Featured Post

Daily Project திருக்குறள்

Dear Readers / Friends, http://DailyProjectThirukkural.blogspot.com/    By interpreting various meanings for every word in a Thirukkur...

Showing posts with label Devotional. Show all posts
Showing posts with label Devotional. Show all posts

July 30, 2015

உருவாய் அருவாய் | முருகர் பாடல்

சில வாரங்களாக முன்பு  முருகபெருமானுக்கு பாடும் இப்பாடலை பற்றி அறிந்தேன். தமிழ்ப்பாடல் ஆயினும் எனக்கு இதன் அக அர்த்தம் விளங்கவில்லை. சற்று நேரடியாக இல்லை. ஜெயமோகனின் வளையத்தில் தற்செயலாக படிக்க நேரிட்டது. எப்படிப்பட்ட வரிகள் இவை என்பதை நீங்களே படித்து தெரிந்துக்  கொள்ளுங்கள்!

எழுத்தாளர் ஜெயமோகன் அவர்களின் வளையத்தில் இருந்து பொருள் இங்கே 

அதிலும் அருணகிரிநாதர் நுட்பமான சம்ஸ்கிருத தத்துவக் கலைச்சொற்களை தாராளமாகவே பெய்து தன் பாடல்களைப் பாடியிருக்கிறார். இருபெருமொழிகளிலும் ஆழ்ந்த ஞானம் உடைய ஒருவரால் மட்டுமே அந்நூலின் அகம் காணமுடியும், அனுபூதியும் கனியுமென்றால். கந்தரனுபூதியும் அப்படிப்பட்ட நூலே.

நீங்கள் சொன்ன கவிதை இது. பெரும்பாலான சைவர்களுக்குத் தெரிந்த பாடல் இதுவாகவே இருக்கும்.

உருவாய் அருவாய் உளதாய் இலதாய்
மருவாய் மலராய் மணியாய் ஒளியாய்
கருவாய் உயிராய் கதியாய் விதியாய்
குருவாய் வருவாய் அருள்வாய் குகனே!


மிக எளிமையாக ‘முருகனே நீ வந்து எனக்கு அருள்வாய்’ என்று கூவும் வரிகள் இவை என நம்மில் பலர் சொல்லலாம். ஆனால் இவ்வரிகள் வழியாகச் செல்லும் ஒரு கூர்ந்த மனம் அடையும் பொருள்நிலைகள் முடிவிலாதவை.

முருகனை பரம்பொருளாகக் கண்டுவணங்குகிறது இக்கவிதை. பொதுவாக நம் மரபில் உருவம் கொண்ட எந்த ஒரு தெய்வத்தையும் தோத்திரங்களில் உருவங்களுக்கு எல்லாம் அப்பாற்பட்ட பிரம்ம வடிவமாக, நினைப்புக்கு எட்டாத எல்லையற்ற பரம்பொருளாக உருவகித்துப் பாடுவதே வழக்கம்.

அந்தப் பரம்பொருளின் சித்திரத்தை இக்கவிதை அளிக்கும் விதமே கூர்ந்து கவனிக்கவேண்டியது. ‘உருவமாகவும் அருவமாகவும், மொட்டாகவும் மலராகவும், மணியாகவும் அதன் ஒளியாகவும், கருவாகவும் அதன் உயிராகவும், செயலாகவும் அதன் விதியாகவும் இருப்பவனே நீ குருவாக வந்து அருள்வாய்’ என்று இறைஞ்சுகிறது.

இந்தவரிகளில் அருவமான பரம்பொருள் உருவவடிவம் கொண்டு வருவதன் ஒரு நுண் சித்திரத்தை அருணகிரிநாதர் அளிக்கிறார். இப்பிரபஞ்சவெளியின் சாரமாக உள்ள அலகிலா ஆற்றல், அல்லது இப்பிரபஞ்சத்தின் அடிப்படையாக உள்ள பெருங்கருத்து, அல்லது இப்பிரபஞ்சமேயாக மாறித்தெரியும் அது எவ்வாறு நாமறியும் நூறாயிரம் பொருட்களாக, அவற்றில் நாம் கண்டு வணங்கும் தெய்வங்களாக, உருமாற்றம் கொண்டது? இன்றைய இயற்பியலாளனின் பெருவினாவும் அதுவே என நாம் அறிவோம்.

‘உருவாய் அருவாய்’ என்ற எதிரீடு முதலில் முன்வைக்கப்படுகிறது. நாம் காணும் அனைத்துமே உருவமாக உள்ளன. அவ்வுருவங்கள் அனைத்துமாக தன் இறைவனை உருவகிக்கும் இக்கவிதை பொருள்வயப்பிரபஞ்சமாகவே அவனை முன்னிறுத்துகிறது. அந்தப்பொருள்வயப்பிரபஞ்சம் அல்லாத அருவமான வெளியாகவும் அவனை உருவகிக்கிறது.

உருவம் கொண்ட இறைவடிவமாகவும் உருவமில்லாத இறைவடிவமாகவும் இருப்பவன் எனச் சொல்லிவிட்டு அதன்பின் அதற்கு இணையாக பிற எதிரீடுகளை வைத்துச் செல்கிறது கவிதை. ‘உள்ளதாகவும் இல்லாததாகவும்’ என்பது அடுத்த எதிரீடு. உள்ளது உருவம். இல்லாதது அருவம். உள்ளவை எல்லாம் அவனே. இல்லை என்ற நிலையிலும் அவனே இருக்கிறான். பெருவெளியில் இன்மையும் கூட  ஓர் ஆற்றலாக, பரம்பொருளின் இருப்பாக ஆகலாம். அது இல்லாமல் இருக்கும்நிலைகூட அதுவே!

அடுத்த எதிரீடு எளிய உவமை. ‘மொட்டாகவும் மலராகவும்’ என்ற வரி இந்திய வேதாந்த மரபை உணர்ந்தவர்களுக்கு ஒரு ஆச்சரியத்தை அளிக்கும். ‘பரம்பொருள் அருவ நிலையில் இருந்து உருவமாகி வருகிறது’ என்பதே வேதாந்த தரிசனம். அருவநிலையே உண்மையானது, உருவநிலை அந்த அருவநிலை உருவாக்கும் ஒரு மாயத்தோற்றமே என அத்வைதம் வாதிடும்.

ஆனால் இந்த வரி உருவப்பிரபஞ்சத்தை முதல்நிலை உண்மையாக முன்வைத்து அதன் நுண்வடிவமாக அருவநிலையை உருவகித்துக்காட்டுகிறது.  உருவத்துக்கு மொட்டும் அருவத்துக்கு மலரும் உவமையாக ஆக்கப்பட்டிருக்கிறது. உருவம் கொண்டு நம் முன் நிற்கும் இந்த பெருவெளி என்ற மொட்டு மலர்ந்த நிலையே உருவமிலா பரம்பொருள் என்று சொல்லப்பட்டிருக்கிறது!

அடுத்த எதிரீடு இன்னொரு உவமைமூலம் அதையே மேலும் வலியுறுத்துகிறது. ‘மணியாகவும்  ஒளியாகவும்’. இந்த பருப்பிரபஞ்சம் மாணிக்கம் என்றால் அதன் ஒளிதான் அலகிலாத ஆற்றலாக விரிந்த பரவெளி. அருவம் என்பது உருவமாகி நிற்பவற்றின் சாரமாக உறையும் ஒளியே என்கிறது இந்த உவமை!

மேலும் வலியுறுத்துகிறது அடுத்த எதிரீடு. ‘கருவாகவும் உயிராகவும்’ கரு என்று இந்த பொருள்வயப்பிரபஞ்சமே சொல்லப்படுகிறது. அந்தக் கருவுக்குள் உள்ள உயிரே ஆற்றல்பிரபஞ்சம் அல்லது அருவ வெளி!

கடைசி எதிரீடு பௌத்த தரிசனத்துடன் தொடர்புடையது. பௌத்தம் இப் பொருள்வயப்பிரபஞ்சம் என்பது ஒரு முடிவிலா நிகழ்வே என்று வகுக்கிறது. இந்நிகழ்வின் இயங்குவிதியாக உள்ளதே பேரறம் அல்லது மகாதர்மம்.  ‘கதியாகவும் விதியாகவும்’ என்ற வரி அதையே சுட்டுகிறது. கதி என்றால் நிகழ்வு. அந்நிகழ்வாகவும் அதன் விதியாகவும் முருகனை உருவகிக்கிறது இவ்வரி.

எதிரீடுகளின் வரிசையை வைத்துப் பார்த்தால் உருவமாக, உள்ளதாக, மொட்டாக, மாணிக்கமாக, கருவாக சொல்லப்பட்ட பொருள்பிரபஞ்சத்தையே கதி என்று சொல்கிறார் அருணகிரிநாதர். இப்பருப்பிரபஞ்சம் ஒரு கதி [இயக்கமுறை] மட்டுமென்றால் அதன் சாரம் அதன் விதி. அந்த விதியே அருவம், இன்மைநிலை, மலர் , ஒளி, உயிர்… இரண்டும் அவனே என்று சொல்கிறது.

கடைசி வரி மிக இனிய ஒரு முடிச்சுடன் முடிகிறது. ‘குருவாய் வருக’ என்று முருகனை அழைக்கிறது அது. குரு என்பது இங்கே உருவமாக, உள்ளதாக, மொட்டாக, மாணிக்கமாக, கருவாக சொல்லப்பட்ட முதல்நிலையின் இடத்தில் வைக்கப்பட்டிருக்கிறது. அப்படியானால் அருவம், இன்மை, மலர் , ஒளி, உயிர் எனச் சொல்லப்பட்ட இரண்டம்நிலையில் இருப்பது எது?

மொட்டு மலராவதுபோல, மணியில் ஒளி பிறப்பதுபோல, கருவில் உயிர் நிகழ்வது போல குருவின் விளைவாக உள்ளது ஞானமே. அனுபூதியே உயர் ஞானம். குருவாக முருகன் வந்தால் ஞானமுமாக அவனே நிற்பான் என உரைக்கிறது பாடல். குருவாய் வருக என்ற அழைப்பு அவ்வகையில் மேலும் முன்னகர்ந்து ஞானமுமாக வருக என முடிகிறது.

இவ்வரிகள் கந்தரனுபூதியின் கடைசிப் பாடல். இவ்வரிகளில் இருந்து பின்னால்நகர்ந்து முன்னாலுள்ள வரிகளை எட்டினால் பல வரிகளின் ஆழமும் தீவிரமும் நம்மை திகைக்கச் செய்யும்.

‘தன்னந் தனி நிற்பது தானறிய
இன்னம் ஒருவர்க்கு இசைவிப்பதுவோ’

என்ற வரி ஓர் உதாரணம். வேதங்கள் முடிவிலா பரவெளியின் ஈடிணையற்ற தனிமையை பாடுகின்றன. அது அல்லாமல் வேறொன்றுமில்லை என்ற நிலையின் தனிமை. பரம்பொருளின் தனிமை. அந்த எல்லையற்ற தன்னந்தனிப்பொருள் தன்னை இன்னொருவருக்கு எப்படி அறிவுறுத்த இயலும்?

அவ்வினாவுக்கு விடையாகவே குருவாக வருக என்ற அழைப்பு. குருவாகி அது வருகையில் ஞானத்தின் அனுபூதி அதன் விளைவாக நிகழ்ந்தாகவேண்டும் அல்லவா?

கந்தரனுபூதி சைவசித்தாந்தத்தில் கிளைத்த நூல். ஆகவேதான் அது வேதாந்த மரபைப்போல உருவத்தை நிராகரிக்கவில்லை. பருப்பிரபஞ்சமும் அதற்கு ஓர் உண்மையே. அது மாயத்தோற்றம் அல்ல. மாயை என்பது அதை முழுதுணராது மயங்கும் நமது குறைநிலையே. பருப்பிரபஞ்சத்தை அல்லது உருவத்தை முதல் நிலையாக்கி அதில் இருந்து அதன் நுண்நிலையாக பரவெளியை அல்லது அருவத்தைக் கண்டு முன்வைக்கிறது இப்பாடல்.

ஆனால் இந்தியமெய்ஞான மரபுகள் அனைத்துமே உச்சநிலையில் ‘ஆற்றல் X ஜடம்’ அல்லது ‘உருவம் X அருவம்’ என்னும் எதிரீடுகளை தாண்டிய ஒருமையையே முன்னைக்கின்றன. அதையே பாம்பொருள்த்தன்மையாக காட்டுகின்றன. மேலும் பின்னால் சென்றால் இன்னொரு வரியில் அதைக் காணலாம்

அறிவு ஒன்று அற நின்று அறிவார் அறிவில்
பிறிவொன்று அற நின்ற பிரான் அல்லையோ?

‘அறிவு என்ற ஒன்று அழியும் நிலையில் நின்று அறிபவர்களின் அறிவில் பிறிது என்ற ஒன்றே அழியும்படியாக நின்ற பிரான் அல்லவா நீ?’ அறிவின் உச்சம் என்பது அறிகிறேன் என்னும் நிலை இல்லாமலாதல். அறிவுடன் அறிபவனும் ஒன்றாதல். அந்நிலையில் நின்று அறிபவர் நெஞ்சில் அவர்களில் இருந்து பிறிதாக அல்லாமல் நிற்கும் அதுவே அவன் என்கிறார் அருணகிரிநாதர். அனுபூதி என்பது அந்நிலையே.