Featured Post

Daily Project திருக்குறள்

Dear Readers / Friends, http://DailyProjectThirukkural.blogspot.com/    By interpreting various meanings for every word in a Thirukkur...

Showing posts with label From_Writer_Jeyamohan. Show all posts
Showing posts with label From_Writer_Jeyamohan. Show all posts

November 06, 2020

குறள் - நன்றி - கடிதம்

எனது கடிதம் - 26-Oct-2020

அன்பிற்கும் வணக்கத்திற்கும் உரிய ஜெ,

நலமாக இருக்கிறீர்களா?

சில காலமாக கடிதங்கள் எழுதவில்லை. ஆயினும் உங்களையும் வெண்முரசையும் தொடர்ந்து வாசித்து வருகிறேன். 

திருக்குறள் வாசிப்பு 
2013 இறுதியில் நாளும் ஒரு திருக்குறள் (https://DailyProjectThirukkural.blogspot.com/) கற்க வேண்டும் என்று ஒரு செயலில் இறங்கினேன். ஆனால் தொடர்ச்சியாக செய்யவில்லை. ஆனால் கடந்த 2.5 வருடங்களாக நாளும் அரைமணிநேரம் எடுத்துக்கொண்டு தொடர்ந்து திருக்குறளை கற்றேன். சென்ற வாரம் அதனை (முதல் நிலை கற்றல்/ஸ்வாத்யாயம்) நிறைவு செய்தேன்.

துவக்கத்தில் வெறுமென  திருக்குறளைப் படித்துக்கொண்டிருந்த நான், பின்பு திருக்குறளில் இருந்து அதிகம் பயன்பெற்றேன் என்றால் அதற்கு காரணம் நீங்கள் கூறியதுப்போல் ஒவ்வொரு சொல்லுக்கும் அகராதியில்(agarathi.com) இருந்து எல்லா அர்த்தங்களையும் அறிந்து குறளை ஸ்வாத்யாயம் செய்தது தான். உங்களின் “மனப்பாடம்” கட்டுரையும், யூட்யுபில் உள்ள உங்களது குறளினிது உரைகளும் மற்றும் இந்திய சிந்தனை மரபில் குறள் கட்டுரைகளும் எனக்கு வழிகாட்டியாக அமைந்தன. நீங்கள் பரிந்துரைத்த கி.வா.ஜகன்னாதன் ஆராய்ச்சிப் பதிப்பும் (மற்ற இலக்கியங்களில் திருக்குறள் எடுத்தாளப்பட்டது) உதவியாக இருந்தது. மனனம் செய்த பல குறள்களில் சில குறள்கள் ஆப்த்வாக்கியமாக தோன்றி தெளிவு கொடுத்ததும் உண்டு. சில குறள்கள் பல குழப்பங்களுக்கு தீர்வை கொடுத்தது என்றும் கூறலாம். குறள்கள் எனது சுயமுன்னேற்றத்திற்கும் நிர்வாக மேலாண்மைக்கும் வழிக்காட்டியாக இருந்தது. 

இக்கற்றல் பயணம் எனக்கு பயனுள்ளதாகவும் மனதிற்குநிறைவாகவும் இருந்தது.

திருக்குறளை (பொதுவாக இலக்கியங்களை) விவாதிப்பது பற்றி நீங்கள் கூறியதுப்போல் என் தோழி ஒருவருடன் (இதுவரையில் 79 குறள்கள்) விவாதித்து வந்துக்கொண்டு இருக்கிறேன். அதன் விளைவாக பிழைத்துணர்ந்த ஒன்றை இழைத்துணரும் வாய்ப்பும் கிடைத்தது/கிடைக்கிறது. ஆதலால் திருக்குறள் மறுவாசிப்பும் விவாதமும் மேலும் தெளிவுப்பெற உதவுகின்றன. 

மேலும் எனது தங்கையின் 7 வயது மகள் ப்ரத்ன்யாவிற்கு மனனம் செய்ய பயிற்சி அளித்துக்கொண்டு இருக்கிறேன். இதுவரையில் 94 திருக்குறள்கள் ஆயிற்று. துவக்கத்தில் வெறுமென மனனம் செய்தாள், போக போக அதன் அர்த்தத்தையும் கேட்டு அறிந்துக்கொள்கிறாள். பிற்காலத்தில் அவளுக்கு திருக்குறள் பயனாக அமையும் என்று நம்புகிறேன். ஒருவிதத்தில் எனக்கும் மனனம் ஆகிறது. இவ்வாறு ப்ரத்ன்யாவிற்கு சொல்லித்தர வாரத்தில் மூன்று நாட்கள் ஒரு 10 நிமிடம் எடுக்கவில்லை என்றால் திருக்குறளை மனனம் செய்வேனா என்று தெரியவில்லை. இந்த இருவழி கற்றல் வழி நன்மையாகவும் இனிமையாகவும் உள்ளது. 

மிக்க நன்றி ஜெ🙏. 

அன்புடன்
அன்புள்ள ராஜேஷ்

ஒரு செவ்வியல்நூலை வாழ்நாள் முழுக்க பயிலலாம். குறள் அதற்கு அப்பால் சூத்திரமும் கூட. அது பயிலப்படவேண்டிய நூல் மட்டுமல்ல, பிற நூல்களை பயில்வதற்குரிய அடித்தளத்தை அமைக்கும் நூலும்கூட.

சமீபத்தில் ஒரு நாவலை வாசித்துக்கொண்டிருந்தேன். அதிலிருந்த தந்தைமகன் உறவை புரிந்துகொள்ள முயன்றபோது

தம்பொருள் என்பதம் மக்கள் அவர்பொருள்
தத்தம் வினையான் வரும்
என்றவரி வந்து நினைவை தட்டியது. பொருள் என்று நாம் இங்கே உணர்வனவற்றில் குழந்தைகள்தான் உண்மையான பொருள். அது நாம் செய்த ஊழ்வினையால் அமையும்.

நெடுந்தொலைவு செல்லவைத்தது

ஜெ

November 05, 2020

பொய்த்தேவு- கண்டடைதல்

எனது கடிதம் - 26-Oct-2020

அன்பிற்கும் வணக்கத்திற்கும் உரிய ஜெ,

பொய்த்தேவு
சென்ற வாரம் க.நா.சு.வின் “பொய்த்தேவு” நாவலை வாசித்தேன். மிகவும் பிடித்து இருந்தது. அதனை ஒரு சினாப்சிஸ் ஆக தொகுத்துக்கொண்டேன் எனது வலைப்பூவில். 

இந்நாவலில்“ஆத்ம பலம்” பற்றி குறிப்பிட்டு இருக்கப்படும். சாம்பமூர்த்தியின் ”ஆத்மபலம் அவர் எவ்வளவுதான் தவறு செய்தாலும் ஒரு விநாடியில் அவரை திருத்திக் காப்பாற்றிவிடும்” என்று ஒரு வரி வரும். அவ்வரியைப் பற்றி பல முறை யோசித்து இருந்துக்கொண்டு இருந்தேன். ஏனெனில் நான் சமீப காலங்களில் சந்தித்த தோல்விகளுக்கு எனது ஆத்மபலம் குன்றியிருந்தது காரணமோ என்று எனது மனதில் சில காலமாய் ஓடிக்கொண்டு இருந்தது. அவ்வரி அதனைக் கூறியதுப்போல் இருந்தது. மேலும் ”நோயெல்லாம் நோய்செய்தார் மேலவாம்” இக்குறளை பிறர்க்கு என்று எடுத்துக்கொள்ளாமல் எனக்கு என்று பொருத்திக்கொண்டேன். பிரச்சனைக்கான விடையை என்னிடமே தேடிக்கொள்ள முயன்றேன். எனது சில தவறுகள் எனக்குத் தெரியும். அவற்றில் சிலவற்றை சீர் செய்தேன். அதன் பலனும் கிடைத்தது. ஆனால் ஆத்மபலம் அதிகரித்ததாக உணரவில்லை. 

குழந்தைப்பருவம் முதல் என் இருப்பத்தைந்து வயது வரையிலும் பல எதிர்மறை சூழ்நிலைகளைச் சந்தித்து இருந்தாலும் அப்பொழுது நான் நேர்மறையாகவே செயல்பட்டேன். யோசித்துப்பார்த்தால் அப்பொழுது எனக்கு பக்தி மார்க்கத்தில் சீரான ஈடுபாடு இருந்தது. உதாரணமாக வருடா வருடம் ஐம்பது நாட்கள் விரதம் இருந்து சபரிமலைக்கு சென்று வருவது என்னை நெறிப்படுத்தியதுப் போல் இருக்கிறது. கடந்த பத்துவருடங்களில் வேறு ஊர்களிலும் நாடுகளிலும் இருப்பதால் அதனை தொடர்ச்சியாக செய்ய முடியவில்லை ஊருக்கு வரும் பொழுது மட்டும் செய்கிறேன். ஊக்கமும் ஆள்வினையும் இருக்கிறது. ஆனால் தோல்விக்கு பிறகு எதிர்மறை சூழ்நிலைகளை எண்ணங்களை எதிர்க்கொள்வது சவாலாகவே இருக்கிறது. அது மேலும் சோர்வை கொடுக்கிறது. அதனால்தான் என் ஆத்ம பலம் குறைந்ததோ என்று நினைக்கிறேன். 

ஆத்ம பலம் குறைவது எங்கு என்று தெளிவாக தெரியவில்லை. ஒருவேலை அன்று நான் தெரியாமல் /பலாபலன் பார்க்காமல்(பக்தி போன்றவற்றை) செய்ததைதான் இன்று தெரிந்து செய்யவேண்டுமா என்று தெரியவில்லை.   உங்களில் தளத்தில் ஆத்ம பலம் / சக்தி என்று மூன்று நாட்களாக தேடினேன். பதில்கள் கிடைக்கவில்லை.  நீங்கள்  பல கட்டுரைகளில் தன்னறத்தை என்னவென்று கண்டடைந்து செயல்பட்டால் உற்சாகம் கிடைக்கும் என்று கூறியுள்ளீர்கள். அது தான் ஆத்ம பலமா? அல்லது என்ன? ஆத்மபலத்தை பற்றிய உங்கள் பதில் பயனுள்ளதாய் இருக்கும் என்று நம்புகிறேன்.

நன்றி.

அன்புடன்
ராஜேஷ்


அன்புள்ள ராஜேஷ்

ஒரு நாவலை வாசிக்கையில் நமக்கு ஒரு நிலைகுலைவு உருவாகிறது. நாம் அதுவரை நம்மைப்பற்றி கொண்டிருந்த எண்ணங்கள் மாறுபடுகின்றன. நம்மை நாமே உடைத்து ஆராய்கிறோம். மறு ஆக்கம் செய்துகொள்கிறோம். அவ்வாறு பொய்த்தேவு உங்களுக்குள் உருவாக்கிய கேள்விகளும் அலைவுகளுமே நீங்கள் எழுதியவை. அது அந்நாவலின் வெற்றி’

அந்தக் கேள்விகளுக்கான பதில்களை அந்நாவலை முன்வைத்தும், இதுவரை நீங்கள் வாசித்த நூல்களை முன்வைத்தும், வாழ்வறிதல்களைக்கொண்டும் நீங்கள்தான் சென்றடையவேண்டும். அதுவே இலக்கியம் நிகழ்த்தும் அகப்பயணம். அதை வெளியே ஒருவருடன் விவாதிக்கமுடியாது

ஜெ

எனது பதில் - 5-Nov-2020

அன்புள்ள ஜெ,

தங்களது பதில் பதிவை தளத்தில் கண்டேன். நன்றி.
நீங்கள் சொன்னதுப்போல் செய்து விடைத்தேடுகிறேன்.

அன்புடன்
ராஜேஷ்

October 15, 2020

திருக்குறள் (முதல் நிலை கற்றல்) - நிறைவு

 



நான் எடுத்த ”நாளும் ஒரு திருக்குறள்” [ http://DailyProjectThirukkural.blogspot.com/ ] என்னும் செயலை/குறிக்கோளை நேற்று 14 அக்டோபர் 2020 இரவு முடித்தேன். இச்செயலை 11 டிசம்பர் 2013 அன்று துவங்கினேன். சரியாகச் சொன்னால் 2500 நாட்கள்.  இதில் சுமார் பாதி நாட்கள் தான் 1330 குறள்களுக்கு எடுத்து இருக்க வேண்டும். ஆனால் நடுவில் பல நாட்கள் சோம்பேறித் தனம் என்று நினைக்கையில் வெட்கமாகவே உள்ளது. ஏனெனில் “குறள் 834 ஓதி உணர்ந்தும் பிறர்க்குரைத்தும் தானடங்காப் பேதையின் பேதையார் இல் என்றென்பதே வள்ளுவன் வாக்கு. அதாவது தான் படித்தும் அதனை பிறர்க்கு எடுத்துரைத்த போதிலும் தான் அதை பின்பற்றவில்லை என்றால் அவனைப்போன்று பேதை வேறு யாரும் இல்லை. நான் சோம்பலை கடந்து இச்செயலை குறைந்தது 2000 நாட்களிக்குள்ளாவது முடித்து இருக்க வேண்டும் (2000?ஏனெனில் நடுவில் இரு ஆண்டுகள் MBA படிக்கச் சென்றுவிட்டேன்).  ஆனால், கடந்த ஒரு வருடமாக நாளும் உரை எழுதி முடித்துள்ளேன் என்பது ஆறுதல்.

1330 குறள்களை கற்றுள்ளேன். இதில் கண்டிப்பாக சில குறள்கள் எனக்கு மிகவும் பிடித்தமானவை. உதாரணமாக நான் எழுதிய முதல் குறள் “எண்ணித் துணிக கருமம்”. அக்குறளை ஒரு சங்கல்பமாகவே சொல்லிக்கொண்டு இச்செயலை துவங்கினேன். பல மாதங்கள் குறள்களை கற்று உரை எழுதாத காலங்களிலும், உரை எழுத வேண்டாம் வெறும் கற்றால் போதும் என்ற நினைப்புகள் வந்த காலங்களிலும் நான் சொல்லிக்கொண்டது “குறள் 467 எண்ணித் துணிக கருமம் துணிந்தபின் எண்ணுவம் என்பது இழுக்கு.”. அக்குறளே என்னை இச்செயலை முடிக்க முக்கியமான காரணம்.

இதுப்போல் பல குறள்கள் உள்ளன. அவற்றை பற்றி என்னால் இன்று எழுத முடியாது. எல்லா குறள்களையும் மறுபடியும் ஒரு தடவை வாசித்துவிட்டு ஒவ்வொரு அதிகாரத்திலும் சிலவற்றை தேர்ந்தெடுக்கவேண்டும். (அவற்றை Favorites என்று சொல்வது இன்னும் சரியாக இருக்கும்). 

திருக்குறள் அறத்தை வலியுறுத்தியே எழுதப்பட்டுள்ளது. ஆனால் அதற்கென்று பொருளையும் இன்பத்தையும் நிராகரிக்கவில்லை. பொருளின் நிலையாமையை கூறினாலும் பொருளின் அவசியத்தையும் தெளிவாகவே எடுத்துரைத்துள்ளது. உறவுகளில் இன்பம் எவ்வளவு அவசியம் என்பதையும் எடுத்துரைத்துள்ளது.

திருக்குறள் என்பது ஒருவன் இல்வாழ்க்கையை எப்படி அமைத்துக்கொள்ள வேண்டும் என்பதை மிக நன்றாக தெளிவாக கூறியுள்ளது. ஆனால் இந்த லௌகீக வாழ்க்கையை தாண்டி வீடுபேறு அடைவதற்கான துறவு வாழ்க்கையையும் மிக தெளிவாக வகுத்துள்ளது. துறவியலில் கூறப்பட்டது துறவு வாழ்க்கைக்கு என்று மட்டும் அல்ல இல்வாழ்க்கைக்கும் மிக மிக பயனுள்ளதாக இருக்கும் (எனக்கு இருக்கிறது) என்பதில் சந்தேகமில்லை. 

வாணிப நிர்வாக மேலாண்மை கல்லூரிகளில் சொல்லித்தரப்படும் சில முக்கியமான தலைமை பண்புகளையும்(Leadership skills) திட்டமிடல் (Planning Skills, SWOT Analysis etc) செயல்முறை (Execution Skills, Risk Management analysis etc) பாடங்களையும் மிக தெளிவாக பொருட்பாலில் கூறப்பட்டுள்ளதை காணலாம்.

அடுத்து காமத்துப்பால். காமத்துப்பாலில் காதலிக்கும் காதலனுக்கும் இடையே உள்ள அன்பை அவர்கள் காதலிக்கும் நாட்களை மிக அழகாக கூறியுள்ளார் திருவள்ளுவர். ஆனால் பல குறள்கள் மிக சிறந்த மனோதத்துவங்கள் என்பதில் சந்தேகமில்லை. அதனை பிரிவு என்று கடந்து செல்லக்கூடும். பிரிவு தரும் துன்பம் என்று பார்க்காமல் துன்பம் என்று பார்த்தால் அது வாழ்வில் பலவற்றிற்கும் பொருந்தும் என்பது புரியும். எல்லாவற்றிற்கும் எல்லை உண்டு என்பதும் புரியும். 

பரிந்துரைகள்

திருக்குறளை நான் இப்படி பரிந்துரைப்பேன்

1) முக்கியாமான ஒரு 300-400 குறள்களை குழந்தைகள் 12 வயதிற்குள்ளாகவே மனனம் செய்யவேண்டும். முடிந்தால் அவர்களுக்கு எளிமையாக அர்த்தம் சொல்லித் தர வேண்டும்.

ஆயினும் எல்லா வயதினரும் இதனை படிக்கலாம் என்பதை நான் தனியாக கூறவேண்டியது இல்லை.

2)  12 முதல் - 15 வயது வரை அறத்துப்பாலை நன்கு சொல்லித்தர வேண்டும். மறுபடியும் 20-22 வயது வரை மறுபடியும் வாசிக்க வேண்டும். அதன்பிறகு அடிக்கடி (தினமும் ஒரு குறள்) வாசிப்பது இன்னும் சிறப்பு

3) 12 முதல் - 15 வயது வரை பொருட்பாலை நன்கு சொல்லித்தர வேண்டும். நேரத்தின் மதிப்பை, திட்டமிடலின் அவசியத்தை, வினைத்திட்பம், விடாமுயற்சி, ஊக்கம், சோம்பலின்மை, மறதியின்மை என்று பலதரபட்ட நிர்வாக திரண்களை மாணவர்களுக்கு இளமையிலேயே கற்பித்து அவர்கள் பின்பற்றச்செய்ய வேண்டும்.

ஏனெனில் பிள்ளைகள் பெரியவர்களாக உருவாவது அந்த பருவத்தில் தான். Formative years ஆன 14 வயது வரை பிள்ளைகள் கற்பதே அவர்கள் வாழ்நாள் முழுக்க பயனுள்ளதாக அமையும் என்று கூறப்பட்டுள்ளது. 

ஆதலால் இளமையில் தான் திருக்குறளை முக்கியமாக சொல்லித்தர வேண்டும். 

4) பின்பு ஒருவர் அலுவகத்தில் வேலைக்கு சேர்ந்தப்பின்பு 21-25 வயது வரை பொருட்பாலையும் அறத்துப்பாலையும் மீண்டும் நன்கு படிக்க வேண்டும். அது அவர்களின் மிக உற்சாகமான 20-30 வயது காலக்கட்டங்களை பயனுள்ளதாக மாற்றிக்கொள்ள அறிவுரைகளை கொடுக்கும். 

5) 20-25 வயது வரையில், மறுபடியும் கல்யாணம் ஆகும் முன்பும் ஆனப்பிறகும் காமத்துப்பாலை படித்தல்வேண்டும். உறவு ஆழமாக அமைய மிக பயனுள்ளதாக அமையும்.  பொதுவாக கடந்துச்செல்லும் நுண்ணிய உணர்வுகளை நாம் அலட்சியம் செய்யக்கூடாது என்பதை அறியலாம்.

6) திருக்குறளை எப்படி படிக்க வேண்டும் என்பதற்கு கீழ்காணும் பரிந்துரைகளை காணவும்

-- திருக்குறளை எப்படி மனனம், ஸ்வாத்யாயம், தியானம் செய்து கற்க வேண்டும் என்று எழுத்தாளர் ஜெயமோகன் அவர்கள் விவரித்துள்ளார். அதற்கு ஜெயமோகனின் ”மனப்பாடம் (சுட்டியை தட்டவும்)”, ”குறள் என்னும் தியானநூல்”, ”குறள்;இருகடிதங்கள்”, “குறள் – கவிதையும், நீதியும்”, “இந்திய சிந்தனை மரபில் குறள் 1”,   ”இந்திய சிந்தனை மரபில் குறள் 2”, ”இந்திய சிந்தனை மரபில் குறள் 3”, ”இந்திய சிந்தனை மரபில் குறள் 4”, ”இந்திய சிந்தனை மரபில் குறள் 5” கட்டுரைகளை வாசிக்கவும். 

-- திருக்குறளை எப்படி ஒரு கவிதையாக வாசிக்க வேண்டும் என்பதை பற்றி மூன்று நாட்கள் உரையாற்றியுள்ளார் எழுத்தாளர் ஜெயமோகன். அதற்கான YouTube சுட்டிகள் இதோ - குறளினிது (சுட்டியை தட்டவும்)

-- எழுத்தாளர் ஜெயமோகன் மேற்சொன்ன இரண்டு சுட்டிகளிலும் ஆபத்வாக்கியம் பற்றிப் பேசியிருப்பார். திருக்குறள்களை மனனம் செய்தால் அவை கண்டிப்பாக ஆப்த்வாக்கியமாக தோன்றும். சில காலம் ஆகும். உதாரணமாக எனக்கு சில வார்த்தைகள் 1) அருமை - அருமை உடைத்தென்று அசவாமை வேண்டும் 2) அரும்பயன் - அரும்பயன் ஆயும் அறிவினார் சொல்லார் 3) பொருள் - பொருளல்லவற்றை பொருள் என்று உணரும் 4) எண்ணித் துணிக 5) எண்ணிய எண்ணியாங்கு எய்துப 6) இன்பம் விழையான் 7) விழை தகையான் வேண்டி இருப்பர் 8) முதல் இல்லார்க்கு ஊதியம் இல்லை 9) தன்னுயிர் தான்அறப் பெற்றானை 10) யாதனின் யாதனின் நீங்கியான் நோதல் 

-- திருக்குறளை எனது தளமான http://DailyProjectThirukkural.blogspot.com/  ஒவ்வொரு சொல்லுக்கும் உள்ள பலத்தரப்பட்ட பொருளை கற்று படிக்க மிக ஏதுவாக இருக்கும். அகராதியில் ஒவ்வொரு சொல்லும் அர்த்தம் தேடி படிப்பதைக்காட்டிலும் இங்கு ஒரே இடத்தில் அகராதியில் உள்ள எல்லா பொருளையும் வாசிக்கலாம். ஆதலால் வேகமாகவும் ஆழமாகவும் படிக்கலாம்

-- திருக்குறள் தான் வேதவாக்கு என்று எல்லாம் சொல்லமாட்டேன். பலதரப்பட்ட புத்தகங்களை வாசித்து அவற்றுடன் திருக்குளை தொடர்பு படுத்தி, திருக்குறளை மற்றவற்றுடன் தொடர்பு படுத்தி பார்த்தால் நம் மனதில் திருக்குறள் நன்றாக பதியும். பொதுவாக விஸ்தாரமான வாசிப்பும் ஆழமான புரிதலும் நுண்ணிய கல்வியிற்கு அவசியம்.

-- திருக்குறள் ஒரு செவ்வியநூல். ஒரு செவ்வியல்நூலை வாழ்நாள் முழுக்க பயிலலாம். குறள் அதற்கு அப்பால் சூத்திரமும் கூட. அது பயிலப்படவேண்டிய நூல் மட்டுமல்ல, பிற நூல்களை பயில்வதற்குரிய அடித்தளத்தை அமைக்கும் நூலும்கூட. (- எழுத்தாளர் ஜெயமோகன் - குறள்- கடிதம்)

-- ஒரு முழுமையான பார்வை வேண்டும் என்றால் எல்லா திருக்குறள்களையும் கற்றல் அவசியம். சில குறள்கள் முழுமையானவையாக இருக்கும். உதாரணமாக “எப்பொருள் யார்யார்வாய் கேட்பினும் அப்பொருள் மெய்ப்பொருள் காண்பது அறிவு”. ஆனால் “எண்ணிய எண்ணியாங்கு எய்துப எண்ணியார் திண்ணியர் ஆகப் பெறின்” என்ற குறளை மட்டும் படித்துவிட்டு இமயமலை ஏறச்சென்று வானிலை சரியில்லை என்று அறிந்தப்பின்பும் இமயமலை ஏறத் தொடர்ந்தால் உயிர் தான் போகும். அதற்குத்தான் “நுனிக்கொம்பர் ஏறினார் அஃதிறந் தூக்கின் உயிர்க்கிறுதி ஆகி விடும்” என்ற குறளையும் படித்து இருக்க வேண்டும். அதேப்போல் “பொருளல்ல வற்றைப் பொருளென்று உணரும் மருளானாம் மாணாப் பிறப்பு.” என்பதை மட்டும் படித்துவிட்டு பொருளை நிராகரித்தால் துன்பமே எஞ்சும். அதற்கு தான் “பொருளல் லவரைப் பொருளாகச் செய்யும் பொருளல்லது இல்லை பொருள்” என்பதையும் உணர்ந்து பொருளை ஈட்ட வேண்டும். அப்படிச் செய்தால் தான் அறம் பொருள் இன்பம் சமநிலையில் இருக்கும். 

ஒரு சமச்சீரான அணுகுமுறைக்கு திருக்குறளை முழுமையாக கற்றல் மிக பயனுள்ளதாக இருக்கும். 

-- ஒவ்வொரு நாளும் ஒரு திருக்குறள் கற்பதாக இருந்தால் நீங்கள் உங்களுக்கு உகந்த வழியில் கற்கவும் அதாவது, 1,2,3,4,5,6, என்ற குறள் வரிசையில் கற்கலாம், அல்லது 1,2,3,4,5 என்ற அதிகாரவரிசையில் உள்ள முதல் குறள் அல்லது ஏதாவது ஒரு குறள், அல்லது அதிகார வரிசையும் இன்று குறள் வரிசையும் இன்றி ஏதாவது ஒரு குறளையும் கற்கலாம். ஒவ்வொரு முறையும் ஒரு நல்லது உண்டு. அது அவரவர் தேவைகளைக்கும் வயதுக்கும் ஏற்ப மாறுபடும். 

நான் எப்படிச் செய்தேன் என்றால், (1) வரிசையாக ஒவ்வொரு அதிகாரத்திலும் ஒரு குறள் என்று முறையில் சென்றேன், பிறகு முதல் அதிகாரத்தில் இருந்து மறுபடியும். இதில் உள்ள நல்லது என்னவென்றால் திருக்குறளில் உள்ள ஒரு முழுமையான நோக்கு கிடைத்துவிடும். தேவையற்ற முரணான எண்ணங்களை மனதில் சுமக்கவேண்டாம். சிலசமயம் தவறான முன்முடிவுகளை தவரிக்கலாம். (2) முதல் தடவை ஒரு அதிகாரத்தை வாசிக்கும் பொழுது அவ்வாதிகாரத்தில் உள்ள எல்லா குறள்களையும் ஒருதடவை வாசித்துவிட்டு அதற்கான சாலமன் பாப்பையா போன்றவர்களின் எளிய உரைகளையும் வாசிக்கலாம். இது அவ்வதிகாரத்தின் முழு சாராம்சத்தையும் கொடுத்துவிடும். (3) ஒவ்வொரு தடவை ஒரு அதிகாரத்தை வாசிக்கும் பொழுதும் அவ்வதிகாரத்தில் உள்ள முந்திய 2-3 குறள்களை மனனம் செய்வது அல்லது அதன் அர்த்தங்களை ஆழ்ந்து வாசித்து மனதில் நன்கு பதியவைப்பது நன்று. ஏனெனில் நாம் ஒரு தடவை வாசிப்பதால் கல்லில் பதிவதுப்போன்று அர்த்தம் (எல்லோருக்கும்) பதிந்துவிடாது. மறுபடியும் மறுபடியும் படிக்க படிக்க தான் நம் மனதில் நன்றாக பதியும். அது நமது செயலிலும் தென்ப்படும்.

-- பிறருக்கு கற்பித்தல்: நாம் திருக்குறளுக்கு கற்பிக்கும் பொழுது பல நன்மைகள் உண்டு (1) நாம் பிறருக்கு ஒன்றை கற்றுக்கொடுக்கிறோம். நாம் கற்றது வீணாகவில்லை (2) நாம் பிறருக்கு கற்றுத்தரும் பொழுது நாம் ஏற்கனவே படித்ததை மீண்டும் படிக்கிறோம். அதனால் அக்குறள் மனதில் பதிய அதிக வாய்ப்பு உண்டு. அதன் அர்த்தம் கண்டிப்பாய் மனதில் நன்றாக பதியும் (3) நாம் பிறருக்கு சொல்லித்தருவதால் (பிறருக்கு ஓதுவதால் நாம் கூறியவற்றைப் பின்பற்ற வேண்டும் என்ற மன உறுதி நமக்கு பிறக்க வாய்ப்புகள் அதிகம். அதனால் நாம் முன்னேறுவோம்). ”குறள் 834 ஓதி உணர்ந்தும் பிறர்க்குரைத்தும் தானடங்காப் பேதையின் பேதையார் இல்” என்பதை நினைவில் கொள்க (4) நாம் தவறாக கற்றிருந்தால் அதை கண்டுக்கொண்டு திருத்திக்கொள்ள ஒரு வாய்ப்பு. நமது புரிதலை ஆழப்படுத்திக்கொள்ள ஒரு வாய்ப்பு (5) பிறருக்கு கற்றுத்தரும் பொழுது / பிறருடன் கற்கும் பொழுது அங்கே ஒரு உரையாடல் நிகழ்கிறது. அது பெரும்பாலும் ஒரு நல்ல தருக்கத்தை உருவாக்கும். அத்தருக்கத்தில் நாம் மிகுந்த பயனடைவோம். வாழ்வோடு தொடர்புடைய உதாரணங்கள் வெளிவரும். ஆழ்ந்த புரிந்தல் உண்டாகும். அர்த்தம் மனதில் பதியும் (6) மற்ற குறள்களுடனும் மற்ற புத்தகங்களில் உள்ள உதாரணங்களுடனும் தொடர்பு படுத்திக்கொள்ள ஒரு வாய்ப்பு. இப்படி நுனிப்புல்லில் இருந்து வெளிவந்து வாசிப்பு செம்மை அடைய முடியும். 

-- குழந்தைகளுக்கு கற்பித்தல்: - குழந்தைகளுக்கு கற்பிக்கும் பொழுது குறிப்பாக அவர்களை மனனம் செய்ய பழக்கும் பொழுது 1) நமக்கு நன்றாக மனனம் ஆகும். 2) நமக்கு அது ஆபத்வாக்கியங்களை உருவாக்கிக்கொடுக்கும். 3) சில வார்த்தைகள் நமக்கு நன்கு மனதில் பதியும். 4) பல அதிகாரங்களை தொடர்பு படுத்திப் பார்க்க நல்ல ஒரு வாய்ப்பும் கூட. 5) மேலும் அடுத்த தலைமுறைக்கு நல்லவற்றை கற்றுக்கொடுக்கிறோம் அதுவும் சின்ன வயதிலேயே. 

நன்றிகள்

திருக்குறள் கற்றல் செயலை செய்தற்கு சிலருக்கு நன்றிகள் தெரிவிக்க வேண்டும். 

இறைவனுக்கு நன்றி

இச்செயல் எனக்கு அமைந்தது என் பேறு அல்லது நல்லூழ் என்பேன். இதனை வரமாக கருந்துகிறேன். ஆதலால்  இச்செயலை முடிக்க அருள்புரிந்த இறைவனின் மலர்பாதங்களுக்கு என்றும் நன்றிக்கடன் பட்டுள்ளேன். எனக்கு கீழ்க்காணும் இத்தனை சந்தர்ப்பங்களையும் சாத்தியங்களையும் வினைத்திட்பத்தையும் கொடுத்தது இறைவன் தான். இச்செயலை துவங்கியப்பின்பு பல மாதங்கள் திருக்குறள் கற்காமல் இருந்தாலும் என்னை மறுபடியும் அதில் செலுத்தி என்னை இச்செயலை முடிக்க துணையாக இருந்த இறைவனுக்கு மறுபடியும் நன்றி.

(இதில் வரிசை முறை என்று ஏதும் இல்லை)

-- பேராசிரியர் திரு. ஒளவை நடராஜன்

நான் 2008-2011 ஆண்டுகளில் டெல்லியில் இருக்கும் பொழுது இவர்கள் பொதிகை தொலைக்காட்சியில் காலை வேலைகளில் திருக்குறளுக்கு அர்த்தம் உரைப்பர். ஒவ்வொரு குறளுக்கும் 20 நிமிடங்களுக்கு உரை கூறுவார்கள். என்னடா இது 2 வரில உரைகள் மலைப்போல் குவிந்துள்ளன. இவர் 20 நிமிடம் சொல்கிறாரே என்று தோன்றும். ஆனால் அவரை தொடர்ந்து கேட்கையில் எப்படி திருக்குறளை உள்வாங்க வேண்டும். எப்படி வெவ்வேறு கண்ணோட்டங்களில் அணுகி பொருள்க்கொள்ள வேண்டும் என்று கற்றுக்கொண்டேன்.நன்றி ஐயா.

-- எழுத்தாளர் ஜெயமோகன்

இச்செயலை துவக்க காலத்தில் புரியாமல்தான் செய்துக்கொண்டு இருந்தேன். அங்கே வெட்டி இங்கே வெட்டி எல்லாவற்றையும் கலந்து என்னமோ ஏதோவென்று செய்துக்கொண்டு இருந்தேன். அப்படியான காலகட்டங்களில் தான், ஒரு கடிதத்திற்கு பதிலாக எப்படி மனனம், ஸ்வாத்யாயம், தியானம் முறையில் எப்படி திருக்குறளை கற்றால் பயன் இருக்கும் என்று ஒரு சிறிய கட்டுரை எழுதி இருந்தார். அதன்படி நான் எனது கற்றல் முறையை மாற்றிக்கொண்டேன். அது எனக்கு மிக மிக பயனுள்ளதாக அமைந்தது. இல்லையேல் எனது வலைத்தளம் திருக்குறளுக்கான பத்தாயிரத்தி சொச்ச உரையாக அமைந்திருக்கும். நானும் ஆழமாக கற்று இருக்க மாட்டேன். நான் சிந்தித்து திருக்குறளை கற்றேன் என்றால் அதற்கு ஜெயமோகனே ஒளிவிளக்கு ஏற்றிவைத்தார். அதனை நோக்கியே சென்றேன்.  நன்றி ஜெ.

-- சொற்பொழிவாளர் தமிழ்க்கடல் திரு.நெல்லைக்கண்ணன்

2009, 2013 ஆண்டுகளில் ஸ்டார் விஜய் தொலைகாட்சியில் வந்த ”தமிழ்ப் பேச்சு எங்கள் மூச்சு” என்ற போட்டித் தொடர் நிகழ்ச்சியில் திருக்குறளின் எல்லா சுவைகளையும் பல போட்டியாளர்கள் கொடுத்தார்கள். இவர் அருமையான நெறியாளராக நடுவராக இருந்தார். மேலும் மற்ற இலக்கிய தலைப்புகளிலும் மிக நன்றாக அதன் சுவையை எடுத்து உரைத்தார். இவரின் சில பேச்சுகளில் எனக்கு சில மாறுபட்ட கருத்துக்கள் இருப்பினும், இவர் எனது தமிழ் ஆர்வத்தை ஒரு படி மேலே உயர்த்தினார், எனது வாசிப்பு தேடலை ஒரு படி மேலே உயர்த்தினார் என்பதில் ஐயமில்லை.  அதனால் தான் நாம் பாடத்திட்டங்களுக்கும் வேலைக்கும் வெளியே மற்றவற்றை குறிப்பாக தமிழ் இலக்கியங்களை படிக்க வேண்டும் என்ற செயலில் இறங்கினேன். நன்றி ஐயா

-- எனது பாட்டி சரஸ்வதி சுப்ரமணியம்

என்னை எப்பொழுதும் ஊக்கிவிக்கும் எனது பாட்டி. இது என்ன வேண்டாத வேலை என்றெல்லாம் கூறமாட்டார். நல்லது. திருக்குறளில் வாழ்க்கைக்கான எல்லாம் இருக்கு. இதை படித்தால் எல்லாத்தையும் படிச்ச மாதிரி. படி என்று என்னை ஊக்கபடுத்தினார். படிச்சு அதுமாதிரி நடந்துக்களையே என்று சிலர் நையாண்டி செய்வர் அல்லது குத்திக்காண்பிப்பர். அப்படி எல்லாம் நையாண்டி செய்யமாட்டார் பாட்டி. எல்லாவற்றையும் ஒரே அடியாக மாற்றுவது கடினம் என்ற தாத்பர்யத்தை உணர்ந்தவர். எல்லாவற்றையும் பின்பற்ற முடியவில்லை என்றாலும், சிலவற்றை பின்பற்றுகிறாயே, அதுவே முன்னேற்றம் தான். ஒரு படி மேலே சென்று இருக்கிறாய். நல்லவிஷயம் தான். அப்படியே தொடர்ந்தால் எல்லாவற்றையும் மாற்றிக்கொள்ளலாம். உன்னால் முடியும் என்று கூறுவார். நான் இப்பொழுது எனது மருமகள் (ஆதாவது தங்கையின் மகள்) ப்ரத்ன்யாவிற்கு திருக்குறளை மனனம் செய்ய பயிற்சிக்கொடுத்துக்கொண்டு இருக்கிறேன் (ஒருவருடத்தில் இதுவரையில் 90 திருக்குறள்கள்) . இதனைப்பார்க்கும் எனதுப்பாட்டி, எனக்கு இப்படி ஒரு மாமா இல்லையே என்று ஆதங்க படுகிறாள். நாம் நல்லது தான் செய்கிறோம் என்ற நம்பிக்கையை கொடுக்கிறாள். ஆதலால் பாட்டிக்கும் நன்றி. 

-- பள்ளிகாலத்துத் நண்பன் S.ராஜேஷ்

2010 ஆண்டுகளில் இவனது Google Talk / Chat இன் தன்னிலை செய்தி (status message) "எண்ணித் துணிக கருமம்”, “சிறுக்கோட்டுப் பெரும் பழம்” என்று தான் இருக்கும். அவை என்னை ஈர்த்தன. அதனை கேட்டு அறிந்தேன். எனது தமிழ் ஆர்வத்தை ஆழமாக ஆக்கியது. அன்றில் இருந்து இன்று வரை நான் ஒரு முக்கியமான செயலில் ஈடுபட்டாலோ அல்லது நெடுநாட்கள் எடுக்கும் பெரிய செயல்களில் ஈடுட்பட்டாலோ நான் மனதில் சங்கல்பமாய் சொல்லிக்கொள்வது “எண்ணித் துணிக கருமம் துணிந்தபின் எண்ணுவம் என்பது இழுக்கு”. நன்றி டா.

-- நண்பர் நாகமணி

இந்த செயலை துவங்கிய காலக்கட்டங்களில், இது நல்ல முயற்சி பாஸ், நல்லா பண்ணுங்க என்று ஊக்கப்படுத்தினார். நீங்களும் சேர்ந்துக்கொள்ளுங்களேன் என்று அழைத்தபொழுது, அவரும் வந்து சில பல குறள்களுக்கு உரை பதிவு செய்துள்ளார். அவ்வப்பொழுது சில மைல்கல்களை தாண்டும் பொழுது, செம பாஸ் என்று கூறுவார். சினிமா, கிரிக்கேட், அரசியல் என்பத்தை தாண்டி சற்று இலக்கியத்தை பற்றியும் இவரிடம் பேச முடியும். நன்றி பாஸ்.

-- திரு.அசோகன் சுப்பிரமணியம்

இச்செயலை துவங்கிய காலங்களில் திருக்குறள்களுக்கு பொருள் அறிந்துக்கொள்ளும் முனைப்பில் பல வலைத்தளங்களை மேய்வதுண்டு. 99% சதவிகித உரைகள் ஏற்கனவே உள்ள உரைகளை தொகுத்து வலையேற்றபட்டு இருக்கும். அதற்கு மேலே ஒரு துளி உழைப்பைக்கூட செய்து இருக்கமாட்டார்கள். ஒரு சில வலைப்புகள் சில குறள்களுக்கு மட்டும் கட்டுரை வடிவில் திருக்குறளை விவரித்து நன்றாக எழுதியிருப்பார்கள். அது பயனுள்ளதாகவும் இருந்தது. அப்படித் தேடிக்கொண்டு இருக்கையில், தற்செயலாக திரு அசோகன் சுப்பிரமணியன் அவர்களின் வலைத்தளத்தை கண்டடைந்தேன். அவரும் நான் மேற்கொண்ட பாதையில் முன்னரே பல காலமாக பயணித்துக்கொண்டு இருந்தார். ஆதலால் நாம் சரியான பாதையில் சென்றுக்கொண்டு இருக்கிறோம் என்ற நம்பிக்கை பிறந்தது. அவர் விளக்கம் அளிப்பதுடன் நிறுத்திவிடாமல் திருக்குறளை இன்று புழங்கும் வார்த்தைகளை வைத்து மறு ஆக்கம் செய்து இருப்பார். பாராட்டப்பட வேண்டிய முயற்சி. பல குறள்களுக்கு மற்றவர்கள் வேறுவிதமாக(தவறாகவோ அல்லது குழப்பமாகவோ) உரை எழுதி இருந்தாலும் அவர் அவருக்கு தோன்றியதை அவருக்கு சரி எனப்பட்டதை தெளிவாக எழுதியிருந்தார். அந்த இயல்பு எனக்கும் ஒரு மனத்திட்பத்தை கொடுத்தது. அதனால் எனக்கு சரியென பட்டதையே நானும் உரையாக எழுதினேன். திரு.அஷோக் அவர்களிடம் இருந்து சில குறள்களுக்கு வேறுபட்டு இருக்கிறேன். அவரின் உரை எனக்கு மிக மிக பயனுள்ளதாக அமைந்தது. திருக்குறளின் உரையை ஆங்கிலத்திலும் விரிவாக எழுதியது இவ்வுலகிற்கு கிடைத்த பேறு எனவே சொல்லுவேன். அவருக்கு எனது நன்றி கலந்த வணக்கம்.



பெருமை

குறள் 505 
பெருமைக்கும் ஏனைச் சிறுமைக்கும் தத்தம் 
கருமமே கட்டளைக் கல்

இச்செயலை முடித்தது எனக்கு பெருமையே அளிக்கிறது. ஆயினும் நான் திருக்குறளை ஒரு முறை கற்று உள்ளேன். அதன் படி நடக்க, பெருமை பயக்கும் பல செயல்களை செய்ய நான் ஏறவேண்டிய சிகரங்கள் பல இருக்கிறது. அப்பெருமை எனக்கு வாய்க்க நான் செயல்களை செய்ய இறைவன் துணைப்புரியட்டும். 

குறள் 978
பணியுமாம் என்றும் பெருமை சிறுமை
அணியுமாம் தன்னை வியந்து.

இச்செயலை செய்து முடித்தது என்னளவில் ஒரு பெரிய காரியம் ஆயினும் அதனை தாண்டியும் பல காரியங்கள் உள்ளன. ஆதலால் நான் சரிசெய்யவேண்டிய என்னுடைய குறைப்பாடுகளை எண்ணியும் நான் அடையவேண்டிய சால்புகளை வேண்டியும் பணிவு கொள்கிறேன். 

அடுத்து?

திருக்குறள் கற்றல் பணி தொடரும்

எனது அடுத்த செயல்களுக்கான எண்ணங்கள்

திருக்குறள்

எழுதிய எல்லா குறள்களையும் மறுவாசிப்பு செய்து தேவையெனில் சீரமைப்பு செய்ய வேண்டும். 1. துவக்க காலங்களில் சில குறள்களுக்கு ஒவ்வொரு வார்த்தைக்கும் அகராதியில் இருந்து பொருளை எடுக்கவில்லை. அவற்றை பூர்த்தி செய்யவேண்டும் 2. எழுதிய உரைகளை தேவையெனில் பொருட்பிழைகளை களையவோ அல்லது சுருக்கவோ  அல்லது நீட்டவோ வேண்டும். 3. சொற்ப்பிழைகள், எழுத்துப்பிழைகள், இலக்கணப்பிழைகள், வலிமிகும் வலிமிகா இடங்கள் பிழைகள் ஆகியவற்றை சரிசெய்ய வேண்டும்.

1. திருக்குறள் - ஒவ்வொரு அதிகாரத்திலும் முக்கியாமன 2-4 குறள்களை தேர்ந்தெடுக்க வேண்டும்

2. திருக்குறள் - தலைமை பண்புகளை பறைச்சாற்றும் குறள்களை தேர்ந்தெடுக்க வேண்டும்

3. திருக்குறள் - அதிகார வாரியாக கட்டுரைகள் - இது ஒரு பெரும் பணி

4. திருக்குறள் - ஆத்மார்த்தமான உறவுகளுக்கு காமத்துப்பால் சொல்லும் சில முக்கியமான மனோத்தத்துவங்கள்

5. திருக்குறள் - ஆபத் வாக்கியங்கள்

மற்றவை

மூதுரை - ஔவையார்
கொன்றை வேந்தன் - ஔவையார்
நல்வழி - ஔவையார்
புதிய ஆத்திசூடி - பாரதியார்
நாலடியார்
புறநானூறு

எண்ணங்கள் நிறைவேற வேண்டும்.

சமர்ப்பணம்

இச்செயலை பாதிக்கடந்து (665 குறள்கள்) இருக்கும் பொழுது தமிழ்க்கடல் நெல்லைக்கண்ணன் ஐயா அவர்களுக்கு சமர்ப்பித்து இருந்தேன். 

இப்பொழுது மீதமுள்ள பாதிச்செயலை (665 குறள்கள்) எனது தனிப்பெருந்துணை பாட்டி சரஸ்வதி சுப்ரமணியத்திற்கு சமர்ப்பிக்கிறேன்.

இச்செயலை மொத்தமாக எனது குழந்தை உமையாள் மற்றும் எனது தங்கை தம்பியின் பிள்ளைகளான ப்ரத்ன்யா, தன்யா, சேந்தன் ஆகியோருக்கு சமர்ப்பிக்கிறேன். அவர்கள் திருக்குறளையும் மற்ற நூல்களையும் கலைகளையும் கற்று அவற்றை உறுதுணையாகக்கொண்டு வாழ்வை நன்கு அமைத்துக்கொண்டு வீடுபேறு அடையவேண்டுகிறேன். இறைவன் துணைநிற்கட்டும். 

அன்புடன்
ராஜேஷ் (எ) பாலசுப்ரமணியன்

April 15, 2017

ஏழாம் உலகம்

==================================================================
==================================================================
அன்புள்ள ஜெ,

நலமா?

தங்களின் சங்கச்சித்திரங்களை சிறிது சிறிதாக வாசித்தேன். நல்ல வாசிப்பாகவும், சங்க பாடல்களை எப்படி பார்க்க வேண்டும் என்று தெரிந்துக்கொண்டேன். உங்களின் திருக்குறள் பற்றிய உரைகளையும் யூடிபில் கேட்டேன். மிகவும் பயனுள்ளதாக இருந்தது. ஏனெனில் நான் அவ்வப்போது திருக்குறளை புரிந்துக்கொள்ளவேண்டும் என்று ஒவ்வொரு அதிகாரத்திலும் ஒரு குறள் என்று சுழற்ச்சி முறையில் வாசித்துக்கொண்டு இருக்கிறேஏண். நீங்கள் ஒரு இடத்தில் கூறி இருப்பீர்கள் ஒவ்வொரு சொல்லுக்கும் பல பொருள்கள் இருக்கும். அதனை அறிந்துக்கொண்டு படித்தால் திருக்குறள் இன்னும்  நன்றாக புரியும் என்று. அவ்வாறே கடந்த மூன்று ஆண்டுகளாக agarathi.com உதவியுடன் படித்து வருகிறேன். துவக்கத்தில் கடினமாக தான் இருந்தது. ஆனால் பிற்பாடு பொறுமையாக படித்தாலும் நன்கு படிக்க முடிந்தது.  இப்படி படிப்பது வீண் வேலையோ என்று ஒரு சந்தேகம் இருந்தது. ஆனால் உங்களின் உரை கேட்டப்பின்பு அது சிறந்த முறையில் ஒன்றே என்று தெரிந்துக்கொண்டேன். நன்றிகள்.

ஏழாம் உலகம்


சில ஆண்டுகளுக்கு முன் ஏழாம் உலகம் நாவலை வாங்கினேன். ஆனால் படிக்க ஒரு ஐயப்பாடு இருந்துக்கொண்டே இருந்தது. ஏனெனில் அது ஒரு இருண்ட உலகம், அதற்கு தேவையான நுண்வாசிப்பு என்னிடம் இல்லை என்ற எண்ணங்கள் என்னை தடுத்தன. கடந்த ஒரு வாரமாக வாசித்தேன். என்ன சொல்வதென்றே தெரியவில்லை. நாவலை ஒரு தடவை வாசித்துள்ளேன். ஆதலால் நான் புரிந்துக்கொண்ட அளவு தொகுத்துக்கொள்ள முயற்சிக்கிறேன்.

நாவலின் துவக்கமே (30 பக்கத்திற்குள்) எனக்கு ஒரு உவப்பிலாத உலகத்திற்குள் செல்லும் உணர்வு இருந்தது. கீழே வைத்து விடலாம் என்றேன் தோன்றியது. அதுவும் ஒரு இடத்தில் எருக்குக்கு பெருமாள் தாலி கட்டும் இடம். பின்பு இன்னும் ஒரு 50 பக்கம் படித்தேன். அதன் பின்பு என்னால் அந்த ஏழாம் உலகம் சொல்ல வருவது புரிந்துக்கொள்ள முடிந்தது. நாம் வாழும் உலகையும் புரிந்துக்கொள்ள முடிந்தது.

நாவலின் பிற்பகுதியில் மண்ணுக்கு கீழ் உள்ள ஏழு லோகங்கள் அதலம். விதலம். நிதலம், கபஸ்திமல், மகாதலம், சுதலம், பாதளம் உண்டு அவை அனைத்தும் நம்மை சுற்றியே இருக்கிறது. ஆனால் நாம் அதை பார்ப்பது இல்லை. பழனி மலைக்கு படியேறி போறவங்க கூட எல்லாதையும் பாத்துட்டு சும்மா போகிறார்கள் என்று.  முருகனுக்கு அரோகரா என்று கூறுகிறார்கள். அதுபோல எருக்கை ஒரு துணியில் போட்டு அந்த மல வண்டியில் போடுகிறான். வண்டி அதிர்கிறது. எருக்கி மீது சாக்கை எடுத்து மூடுகிறான். ஆனால் இந்த வண்டியைப் பார்க்கும் எவரும் மறு முறை பார்க்காமல் பதறி விலகுகிறார்கள்.  இது போல நாம் வாழ்வில் நம்ம சுற்றி இருக்கிற உலகை பார்க்க மறுக்கிறோம். பொருள் அல்லவற்றை பொருள் என்று எண்ணி அதன் பின் ஓடுகிறோம். 

பழனிக்கு பல முறை சென்றதுண்டு. ஆனால் பழனியை இப்படி பார்ததது இல்லை. எல்லாவற்றையும் செய்து விட்டு சாமி சாமி என்று சொல்லும் எளிய மனிதர்கள். பாவிகளுக்கும் அதே சாமி, பிச்சக்காரணுக்கும் அதே சாமி, திருடனுக்கும் அதே சாமி. எளிய மனிதர்கள். ஒரு கையும் இரு கால்களும் இல்லாத மாங்காண்டி சாமியை கண்டால் ஐஸ்வர்யம் என்று நினைப்பவர்கள், தினமும் ஒரு காசாவது போடவேண்டும் என்று நினைப்பவர்கள் என்று அந்த பழனி மலை. அங்கே மக்கள் காசு பொடுவதும் ஒரு வணிகமாக சித்தரிக்கப் படுகிறது. பிச்சைக்கார்ர்களைப் பார்க்கும் போது ஐயோ என்பது. பின்பு நமக்கு இல்லையே என்று ஆறுதல் படுத்திக்கொள்வது. அதற்கு நன்றி சொல்லிக்கொள்வது என்று காசு போடுவது. கீழ்மைகள்.  இந்த பழநி மலை உண்மையில் ஒரு திருத்தலம் என்று கருதுகிறோம். ஆனால் தைப்பூசம் முடிந்தப்பின்பு அது ஒரு குப்பை குவியலாய் நாறுவது மனிதர்களை பற்றியே உணர்த்துகிறது. நம்ம மனதில் உள்ள குப்பைகளை பழனி என்ற குப்பை கூடையில் போடுகிறார்களோ என்று தோன்றியது.  ஆதலால் தான் என்னவோ (கேரளாக்கு கொச்சன்) எல்லா வருஷமும் போனாலும் ஒரு சாமிக்கும் இவர்களை அறியவில்லை. அந்த கோவிலில் (பல கோவில்களில்) நடக்கும் அபத்தமும் நன்றாக கூறப்பட்டு உள்ளது. வெளியுலகத்து தான் மரியாதையான கோவில் வேலை, மற்றபடி செய்வதெல்லாம் அறம் அல்லாதவைகள். கை நீட்டினாலும் அதும் எரப்பாளித் தனம்தான். மந்திரம் சொல்லி துண்ணூறுவாரிக் கொடுத்து கைய நீட்டினாலும்  கணக்குதேன்...  அந்த ஆறடிக்கல்லுக்கு ஆயிரம் வருசமா கழுவி சந்தனம் போட்டு பூ போட்டு கும்பிட்றது ஒர் தொழில் - அதுபோல முத்தமை பண்டாரத்தின் தொழிலுக்கு மூல தனம். 

இருந்த இடத்தில் சோறு கிடைக்கும் பழனியில் உருப்படிகளை காண்பிப்பது எல்லாம் நான் எதிர்பார்க்கவில்லை. அடுத்த பக்கம் போலாமா வேண்டாமா என்றே எண்ணித் திருப்பினேன்.  அங்கே ஓரு உருப்படியும் ஒவ்வொரு ரகம். மலமும் மூத்திமும் நாறும் இடத்தில் பன்னிக மாதிரி திங்குவதும் தூங்குவதும். .. கடைசியில் அவர்கள் எலை போட்டு சோறு திங்குவதற்கு காத்துகிடப்பது. குய்யன் கல்யாண் சாப்பாடு இல்லை என்ற உடன் வருத்தம் கொள்ளும் இடம், பிறகு சாக துணியும் இடங்கள் அவ்வளவு எளிதாக கடக்க முடியவில்லை.

பண்டாரம் எல்லாவற்றையும் செய்யும் பொழுதும் முருகன் துணையிருப்பான் என்று கூறுகிறான்..ஆரம்பத்தில் எல்லாம் பழனியாண்டிக்க கணக்கு... கணக்கறிந்தவன் அவன். ஞானபண்டிதன் என்கிறான்.  ஆனால் பண்டாரம் செய்யும் தொழில் உடல் உணமூற்றோர்களை வாங்கி, விற்று, பிச்சை எடுக்க வைத்து செய்யும் தொழில். பண்டாரம் இந்த உருப்படிகளை பிச்சை எடுக்க வைத்து சோறு போடுவதே அவர்களுக்கு ஒரு வித நல்லது .. இல்லை என்றால் யார் இவர்களை பார்த்துக்கொள்வார்கள் என்ற நினைப்பு.  பண்டாரம் செய்வதும் முதலாளித்துவம் தான். ஒரு குமாஸ்தா மூளையை விற்பது போல, தேசம் மனிதற்களை விற்பது போல. மனுசனை மனுசன் விக்காம் பணம் இல்லை என்ற இடங்கள் நன்றாக இருந்தது. பண்டாரம் இப்படி செய்கிறான் என்றால், உலகில் பல மக்கள் தந்திரத்தால் எப்படி காரியம் சாதிக்கின்றனர் என்பதை கூறும் இடங்கள் - உதாரணமாக -  ஒருத்தன் அடித் தொண்டையில நிதானமா பேசினாலே அவன் புத்திசாலின்னுஜனம் நினைக்கும். 

பின்பு தன் மகளுக்கு வளையல் வாங்கும் பொழுது அந்த இடத்தில் சுத்தியால் ஒரு குழந்தை அடிகிறார்கள். ஆனால் வளையலை வாங்கிவிட்டு செல்கிறான்... குடும்பவாழ்வில் கலியாணம் செய்து வைத்து பிள்ளைக்கு அப்பாவாக பொறுப்பாக பாசமாக இருந்தாலும், அவன் மனது அவனை அலைக்கழிக்கிறது. பண்டாரம் எல்லாவற்றையும் செய்து விட்டு நான் ஒருத்தனுக்கு துரோகம் நினைக்கவில்லை, ஒருத்தனையும் ஏமாத்தினதும் இல்லை என்பது எல்லாம் வெளியே சொல்லிக்கொள்ளும் சமாளிப்புகளே. உண்மையில் அவன் அகத்திற்கு தெரியும் அவன் செய்வது தவறு என்று. சில இடங்களில் அவன் நட்சத்திரங்களை பார்க்க முற்படுகிறான். ஆனால் அதை பார்க்க முடியவில்லை. கண் கூசுகிறது. அவன் செய்யும் தவறுகளை யாரோ பார்க்கிறார்கள் என்ற குற்ற உணர்வு. தன்நெஞ்சே தன்னைச் சுடும் என்பது போல.  
  
முத்தமைய பற்றி சொல்லமால் இருக்க முடியாது. அவளுடைய முதற்காட்சியே கொடூரம் என்று சொல்வேன்.  பண்டாரம் முத்தமையை அந்த நிலைமையிலும் பலபேருடன் புணர வைத்து அவளை ஒரு முட்டையிடும் கோழியாக சித்தரிப்பும் என்ன சொல்வது என்றே தெரியவில்லை.   பதினேட்டு  பெற்றும் எதுவும் அவளுடன் இல்லை என்று கஷ்ட படுகிறாள். ஒற்றை முலை தான் இருந்தாலும் அவளுடைய தாய்மை சற்றும் குறையவில்லை. அவளது குழந்தையின் சிறுநீரு பட்ட உடன்.. எங்க மகாராஜல என்று சொல்லும் இடங்கள். (அந்த இடத்தில் குழந்தை பிரிக்கிறான் பண்டாரம். நட்சத்திரங்களை தன்னை அறியாமல் பார்க்கும் பொழுது அவனுக்கு கூசு கிறது. குடையை விரித்துக்கொள்கிறான். பாவங்களை இப்படித்தான் மறைத்துக்கொள்கிறார்கள். ) .. அது போல சணப்பியிடம் உரையாடும் இடங்களில். பிள்ளைகளை வெறுக்க முடியாது... முலைகளில் வாய் வச்ச பின்பு அது அம்மாண்ணு விளிப்பது மாதிரி இருக்கும் - பிறகு வெறுக்க முடியாது.  அது போல. குழுந்தை கூனும் குருடுமாக இருந்தாலும் பிள்ளையை மயிருனு சொன்னா அவள் கோபம் கொள்வதும். 

நான் சற்று நேரம் பின்பு கடந்த மற்ற சில இடங்களை சொல்ல வேண்டும்.1) நம்மள மாதிரி சாதாரண ஆத்மா நம்மளை மாதிரி இன்னொரு ஆத்மாவ மதிக்கணும், சினேகிக்கனும். 2) சீவன் கூனன் சீவனாட்டு மாறுமா என்ற இடத்தில்.. பீல எரியிர தீயும் சந்தனக் கட்டைல எரியர தீயும் நாத்த குப்பைல எரியிர தீயும் ஒன்னு தான் 3) அப்பன் குழந்தையை தொட்டு பார்க்கும் ஏற்படும் சுகம் அந்த மணத்தை மோந்தவன் செத்தாலும் மறக்க மாட்டன் 4) கூன்குருடு செவிடு நீங்கி பிறத்தலரிது. பிறந்தாச்சு. பின்ன என்ன? என்ற் இடமும் 5) ஓட்டு இல்லாதவன் முனிசிப்பாலிடி கேஸ் என்ற இடம் (லா அண்ட் ப்ரொசீஜர்) 6) எல்லோருக்கும் வாழ்வில் மிகவும் மகிழ்ச்சியான காலம் குழந்தைகள் வளர்ந்து வரும் காலகட்டம்தான்

இன்னும் சில நாட்கள் இந்த ஏழாம் உலகத்தில் தான் இருப்பேன் என்று நினைக்கிறேன். அப்படியே தொகுத்துக்கொள்ள வேண்டும் என்று எண்ணினேன். யோசித்த்ப்பார்த்தால், நான் பல இடங்களை தவறவிட்டிருப்பேன். மறுவாசிப்பில் வாசிப்பும் மனதும் இன்னும் விரிவடையும் என்று நம்புகிறேன்.

Image result for ezham ulgam
எழுத்தாளர் ஜெயமோகன்

நன்றிகள்!! இதனை திரைப்படம் ஆக்கிய பாலாவிற்கும் நன்றிகள்! 

அன்புடன்,
ராஜேஷ்  

August 09, 2016

காடு வாசிப்பு எனக்கு ஒரு மீட்சியரிதாதல்

==================================================================
காடு நாவலை வாசித்தப் பின்பு நான் தொகுத்து/synopsis-ஆக ஒரு மடலாக நாவலாசிரியர் ஜெயமோகனுக்கு எழுதியது
==================================================================




அன்புள்ள ஜெ,

நலமா?

தங்களின் 'காடு' நாவலை முதலாவதாக  2-3 நாடகள் முன்பே வாசித்து முடித்தேன். நான் நீலத்திற்கு உள்ளே செல்லலாம் என்பதே என் திட்டமாக இருந்தது. ஆனால் காடு கொண்டு சென்ற வழி விரிந்து விரிந்து என்னை வழிதவறினேன். ஆதலால் நீலத்திற்கு முன்பு ஒர் இடைவேளையில் காடு-இனை தொகுத்துக்கொள்ள வேண்டும் என்று பின்வருமாறு எழுதியுள்ளேன். மிக நீளாமான மடல். மன்னிக்கவும்


காடு நாவலை நான் கிரிதரனின் பார்வையிலும், ஐயரின் பார்வையிலுமே அதிகம் அறிந்துக்கொண்டேன். மறுவாசிப்பில் இன்னும் பல திறப்புக்களை கண்டுக்கொள்வேன் என்று நினைக்கிறேன். மற்றவர் பார்வையில் இன்னும் அதிகம் பார்க்கவில்லை. அடுத்த வாசிப்பில் கண்டுக்கொள்வேன். காட்டில் பல தளங்களை காண்கிறேன். 


கிரியின் வாழ்வில் வரும் காதல் வேவ்வேறு காலங்களில் எப்படி இருக்கிறது. அவன் முதல் முதலாக  காட்டிற்குள் வரும் பொழுது காட்டின் மேல் கொள்ளும் காதலும், நீலியின் மேல் கொள்ளும் காதலும் அற்புதமான நேரங்கள். மொத்ததில் காட்டின் தீஞ்சுவை எனக்கு மீட்சியரிதாதல்

காதல் / காமம்

கிரி முதலாவதாக காட்டை காணும் பொழுது அப்பச்சை மரத்தடியில் அவன் கொள்ளும் எழுச்சியை போல அவனுள் இயற்கையான காதல் மலர துவங்குகிறது. பின்பு அது தீயின் துளி போல பெருகிறது. பின்பு காதலின் உச்சத்தில் பாறையின் மீது தகிக்கிறது. வழியில் காடு எப்படி பிரித்தறிய முடியாமல் மரங்களும் கொடிகளும் செடிகளும் உருவான  பச்சைப்பரப்பு. ஒர் இலைகளினாலான் ஏரி. அதில் கிரி முக்குளியிட்டு செல்கிறான். காதல் அதுபோலே பிரித்தறிய முடியாதது. ஆனால் இக்காடும் / காதலும்/ காமமும் ஒவ்வொரு கணமும் மாறிக்கொண்டே இருப்பது. ஒவ்வொரு இடமும் பார்த்தது போலவே இருந்தாலும் புதிய இடங்கள். திசையற்ற இடம் காடு. ஆனால் மனிதன் அங்கே திசை தேடி அபத்தம் ஆகிறான். ஆனால் காட்டை கண்டவன் காட்டை விட முடியாது. அது போல காதலும் .  கிரி காட்டிற்குள் மீண்டும் நுழைப்பொழுது மிக சீக்கிரம் ஓடைப்பாறை அடைகிறான். மேலே செல்ல நினைக்கிறான். அப்படி செல்கையில் காடு தன் எல்லையை விரித்து விரித்து உள்ளே இட்டுச் செல்கிறது. அங்கே கிரி காட்டின் மீது இருந்த பயம் கிளர்ச்சி அடங்குகிற்து. காதலும் காமும் இது போலவே என்று எனக்கு படுகிறது. துவக்கத்தில் காதல் பரவசம் இருந்தாலும் அதில் மனிதன் திளைத்தாலும் அவன் மேலே போவது என்பது அவனுடைய எண்ணத்தை பொருத்தது. அப்படி எண்ணினால் காதல் கூட்டிச்செல்லும். ஆனால் காடு விரும்பினதால் கூட்டிச்சென்றது. 

அங்கே காட்டில் கிரியும்/ மனிதனும் அறியாத விஷயம் மீது மோகம் கொள்கிறான், காதிலிக்கிறான். அப்போது வானத்தை பார்க்கிறான். வானம்போல அவன் மனம் விரியமுடிகிறது. மனிதன் இயற்கையாக இருக்கும்பொழுது அவன் மனம் எப்படி இருக்கிறது. ஆனால் செயற்கையான நகரங்களில் மனைவியிடமும் காதலியிடமும் நம் மனம் நேரம் ஒதுக்கி பேசுகையில் எங்கே நமக்கு விரிவடைய முடியும்? .. அத்தகைய கணங்களில் மிக மெல்ல இரவெனும் தாபம் அவனுள் நிகழ்ந்தும் கொண்டு இருக்கிறது.

அதன் பின் மனுஷனுக்கு உள்ள தீ காமகுரோத மோகங்கள்.. அது காடு போல. இலைகள் தளிர்கள் வானை நோக்கி எழும் உயிர் உள்ளவரை. பின்பு மட்கியும் எரியும். காடு ஈவு இரக்கம் அல்லாதது. அங்கே பூக்கள் வசந்த காலத்தில் பூத்து அழிகிறது தடமே இல்லாமல்.  நம் மனமும் காதலும் எப்படி பட்டது. 


நீலியை கண்ட பின்பு ஓர் இடத்தில் அவர்களை தவிர காலமே இல்லாதது போல் தோன்றுகிறது. நினைவும் அறுபடவில்லை. அசையவுமில்லை. அதுபோல சிற காலம் நானும் இருந்து உள்ளேன் என்று என்னை அங்கு காண்கையில் ஒரு புன்னகை. ஆனால் இன்று யோசிக்கையில் அதை பற்றிய ஒரு சுவடு கூட என் நினைவில் பெரியதாய் இல்லை.  பின்பு கூறுகிறீர்கள் எப்படி அக்கணங்கள் கொந்தளிப்பாக இருக்கிறது. ஆனால் அனுபவம் முடிந்த மறுகணம் அதனை பகுத்துப்பிரித்து பார்க்கிறோம். எவ்வளவு உண்மை என்றே நினைத்துக்கொண்டேன். ஓர் இடத்தில் கிரி திட்டம் தீட்டுகிறான் பின்பு புதிய திட்டம் ஆனால் குட்டப்பனை கண்ட பின்பு அது ஒரு நினைப்பாகி விடுகிறது. நான் சில ஆண்டுகள் முன்பு ஒரு பெண்ணிடம் என் காதலை கூற முற்படுகையில் அவ்வாறு நடந்து உள்ளது. என்னுடன் பேரூந்தில் பயணிப்பாள். யாராவது வந்து விடுவார்கள். அல்லது மழை பெய்து விடும். சொல்ல வந்ததையே மறந்து விடுவேன். ஆனால் அப்போது அவளுடன் மழையில் சிறிது நேரம் உணவு உண்டாலும் - நீங்கள் குறிப்பிட்டு இருந்தது போல அது ஒரு பெரிய வெகுமதி.  பின்பு இதனை "தாண்டிச் சென்றபடியே இருத்தலை, இழந்தபடியே இருத்தலையே வாழ்க்கை என்கிறோம்" என்று குறிப்பிட இடமும் நன்று. 


அவன் காதல் முதிர்ச்சி அடையும் பொழுது அவள் வெறும் பெண். முடிந்துபோகும் என்று எண்ணி தன் எண்ணங்களை சாந்தப்படுத்திக்கொள்கிறான். நிதானமாக நடக்கிறான். ஆனால் அந்நிலைக்கு வர ஒருவனுக்கு ஒரு சிறிய காலம் தேவை படுகிறது. அங்கே ஓர் இடத்தில் கூறுகிறீர்கள் நிழல்கள் இடம் மாறியிருந்தன. அது போல காதலும் எப்படி நிறம் மாறுகிறது.  


ஐயர் ஓர் இடத்தில் சொல்கிறார் எல்லா பெண்ணிலும் அழகு இருக்கு. காட்டை ரசிகனும்னு நினச்சா நிம்மதியா இருக்கலாம். ஆனால் நீங்கள் சொல்லாமல் சொன்னது அதை (காட்டையும், பெண்ணையும்) அடைய நினைக்கும் பொழுது தான் ஆபத்து. கடைசியில் உனக்கு அகங்காரம் - தன்னை எல்லாரும் பேண வேண்டும் என்னும் எண்ணம். அது போல "காமம் காமம் என்ப காமம்" பாடல் மூலம் ஒரு ஒப்பீடு . காமம் கடைசி வரைக்கும் தீராத ஒரு விருந்து. காதல் என்னும் பழம் ஆதாம் ஏவால் காலத்தில் இருந்தே இருக்கிறது. அதாவது மனிதன் உருவான காலத்தில் இருந்தே காதலும் காமமும் மிக மிக இயற்கையான ஒன்று. அதனை செயற்கை படுத்த கூடாது. அதுபோல ஏங்கி உண்டால் பழத்தின் ருசியினை அறிய முடியாமல் ஆகிவிடும். உண்ணும் தோறும் ருசியும் வெறியும் ஏறும் என்னும் வரிகள!! பொதுவாகவே நீங்கள் குறுந்தொகை பாடல்களை குறிப்பிட்டு அகம் சார்ந்து நோக்கும் பார்வையில் நான் இது வரையில் அணுகியது கிடையாது. இந்நாவல் எனக்கு இன்னொரு திறப்பை கொடுத்தது என்றே சொல்லலாம். 


இருப்பினும் கிரி போல நானும் ஐயரால் எரிச்சல் அடைந்தேன். அவன் அவ்வளவு கற்பனையில் இருக்கும் பொழுது ஐயர் எளிதில் அதில் இருந்து விளகி மற்றொன்றுக்கு சென்று விடுகிறார். அவளின் அழகிற்கு விடுத்த அநீதி, தன் உணர்வுகளை சிறுமைபடுத்தியது போல. ஆனால் ஐயர் முதிர்ந்தவர் இதை போல பல நூறு பெண்களை பார்த்து இருப்பார் என்று நினைக்கும் பொழுது அது அவரது இயல்பு என்று படுகிறது. 


அது போல ஓர் இடத்தில் சொல்லுக்குள் வாழ்வதை அனுபவித்து பார்த்தால் தான் அறிந்துக்கொள்ள முடியும் என்பதனையும் ரசித்தேன். அது போல "மனம் அழகை உணரும் விதங்களின் மர்மங்களில் அலைக்கழிந்தேன்" என்னும் வரிகளில் பயணிக்கிறேன் இப்போது. நமக்கு ஏன் இப்படி எல்லாம் இதுக்கு முன்னாடி நடந்தது இல்லை. இப்ப எப்படி இதெல்லான் நடக்குது. அதுவும் நம்மலா இப்படினு நினைக்கும் பொழுது உண்மையாகவே மர்மமாக இருக்கிறது. 


நீலியின் பின்னால் அளவிட முடியாத பொன் காற்றில் குலுங்கி எழுந்தமர்ந்து (பொன்னைவிட ஒளி கொண்ட) பூக்கள் உதிர்கிறது. எவ்வளவு அழகான கற்பனை. அது போலவே அவள் பின்னால் காதல் உள்ளது என்றே எனக்கு படுகிறது. காதலே அங்கே பூக்களாக பொழிகிறது. ஆதலால் அவளே முக்கியமற்று இருக்கிறாள். .... ஆனால் "என்னால் அறிந்துகொள்ளவே முடியாத அளவுக்கு மகத்தான அபாயகரமான விஷயங்களின் விளிம்பில் உலவிக் கொண்டிருக்கிறேன் என்று நெஞ்சுக்குள் ஒரு சிறு அச்சம் சோன்றியது. கையில் அந்த மூக்குத்தி இருந்தது ஒரு சிறு கூழாங்கல்போல. உண்ணமுடியாத தானிய மணி போல. அதை ஆற்றை நோக்கி வீசினேன்" .. கிரி எப்படிபட்ட ஒரு அபாய கட்ட இடத்தில் இருக்கிறான். ஒரு படி தவறினாலும் விளைவு மிக மோசம். அங்கே அவன் கையில் எவ்வளவு அழகான ஒரு காதல் அழகிய மூக்குத்தி போல கூழாங்கல் (கூழாங்கல் உறுவாக எத்தனை ஆண்டுகள் ஆகும்)  போல தானியம் (அது எத்தனை விதைகளை உள்ளே கொண்டது) போல இருக்கிறது... ஆனால் அவன் அக்கனவை ஆற்றில் வீசுகிறான். எப்படி அதை நீங்கள் எழுதினீர்கள். பலர் அத்தகைய நேரங்களை வாழ்வில் தவறவிடுகின்றனர். 

கிரி காதலின் உச்சியில் எல்லாம் தெரிந்த பறவை இருக்கு என்கிறீர்கள். எனக்கு ஒருமாதிரி தான் புரிந்தது. இரண்டாவது தடவை பறவை தனை குறியீடாக வருகிறது. மீள் வாசிப்பில் அறிவேன் என்று நினைக்கிறேன்.


"காட்டையே ஒற்றைப் பெரும் பூவாக மற்றும் வேங்கை, தீப்பற்றி எரியும் காந்தள், பொன் சொரியும் கொன்றை எத்தனை மலர்கள். மாறாப் பசுமைக் காடு என்பது பூக்களின் பேருலகம். இந்த நிலத்திற்கு அடையாளமாக இந்த அபத்தமான பூவை ஏன் கற்பனை செய்தார்கள்? ஆனால் மொத்த சங்க இலக்கியப் பரப்பிலும் குறிஞ்சிப்பூ பற்றிய வர்ணனைகளே இல்லை என்பது நினைவுக்கு வந்தது." - இவ்விடத்தில் இவனுடைய காதல் என்பது எவ்வளவு சாதாரணமான ஒன்று என்று ஆகிறது. எல்லா மனிதர்களுக்கும் இருக்கும் காதலை போலவே. அதற்கு நீங்கள் மற்ற சில இடங்களில் காவியைத்தை பற்றியும் தூய காதல் பற்றியும் பேசுகிறீர்கள்.


பல இடங்களில் மாமியை நினைக்கும் பொழுதெல்லாம்,தனிமையிலும், அவன் மனம் ஒன்றையே நாடுகிறது மாறாத சடங்காய். குற்ற உணர்வு, இழிவுணர்வு, சுய இரக்கம். அச்செயல் முடிந்த உடன் ஒரு வெறுமை. ஆனால் தவிர்க்க நினைத்தால் இரண்டு நாட்களைத் தாண்டாதது. பிறகு. கண்களை மூடி நினைவுகளை மனதிலிருந்து விரட்டுகிறான். அதுவே பல சமயம் நடக்கிறது.  எப்படி அவனுக்கு காமம் ஒரு கேளிக்கையாக மாறிவிடுகிறது. 

நான் சில இடங்களில் கிளியை பற்றிய குறிப்புகளை கவனித்தேன். கொஞ்சம் தவறான புரிதலா என்று தெரியவில்லை. பேசி தெரிந்துக்கொள்ள வேண்டும்.  "கிளி பறந்து போனதும் கிளை சற்று விடுபட்டது. காற்றில் ஆடிச் சரிந்தது. அதன் இலைகள்மீது வெயிலின் ஒரே ஒரு கதிர். இலைகள் கைவிரித்து அதை அள்ள முயன்றன 'கிளி விளி பயிற்றும் வெயில் ஆடு பெருஞ்சினை... பின்பு ஓர் இடத்தில் நீங்கள் மாமி கட்டிலில் அமர்கிறாள் என்றும் கிளிக்கு ஒப்புவாக கிரியை கிளையாக சொல்கிறீர்கள். மாமி சென்ற உடன் அவன் மனம் எப்படி விடுபடுகிறது. 


நகரம்

நகரத்தை பற்றியும் காற்றை பற்றியும் நீங்கள் சொன்ன பல குறிப்புகள் மிக மிக சரியாகவே எனக்கு பட்டது. எனக்கு பிடித்த வற்றையும் நான் வாழ்வில் சந்தித்த வற்றையும் கீழே குறிப்பிட்டு உள்ளேன். 

1. காட்டில் மனிதன் எவ்வளவு நிதானமாக இயங்கிக் கொண்டு இருக்கிறான். காட்டை ரசித்துக்கொண்டு, காதல் கொண்டு காமம் கொண்டு. ஆனால் அங்கே இருக்கும் பொழுது தெரியவில்லை வெளியே வரும் பொழுது தான், நகரத்துடன் ஒப்பிடுகையில் தெரிகிறது நாம் எவ்வளவு வேகமாக சென்று கொண்டு இருக்கிறோம் ஒன்றுமே ரசிக்காமல். 

2. காடும் மனிதனின் இச்சைப்போல சீரற்றது. ஆனால் மனிதன் காட்டை சமன் செய்து கொண்டு இருக்கிறான். துல்லிய வடிவங்களால் நிர்ப்புகிறான். 


3. நகரங்களில் காதலிப்பது தவிர வேறு பிரச்சினைகளே இல்லையா என்றும் கேட்கும் இடத்தில் நம் சமூகத்தில் இன்று நடக்கும் சம்பவங்களை (பல பெண்களை கொலை செய்தல், சினிமாக்களில் காதல் இல்லாமல் டூயல் பாடல்கள் இல்லாமல் இல்லை) பார்க்கையில் இது மாறுமா என்றே கேட்டுக்கொள்கிறேன்.


4. குடிசைகள் எவ்வளவு ஆபாசமான ஒன்று. மழை என்னும் அமுதை ஓவ்வொரு அணுவும் திளைக்காமல் மனிதன் எலி போன்று இருட்டில் பதுங்குகிறான். அவனுடைய பயம், பலவீனம், சுயநலத்தின் அடையாளமே குடிசை. நம்முடைய வாழ்வில் சொந்தமான வீடே ஒரு பெரும் லட்சியமாக இருக்கிறது என்று நினைக்கையில் சற்று ஆபாசமாக உள்ளது. 


5. நீலியை வரவழைத்து பார்க்க நினைக்கிறான். ஆனால் அதில் நியாயமில்லை என்பதை புரிந்துக்கொள்ள முடிகிறது. "காடு என்பது மனிதன் அனுபவிக்கப்பட வேண்டிய பொருள் என்று நினைக்கும் நகர் மனநிலையின் தொடர்ச்சி அது" ..என்னும் இடம்!!! பின்பு காற்றை வணிக பொருள்களின் (பலகை) உற்பத்தியாகும் இடம் என்று நினைக்கும் மனம். ஒரு தடவை நாஞ்சில் நாடனின் "மணிநீரும் மண்ணும் மலையும் அணிநிழற்

காடும் உடையது அரண்பற்றிய கட்டுரையை நினைத்துக்கொண்டேன். 

6. "நட்சத்திரங்களை ஏறிட்டுப் பார்த்தேன்.. அலங்காரக் கூரை.. வீட்டிற்க்குள்ளே சென்று விடுக்கிறான். மழையில் இருந்தும் வெயிலில் இருந்தும் தப்புவதற்க்காக இல்லை. அப்படி என்றால் ஆயிரம் வழிகள் உண்டு. ஆனால் தான் தான் என்று சதா நினைத்தபடி ஓடுகிறான். வாழ்வின் துவக்க நாட்களில் தான் நிமிர்ந்து பார்க்க முடிகிறது... இதை பற்றி சில வருடங்களாக நினைத்ததுண்டு. நான் பள்ளிச்சிறுவனாக இருந்த பொழுது அரசு குடியிருப்புகளில் மொட்ட மாடியில் உணவு உண்டு உறங்கிய நாட்கள் உண்டு. ஆனால் இன்றோ அது நடந்து குறைந்தது 10 வருடங்கள் இருக்கும் என்று நினைக்கிறேன். ஏன் நாம் அப்படி இப்பொழுது எல்லாம் செய்ய முடியவில்லை. பல நேரம் சினிமா, கடற்க்கரை, நண்பர்களுடன் உணவகத்தில் என்று வீடு திரும்பவே 10 மணிக்கு மேல் ஆகிறது. இதன் பிறகு எங்கே மொட்ட மாடி.  தினசரிகளில் சாலையில் பயணமே 1-2 மணி நேரம், பின்பு எங்கே வானம். கடைசியாக நான் மேல் நோக்கி வியந்து வானம் பார்த்தது என் மனைவியாக போகிறவளுடன் தொலைப்பேசியில் உறையாடிக்கொண்டு இருக்கும் பொழுது. அப்பொழுதும் இதையே நினைத்துக்கொண்டேன். 


7."வாழ்க்கையை கடந்து சென்றபோது எத்தனையோ அனுபவங்கள் சிறு தடயம்கூட இல்லாமல் ஆகின்றன. அது மலையேற்றம் போல ... ஏறும் பொது ஒவ்வொன்றும் சிறியதாகி, அற்பமாகி பார்வையை விட்டு மறையும். உச்சியில் மலையே அற்பமாகி விடுகிறது. வானம் மட்டும் எஞ்சுகிறது"..என்று நீங்கள் கூறும் இடம் அற்புதம். நான் பதின் பருவங்களில் இருக்கையில் என்னுடைய சபரிமலை குரு இதனை யொட்டி கூறியுள்ளார். மலை ஏற ஏற நாம் தேங்காய் களை உடைத்துகொண்டு செல்கிறோம். நம் பாரங்கள்/ பாவங்கள் குறையும் என்று. அவரை நினைத்துக்கொண்டேன். நீங்கள் பொதுவாக மலையெற்றத்திற்கு கொடுத்த விளக்கம் மிக ஏற்ப்புடையாத இருந்தது. 

8. நகர வாழ்க்கையில் காதல் எவ்வளவு செயற்கையாகி கொண்டே இருக்கிறது. சிறுவர்களிடம் இருக்கும் பணம் போல என்னும் இடம்!! 

9. ஆனால் அழகு என்பது எல்லா இடங்களிலும் இருக்கிறது. சுசீந்திரம்கிற சாக்கடைச் சந்திப்பு முனையில்கூட வானம் அழகு என்னும் இடம்!!


10. தெய்வங்கள் ஊரில் இருந்தாலும் காடுக்கு உரியவர்கள் காட்டில் முளைத்து ஊருக்குள் நிறுவப் பட்டவர்கள். நான் கேட்ட பல புராண கதைகள் காட்டில் நடந்தவை என்று நினைத்துப்பார்கையில் பெரிய அளவில் அதிர்ச்சி இல்லை ஏன் என்றால் உங்கள் தளத்தில் இந்து மதம் எப்படி பட்டது என்று நீங்கள் எழுதிய பல கட்டுரைகள் வாயிலாக அறிந்துள்ளேன். 


11. காடு என்பதை மனிதன் எப்படி உரிமை கொண்டாடுகிறான். ஒரு சாலை மௌனமாக ஒரு திட்டத்துடன் பாம்புபோல நீள்கிறது. .. அதேபோல முயல் காட்டில் எவ்வளவு இயல்பாக உள்ளது. ஆனல் சாலையில் வந்த உடன் மருண்டுவிடுகிறது என்னும் இடம்.  [ஆண்டுதோறும் 1993 முதல் சபரிமலை சென்று வருவதால் நீங்கள் காட்டை காட்சிப்படுத்தும் பொழுது என்னால் முழுமையாக உள்வாங்கி கற்பனை செய்ய முடிந்தது.  உதாரணமாக திசையில்லா காடு, பல பச்சைகள், பல நிழல்கள், பார்த்தது போல் தோன்றும் புதிய இடங்கள். ஆனால் இன்றோ எங்கு பார்த்தாலும் பீடி நாற்றம், ரப்பர் தோட்டங்களின் பரவலான ஆக்ரமிப்புகள், சாலைகள் சென்றுள்ள தொலைவு/வளர்ச்சி.  அந்த அழகிய காட்டின் மீது மனிதன் செய்த கொடுமைகளை பார்த்துள்ளேன்.  1995களில்  வெறும் கஞ்சி மட்டுமே கிடைக்கும். அதுவும் 5ரூபாயுக்குள்ளே. கடந்த பத்து ஆண்டுகளுக்கும் மேல் அங்கே தோசை முதல் சன்னா பரோட்டா வரை கிடைக்கிறது. அது மட்டும் அல்லாமல் மனிதனின் மலம் அங்கே சரியான முறையில் அப்புறபடுத்தாதனால் அங்கு காட்டிற்கு ஏற்படும் சுகாதார கேட்டினை ஒரு சுற்றுசூழல் தன் ஆர்வலுருமான நண்பரின் மூலம் அறிந்து கொண்ட பொழுது நெஞ்சம் கனக்கிறது. அன்றெல்லாம் எப்படி இருக்கும் தெரியுமா என்று சொல்லும்பொழுது பழைய நினைவுகளின் மீது  ஏக்கம்/Nostalgia  வரவில்லை. மனிதனின் மீது கோபமே வருகிறது.  நீங்கள் ஒரு இடத்தில் குறிப்பிட்டு இருந்தீர்கள். காடு மனிதன் அனுபவிக்க படைக்க பட்டாதக எண்ணிக்கொள்கிறான். அற்பமான மனிதன்!! ]


12. நாகரீகம் என்பது நகர் சார்ந்தது. அதற்கு எதிர்ப்பதம் காட்டுமிராண்டி என்று பள்ளிகள் முதலே கற்பிப்பபடுவது. காட்டை வென்றடக்கும் ஊர்களின் கதையே மனித நாகரீகம் போலும். ஆனால் நகரம் என்பது எவ்வளவு செயற்கையானது. காடு எவ்வளவு இயற்கையானது என்று யோசிக்க தவறுகிறோம். 

பொது


மேலே காதல், நகரம் என்று மட்டும் அல்லாமல் நான் பொதுவாக ரசித்த இடங்கள். 

1. அவன் அம்மாவிடம் ஏற்படும் இழப்பினை  காதலிக்கும் கணத்தில் அன்னையை கண்டுக்கொள்கிறான் என்னும் இடத்திலும்... பின்பு அடிக்கடி தின்பதற்கு ஏதாவது தந்து முன்போலவே இருந்தாலும் கூட..வெகுதூரத்தில் என்னை உணர்ந்தேன் இடத்திலும்.. ஒரு நிமிடம் நின்று மீள் வாசிப்பு செய்தேன்!  

2. பெயர்களில் உள்ள அப்பத்தத்தை பற்றி ஒரு இடத்தில் கூறியிருப்பீர்கள். அவை ஒருபோதும் மந்திரங்களாக முடியாது. எவரும் அதைப் பிடித்து ஏறி முக்தியைத் தொடமுடியாது - என்னும் இடம் அற்புதம். நான் பதின் வயதில் இருக்கையில் நடந்த ஒரு நிகழ்ச்சியுடன் ஒப்பிட்டுக்கொள்வேன். எனது அப்பாவின் பெயர் ஆறுமுகம். இதனை கேட்ட ஒருவர் உங்கள் பெற்றோர்கள் கலப்பு திருமணமா என்று கேட்டார். ஆம் என்றேன். எப்படி பேரை மட்டும் வைத்து அவர் கேட்டார் என்று எனக்கு ஆச்சர்யம். எனது பாட்டியை கேட்டேன். பாட்டி சொன்னாங்க நம்முள்ள அப்படி பெயர் வைக்க மா என்று கேட்டதற்கு பெயர்  கடவுளின் சமஸ்கிருத பெயராக இருந்தால் உன்னை கூப்பிடுபவர்களுக்கு முக்தி அடைய வாய்ப்பு உண்டு என்று. அதற்கு ஒரு உதாரணம் கொடுத்தார்கள். துரியோதனனுக்கு புஷ்ப விமானம் வந்துச்சாம். வந்துச்சு ஏன்னா கிருஷ்ணா கிருஷ்ணா என்று கிருஷ்ணனின் பெயரை உச்சரித்துக்கொண்டே இருந்தானாம். அன்றே எனக்கு அபத்தமாக தோன்றியது ஏன்றால் இன்னொரு பக்கம் கர்ணன் அவ்வளவு கொடைகளை அளித்ததனால் முக்தி அடைகிறான் என்று படம் பார்த்து உள்ளோம். 

3.  ஒரு மனிதனின் பழக்கங்கள் அவனுடைய மனம்தான். தன் மனதின் மேலேயே பிடி இல்லாத எளிய மனிதர்கள் பிறரது மனம் மீது கட்டளைகளை விதிக்கிறார்கள் ஆலோசனைகள் சொல்கிறார்கள். வருத்தமும் ஆதங்கமும் கொள்கிறார்கள். என்னும் இடம். 

4. "கருமையளவுக்கு அது இளமையை வெளிப்படுத்துவதில்லை. கரிய நிறம் கண்களை நிறைத்து விடுகிறது" போன்ற சிறு சிறு இடங்களையும் ரசித்தேன். 
5. மனுஷ உடல்ல இருந்து மலம் போறது மாதிரி மனசில இருந்தும் போகணும்
6. தருக்கம்னா அது அதருக்கத்தை போய்த் தொடணும். அப்பதான் அதுக்கு மதிப்பு..... ஏன்னா, ஒவ்வொரு தர்க்கத்துக்கும் கண்டிப்பா எதிர் தர்க்கம், சமானமான வலிமையோட இருக்கும்

7. "என்ன ஒரு அசைவு! செயற்கையான பவ்யம், தளுக்கு, வெக்கம் ஒண்ணும் கிடையாது. ஆனா மலர்ச்செடி அசையறா மாதிரி ஒரு மென்மை, நளினம்... பார்வதிதேவி மலைமகளா இப்படித்தான் இருந்திருப்பா சிவனுக்கு பித்துப் பிடிக்க வைக்கிற சிவகாமசுந்தரி." ... ஒரு பெயரை நான் இப்படி நோக்கியது இல்லை. அவ்வளவு அழகு. 


8. "ஒரு சங்கீத கச்சேரியில் இருப்பவர்களைப்போல ஒரு மிகையான நெகிழ்வு. ஆனால் நெகிழ்வையே கணக்கு வழக்கின் மொழியில் சொல்வார்கள்" - கச்சேரிகளில் சில நேரங்களில் எரிச்சல் அடையும் அளவுக்கு செய்வார்கள். அவர்கள் கணக்கு போடுவது அவர்களின் உரிமை. ஆனால் பக்கதில் உள்ளவரிடம் கலந்துரையாடும் பொழுது அது என்னை எரிச்சலடைய செய்கிறது. 

கடைசியாக/கிளைமாக்ஸ்

அவன் அவளுடைய அருகாமையை அவன் புலன்கள் கொண்டாடும் இடம் தன் அகம் போன்றது என்னும் இடங்கள் அதுவும் காடு போன்றது. பின்பு இருவரும் மலர்களை எறிந்து விளையாடும் இடத்தில் அங்கே உரசுவது மனங்கள். அது சிறுவிளையாட்டு என்னும் இடம். அருகாமையில் இருக்கையில் காற்று வெளியிடையையும் காலத்தையும் நிரப்ப முனைவது. காதல் எவ்வளவு அகம் சார்ந்த ஒரு விஷயம் என்று கூறுகிறீர்கள். ... ஆனால் இவை அனைத்திலும் ஒன்றையும் நிகழ்த்தாமல் காலம் சென்றுக்கொண்டு இருக்கிறது.

அதேப்போல இறுதியில் அவன் நீலியின் அருகாமையை உணர்கிறான். ஆனால் மாமியுடன் ஏற்படும் உறவினால் அவன் காதல் என்னும் கனவினை இழக்கிறான். அங்கே அக்கனவாக நீலி அழும் காட்சி அற்புதம். அவன் கனவை கொன்று/ தொலைத்து நிகழ் காலத்திற்கு வருகிறான். பின்பு வாழ்வில் செல்லும் பொழுது அவன் மனைவியுடன் மகிழ்ச்சியிள்ளாத வாழ்க்கை, மாமியின் நினைவுகள் அவனை ஒரு வழி செய்கிறது. காதலும்/ காமமும் கேளிக்கை ஆகுகிறது. ஒரு கட்டத்தில் மூத்திரம் போகவே கஷ்டப்படுகிறான். அவன் வாழ்வில் தோல்வி அடைகிறான். 

காடு ஒரு நல்ல அனுபவமாக இருந்தது. அதனில் ஒரு 2-3 நாட்கள் அலைந்து கொண்டு இருந்தேன். என்னுடைய வாசிப்பினை யாரிடமாவது கலந்துரையாடிக் காட்டினை இன்னும் அறிந்துக்கொள்ள நினைத்து கடலூர் சீனுவிற்கு அழைத்தேன். அவர் நான் காணாத இடங்களையும் தளங்களையும் காண்பித்தார். அப்போழுது தான் நான் ஆழமாக வாசிக்காத இடங்களை தெரிந்துக்கொண்டேன். அவரும் என்னை தொகுத்துக்கொள்ள ஊக்குவித்தார். ஆதலால் முதல் முறையாக தொகுத்துக்கொள்ள முனைந்தேன். 

காடு போன்ற படைப்பிற்கு மிக்க நன்றி! 

அன்புடன்,

ராஜேஷ்

January 18, 2016

கள்ளிருக்கும் மலர்க்கூந்தல் ....

மூலம்: எழுத்தாளர் ஜெயமோகன் (சுட்டியைத் தட்டுக)
"கள்ளிருக்கும் மலர்க்கூந்தல் சானகியை மனச்சிறையில் கரந்த காதல் உள்ளிருக்கும் எனக்கருதி உள் புகுந்து தடவியதோ ஒருவன் வாளி"

ராமன் ராவணனை வதம் செய்யும் காட்சிச் சித்திரம்


சில நாட்கள் முன்பு இவ்வரிகளை வாசித்து அதன் பொருளை, காவியத்தின் உச்சத்தை (காவிய உச்சமாக அமைவது அதிமானுடங்கள் இரண்டு மோதிக்கொள்ளும் ஒரு புள்ளி) மானுடன் வழியாக கம்பன் நிகழ்த்தி இருக்கும் கம்பராமயண வரி இது. இதற்கு பொருள் ஜெயமோகனின் எழுத்தால் பார்வையால் பார்க்க முடிந்தது. மானசீகமான் நன்றிகள்.

பொருள் இதோ (நன்றி: ஜெயமோகனின் வலையத்தில் இருந்து [சுட்டியை தட்டவும்]):

காவியம் என்பது கடல்போல் விரிந்து செல்லும் பேருள்ளம் கொண்ட கவிஞனால் கடவுளுக்கு நிகரான இடத்தில் நின்று இவ்வாழ்க்கையை நோக்கி எழுதப்படுவது. அவனுக்கு அந்தத் தளத்தில் மானுட உண்மைகளே கண்ணுக்குப்படுகின்றன, எளிய விருப்புவெறுப்புகள் அல்ல.

கம்ப ராமாயணத்தின் நாயகன் ராமன். அறத்தின் மூர்த்தியாக ஒரு மானுடனைப்பற்றிப் பேசுவதே கம்பனின் நோக்கம். ஆனால் காவியகர்த்தனாகிய கம்பன் கவிதையின் ஆயிரம் கால் புரவியில் ஏறிக்கொள்ளும் போது கம்பன் எனும் மானுடனை சிறிதாக்கி மெலெழுகிறான். அது நிகழாவிடில் அந்நூல் காவியமே அல்ல.

ராமனின் அனைத்துச் சிறுமைகளும் கம்பனால் தான் சொல்லப்படுகின்றன. ராவணனின் அனைத்து மாட்சிகளும் கம்பன் சொல்லாலேயே துலங்கி வருகின்றன. புலவர் குழந்தையே கம்பனில் அள்ளியே தன் காவியத்தை ஆக்கியிருக்கிறார். கம்பன் எவரையும் கீழிறக்கவில்லை. அவன் காவிய உச்சமாக அமைவது அதிமானுடங்கள் இரண்டு மோதிக்கொள்ளும் ஒரு புள்ளி.

ராவணன் ராமனின் அம்பு பட்டு விழும் உச்ச கட்டம். கம்பனின் சொற்கள் இப்படி எழுகின்றன. கோல் பட்டுச் சீறி எழும் ராஜநாகத்தைப் போல…

கள்ளிருக்கும் மலர்க்கூந்தல் சானகியை மனச்சிறையில் கரந்த காதல் உள்ளிருக்கும் எனக்கருதி உள் புகுந்து தடவியதோ ஒருவன் வாளி

இங்கே அரக்கனைக் கொல்லும் அவதாரம் அல்ல, அறமிலியை அழிக்கும் பேரறத்தான் அல்ல ஒரு கணவனும் இருக்கிறான். தன் மனைவி மேல் காமம் கொண்ட அன்னியனின் உள்ளத்தின் ஆழத்து அடுக்குகளுக்குள் சென்று தேடித் தேடித் துழாவிச் சலிக்கும் ஒரு கணவனின் உள்ளத்தை காணமுடிகிறது இவ்வரியில்.

ஒவ்வொரு சொல்லாலும் அந்த நுட்பத்தை நிகழ்த்துகிறான் தமிழ்த் தெய்வம் சன்னதம் கொண்டெழுந்த நாவினன். சீதை கள்ளிருக்கும் மலர்க் கூந்தல் ஆகச் சொல்லப்படுகிறாள். கற்பின் கனலாக அல்ல, மோகவல்லியாக. பித்தூட்டும் பெண்ணாக.

அசோகவனத்தில் கோடை நதியென மெலிந்து தெளிந்து ஒளி கொண்டு தவக்கோலம் பூண்டிருக்கும் நாயகி அல்ல அவன் நினைக்கும் அப்பெண். கள் மலர் சூடி கண்மலர்ந்து சிரித்து ராமனை களி கொள்ள வைத்த இளங்கன்னி. அவன் அங்கு தேடுவது அவளை.

ராவணன் அந்தக் கன்னியை தன் ஊன்விழிகளால் கண்டிருக்கவே மாட்டான், அவனுள் கரந்த காதலன் காணாமலிருப்பானா என்ன?

ராவணன் சீதையை கவர்ந்து வந்தது தெரிந்த காதலே. அப்படியென்றால் கரந்த காதல் எது? எங்கோ ஆழத்தில் அப்பாலும் ஒரு காதல் இருந்ததா? முற்றிலும் வேறானது? கள்ளிருக்கும் மலரா அவன் உள்ளம்?

ராவணனின் நகர்ச்சிறையிலிருந்து அவளை மீட்கலாம் ராமன், மனச்சிறையிலிருந்து எப்படி மீட்பான்? உள்ளிருக்கும் எனக் கருதி தடவுகிறது அம்பு. பதைப்புடன் ஏமாற்றத்துடன் சீற்றத்துடன்…

இன்னும் சிலநாட்களில் அவளை அனல்தேர்வுக்கு அனுப்பப் போகிறவன் அவன். அதற்கு ஒர் சலவைக்காரரின் சொற்கள் மேலதிகமாகத் தேவைப்படுகின்றன , அவ்வளவே. அதற்கான அந்தத் தவிப்பு அவனுள் இப்போதே இருக்கிறது.
இந்த உச்சத்தில் மானுட ராமனின் அம்பு பட்டுச் சரியும் அமரக்காதலனாகிய ராவணனே வாசகனின் கண்முன் பேருருவம் கொள்கிறான். அவனை நோக்கியே காவியகர்த்தனும் கண்ணீர் உகுக்கிறான் எனத் தோன்றுகிறது.

வீழ்ந்தான் அரக்கன் என அலையெழுந்து பூசல் கொண்டாடவில்லை கம்பனின் சொற்கடல். அங்குநிகழும் மானுட நாடகத்தின் உள்ளே புகுந்து தடவிச் செல்கிறது காவியச்சொல் எனும் வாளி. அங்கு கவிஞன் பிரம்மத்தின் சொல்வடிவத் தோற்றமென நின்றிருக்கிறான்.

பின்னும் மனம் விரியும் வாசகன் மட்டுமே பெருங்காதல் கொண்ட கணவனே ஆயினும் , பேரறத்தான் ஆயினும், புவியணைந்த பரம்பொருளே ஆயினும் அவன் மானுடன் என உணர்ந்து , அவன் ஆழம் தன் ஆழமே என உணர்ந்து அவனை மேலும் அறிவான். நீ நான் என இங்கு வந்தவன் அல்லவா என நெகிழ்வான்.


கம்பர்

July 30, 2015

உருவாய் அருவாய் | முருகர் பாடல்

சில வாரங்களாக முன்பு  முருகபெருமானுக்கு பாடும் இப்பாடலை பற்றி அறிந்தேன். தமிழ்ப்பாடல் ஆயினும் எனக்கு இதன் அக அர்த்தம் விளங்கவில்லை. சற்று நேரடியாக இல்லை. ஜெயமோகனின் வளையத்தில் தற்செயலாக படிக்க நேரிட்டது. எப்படிப்பட்ட வரிகள் இவை என்பதை நீங்களே படித்து தெரிந்துக்  கொள்ளுங்கள்!

எழுத்தாளர் ஜெயமோகன் அவர்களின் வளையத்தில் இருந்து பொருள் இங்கே 

அதிலும் அருணகிரிநாதர் நுட்பமான சம்ஸ்கிருத தத்துவக் கலைச்சொற்களை தாராளமாகவே பெய்து தன் பாடல்களைப் பாடியிருக்கிறார். இருபெருமொழிகளிலும் ஆழ்ந்த ஞானம் உடைய ஒருவரால் மட்டுமே அந்நூலின் அகம் காணமுடியும், அனுபூதியும் கனியுமென்றால். கந்தரனுபூதியும் அப்படிப்பட்ட நூலே.

நீங்கள் சொன்ன கவிதை இது. பெரும்பாலான சைவர்களுக்குத் தெரிந்த பாடல் இதுவாகவே இருக்கும்.

உருவாய் அருவாய் உளதாய் இலதாய்
மருவாய் மலராய் மணியாய் ஒளியாய்
கருவாய் உயிராய் கதியாய் விதியாய்
குருவாய் வருவாய் அருள்வாய் குகனே!


மிக எளிமையாக ‘முருகனே நீ வந்து எனக்கு அருள்வாய்’ என்று கூவும் வரிகள் இவை என நம்மில் பலர் சொல்லலாம். ஆனால் இவ்வரிகள் வழியாகச் செல்லும் ஒரு கூர்ந்த மனம் அடையும் பொருள்நிலைகள் முடிவிலாதவை.

முருகனை பரம்பொருளாகக் கண்டுவணங்குகிறது இக்கவிதை. பொதுவாக நம் மரபில் உருவம் கொண்ட எந்த ஒரு தெய்வத்தையும் தோத்திரங்களில் உருவங்களுக்கு எல்லாம் அப்பாற்பட்ட பிரம்ம வடிவமாக, நினைப்புக்கு எட்டாத எல்லையற்ற பரம்பொருளாக உருவகித்துப் பாடுவதே வழக்கம்.

அந்தப் பரம்பொருளின் சித்திரத்தை இக்கவிதை அளிக்கும் விதமே கூர்ந்து கவனிக்கவேண்டியது. ‘உருவமாகவும் அருவமாகவும், மொட்டாகவும் மலராகவும், மணியாகவும் அதன் ஒளியாகவும், கருவாகவும் அதன் உயிராகவும், செயலாகவும் அதன் விதியாகவும் இருப்பவனே நீ குருவாக வந்து அருள்வாய்’ என்று இறைஞ்சுகிறது.

இந்தவரிகளில் அருவமான பரம்பொருள் உருவவடிவம் கொண்டு வருவதன் ஒரு நுண் சித்திரத்தை அருணகிரிநாதர் அளிக்கிறார். இப்பிரபஞ்சவெளியின் சாரமாக உள்ள அலகிலா ஆற்றல், அல்லது இப்பிரபஞ்சத்தின் அடிப்படையாக உள்ள பெருங்கருத்து, அல்லது இப்பிரபஞ்சமேயாக மாறித்தெரியும் அது எவ்வாறு நாமறியும் நூறாயிரம் பொருட்களாக, அவற்றில் நாம் கண்டு வணங்கும் தெய்வங்களாக, உருமாற்றம் கொண்டது? இன்றைய இயற்பியலாளனின் பெருவினாவும் அதுவே என நாம் அறிவோம்.

‘உருவாய் அருவாய்’ என்ற எதிரீடு முதலில் முன்வைக்கப்படுகிறது. நாம் காணும் அனைத்துமே உருவமாக உள்ளன. அவ்வுருவங்கள் அனைத்துமாக தன் இறைவனை உருவகிக்கும் இக்கவிதை பொருள்வயப்பிரபஞ்சமாகவே அவனை முன்னிறுத்துகிறது. அந்தப்பொருள்வயப்பிரபஞ்சம் அல்லாத அருவமான வெளியாகவும் அவனை உருவகிக்கிறது.

உருவம் கொண்ட இறைவடிவமாகவும் உருவமில்லாத இறைவடிவமாகவும் இருப்பவன் எனச் சொல்லிவிட்டு அதன்பின் அதற்கு இணையாக பிற எதிரீடுகளை வைத்துச் செல்கிறது கவிதை. ‘உள்ளதாகவும் இல்லாததாகவும்’ என்பது அடுத்த எதிரீடு. உள்ளது உருவம். இல்லாதது அருவம். உள்ளவை எல்லாம் அவனே. இல்லை என்ற நிலையிலும் அவனே இருக்கிறான். பெருவெளியில் இன்மையும் கூட  ஓர் ஆற்றலாக, பரம்பொருளின் இருப்பாக ஆகலாம். அது இல்லாமல் இருக்கும்நிலைகூட அதுவே!

அடுத்த எதிரீடு எளிய உவமை. ‘மொட்டாகவும் மலராகவும்’ என்ற வரி இந்திய வேதாந்த மரபை உணர்ந்தவர்களுக்கு ஒரு ஆச்சரியத்தை அளிக்கும். ‘பரம்பொருள் அருவ நிலையில் இருந்து உருவமாகி வருகிறது’ என்பதே வேதாந்த தரிசனம். அருவநிலையே உண்மையானது, உருவநிலை அந்த அருவநிலை உருவாக்கும் ஒரு மாயத்தோற்றமே என அத்வைதம் வாதிடும்.

ஆனால் இந்த வரி உருவப்பிரபஞ்சத்தை முதல்நிலை உண்மையாக முன்வைத்து அதன் நுண்வடிவமாக அருவநிலையை உருவகித்துக்காட்டுகிறது.  உருவத்துக்கு மொட்டும் அருவத்துக்கு மலரும் உவமையாக ஆக்கப்பட்டிருக்கிறது. உருவம் கொண்டு நம் முன் நிற்கும் இந்த பெருவெளி என்ற மொட்டு மலர்ந்த நிலையே உருவமிலா பரம்பொருள் என்று சொல்லப்பட்டிருக்கிறது!

அடுத்த எதிரீடு இன்னொரு உவமைமூலம் அதையே மேலும் வலியுறுத்துகிறது. ‘மணியாகவும்  ஒளியாகவும்’. இந்த பருப்பிரபஞ்சம் மாணிக்கம் என்றால் அதன் ஒளிதான் அலகிலாத ஆற்றலாக விரிந்த பரவெளி. அருவம் என்பது உருவமாகி நிற்பவற்றின் சாரமாக உறையும் ஒளியே என்கிறது இந்த உவமை!

மேலும் வலியுறுத்துகிறது அடுத்த எதிரீடு. ‘கருவாகவும் உயிராகவும்’ கரு என்று இந்த பொருள்வயப்பிரபஞ்சமே சொல்லப்படுகிறது. அந்தக் கருவுக்குள் உள்ள உயிரே ஆற்றல்பிரபஞ்சம் அல்லது அருவ வெளி!

கடைசி எதிரீடு பௌத்த தரிசனத்துடன் தொடர்புடையது. பௌத்தம் இப் பொருள்வயப்பிரபஞ்சம் என்பது ஒரு முடிவிலா நிகழ்வே என்று வகுக்கிறது. இந்நிகழ்வின் இயங்குவிதியாக உள்ளதே பேரறம் அல்லது மகாதர்மம்.  ‘கதியாகவும் விதியாகவும்’ என்ற வரி அதையே சுட்டுகிறது. கதி என்றால் நிகழ்வு. அந்நிகழ்வாகவும் அதன் விதியாகவும் முருகனை உருவகிக்கிறது இவ்வரி.

எதிரீடுகளின் வரிசையை வைத்துப் பார்த்தால் உருவமாக, உள்ளதாக, மொட்டாக, மாணிக்கமாக, கருவாக சொல்லப்பட்ட பொருள்பிரபஞ்சத்தையே கதி என்று சொல்கிறார் அருணகிரிநாதர். இப்பருப்பிரபஞ்சம் ஒரு கதி [இயக்கமுறை] மட்டுமென்றால் அதன் சாரம் அதன் விதி. அந்த விதியே அருவம், இன்மைநிலை, மலர் , ஒளி, உயிர்… இரண்டும் அவனே என்று சொல்கிறது.

கடைசி வரி மிக இனிய ஒரு முடிச்சுடன் முடிகிறது. ‘குருவாய் வருக’ என்று முருகனை அழைக்கிறது அது. குரு என்பது இங்கே உருவமாக, உள்ளதாக, மொட்டாக, மாணிக்கமாக, கருவாக சொல்லப்பட்ட முதல்நிலையின் இடத்தில் வைக்கப்பட்டிருக்கிறது. அப்படியானால் அருவம், இன்மை, மலர் , ஒளி, உயிர் எனச் சொல்லப்பட்ட இரண்டம்நிலையில் இருப்பது எது?

மொட்டு மலராவதுபோல, மணியில் ஒளி பிறப்பதுபோல, கருவில் உயிர் நிகழ்வது போல குருவின் விளைவாக உள்ளது ஞானமே. அனுபூதியே உயர் ஞானம். குருவாக முருகன் வந்தால் ஞானமுமாக அவனே நிற்பான் என உரைக்கிறது பாடல். குருவாய் வருக என்ற அழைப்பு அவ்வகையில் மேலும் முன்னகர்ந்து ஞானமுமாக வருக என முடிகிறது.

இவ்வரிகள் கந்தரனுபூதியின் கடைசிப் பாடல். இவ்வரிகளில் இருந்து பின்னால்நகர்ந்து முன்னாலுள்ள வரிகளை எட்டினால் பல வரிகளின் ஆழமும் தீவிரமும் நம்மை திகைக்கச் செய்யும்.

‘தன்னந் தனி நிற்பது தானறிய
இன்னம் ஒருவர்க்கு இசைவிப்பதுவோ’

என்ற வரி ஓர் உதாரணம். வேதங்கள் முடிவிலா பரவெளியின் ஈடிணையற்ற தனிமையை பாடுகின்றன. அது அல்லாமல் வேறொன்றுமில்லை என்ற நிலையின் தனிமை. பரம்பொருளின் தனிமை. அந்த எல்லையற்ற தன்னந்தனிப்பொருள் தன்னை இன்னொருவருக்கு எப்படி அறிவுறுத்த இயலும்?

அவ்வினாவுக்கு விடையாகவே குருவாக வருக என்ற அழைப்பு. குருவாகி அது வருகையில் ஞானத்தின் அனுபூதி அதன் விளைவாக நிகழ்ந்தாகவேண்டும் அல்லவா?

கந்தரனுபூதி சைவசித்தாந்தத்தில் கிளைத்த நூல். ஆகவேதான் அது வேதாந்த மரபைப்போல உருவத்தை நிராகரிக்கவில்லை. பருப்பிரபஞ்சமும் அதற்கு ஓர் உண்மையே. அது மாயத்தோற்றம் அல்ல. மாயை என்பது அதை முழுதுணராது மயங்கும் நமது குறைநிலையே. பருப்பிரபஞ்சத்தை அல்லது உருவத்தை முதல் நிலையாக்கி அதில் இருந்து அதன் நுண்நிலையாக பரவெளியை அல்லது அருவத்தைக் கண்டு முன்வைக்கிறது இப்பாடல்.

ஆனால் இந்தியமெய்ஞான மரபுகள் அனைத்துமே உச்சநிலையில் ‘ஆற்றல் X ஜடம்’ அல்லது ‘உருவம் X அருவம்’ என்னும் எதிரீடுகளை தாண்டிய ஒருமையையே முன்னைக்கின்றன. அதையே பாம்பொருள்த்தன்மையாக காட்டுகின்றன. மேலும் பின்னால் சென்றால் இன்னொரு வரியில் அதைக் காணலாம்

அறிவு ஒன்று அற நின்று அறிவார் அறிவில்
பிறிவொன்று அற நின்ற பிரான் அல்லையோ?

‘அறிவு என்ற ஒன்று அழியும் நிலையில் நின்று அறிபவர்களின் அறிவில் பிறிது என்ற ஒன்றே அழியும்படியாக நின்ற பிரான் அல்லவா நீ?’ அறிவின் உச்சம் என்பது அறிகிறேன் என்னும் நிலை இல்லாமலாதல். அறிவுடன் அறிபவனும் ஒன்றாதல். அந்நிலையில் நின்று அறிபவர் நெஞ்சில் அவர்களில் இருந்து பிறிதாக அல்லாமல் நிற்கும் அதுவே அவன் என்கிறார் அருணகிரிநாதர். அனுபூதி என்பது அந்நிலையே.

June 30, 2015

அலைக்கழிக்கப்பு | நான்கு வேடங்கள்

நான் சமீப காலங்களில் படித்த கட்டுரைகளில் முக்கியமான கட்டுரை இது. இலக்கிய உலகில் வரும் பெரும்பாலானோர் சிக்கித்தவித்து அலைக்கழிக்கப்படும் மனநிலைக்கு காரணம் என்னவென்று எழுத்தாளர் ஜெயமோகன் தர்க்க பூர்வமாக விளக்குகிறார்!

மூலம் :  (கீழ்காணும் தலைப்புகளை/ சுட்டிகளை தட்டவும்)
தன்வழிகள்

நான்கு வேடங்கள்

எழுதலின் விதிகள்

இரண்டு முகம்

தேடியவர்களிடம் எஞ்சுவது

தன்னறம்

தன்வழிச்சேரல்

பதுங்குதல்

ஒருமரம்,மூன்று உயிர்கள்

செயலின்மையின் இனிய மது

தன்னறத்தின் எல்லைகள்

தன்னறமும் தனிவாழ்வும்-கடிதம்

விதிசமைப்பவர்கள்

சராசரி

விதிசமைப்பவனின் தினங்கள்

தேர்வு செய்யப்பட்ட சிலர்