Featured Post

Daily Project திருக்குறள்

Dear Readers / Friends, http://DailyProjectThirukkural.blogspot.com/    By interpreting various meanings for every word in a Thirukkur...

Showing posts with label Tribute. Show all posts
Showing posts with label Tribute. Show all posts

August 18, 2022

அஞ்சலி - தமிழ்க்கடல் நெல்லை கண்ணன்

தமிழ்க்கடல் நெல்லை கண்ணன் (27 Jan 1945 - 18 Aug 2022)



2008 வரைநான் தமிழ் மீது வெறும் ஆர்வமும்  பெருமையும் மட்டுமே கொண்டிருந்தேன். தில்லியில் வசித்தபோது வார வாரம் ஞாயிறு காலை சீக்கிரமாக நான் எழுவதற்கு ஸ்டார் விஜய் டிவி யில் வந்த "தமிழ்ப் பேச்சு எங்கள் மூச்சு" நிகழ்ச்சி தான் காரணம். ஐயா தான் நடுவர். பிறகு 2013 அந்நிகழ்ச்சி சில வாரங்கள் மட்டும் நடத்தபட்டு முடிந்தது.  (இன்று news7-டிவியில் இல் முக்கிய பத்திரிக்கையாளராக/anchor-ஆக பணியாற்றும் விஜயன், பேச்சு, youtube என பல தளங்களில் பணியாற்றும் ராஜ்மோகன்(rajmohan report) இவர்கள் எல்லாம் அந்நிகழ்ச்சியின் அடையாளப்படுத்தபட்ட வைரங்கள்).


போட்டியில் பேசியவர் நன்றாக பேசினால் இவர் சிலாகிப்பதும், ஒரு கட்டத்தில் மனமுறுகி அழுது ஆசி வழங்குவதும் அந்தக் கடலில் குணம் (விஜயன் இவரை பலமுறை அழ வைத்து உள்ளார் (youtube science development part 1,  science development part 2). அதேப்போல், தவறாகவோ தேவையற்றோப் பேசினால் கண்டிக்க தவறமாட்டார்.


இவரின் பேச்சின் மூலம் பாரதியாரின் உலகம் (youtube இல் (Yaar Bharathi - Part 3 Nellai Kannan (சுட்டியை தட்டவும்)) பாரதி பற்றிய இவரின் பேச்சை கேட்கலாம்), திருக்குறள்-இன் விரிவும் ஆழமும் அறிந்தேன்.இல்லை, தமிழின் ஆழத்தையும் அகலத்தையும் தன் பேச்சினாலே காட்டியவர் என்றால் மிகையாகாது. இவரின் பல பட்டிமன்றங்கள் காமராஜர் காலத்தில் பிறந்திருந்தால் அவரைப் பார்த்திருக்கலாமோ என்று தோன்றும். தமிழில் பலதரப்பட்ட இலக்கியங்களில் இருந்து பல பாடல்களை திருக்குற்றால அருவிப்போல் டன் டன் டன் என்று மனப்பாடமாக பொழிந்து நம்ம உள்ளத்தை குளிரவைப்பார் அறிவையும்  சீண்டுவார் அறியாமையை தூபம் போட்டு காண்பிப்பார். (அப்படி அறியாமையை அறியமுற்பட்டு நெல்லை (கண்ணன்)-இல் ஆரம்பித்தேன் விரைவில் நாகர்கோவில்(ஜெயமோகன்)-க்கு சென்றேன் என்பது வேறு கதை).


திருக்குறளின் ஆழத்தையும் அகலத்தையும் காண்பித்தவர் என்று சொன்னேன். இவர் ஒழுக்குமுடைமைக்கு காமராஜரை காண்பித்தது எல்லாம் என்றும் நினைவில் உள்ளது. ஆனால் காமத்துப்பால் என்றாலே முக சுளிப்பும் இளகாரமும் தான் பெரும்பாலும் அதிகம். ஆனால், கோடி மக்கள் பார்க்கும் ஒரு வெகுஜன தொலைக்காட்சியில், தமிழ்ப் பேச்சு எங்கள் மூச்சு நிகழ்ச்சியில், காமத்துப்பால் என்றால் ராதையாக மாறுவார் கண்ணனாக மாறுவார். காமத்துப்பால் குறள்களை விறைப்பாக பேசும் வாலிபர்களிடம் காமத்துப்பால் குறள்களை கொஞ்சி கொஞ்சி பேசி அதன் கவித்துவத்தை காண்பித்து காமத்துப்பாலை ரசிக்கவும் சிந்திக்கவும் வைத்தார். ஒரு நோக்கு இருநோக்கு குறளுக்கு குழைந்தும், காமக் கணிச்சி உடைக்கும் நிறையென்னும் நாணுத்தாழ் வீழ்த்த கதவு குறளுக்கு ஆவேசமாக முறுக்கியும் இவர் அளித்த விளக்கம் எல்லாம் என் கண்முன்னே வந்து செல்கின்றன. நான் 1330 குறள்களுக்கும் பொருள் அறிந்துக்கொள்ள முனைய ஒரு முக்கிய உந்துதலாக இருந்தவர் இவர். [https://dailyprojectthirukkural.blogspot.com/


இவரைப்போன்ற பேச்சாளர்கள் 100 பேராவது இன்று வேண்டும். (ஆனால் நமது துர்பாக்கியம் நகைச்சுவை நிகழ்ச்சிகளில் பங்கேற்கும் காமெடியன்கள் எல்லாம் பட்டிமன்றங்களில் வந்து கிச்சு கிச்சு மூட்டுவது அபத்தம்.)


இந்தியா செல்லும் பொழுது நெல்லை சென்று இவரை பார்க்கவேண்டும் என்று நினைத்திருந்தேன். கி.ரா-வை போல் இவரையும் பார்க்க முடியாமல் போயிற்று.


இவர் பேச்சாளர் என்றாலும் வாசி வாசி புத்தகங்கள் வாசி நன்றாக வாசி நிறைய வாசி என்று நன்றாக பேசியவர்களிடம் சொல்லிக்கொண்டே இருந்தார்.


தாகம் கொண்ட சமூத்திரம் இந்தத் தமிழ்க்கடலை பருகியப்பின் நிரம்பியிருக்குமா என்ன? இருக்காது ஏனெனில், இத்தமிழ்க்கடல் என்றும் தீராத விடாய் பசியின் வடிவம். 


தமிழ்க்கடலே
போற்றுதலும்
புகழஞ்சலியும்

- ராஜேஷ்
18.08.2022

October 15, 2020

திருக்குறள் (முதல் நிலை கற்றல்) - நிறைவு

 



நான் எடுத்த ”நாளும் ஒரு திருக்குறள்” [ http://DailyProjectThirukkural.blogspot.com/ ] என்னும் செயலை/குறிக்கோளை நேற்று 14 அக்டோபர் 2020 இரவு முடித்தேன். இச்செயலை 11 டிசம்பர் 2013 அன்று துவங்கினேன். சரியாகச் சொன்னால் 2500 நாட்கள்.  இதில் சுமார் பாதி நாட்கள் தான் 1330 குறள்களுக்கு எடுத்து இருக்க வேண்டும். ஆனால் நடுவில் பல நாட்கள் சோம்பேறித் தனம் என்று நினைக்கையில் வெட்கமாகவே உள்ளது. ஏனெனில் “குறள் 834 ஓதி உணர்ந்தும் பிறர்க்குரைத்தும் தானடங்காப் பேதையின் பேதையார் இல் என்றென்பதே வள்ளுவன் வாக்கு. அதாவது தான் படித்தும் அதனை பிறர்க்கு எடுத்துரைத்த போதிலும் தான் அதை பின்பற்றவில்லை என்றால் அவனைப்போன்று பேதை வேறு யாரும் இல்லை. நான் சோம்பலை கடந்து இச்செயலை குறைந்தது 2000 நாட்களிக்குள்ளாவது முடித்து இருக்க வேண்டும் (2000?ஏனெனில் நடுவில் இரு ஆண்டுகள் MBA படிக்கச் சென்றுவிட்டேன்).  ஆனால், கடந்த ஒரு வருடமாக நாளும் உரை எழுதி முடித்துள்ளேன் என்பது ஆறுதல்.

1330 குறள்களை கற்றுள்ளேன். இதில் கண்டிப்பாக சில குறள்கள் எனக்கு மிகவும் பிடித்தமானவை. உதாரணமாக நான் எழுதிய முதல் குறள் “எண்ணித் துணிக கருமம்”. அக்குறளை ஒரு சங்கல்பமாகவே சொல்லிக்கொண்டு இச்செயலை துவங்கினேன். பல மாதங்கள் குறள்களை கற்று உரை எழுதாத காலங்களிலும், உரை எழுத வேண்டாம் வெறும் கற்றால் போதும் என்ற நினைப்புகள் வந்த காலங்களிலும் நான் சொல்லிக்கொண்டது “குறள் 467 எண்ணித் துணிக கருமம் துணிந்தபின் எண்ணுவம் என்பது இழுக்கு.”. அக்குறளே என்னை இச்செயலை முடிக்க முக்கியமான காரணம்.

இதுப்போல் பல குறள்கள் உள்ளன. அவற்றை பற்றி என்னால் இன்று எழுத முடியாது. எல்லா குறள்களையும் மறுபடியும் ஒரு தடவை வாசித்துவிட்டு ஒவ்வொரு அதிகாரத்திலும் சிலவற்றை தேர்ந்தெடுக்கவேண்டும். (அவற்றை Favorites என்று சொல்வது இன்னும் சரியாக இருக்கும்). 

திருக்குறள் அறத்தை வலியுறுத்தியே எழுதப்பட்டுள்ளது. ஆனால் அதற்கென்று பொருளையும் இன்பத்தையும் நிராகரிக்கவில்லை. பொருளின் நிலையாமையை கூறினாலும் பொருளின் அவசியத்தையும் தெளிவாகவே எடுத்துரைத்துள்ளது. உறவுகளில் இன்பம் எவ்வளவு அவசியம் என்பதையும் எடுத்துரைத்துள்ளது.

திருக்குறள் என்பது ஒருவன் இல்வாழ்க்கையை எப்படி அமைத்துக்கொள்ள வேண்டும் என்பதை மிக நன்றாக தெளிவாக கூறியுள்ளது. ஆனால் இந்த லௌகீக வாழ்க்கையை தாண்டி வீடுபேறு அடைவதற்கான துறவு வாழ்க்கையையும் மிக தெளிவாக வகுத்துள்ளது. துறவியலில் கூறப்பட்டது துறவு வாழ்க்கைக்கு என்று மட்டும் அல்ல இல்வாழ்க்கைக்கும் மிக மிக பயனுள்ளதாக இருக்கும் (எனக்கு இருக்கிறது) என்பதில் சந்தேகமில்லை. 

வாணிப நிர்வாக மேலாண்மை கல்லூரிகளில் சொல்லித்தரப்படும் சில முக்கியமான தலைமை பண்புகளையும்(Leadership skills) திட்டமிடல் (Planning Skills, SWOT Analysis etc) செயல்முறை (Execution Skills, Risk Management analysis etc) பாடங்களையும் மிக தெளிவாக பொருட்பாலில் கூறப்பட்டுள்ளதை காணலாம்.

அடுத்து காமத்துப்பால். காமத்துப்பாலில் காதலிக்கும் காதலனுக்கும் இடையே உள்ள அன்பை அவர்கள் காதலிக்கும் நாட்களை மிக அழகாக கூறியுள்ளார் திருவள்ளுவர். ஆனால் பல குறள்கள் மிக சிறந்த மனோதத்துவங்கள் என்பதில் சந்தேகமில்லை. அதனை பிரிவு என்று கடந்து செல்லக்கூடும். பிரிவு தரும் துன்பம் என்று பார்க்காமல் துன்பம் என்று பார்த்தால் அது வாழ்வில் பலவற்றிற்கும் பொருந்தும் என்பது புரியும். எல்லாவற்றிற்கும் எல்லை உண்டு என்பதும் புரியும். 

பரிந்துரைகள்

திருக்குறளை நான் இப்படி பரிந்துரைப்பேன்

1) முக்கியாமான ஒரு 300-400 குறள்களை குழந்தைகள் 12 வயதிற்குள்ளாகவே மனனம் செய்யவேண்டும். முடிந்தால் அவர்களுக்கு எளிமையாக அர்த்தம் சொல்லித் தர வேண்டும்.

ஆயினும் எல்லா வயதினரும் இதனை படிக்கலாம் என்பதை நான் தனியாக கூறவேண்டியது இல்லை.

2)  12 முதல் - 15 வயது வரை அறத்துப்பாலை நன்கு சொல்லித்தர வேண்டும். மறுபடியும் 20-22 வயது வரை மறுபடியும் வாசிக்க வேண்டும். அதன்பிறகு அடிக்கடி (தினமும் ஒரு குறள்) வாசிப்பது இன்னும் சிறப்பு

3) 12 முதல் - 15 வயது வரை பொருட்பாலை நன்கு சொல்லித்தர வேண்டும். நேரத்தின் மதிப்பை, திட்டமிடலின் அவசியத்தை, வினைத்திட்பம், விடாமுயற்சி, ஊக்கம், சோம்பலின்மை, மறதியின்மை என்று பலதரபட்ட நிர்வாக திரண்களை மாணவர்களுக்கு இளமையிலேயே கற்பித்து அவர்கள் பின்பற்றச்செய்ய வேண்டும்.

ஏனெனில் பிள்ளைகள் பெரியவர்களாக உருவாவது அந்த பருவத்தில் தான். Formative years ஆன 14 வயது வரை பிள்ளைகள் கற்பதே அவர்கள் வாழ்நாள் முழுக்க பயனுள்ளதாக அமையும் என்று கூறப்பட்டுள்ளது. 

ஆதலால் இளமையில் தான் திருக்குறளை முக்கியமாக சொல்லித்தர வேண்டும். 

4) பின்பு ஒருவர் அலுவகத்தில் வேலைக்கு சேர்ந்தப்பின்பு 21-25 வயது வரை பொருட்பாலையும் அறத்துப்பாலையும் மீண்டும் நன்கு படிக்க வேண்டும். அது அவர்களின் மிக உற்சாகமான 20-30 வயது காலக்கட்டங்களை பயனுள்ளதாக மாற்றிக்கொள்ள அறிவுரைகளை கொடுக்கும். 

5) 20-25 வயது வரையில், மறுபடியும் கல்யாணம் ஆகும் முன்பும் ஆனப்பிறகும் காமத்துப்பாலை படித்தல்வேண்டும். உறவு ஆழமாக அமைய மிக பயனுள்ளதாக அமையும்.  பொதுவாக கடந்துச்செல்லும் நுண்ணிய உணர்வுகளை நாம் அலட்சியம் செய்யக்கூடாது என்பதை அறியலாம்.

6) திருக்குறளை எப்படி படிக்க வேண்டும் என்பதற்கு கீழ்காணும் பரிந்துரைகளை காணவும்

-- திருக்குறளை எப்படி மனனம், ஸ்வாத்யாயம், தியானம் செய்து கற்க வேண்டும் என்று எழுத்தாளர் ஜெயமோகன் அவர்கள் விவரித்துள்ளார். அதற்கு ஜெயமோகனின் ”மனப்பாடம் (சுட்டியை தட்டவும்)”, ”குறள் என்னும் தியானநூல்”, ”குறள்;இருகடிதங்கள்”, “குறள் – கவிதையும், நீதியும்”, “இந்திய சிந்தனை மரபில் குறள் 1”,   ”இந்திய சிந்தனை மரபில் குறள் 2”, ”இந்திய சிந்தனை மரபில் குறள் 3”, ”இந்திய சிந்தனை மரபில் குறள் 4”, ”இந்திய சிந்தனை மரபில் குறள் 5” கட்டுரைகளை வாசிக்கவும். 

-- திருக்குறளை எப்படி ஒரு கவிதையாக வாசிக்க வேண்டும் என்பதை பற்றி மூன்று நாட்கள் உரையாற்றியுள்ளார் எழுத்தாளர் ஜெயமோகன். அதற்கான YouTube சுட்டிகள் இதோ - குறளினிது (சுட்டியை தட்டவும்)

-- எழுத்தாளர் ஜெயமோகன் மேற்சொன்ன இரண்டு சுட்டிகளிலும் ஆபத்வாக்கியம் பற்றிப் பேசியிருப்பார். திருக்குறள்களை மனனம் செய்தால் அவை கண்டிப்பாக ஆப்த்வாக்கியமாக தோன்றும். சில காலம் ஆகும். உதாரணமாக எனக்கு சில வார்த்தைகள் 1) அருமை - அருமை உடைத்தென்று அசவாமை வேண்டும் 2) அரும்பயன் - அரும்பயன் ஆயும் அறிவினார் சொல்லார் 3) பொருள் - பொருளல்லவற்றை பொருள் என்று உணரும் 4) எண்ணித் துணிக 5) எண்ணிய எண்ணியாங்கு எய்துப 6) இன்பம் விழையான் 7) விழை தகையான் வேண்டி இருப்பர் 8) முதல் இல்லார்க்கு ஊதியம் இல்லை 9) தன்னுயிர் தான்அறப் பெற்றானை 10) யாதனின் யாதனின் நீங்கியான் நோதல் 

-- திருக்குறளை எனது தளமான http://DailyProjectThirukkural.blogspot.com/  ஒவ்வொரு சொல்லுக்கும் உள்ள பலத்தரப்பட்ட பொருளை கற்று படிக்க மிக ஏதுவாக இருக்கும். அகராதியில் ஒவ்வொரு சொல்லும் அர்த்தம் தேடி படிப்பதைக்காட்டிலும் இங்கு ஒரே இடத்தில் அகராதியில் உள்ள எல்லா பொருளையும் வாசிக்கலாம். ஆதலால் வேகமாகவும் ஆழமாகவும் படிக்கலாம்

-- திருக்குறள் தான் வேதவாக்கு என்று எல்லாம் சொல்லமாட்டேன். பலதரப்பட்ட புத்தகங்களை வாசித்து அவற்றுடன் திருக்குளை தொடர்பு படுத்தி, திருக்குறளை மற்றவற்றுடன் தொடர்பு படுத்தி பார்த்தால் நம் மனதில் திருக்குறள் நன்றாக பதியும். பொதுவாக விஸ்தாரமான வாசிப்பும் ஆழமான புரிதலும் நுண்ணிய கல்வியிற்கு அவசியம்.

-- திருக்குறள் ஒரு செவ்வியநூல். ஒரு செவ்வியல்நூலை வாழ்நாள் முழுக்க பயிலலாம். குறள் அதற்கு அப்பால் சூத்திரமும் கூட. அது பயிலப்படவேண்டிய நூல் மட்டுமல்ல, பிற நூல்களை பயில்வதற்குரிய அடித்தளத்தை அமைக்கும் நூலும்கூட. (- எழுத்தாளர் ஜெயமோகன் - குறள்- கடிதம்)

-- ஒரு முழுமையான பார்வை வேண்டும் என்றால் எல்லா திருக்குறள்களையும் கற்றல் அவசியம். சில குறள்கள் முழுமையானவையாக இருக்கும். உதாரணமாக “எப்பொருள் யார்யார்வாய் கேட்பினும் அப்பொருள் மெய்ப்பொருள் காண்பது அறிவு”. ஆனால் “எண்ணிய எண்ணியாங்கு எய்துப எண்ணியார் திண்ணியர் ஆகப் பெறின்” என்ற குறளை மட்டும் படித்துவிட்டு இமயமலை ஏறச்சென்று வானிலை சரியில்லை என்று அறிந்தப்பின்பும் இமயமலை ஏறத் தொடர்ந்தால் உயிர் தான் போகும். அதற்குத்தான் “நுனிக்கொம்பர் ஏறினார் அஃதிறந் தூக்கின் உயிர்க்கிறுதி ஆகி விடும்” என்ற குறளையும் படித்து இருக்க வேண்டும். அதேப்போல் “பொருளல்ல வற்றைப் பொருளென்று உணரும் மருளானாம் மாணாப் பிறப்பு.” என்பதை மட்டும் படித்துவிட்டு பொருளை நிராகரித்தால் துன்பமே எஞ்சும். அதற்கு தான் “பொருளல் லவரைப் பொருளாகச் செய்யும் பொருளல்லது இல்லை பொருள்” என்பதையும் உணர்ந்து பொருளை ஈட்ட வேண்டும். அப்படிச் செய்தால் தான் அறம் பொருள் இன்பம் சமநிலையில் இருக்கும். 

ஒரு சமச்சீரான அணுகுமுறைக்கு திருக்குறளை முழுமையாக கற்றல் மிக பயனுள்ளதாக இருக்கும். 

-- ஒவ்வொரு நாளும் ஒரு திருக்குறள் கற்பதாக இருந்தால் நீங்கள் உங்களுக்கு உகந்த வழியில் கற்கவும் அதாவது, 1,2,3,4,5,6, என்ற குறள் வரிசையில் கற்கலாம், அல்லது 1,2,3,4,5 என்ற அதிகாரவரிசையில் உள்ள முதல் குறள் அல்லது ஏதாவது ஒரு குறள், அல்லது அதிகார வரிசையும் இன்று குறள் வரிசையும் இன்றி ஏதாவது ஒரு குறளையும் கற்கலாம். ஒவ்வொரு முறையும் ஒரு நல்லது உண்டு. அது அவரவர் தேவைகளைக்கும் வயதுக்கும் ஏற்ப மாறுபடும். 

நான் எப்படிச் செய்தேன் என்றால், (1) வரிசையாக ஒவ்வொரு அதிகாரத்திலும் ஒரு குறள் என்று முறையில் சென்றேன், பிறகு முதல் அதிகாரத்தில் இருந்து மறுபடியும். இதில் உள்ள நல்லது என்னவென்றால் திருக்குறளில் உள்ள ஒரு முழுமையான நோக்கு கிடைத்துவிடும். தேவையற்ற முரணான எண்ணங்களை மனதில் சுமக்கவேண்டாம். சிலசமயம் தவறான முன்முடிவுகளை தவரிக்கலாம். (2) முதல் தடவை ஒரு அதிகாரத்தை வாசிக்கும் பொழுது அவ்வாதிகாரத்தில் உள்ள எல்லா குறள்களையும் ஒருதடவை வாசித்துவிட்டு அதற்கான சாலமன் பாப்பையா போன்றவர்களின் எளிய உரைகளையும் வாசிக்கலாம். இது அவ்வதிகாரத்தின் முழு சாராம்சத்தையும் கொடுத்துவிடும். (3) ஒவ்வொரு தடவை ஒரு அதிகாரத்தை வாசிக்கும் பொழுதும் அவ்வதிகாரத்தில் உள்ள முந்திய 2-3 குறள்களை மனனம் செய்வது அல்லது அதன் அர்த்தங்களை ஆழ்ந்து வாசித்து மனதில் நன்கு பதியவைப்பது நன்று. ஏனெனில் நாம் ஒரு தடவை வாசிப்பதால் கல்லில் பதிவதுப்போன்று அர்த்தம் (எல்லோருக்கும்) பதிந்துவிடாது. மறுபடியும் மறுபடியும் படிக்க படிக்க தான் நம் மனதில் நன்றாக பதியும். அது நமது செயலிலும் தென்ப்படும்.

-- பிறருக்கு கற்பித்தல்: நாம் திருக்குறளுக்கு கற்பிக்கும் பொழுது பல நன்மைகள் உண்டு (1) நாம் பிறருக்கு ஒன்றை கற்றுக்கொடுக்கிறோம். நாம் கற்றது வீணாகவில்லை (2) நாம் பிறருக்கு கற்றுத்தரும் பொழுது நாம் ஏற்கனவே படித்ததை மீண்டும் படிக்கிறோம். அதனால் அக்குறள் மனதில் பதிய அதிக வாய்ப்பு உண்டு. அதன் அர்த்தம் கண்டிப்பாய் மனதில் நன்றாக பதியும் (3) நாம் பிறருக்கு சொல்லித்தருவதால் (பிறருக்கு ஓதுவதால் நாம் கூறியவற்றைப் பின்பற்ற வேண்டும் என்ற மன உறுதி நமக்கு பிறக்க வாய்ப்புகள் அதிகம். அதனால் நாம் முன்னேறுவோம்). ”குறள் 834 ஓதி உணர்ந்தும் பிறர்க்குரைத்தும் தானடங்காப் பேதையின் பேதையார் இல்” என்பதை நினைவில் கொள்க (4) நாம் தவறாக கற்றிருந்தால் அதை கண்டுக்கொண்டு திருத்திக்கொள்ள ஒரு வாய்ப்பு. நமது புரிதலை ஆழப்படுத்திக்கொள்ள ஒரு வாய்ப்பு (5) பிறருக்கு கற்றுத்தரும் பொழுது / பிறருடன் கற்கும் பொழுது அங்கே ஒரு உரையாடல் நிகழ்கிறது. அது பெரும்பாலும் ஒரு நல்ல தருக்கத்தை உருவாக்கும். அத்தருக்கத்தில் நாம் மிகுந்த பயனடைவோம். வாழ்வோடு தொடர்புடைய உதாரணங்கள் வெளிவரும். ஆழ்ந்த புரிந்தல் உண்டாகும். அர்த்தம் மனதில் பதியும் (6) மற்ற குறள்களுடனும் மற்ற புத்தகங்களில் உள்ள உதாரணங்களுடனும் தொடர்பு படுத்திக்கொள்ள ஒரு வாய்ப்பு. இப்படி நுனிப்புல்லில் இருந்து வெளிவந்து வாசிப்பு செம்மை அடைய முடியும். 

-- குழந்தைகளுக்கு கற்பித்தல்: - குழந்தைகளுக்கு கற்பிக்கும் பொழுது குறிப்பாக அவர்களை மனனம் செய்ய பழக்கும் பொழுது 1) நமக்கு நன்றாக மனனம் ஆகும். 2) நமக்கு அது ஆபத்வாக்கியங்களை உருவாக்கிக்கொடுக்கும். 3) சில வார்த்தைகள் நமக்கு நன்கு மனதில் பதியும். 4) பல அதிகாரங்களை தொடர்பு படுத்திப் பார்க்க நல்ல ஒரு வாய்ப்பும் கூட. 5) மேலும் அடுத்த தலைமுறைக்கு நல்லவற்றை கற்றுக்கொடுக்கிறோம் அதுவும் சின்ன வயதிலேயே. 

நன்றிகள்

திருக்குறள் கற்றல் செயலை செய்தற்கு சிலருக்கு நன்றிகள் தெரிவிக்க வேண்டும். 

இறைவனுக்கு நன்றி

இச்செயல் எனக்கு அமைந்தது என் பேறு அல்லது நல்லூழ் என்பேன். இதனை வரமாக கருந்துகிறேன். ஆதலால்  இச்செயலை முடிக்க அருள்புரிந்த இறைவனின் மலர்பாதங்களுக்கு என்றும் நன்றிக்கடன் பட்டுள்ளேன். எனக்கு கீழ்க்காணும் இத்தனை சந்தர்ப்பங்களையும் சாத்தியங்களையும் வினைத்திட்பத்தையும் கொடுத்தது இறைவன் தான். இச்செயலை துவங்கியப்பின்பு பல மாதங்கள் திருக்குறள் கற்காமல் இருந்தாலும் என்னை மறுபடியும் அதில் செலுத்தி என்னை இச்செயலை முடிக்க துணையாக இருந்த இறைவனுக்கு மறுபடியும் நன்றி.

(இதில் வரிசை முறை என்று ஏதும் இல்லை)

-- பேராசிரியர் திரு. ஒளவை நடராஜன்

நான் 2008-2011 ஆண்டுகளில் டெல்லியில் இருக்கும் பொழுது இவர்கள் பொதிகை தொலைக்காட்சியில் காலை வேலைகளில் திருக்குறளுக்கு அர்த்தம் உரைப்பர். ஒவ்வொரு குறளுக்கும் 20 நிமிடங்களுக்கு உரை கூறுவார்கள். என்னடா இது 2 வரில உரைகள் மலைப்போல் குவிந்துள்ளன. இவர் 20 நிமிடம் சொல்கிறாரே என்று தோன்றும். ஆனால் அவரை தொடர்ந்து கேட்கையில் எப்படி திருக்குறளை உள்வாங்க வேண்டும். எப்படி வெவ்வேறு கண்ணோட்டங்களில் அணுகி பொருள்க்கொள்ள வேண்டும் என்று கற்றுக்கொண்டேன்.நன்றி ஐயா.

-- எழுத்தாளர் ஜெயமோகன்

இச்செயலை துவக்க காலத்தில் புரியாமல்தான் செய்துக்கொண்டு இருந்தேன். அங்கே வெட்டி இங்கே வெட்டி எல்லாவற்றையும் கலந்து என்னமோ ஏதோவென்று செய்துக்கொண்டு இருந்தேன். அப்படியான காலகட்டங்களில் தான், ஒரு கடிதத்திற்கு பதிலாக எப்படி மனனம், ஸ்வாத்யாயம், தியானம் முறையில் எப்படி திருக்குறளை கற்றால் பயன் இருக்கும் என்று ஒரு சிறிய கட்டுரை எழுதி இருந்தார். அதன்படி நான் எனது கற்றல் முறையை மாற்றிக்கொண்டேன். அது எனக்கு மிக மிக பயனுள்ளதாக அமைந்தது. இல்லையேல் எனது வலைத்தளம் திருக்குறளுக்கான பத்தாயிரத்தி சொச்ச உரையாக அமைந்திருக்கும். நானும் ஆழமாக கற்று இருக்க மாட்டேன். நான் சிந்தித்து திருக்குறளை கற்றேன் என்றால் அதற்கு ஜெயமோகனே ஒளிவிளக்கு ஏற்றிவைத்தார். அதனை நோக்கியே சென்றேன்.  நன்றி ஜெ.

-- சொற்பொழிவாளர் தமிழ்க்கடல் திரு.நெல்லைக்கண்ணன்

2009, 2013 ஆண்டுகளில் ஸ்டார் விஜய் தொலைகாட்சியில் வந்த ”தமிழ்ப் பேச்சு எங்கள் மூச்சு” என்ற போட்டித் தொடர் நிகழ்ச்சியில் திருக்குறளின் எல்லா சுவைகளையும் பல போட்டியாளர்கள் கொடுத்தார்கள். இவர் அருமையான நெறியாளராக நடுவராக இருந்தார். மேலும் மற்ற இலக்கிய தலைப்புகளிலும் மிக நன்றாக அதன் சுவையை எடுத்து உரைத்தார். இவரின் சில பேச்சுகளில் எனக்கு சில மாறுபட்ட கருத்துக்கள் இருப்பினும், இவர் எனது தமிழ் ஆர்வத்தை ஒரு படி மேலே உயர்த்தினார், எனது வாசிப்பு தேடலை ஒரு படி மேலே உயர்த்தினார் என்பதில் ஐயமில்லை.  அதனால் தான் நாம் பாடத்திட்டங்களுக்கும் வேலைக்கும் வெளியே மற்றவற்றை குறிப்பாக தமிழ் இலக்கியங்களை படிக்க வேண்டும் என்ற செயலில் இறங்கினேன். நன்றி ஐயா

-- எனது பாட்டி சரஸ்வதி சுப்ரமணியம்

என்னை எப்பொழுதும் ஊக்கிவிக்கும் எனது பாட்டி. இது என்ன வேண்டாத வேலை என்றெல்லாம் கூறமாட்டார். நல்லது. திருக்குறளில் வாழ்க்கைக்கான எல்லாம் இருக்கு. இதை படித்தால் எல்லாத்தையும் படிச்ச மாதிரி. படி என்று என்னை ஊக்கபடுத்தினார். படிச்சு அதுமாதிரி நடந்துக்களையே என்று சிலர் நையாண்டி செய்வர் அல்லது குத்திக்காண்பிப்பர். அப்படி எல்லாம் நையாண்டி செய்யமாட்டார் பாட்டி. எல்லாவற்றையும் ஒரே அடியாக மாற்றுவது கடினம் என்ற தாத்பர்யத்தை உணர்ந்தவர். எல்லாவற்றையும் பின்பற்ற முடியவில்லை என்றாலும், சிலவற்றை பின்பற்றுகிறாயே, அதுவே முன்னேற்றம் தான். ஒரு படி மேலே சென்று இருக்கிறாய். நல்லவிஷயம் தான். அப்படியே தொடர்ந்தால் எல்லாவற்றையும் மாற்றிக்கொள்ளலாம். உன்னால் முடியும் என்று கூறுவார். நான் இப்பொழுது எனது மருமகள் (ஆதாவது தங்கையின் மகள்) ப்ரத்ன்யாவிற்கு திருக்குறளை மனனம் செய்ய பயிற்சிக்கொடுத்துக்கொண்டு இருக்கிறேன் (ஒருவருடத்தில் இதுவரையில் 90 திருக்குறள்கள்) . இதனைப்பார்க்கும் எனதுப்பாட்டி, எனக்கு இப்படி ஒரு மாமா இல்லையே என்று ஆதங்க படுகிறாள். நாம் நல்லது தான் செய்கிறோம் என்ற நம்பிக்கையை கொடுக்கிறாள். ஆதலால் பாட்டிக்கும் நன்றி. 

-- பள்ளிகாலத்துத் நண்பன் S.ராஜேஷ்

2010 ஆண்டுகளில் இவனது Google Talk / Chat இன் தன்னிலை செய்தி (status message) "எண்ணித் துணிக கருமம்”, “சிறுக்கோட்டுப் பெரும் பழம்” என்று தான் இருக்கும். அவை என்னை ஈர்த்தன. அதனை கேட்டு அறிந்தேன். எனது தமிழ் ஆர்வத்தை ஆழமாக ஆக்கியது. அன்றில் இருந்து இன்று வரை நான் ஒரு முக்கியமான செயலில் ஈடுபட்டாலோ அல்லது நெடுநாட்கள் எடுக்கும் பெரிய செயல்களில் ஈடுட்பட்டாலோ நான் மனதில் சங்கல்பமாய் சொல்லிக்கொள்வது “எண்ணித் துணிக கருமம் துணிந்தபின் எண்ணுவம் என்பது இழுக்கு”. நன்றி டா.

-- நண்பர் நாகமணி

இந்த செயலை துவங்கிய காலக்கட்டங்களில், இது நல்ல முயற்சி பாஸ், நல்லா பண்ணுங்க என்று ஊக்கப்படுத்தினார். நீங்களும் சேர்ந்துக்கொள்ளுங்களேன் என்று அழைத்தபொழுது, அவரும் வந்து சில பல குறள்களுக்கு உரை பதிவு செய்துள்ளார். அவ்வப்பொழுது சில மைல்கல்களை தாண்டும் பொழுது, செம பாஸ் என்று கூறுவார். சினிமா, கிரிக்கேட், அரசியல் என்பத்தை தாண்டி சற்று இலக்கியத்தை பற்றியும் இவரிடம் பேச முடியும். நன்றி பாஸ்.

-- திரு.அசோகன் சுப்பிரமணியம்

இச்செயலை துவங்கிய காலங்களில் திருக்குறள்களுக்கு பொருள் அறிந்துக்கொள்ளும் முனைப்பில் பல வலைத்தளங்களை மேய்வதுண்டு. 99% சதவிகித உரைகள் ஏற்கனவே உள்ள உரைகளை தொகுத்து வலையேற்றபட்டு இருக்கும். அதற்கு மேலே ஒரு துளி உழைப்பைக்கூட செய்து இருக்கமாட்டார்கள். ஒரு சில வலைப்புகள் சில குறள்களுக்கு மட்டும் கட்டுரை வடிவில் திருக்குறளை விவரித்து நன்றாக எழுதியிருப்பார்கள். அது பயனுள்ளதாகவும் இருந்தது. அப்படித் தேடிக்கொண்டு இருக்கையில், தற்செயலாக திரு அசோகன் சுப்பிரமணியன் அவர்களின் வலைத்தளத்தை கண்டடைந்தேன். அவரும் நான் மேற்கொண்ட பாதையில் முன்னரே பல காலமாக பயணித்துக்கொண்டு இருந்தார். ஆதலால் நாம் சரியான பாதையில் சென்றுக்கொண்டு இருக்கிறோம் என்ற நம்பிக்கை பிறந்தது. அவர் விளக்கம் அளிப்பதுடன் நிறுத்திவிடாமல் திருக்குறளை இன்று புழங்கும் வார்த்தைகளை வைத்து மறு ஆக்கம் செய்து இருப்பார். பாராட்டப்பட வேண்டிய முயற்சி. பல குறள்களுக்கு மற்றவர்கள் வேறுவிதமாக(தவறாகவோ அல்லது குழப்பமாகவோ) உரை எழுதி இருந்தாலும் அவர் அவருக்கு தோன்றியதை அவருக்கு சரி எனப்பட்டதை தெளிவாக எழுதியிருந்தார். அந்த இயல்பு எனக்கும் ஒரு மனத்திட்பத்தை கொடுத்தது. அதனால் எனக்கு சரியென பட்டதையே நானும் உரையாக எழுதினேன். திரு.அஷோக் அவர்களிடம் இருந்து சில குறள்களுக்கு வேறுபட்டு இருக்கிறேன். அவரின் உரை எனக்கு மிக மிக பயனுள்ளதாக அமைந்தது. திருக்குறளின் உரையை ஆங்கிலத்திலும் விரிவாக எழுதியது இவ்வுலகிற்கு கிடைத்த பேறு எனவே சொல்லுவேன். அவருக்கு எனது நன்றி கலந்த வணக்கம்.



பெருமை

குறள் 505 
பெருமைக்கும் ஏனைச் சிறுமைக்கும் தத்தம் 
கருமமே கட்டளைக் கல்

இச்செயலை முடித்தது எனக்கு பெருமையே அளிக்கிறது. ஆயினும் நான் திருக்குறளை ஒரு முறை கற்று உள்ளேன். அதன் படி நடக்க, பெருமை பயக்கும் பல செயல்களை செய்ய நான் ஏறவேண்டிய சிகரங்கள் பல இருக்கிறது. அப்பெருமை எனக்கு வாய்க்க நான் செயல்களை செய்ய இறைவன் துணைப்புரியட்டும். 

குறள் 978
பணியுமாம் என்றும் பெருமை சிறுமை
அணியுமாம் தன்னை வியந்து.

இச்செயலை செய்து முடித்தது என்னளவில் ஒரு பெரிய காரியம் ஆயினும் அதனை தாண்டியும் பல காரியங்கள் உள்ளன. ஆதலால் நான் சரிசெய்யவேண்டிய என்னுடைய குறைப்பாடுகளை எண்ணியும் நான் அடையவேண்டிய சால்புகளை வேண்டியும் பணிவு கொள்கிறேன். 

அடுத்து?

திருக்குறள் கற்றல் பணி தொடரும்

எனது அடுத்த செயல்களுக்கான எண்ணங்கள்

திருக்குறள்

எழுதிய எல்லா குறள்களையும் மறுவாசிப்பு செய்து தேவையெனில் சீரமைப்பு செய்ய வேண்டும். 1. துவக்க காலங்களில் சில குறள்களுக்கு ஒவ்வொரு வார்த்தைக்கும் அகராதியில் இருந்து பொருளை எடுக்கவில்லை. அவற்றை பூர்த்தி செய்யவேண்டும் 2. எழுதிய உரைகளை தேவையெனில் பொருட்பிழைகளை களையவோ அல்லது சுருக்கவோ  அல்லது நீட்டவோ வேண்டும். 3. சொற்ப்பிழைகள், எழுத்துப்பிழைகள், இலக்கணப்பிழைகள், வலிமிகும் வலிமிகா இடங்கள் பிழைகள் ஆகியவற்றை சரிசெய்ய வேண்டும்.

1. திருக்குறள் - ஒவ்வொரு அதிகாரத்திலும் முக்கியாமன 2-4 குறள்களை தேர்ந்தெடுக்க வேண்டும்

2. திருக்குறள் - தலைமை பண்புகளை பறைச்சாற்றும் குறள்களை தேர்ந்தெடுக்க வேண்டும்

3. திருக்குறள் - அதிகார வாரியாக கட்டுரைகள் - இது ஒரு பெரும் பணி

4. திருக்குறள் - ஆத்மார்த்தமான உறவுகளுக்கு காமத்துப்பால் சொல்லும் சில முக்கியமான மனோத்தத்துவங்கள்

5. திருக்குறள் - ஆபத் வாக்கியங்கள்

மற்றவை

மூதுரை - ஔவையார்
கொன்றை வேந்தன் - ஔவையார்
நல்வழி - ஔவையார்
புதிய ஆத்திசூடி - பாரதியார்
நாலடியார்
புறநானூறு

எண்ணங்கள் நிறைவேற வேண்டும்.

சமர்ப்பணம்

இச்செயலை பாதிக்கடந்து (665 குறள்கள்) இருக்கும் பொழுது தமிழ்க்கடல் நெல்லைக்கண்ணன் ஐயா அவர்களுக்கு சமர்ப்பித்து இருந்தேன். 

இப்பொழுது மீதமுள்ள பாதிச்செயலை (665 குறள்கள்) எனது தனிப்பெருந்துணை பாட்டி சரஸ்வதி சுப்ரமணியத்திற்கு சமர்ப்பிக்கிறேன்.

இச்செயலை மொத்தமாக எனது குழந்தை உமையாள் மற்றும் எனது தங்கை தம்பியின் பிள்ளைகளான ப்ரத்ன்யா, தன்யா, சேந்தன் ஆகியோருக்கு சமர்ப்பிக்கிறேன். அவர்கள் திருக்குறளையும் மற்ற நூல்களையும் கலைகளையும் கற்று அவற்றை உறுதுணையாகக்கொண்டு வாழ்வை நன்கு அமைத்துக்கொண்டு வீடுபேறு அடையவேண்டுகிறேன். இறைவன் துணைநிற்கட்டும். 

அன்புடன்
ராஜேஷ் (எ) பாலசுப்ரமணியன்

March 23, 2020

இயக்குனர் விசு


தமிழ் சினிமாவில் தவிர்க்கப்பட முடியாத ஒரு திரைப்படம் என்றால் அது "சம்சாரம் அது மின்சாரம்" (தயாரிப்பு ஏ.வி.எம்). அதனை படைத்தது அப்படத்தின் இயக்குனர் விசு அவர்கள். அவர் இந்திய நேரப்படி இன்று 22-மார்ச்-2020 மாலை 5:30 மணியளவில் இறைவனடி சேர்ந்தார். 

அவரோட "சம்சாரம் அது மின்சாரம்"ல வர ஒரு 5-6 காட்சிகளை எத்தனை வாட்டி பார்த்தேன் என்று எனக்கு தெரியவில்லை. அதில் அவரக்கூடிய வசனங்கள் மனப்பாடம் என்றே சொல்லலாம். வாழ்க்கையில் நிஜ மனித உறவுகளின் சிக்கல்களை மிக எளிமையாகவும் ஆழமாகவும் நுண்ணுணர்வோடும் அணுகி அதற்கு விடை கண்டு கொடுத்தவர் விசு அவர்கள். அவர் படங்கள் குறிப்பாக சம்சாரம் அது மின்சாரம் மற்றும் மணல் கயிறு பல்லாண்டு வாழும்.

அப்படத்தில் எனக்கு பிடித்த சில காட்சிகள் 

(இதில் வரும் விசு அவர்கள் பலகாரத்துக்கு கொடுக்கும் விவரணை - நகைச்சுவை)

(இதில் தன் மகளின் சுயநலத்தையும் அவர் எப்படி மற்றவர்கள் கல்யாண வேலைகளுக்கு பயன்படுத்துவாள் என்றும், பின்பு அண்ணியை மதிக்காத தங்கையை அண்ணன் எப்படி உதாசீன படுத்துகிறான்)

(இறுதியில் மாமனார் மருமகளுக்குள் வரும் வாக்குவாதம்)


(வீட்டு செலவுகளுக்கு கணக்கு பார்க்க கூடாது என்பதை எடுத்துரைக்கும்)

(மனோரமா விற்கும் கிஷ்முவிற்கும் இடையே நடக்கும் நாடக சண்டை)

(மனோரமா விற்கும் கிஷ்முவிற்கும் இடையே நடக்கும் நாடக சண்டை - 2, லக்ஷ்மி ரகுவரனுக்கு தவறை உணர்த்துவது, லட்சுமி தன் மச்சினனுக்கு பொறுப்பை உணர்த்துவது)

(இளவரசி மனம் திருந்துவது)


(திரைப்படத்தின் கிளைமாக்ஸ் - இறுதிக்காட்சி - குடும்ப சிக்கல்கள், லக்ஷ்மியின் தன்மானம் போன்றவை)

April 08, 2015

தமிழ் இலக்கிய உலகின் அசுரன் #‎ஜெயகாந்தன்

அற்பங்களை அகங்காரத்தால் எதிர் கொள்கிறேன் என்று சொன்ன தமிழ் இலக்கிய உலகின் அசுரன் #‎ஜெயகாந்தன்‬ இறந்து விட்டான்! ‪
                - ஜெயகாந்தன்

Face trifles (/ vileness / meanness) with conceit (/ arrogance / egotism / caprice)
                - Jeyakanthan