித்தாக அமையும் படிகட்டுகளும் பூங்காவும் கொண்ட நவராத்திரி கொலு, தீபாவளி, சபரிமலை ஐயப்ப விரதபூஜைகள் பயணங்கள், பொங்கல் என்று ஒரு பண்டிகையையும் விட்டுவைத்ததில்லை.
வாழ்வதற்குத் தான் உணவு. ஆனால் அமுது படைக்கும் அந்த தில்லை ஆண்டவனுக்கே தினமும் அமுது படைக்கும் விழா தான் அன்னாபிஷேகம். அன்னமே பிரம்மம் என்கின்றன உபநிடதங்கள் (Upanishads). ஆனால் அது அடுமனையில் இருப்பவர்களுக்கு தெரியுமோ தெரியாது. ஆனால் எங்கள் வீட்டில் உணவை கொண்டாடினார்கள். அடுமனை எங்கள் “நிகரற்ற சமையல்ஞானி" பாட்டியின் பிரம்மலீலை நிகழும் இடம். அது ஒரு தவச்சாலை. வாய் என்னும் வேள்விகுண்டத்துக்கு உணவிடுபதுபோல் பட்டியலிடமுடியாத அளவிற்கான உணவுகளை செய்துக்கொடுத்தார்கள். பல நாட்கள் ஜலதோஷம், வாயுப் பிரச்சினை, வயிற்று வலி, உஷ்ணம், வாய் புண் என்று எதுவாக ஆயினும் மிக எளிதாக செய்யக்கூடிய ஒரு பூண்டு கருவேப்பிலை துவையல், வேப்பம் பூ ரசம், பெருங்காய ஜலம் என்று விதவிதமான தன் பாட்டி வைத்திய குறிப்புகளை சமையலிலும் எங்கள் சித்தத்திலும் ஆழமாய் வைத்தாள். அக்காலங்களில் காய்கறி தட்டுப்பாடு நிலவும் வறட்சிக்காலத்திலும் மழைக்காலத்திலும் சமையலை சமாளிக்க உலரவைத்த காய்கள், வேப்பம் பூக்கள், உப்பு நார்த்தங்காய்கள் கொண்டு செய்யப்படும் உணவுகளை எங்களுக்கு பழக்கினார்கள். அது நாங்கள் வெளியூர்களுக்கு செல்லும்பொழுது பயன்பட்டது. பேரப்பிள்ளைகள் எங்களை சமையல் செய்வதில் நளன் பீமன் என்ற அளவிற்கில்லையென்றாலும் நன்கு சமையல் செய்யும் அளவிற்கு மெருகேற்றினார்கள். பசி அறிந்தவர்கள் அதன் வேதனையையும் அறிவார்கள். அப்படிப்பட்ட சில நாட்களில் ரசஞ்சாதம் என்றாலும் அதனை பேரின்பத்துடன் சாப்பிடும் பக்குவும் எங்களிடம் அன்றே வளர்க்கப்பட்டது. அதனால் தான் என்னவோ நாங்கள் மூவரும் வெளியூர்களுக்கு சென்றாலும் உலரவைத்த சாமன்களைக்கொண்டு எங்களால் சாப்பாட்டை சமாளித்து அதனை கடந்து செல்ல முடிகிறது.
குழந்தைகளை நாம் வளர்க்க தேவையில்லை. அவர்களே வளர்வார்கள் ஏனெனில் காலம் உயிர்களை வளர்கிறது. நாம் வேடிக்கை மட்டும் தான் பார்க்க முடியும். நாம் அவர்களுக்கு கொடுக்க வேண்டியதெல்லாம் வாழ்க்கைக்குத் தேவையான கருவிகள் தான். அவை கல்வி, நல்லொழுக்கம், தன்னம்பிக்கை, உழைப்பு போன்ற விழுமியங்கள் மட்டுமே. உழைப்பின் முக்கியத்துவத்தை - எங்கள் மொட்ட மாடியில் ஆரோக்கியமான நந்தவனம் ஒன்றில் 100 ஜாடிகளில் விதைகள் விதைத்து, செடிகள் நட்டு, தினமும் தண்ணீர் ஊற்றி, காய்கறி குப்பைகளை மக்கச்செய்து உரமாக்கி அவ்வப்போது தொடர்ந்து உரம் இட்டு, களைகளையும் பூச்சிகளையும் துவக்கத்திலேயே வெட்டி எறிந்து, என்று வகைவகையான செடிகளை வளர்த்துக் கற்றுத்தந்தார்கள் இவர்கள் இருவரும். அது தந்த பூக்களும் ஞாபகங்களும் ஏராளம். அது மட்டுமா? எனது தங்கையை பாட்டிற்கும் எனது தம்பியை Western Drums வகுப்புகளிலும் சேர்த்து விட்டார்கள். நானோ என் பங்கிற்கு Lego, Brainvita, Chess Board, நுழைவுத்தேர்வுக்கான Brilliant Tutorials புத்தகங்கள் என்று கல்வி சம்மந்தமாக செலவுகள் வைத்தேன்.
அடிப்படை கல்விக்குத் தேவையான வசதிகளை விட அதிகமான வசதிகள் எங்கள் நற்கல்விக்கு செய்துக்கொடுத்து எங்களிடம் வைக்கப்படும் ஒரே கோரிக்கை நல்லாபடியுங்கள் என்று. தகுதியின் (Merit-இன்) அடிப்படையில் கல்லூரியில் இடம் வாங்குங்கள். காசு கொடுத்து கல்லூரியில் சேர்க்கும் அளவிற்கு பணமும் சொத்துமில்லை சிபாரிசு செய்யும் அளவிற்கு உறவும் அருகிலில்லை. நாங்கள் 10ஆம் வகுப்பும், 12ஆம் வகுப்பும் சேர்ந்த பிறகு எங்களுக்கு தேவையான அனைத்து Coaching Centre களிலும் (சேதுராமனின் Sankara Coaching Centre, Seetharaman Sir, Maruthi Coaching Centre, Petit Seminar Summer Entrance, Vetri Coaching Center, Krishnasamy Sir, Brilliant Tutorials என்று பணம் படைத்தவர்களுக்கு மட்டுமேயான இடங்களில் சேர்த்து) அனைத்து வசதிகளும் செய்து கொடுத்தாள் எங்கள் அம்மா (சில ஆசிரியியர்கள் காசு குறைத்துக்கொண்டும் உதவினார்கள்). ஒரு தூரத்துத் தந்தை வழி உறவு மற்றும் ஒரு தாய் வழி உறவை தவிர, எங்களது உறவுகள் அன்று 1990 முதல் 2005 வரை என்றுமே ஒரு கடிதாசியின் மூலம் கூட குசலம் விசாரிப்பு அல்லது பிள்ளைகள் இதனை இக்கல்லூரிகளில் படித்தால் அதில் நல்ல வருங்காலம் உண்டு, அதற்கு இந்த நுழைவுதேர்வுகளுக்கு படிக்க வேண்டும் என்று வழிகாட்டியதும் கிடையாது. ஆனால் இன்றோ விரைவில் பணி நிறைவு அடையப்போகிறாய் PF-Gratuity Settlement எவ்வளவு வரும் என்று வாய் கூசாமல் கேட்கிறார்கள் சில உறவுகள். இத்தகையவற்றை தியான மந்திரம் போன்ற ”ஆகுல நீர பிற” (மற்ற அனைத்தும் வெறும் சத்தம் (இரைச்சல்) மட்டுமே) என்ற வள்ளுவன் வரியை சொல்லிக்கொண்டுதான் முன் கடந்துச் செல்கிறேன்.
ஆளுக்கு இரு தோள்கள் மட்டுமே ஆயினும் அதன் மேல் இருவரும் ஒரு பெரிய பலகையினையே ஏந்தி எங்கள் மூவரையும் ஏற்றி சாமி பார்க்க வைத்தார்கள். பாலபருவத்தில் புரிதல் இல்லையென்றாலும் பின்பு நாங்களும் படித்தோம். மிக நல்ல கல்லூரிகளில் படித்தோம். கல்லூரி படிக்கும் காலங்களில் வங்கிகளின் உதவியை நாடாமல் இருக்க முடியவில்லை. வங்கிகள் உதவினாலும் சுமையின் பாரம் குறையவில்லை. அது குறைய முழுமையாக 15 ஆண்டுகள் ஆனது. நாமிட்ட இலை தழைகளை உண்ட ஒரு புழு பட்டாம்பூச்சியாய் மாறும் தருணம் மாறிய தருணம், அதுவும் வாழ்வில் முதல்முதலாய் அதனை பார்க்கும் தருணம் மிக நெகுழ்ச்சியானது. ”தம்பொருள் என்பதம் மக்கள் அவர்பொருள் தம்தம் வினையான் வரும்” -? தன் செயலினால் தன் பிள்ளைகள் செல்வங்கள் ஆன தருணம் ஜூன்-04 2004 மாலை ஆறு மணியளவில் இருக்கும். என் அன்னையை நண்பரின் மொபைல்லிலிருந்து அழைத்தேன். எனக்கு Campus’லையே வேலை கிடைச்சுடுச்சு அம்மா என்றேன். ஒரு நிமிட மௌனம் எங்கள் இருவருக்கும் நடுவில். இவள் குரல் உடைந்ததை என்றும் என் நினைவில் சேமித்து வைத்துள்ளேன். ஒரு 15km தொலைவில் இருந்தாலும் அன்றுபோல் என்றும் என் அன்னையை அவ்வளவு அருகில் உணர்ந்ததில்லை. ஒவ்வொருவராக படித்துமுடித்து வேலைக்கு சேர்ந்து பாரத்தை குறைத்தோம்.
பின்பு நாங்கள் மேற்படிப்புக்கு முயற்சி செய்தாலும் அதற்கும் எங்கள் அம்மா வங்கிகளுக்கு அலையாய் அலைந்துதிரிந்து படிவங்களை வாங்கிக்கொடுத்து விண்ணப்பித்தார்கள், நாங்கள் ஊருக்குச் செல்லும் பொழுதெல்லாம் எங்களுக்குத் தேவையான எல்லாவற்றையும் ஓடி ஆடி வாங்கி வந்து வைப்பார்கள், கஞ்சி மாவு, வத்தல், சாம்பார் பொடி, சிகைக்காய் பொடி, போன்று சிறுசிறு விஷயமானாலும் அதனை அலுக்காமல் செய்வார்கள் - இது எங்களிடம் இவற்றையெல்லாம் வீட்டிலேயே செய்யவேண்டும் பாக்கெட்டில் வாங்க கூடாதென்பதின் மகத்துவத்தை உணர்த்தியுள்ளது. Use and Throw என்ற நவினயுகத்திலெதையும் சலிக்காமல் பழுதுப் பார்த்து (உதாரணமாக flight suitcases) அதன் நாட்களை கூட்டும் நிதானத்தையும் பணத்தின் மதிப்பையும் கற்றுக்கொடுத்துள்ளனர்.
ஆங்கிலத்தில் Gary Chapman என்பவர் எழுதிய The 5-Love Languages (அன்பின் ஐந்து மொழிகள்) என்ற ஒரு புத்தகம் உண்டு. அவை 1) Affirmation (அன்பு பாராட்டுதல்), 2) Gifts (பரிசளித்தல்) 3) Quality Time (தரமான நேரம் செலவிடுதல்) 4) Acts of Service (சேவை செய்தல்) 5) Physical Touch (மெய் தீண்டல்). எங்கள் அம்மாவின் மொழி Acts of Service என்று சொல்லவேண்டும். இவர்களது உழைப்பை புரிந்துக்கொண்டாலும் சேவையும் அன்பின் மொழி என்பதை புரிந்துக்கொள்ள எனக்கும் எனது தம்பி தங்கைக்கும் பல ஆண்டு காலம் ஆனது.
வலி ஒரு நல்ல துணைவன் என்று முன்னர் கூறினேன். வலிக்கு வலியே மருந்து. வலி யானையாக வருகிறது. மிகப்பெரிய நிழலாக அந்தயானை வந்துகொண்டிருக்கிறது. அதன் எடைமிக்க துதிக்கையை தோள்மேல் போட்டிருக்கிறது. மத்தகத்தையே நம் மேல் வைத்துக்கொள்கிறது. ஆம் நாம் கெஞ்சினாலும் மிரட்டினாலும் விலகிச்செல்லாதது. ஆனால் வாழ்நாள் முழுக்க நீடிக்கும் பெரும்வலி கொண்டவர்கள் வாழ்த்தப்பட்டவர்கள். அவர்களுக்கு வேறு ஏதும் தேவையில்லை. அவர்களின் வெற்றிடங்களை எல்லாம் அதுவே நிறைத்துவிடும்.
இராவணனின் தலைபோல வெட்ட வெட்டத் தழைக்கும் எளிய உலகியல் ஆசைகளாலும் விருப்புவெறுப்புகளாலும் அச்சங்களாலும் மாறிமாறி அலைக்கழிக்கப்பட்டு வாழ்ந்து முடியும் வெறும் உடல்கள் கொண்டோருக்கு வாழ்வது மட்டுமே முக்கியம். அப்படி ”ஒருபொழுதும் வாழ்வது அறியார் பொய்யான எண்ணங்களில் இருப்போரின் எண்ணிக்கை கோடி அல்ல அதற்கும் மேலே”. தனக்கென வாழா பிறர்க்கென வாழும் மனத்தினைப் பெற்றார் வாழ்வர். அப்படி உண்மையான சுயநலமற்ற விடாமுயற்சியுடன் திருவினை ஈன்ற நிறைவாழ்க்கை வாழ்ந்தவர்கள் இவ்விரு பெண்மணிகளும். ஆதலால் எங்களை விட பாக்யசாலிகள் கிடையாது என்ற எண்ணம் எங்களிடம் ஆழ வேரூன்றியுள்ளது.
(என்னை மன்னித்துவிடுங்கள், சற்று நீளமாய் செல்கிறது இவ்வுரை)
சில காலம் வெளியே வைத்தால் காற்றிலேயே மக்கிப்போகும் காகித வெற்றறிக்கையில் தையலூசி ஓட்டைப்போன்ற குறைகளை ப்ரசுரிக்கும் சற்றும் தார்மீக அறம் அருகில் அல்லாதவர்கள், நிதம் வம்பு இரைத் தேடி அலைந்து இறுதியில் இரையென மாயுபவர்களின் செயல்களில் கவலையடைந்து நாம் உழல வேண்டியதில்லை. ஏனெனில் மானுட உள்ளம் அத்தனை கீழ்மை கொண்டது. ஒளியூற்றான சூரியனிலேயே கரும்புள்ளிகள் (dark sun spots) உண்டென்று வாதிடும் வேடிக்கை மனிதர்கள் அவர்கள். வானின் நட்சத்திர கூரையை பார்க்க விழையாமல் வீட்டிற்குள் புகுந்துக்கொள்கிறார்கள் மனிதர்கள். அவர்கள் கண்களுக்கு நட்சத்திரங்கள் தெரியவாய்ப்பில்லை.
Clayton Christensen என்ற Harvard பல்கலைகழக பேராசிரியர் (உன்) வாழ்க்கையை நீ எப்படி அளப்பாய்? என்ற கேள்விக்கு (How will you measure your life?) பதில் அளிக்கிறார் - நான் எத்தனை பேரின் வாழ்க்கையினை என் செயல்களினால் ஆக்கப்பூர்வமாக தொட்டேன் என்பதே என் வாழ்வின் அளவுகோல் என்கிறோர். அப்படி பார்க்கையில் எங்கள் அம்மா எங்கள் வாழ்வு மற்றும் அல்லாது பிறருக்கு உதவக்கூடிய வாய்ப்பு அமைந்த எல்லா நேரங்களிலும் அவர்களால் முடிந்தவரை உதவியுள்ளார்.
வள்ளுவன் மெய்யுணர்தலில் கூறியது போல சம்பளம், பதிவி உயர்வு, மனைப் போன்ற பொருளல்லவற்றை பொருளென்று உணரும் மருளும் மாணப்பிறப்புகள் உள்ள இந்த பூமியில் எங்கள் அம்மாவும் பாட்டியும் எந்தவிதமான ஒரு நிலையில்லா செல்வத்தையும் சேர்த்து வைத்துக்கொண்டதில்லை யாரிடமும் (ஏன் எங்களிடமும் கூட) ஒரு துரும்பு கூட எதிர்ப்பார்த்ததில்லை. இன்று இவர்கள் வங்கி கணக்கில் 10000 ரூபாய்க்கு மேல் கிடையாது. சொந்தமாக நகையும் கிடையாது. ஆனால் கருங்குடத்தில் புதைத்த கருங்கற்கள் நாங்கள், உங்கள் மார்பில் எப்பொழுதும் வைர மணிகளாய் செல்வமாய் உள்ளோம்.
"மார்பில் அணிவதற்கே - உன்னைப்போல் வைர மணிக ளுண்டோ ? சீர்பெற்று வாழ்வதற்கே - உன்னைப்போல் செல்வம் பிறிது முண்டோ ?” என்றான் தன் பிள்ளை கண்ணமாவை பார்த்து பாரதி சொன்னான். நாங்கள் மூவரும் உரக்க சொல்வோம் தங்கள் இருவருக்கும் மேல் ஒரு தந்தையும் தாயும் என்று எவரையும் இங்கு நாங்கள் வேண்டுவதுமில்லை என்று.
இப்போது எனக்கு ஒரு கடமையும் எண்ணமும் உள்ளது.
1) ஒன்று நன்றி: பாலைநிலத்தின் விதைகள் நூறுமடங்கு வல்லமை கொண்டவை. ஏனென்றால் ஒரு விதைக்குப்பின்னால் வாழ்வை விரும்பி நீர் கிடைக்காமல் அழிந்த ஆயிரம்கோடி விதைகளின் துயரம் உள்ளது. துளிநீருக்குத் தவம்செய்யும் பல்லாயிரம் விதைகளின் துடிப்பு உள்ளது. அப்படி வளரும் செடிகளுக்கு அவ்வப்போது நீர் பாய்ச்சிய -அதாவது - கல்வி போதித்த ஆசிரியர்கள் பேராசிரியர்கள், மருத்துவம் பார்த்த மருத்துவர்கள், எங்களை தங்கள் பிள்ளைகளாய் பார்த்து அன்பு செலுத்திய குடும்ப நண்பர்கள், அவ்வப்போது உண்மையாக தலைகாட்டி நலம்விசாரித்த வெகு சில உறவுகள் என அனைவருக்கும் இதயப்பூர்வமான நன்றிகள் கோடி ஏனெனில் மானுடத்தின் மீதான நம்பிக்கையை தக்கவைக்க உதவினார்கள்.
2) இரண்டு ஓய்வு: ஒவ்வொருவருக்கும் வாழ்க்கையில் இரண்டு தொடக்கங்கள் தேவை என்பது என் எண்ணம். பணி, குடும்பம் என ஒரு வாழ்க்கை. அது ஏறத்தாழ அறுபது வயதில் முடிவடைகிறது. அதன் பின்னர் ஓய்வு பெற்றுக்கொண்டே இருக்க வேண்டும் என நம் சூழல் சொல்கிறது. ஓய்வு பெற்ற பின்பு வரும் வெறுமையையும் தனிமையும் சகிக்கமுடியாதவையாக இருக்கும்.
ஆனால் நவீன மருத்துவத்தினால் இன்று மேலும் இருபதாண்டு முப்பதாண்டு வாழ்க்கை எஞ்சியிருக்கிறது. 60-80 வரை ஓய்வெடுப்பதென்பது சாதாரண விஷயம் கிடையாது. மீண்டுமொரு தொடக்கத்தை நிகழ்த்தி அதில் தீவிரமாக செல்லாவிட்டால் வெறுமையே எஞ்சும் (மிஞ்சும்). பெரும்பாலானவர்கள் அமர்ந்திருக்கும் நரகம் அது. உங்களுடைய வாழ்க்கை உங்கள் குழந்தைகளுக்காக கொடுக்க படவேண்டியது அல்ல. கொஞ்சம் கொடுக்க வேண்டியயிடத்தில் நீங்கள் ஏற்கனவே நிறைய கொடுத்துவிட்டீர்கள். உங்களுடைய வாழ்க்கை உங்கள் குழந்தையை ஆளாக்கிய உடன்முடிந்து போவதில்லை. அதன்பின்புதான் துவங்குகிறது.
எப்படா வேலையிலிருந்து ஓய்வு பெறுவோம், எந்த வேலையும் செய்யாமல் சும்மா இருப்போம் என்று நினைப்பவர்கள் மத்தியில் பணியிலிருந்து ஓய்வு பெற்ற பின்பும் மிக உற்சாகமாக உங்களுக்கு பிடித்தவற்றில் ஈடுபடுத்திக்கொண்டு பயனுள்ளதை செய்யுங்கள். பணி ஓய்வு பெற்றப் பின்பு இன்னொரு புதிய வாழ்க்கையை தொடங்கியவர்கள் மட்டுமே மகிழ்ச்சியாக இருப்பதாக சான்றுகள் உள்ளன. பெரிய விஷயங்களை செய்யுங்கள். பணி ஓய்வுக்குப் பிறகு ஒரு நிதானமான சூழல் கிட்டும். அதில் உங்கள் வாய்ப்பினை நன்கு அமைத்துக்கொள்ளுங்கள். ஒரு விதத்தில் பெரும்பாலும் அரசு பணி என்பது ஒரு சிறந்த ஓய்வு காலம் தான்:) அது முடிவடைகிறது. இனிமேல் வேலை செய்யலாம்.
உங்கள் முதல் தொடக்கம் பலருக்கு பாடமாகவும் வழிகாட்டியுமாகவும் இருந்தது. உங்கள் இரண்டாம் தொடக்கமும் ஒரு வழிகாட்டியாக அமைய வேண்டும். எடுத்த காரியம் யாவினும் வெற்றி. எண்ணத்தில் இருக்கும் எரியேசக்தி. எண்ணம் போல் அமையட்டும்!
தனக்கான ஒரு போரை கண்டடைந்தவன் அதில் வெற்றி பெருகிறான். அப்படி கண்டடைந்தவர்கள் நம்பிக்கையை இழக்காமலிருக்க, இறுதிக்கணம் வரை போராட உடலால் முடியும். உள்ளத்தால் அது வதைக்கப்படாமலிருக்கவேண்டும். கழிவிரக்கம் குடியேறிவிட்டால் பின்னர் அந்நெஞ்சங்களில் வீரம் விளையாது. ஆதலால் உடல் என்னும் தழலிற்கு உள்ளமெனும் நெய்யை இடைவிடாது அளித்தவர்கள். அனைத்தையும் எதிர்நீச்சல் அடித்து இப்போரில் வெற்றி வாகை சூடியவர்கள் இவர்கள் இருவரும். கிருஷ்ணனை ஊசியாகவும், தம்மை நூலாகவும் அமைத்துக் கொண்ட யாதவச் சாத்யகிப் போல, இவர்கள் இருவரும் சமர்ப்பணம் என்கிற சொல்லுக்கு ஒரு உயிர் உதாரணமாக வாழ்ந்து அமைதி அடைந்தவர்கள். ஆதலால் கைதட்டல்களுக்கு உரியவர்கள் என்பதனால் இவர்களுக்கு கைதட்டல்களை இங்கு விழைகிறேன்.
பாண்டவர்களுக்கு கிருஷ்ணன் அவ்வளவு கொடுத்தான். கிருஷ்ணன் திரும்பக் கேட்டது அன்பு ஒன்றைத்தான். அவன் மேல் அல்ல! சக உயிர்களின் மேல்! அதுப்போல் இவர்கள் எங்களுக்கு அவ்வளவு கொடுத்துள்ளனர். நாங்கள் அவ்வளவு கொடுக்கவில்லை. இன்றுபோல் என்றும் அன்புடன் ஒற்றுமையாக இருப்போம் என்று கூறிக்கொள்கிறேன்.
தன் தவத்திறத்தால் விண்ணில் நிலைபேறடைந்த துருவனை போன்ற இவர்கள் இருவரையும் என்றும் தண்மதியும் கங்கையும் சூடிக்கொண்ட சைவரைப்போல நாங்கள் எங்கள் வாழ்விலும் எண்ணங்களிலும் சூடிக்கொள்வோம்.
மேற்கில் விதைத்த வெள்ளி கிழக்கில் முளைத்துள்ளது. விடியல் உடம்பின் இரத்ததில் வெப்பத்தை காக்கட்டும். மொட்டுகள் மலரட்டும். நன்றி!
பேரன்புடன்
ராஜேஷ், கிருத்திகா & மணிகண்டன்
(31-ஜூலை-2018)