பொய்த்தேவு - க.நா.சுப்ரமண்யம்
எழுத்தாளர் க.நா.சுப்ரமண்யம் எழுதிய பொய்த்தேவு (அதாவது பொய்த் தெய்வம்) என்னும் இந்நாவலை நான் இருநாட்களில் (மொத்தமாக 8 மணி நேரத்தில்) வாசித்தேன். இதை எதற்கு சொல்கிறேன்? எளிமையான சரளமான நாவல். ஆனால் மிக நல்ல நாவல். சோமு என்ற பொடிப் பயல் எப்படி சோமு முதலி ஆகி சோமு பண்டாரமாக இறக்கிறான். இந்நாவலில் சோமுவின் வாழ்க்கைப் பயணத்தின் சில பக்கங்களின் மூலமாக வாழ்வின் பற்பல தளங்களையும் பல மனிதர்களின் குணாதிசியங்களையும் தொட்டுச் செல்கிறார் க.நா.சு.
முதல் அத்தியாயமே சோமு பிறக்கும் மேட்டுத் தெருவை பற்றி. இம்மேட்டுத் தெருவில் உள்ளோர் பெரும்பாலும் இழிந்தோர்கள் எனலாம். சிலர் நாணயமான வேலையில் நம்பிக்கை இல்லாதவர்கள். சில இரவுகள் ஈன்றிவிட்டுப் போதுமென்ற மனசுடன் மறு சந்தர்ப்பம் வாய்க்கும் வரையில் காத்திருப்பார்கள். சிலர் எதுவும் செய்யாமல் பிறர் காரியங்களில் தலையிட்டு தரகு அடித்துப் பிழைப்பார்கள். வேலை செய்யாமலும் பிழைக்காமலும் நடைப் பிணங்களாகவே நடமாடித் திரியும் ஜந்துக்களுக்கும் இம்மேட்டுத்தெருவிலே குறைவில்லை.
அத்தகைய மேட்டுத் தெருவிலே தான் சோமு பிறக்கிறான். அவன் வளர்ந்து பெரியாளாகி பணக்காரணாகியும் இறுதிவரையில் அத்தெருவைவிட்டு அவன் வெளியே வரவேயில்லை. அது அவனது மனதை காண்பிக்கிறது. அவன் அறிவு வளர்ந்தாலும் அவன் ஞானம் வளரவே இல்லை. அவன் இழிவாகவே உள்ளான் என்று.
பிறரை உடல் வலிமையால் அதட்டி பிழைத்து வாழும் கறுப்புக்கும் வள்ளியமைக்கும் பிறந்தவன் சோமு பயல் . ஆனால் அவர்கள் பெற்றோர்கள் திருமணம் செய்துக்கொண்டவர்கள் அல்ல. அது ஒருவித தகாத உறவு. சோமுவின் மிக இளம் வயதிலேயே அவன் தந்தை கறுப்பு இறக்கிறான். பின்பு சோமு “கறுப்பு மகன்” என்னும் சமூகத்தின் அடையாளப்படுத்தலால் வளர்கிறான். சிலர் அவனை “அப்பனைப் போல் இல்லாமல், நீயாவது யோக்கியமாகப் பிழையடா பயலே!” என்கிறார்கள். அந்த வார்த்தைகள் அவன் ஆயுள் பூராவுமே ரீங்காரமிட்டன.
சோமு முதலியின் குழந்தைப் பருவ ஞாபங்களில் இருப்பது கோயில் மணி ஓசை, ஒளி, புயல். ஆனால் அக்கோயில் மணியின் ஓசையை அவன் இறுதியில் மட்டுமே கேட்கிறான். இடையில் எத்தனை முறை கோயில் மணி அடித்தாலும் அவன் ஆழ் மனதில் அது கேட்கவே இல்லை. இதுப்போல் பலருக்கு வாழ்வில் பலதடவை ஆத்ம சக்தி ஓங்கினாலும் (குறிப்பாக தவறு செய்யும் பொழுது மனசாட்சி அதனை தடுத்தாலும்) அதனை கேட்க மாட்டார்கள். அதனால் தான் என்னவோ பலரின் ஆத்ம சக்தி குறைந்துக்கொண்டே இருக்கிறது.
”சாத்தனூர் கோவில் விக்கிரங்களைவிட கோயில் மணி ஓசை சோமுவை கவர்ந்தது என்பதில் ஆச்சர்யம் இல்லை. வெறும் உலோகத்தை உருக்கி வார்த்து அந்த மாதிரி இனிய நாதம் எழுப்பும் சக்தியை அதற்குக் கொடுத்தவன் உண்மையிலேயே ஒரு கலைஞாகத்தான் இருக்கவேண்டும். அது தனி இசை; உள்ளத்தைக் கவர்ந்து உயிரையே உருகி ஓடச் செய்யும் இசை; மனிதனின் ஆத்மாவைக் கவ்வி இழுத்துக் கடவுளின் பாதாரவிந்தங்களில் பணியச் செய்வதற்கு என்று ஏற்பட்ட இசை.” என்று க.நா.சு சொல்கிறார். இக்கோவில் மணியை நமது ஆத்மாகவா நாம் உருவகிக்கலாம். நமது ஆத்மாவை நாம் ஒரு கலைஞாகவே இருந்து உருவாக்கவேண்டும். ஒரு கலைஞன் அவன் கலையில் தேர்ச்சிப் பெற அவன் எவ்வளவு உழைக்கவேண்டும். எவ்வளவற்றை விட வேண்டும். அப்பொழுது தான் அவன் கலை அவனுக்கு கைக்கூடும். அதுப்போல தான் ஒருவனின் ஆத்ம பலம். ஒருநாளில் வார்ப்பது அல்ல.
சோமு மேட்டுச்தெருவிலேயே அலைந்து திரிந்து வளர்வதைக் கண்ட சோமுவின் அம்மா வள்ளியம்மை அவனை அவ்வூர் மிராசுதாரர் ரங்கா ராயரிடம் சேர்த்துவிடுகிறாள். ரங்கா ராயரிடம் கூடமாட ஒத்தாசை செய்து வேலையாளாக இருக்கிறான் சோமு. ரங்கா பல நன்மைகள் செய்து ஊரில் நற்பெயர் வாங்கினாலும் ரங்காவிடம் சோமு ”காண்பது” பணத்தின் மதிப்பை மட்டுமே. ஒரு 10 ரூபாய் வைத்துக்கொண்டு சாத்தனூர் கிராமத்தையே வாங்கிவிட வேண்டும் என்று ஆசைப்படுகிறான். அடைவது வரை எது நீடிக்கிறதோ அதுவே ஆசை. மற்றவை எல்லாம் நீராவி போன்ற கற்பனைகள் எனலாம். சோமு ஆசைகளை கொண்டவன். ஏக்கங்கள் கொண்டவன். அதற்காக உழைப்பவன். ரங்காவிடம் அவன் கண்ட பணமே அவனது லட்சியம் என்று கூறுவது மிகையாகது. சோமு வளர்ந்து பெரியாள் ஆகி பணத்தை அளவில்லாது சம்பாதிக்கிறான்.
சோமு வளரும் பொழுது ரங்கா அவனிடம் சிதம்பரம் என்னும் குதிரை ஓட்டியிடம் சகவாசம் வைத்துக்கொள்ளதே என்று கூறுகிறார். ஏனெனில் அவன் ஒரு உதாவாக்கரை. நீயும் அப்படி ஆகாதே என்று. ஆனால் சோமு ரகசியமாக சிதம்பரத்துடன் சிநேகம் வைத்துக்கொள்கிறான். சிறு வயதில் ஆரம்பித்த இந்த ரகசிய வாக்கு மீறல் அவன் வாழ்நாளில் இறுதிவரை வெவ்வேறு வடிவில் தொடர்கிறது. அவன் குடி, கூத்தியாள், அளவு மீறும் பாலியல் கற்பனைகள் என்று அவன் சீர்க்கெடும் பல இடங்கள் அவனை பொருத்த அளவில் ரகசியம் (கிணத்துக்குள்ள குசு விட்டால் வெளியே தெரியாது என்பது போன்ற ரகசியம்). ஏனெனில் இவனுடைய வீடுகட்டும் ரகசியத்தைப் பற்றி ரங்காச்சாரியார் தீடீர் என்று அவனிடம் கேட்டுவிடுவார். அதேப்போல் சோமுவின் கள்ள உறவுகளை இவ்வூர் மக்கள் பார்த்துக்கொண்டே இருப்பர். பின்னே ஏசுவர். குறிப்பாக இறுதியில் சோமுவின் ஆசிரியர் சுப்ரமணியரின் பேரன் சாமா (சுவாமிநாதன்) சாம்பமூர்த்தி இறந்துவிட்டார் என்ற செய்தியை சொன்ன உடன் அடுத்ததாக என்னைப்போன்றவருக்கு கோமளவிலாஸில் (அதன் கிரஹ ப்ரவேசத்தில்) என்ன வேலை இருக்க போகிறது? என்னைப்போன்றோர் வந்து என்ன ஆகப் போகிறது என்று கேட்பான். அவ்வார்த்தையில் உடைந்துவிடுவான் சோமு என்று சொன்னால் மிகையாகது. ஏனெனில் அவனின் பணம் அவனுடைய வெற்றியாக கருதும் பங்களாவை ஆதம்பலம் கொண்ட சாமா போன்றோர் அதை துச்சமாக கருதுகிறார்கள். அப்பொழுது அவனுக்கு மணி ஓசை கேட்கும். குழந்தை காலத்துக்கு பிறகு நடுவில் பல ஆண்டுகள் (அவன் ஆத்ம சக்தி)யின் மணி ஓசை அடித்தாலும் அதனை சோமு கேட்கவே இல்லை. ஏனெனில் இது அறவழியில் வந்த சாமா போன்றவரிடம் இருந்து வரும் ஓசை. அதுவே ஆத்ம சக்தியின் வலிமை எனலாம்.
அதேப்போல் சோமுவின் இளமைப்பருவம் அவன் வாழ்நாள் எல்லாம் தாக்கம் செலுத்தும் என்பதற்கு உதாரணம் - சோமு தைரியமாக நீதிபதியிடம் சென்று போலிஸை அழைத்து வந்து அவனது எஜமான் ரங்கா ராயரை கொள்ளையர்களிடம் இருந்து காப்பாற்றுகிறான். இந்த மனதிடம் அவனை எக்காரியத்தை செய்து முடிப்பவன் என்பதற்கு உதாரணம். ஏனெனில் பிந்நாளில் அந்த ஊருக்கு ரயில் ஸ்டேஷன் வர காரணமாக இருக்கிறான். எந்த தொழில் செய்தாலும் அதில் வெற்றிப் பெறுகிறான்.
”மனிதனுடைய ஞாபகம், மனசு ஏதோ ஒன்றைக் கவ்விப் பிடித்துக்கொள்கிறது. இப்படிப் பிடித்துக்கொள்ளும் ஒரு விஷயத்திற்கு ஒன்பது விஷயங்களை நழுவ விட்டுவிடுகிறது. முக்கியம், முக்கியம் அல்லாதது என்பது பற்றியெல்லாம் கவலை படுவதே இல்லை இந்த மனசு. ஒரு விஷயத்தைப் பிடித்துக்கொண்டால் ஆயுசு பூராவும் நழுவ விடவே விடாமல் வைத்துக் காப்பாறியும் தருகிறது. அதுவே மனசின் கிறுக்கு” என்று க.நா.சு சொல்கிறார். அதனால் தான் என்னவோ சோமு பணத்தை பெற்று வாழ்வில் மற்றவற்றை கோட்டைவிட்டான் என்று சொல்லவேண்டும். குறிப்பாக அவன் ஆத்ம சக்தியை.
பல தெய்வங்கள் உண்டு. பணம், ஆசைகள், சிந்தனைகள், உதவி, உழைப்பு. ஆனால் சோமு பணம் என்னும் ஒரே தெய்வத்தை மட்டுமே கண்டான். அதற்காக திட்டமிட்டு உழைத்தான். கல்வி கற்றான், தொழிலை சுத்தமாக சீரும் சிறப்புமாக செய்தான். அவன் மளிகை கடை வைத்தாலும் தரம் வாய்ந்த பொருள்களை வாங்கினான். அமேரிக்க வியாபார யுக்திகளை மாத இதழ்கள் (magazine) மூலம் கற்று தன் வியாபரத்தை பெறுக்கினான். பல தொழில்கள் செய்தான் - இன்சூரன்ஸ், மெர்சண்ட் என்று பல தொழில்களை செய்தான். எல்லாவற்றிலும் சிறந்து விளங்கினான். உழைத்தால் மட்டும் பணம் ஈட்டமுடியும் என்று நம்பி திட்டமிட்டு உழைத்தான். ஆடம்பரமாக செலவு செய்யவே மாட்டான். கம்பனியிடம் இருந்து சோமு ஒரு கார் வாங்கினான். ஆனால் அதன் செலவு, பெட்ரோல் என எல்லாம் கம்பெனி செலவில் வந்தன. இவனோ அக்காரில் இன்சூரன்ஸ் தொழில் செய்து சம்பாதித்தான். இவனை பார்த்து கார் வாங்கிய மற்ற ஊர் பணக்கார்கள் காருக்கு செலவு மட்டுமே செய்தார்கள். சோமு பணம் சம்பந்தமான எதுவாக இருந்தாலும் அதில் சூரப்புலியாக செயல்பட்டான்.
உழைப்பை நம்பிய சோமு எவ்வளவு சம்பாத்திதாலும் என்றும் ஒரு பிடி அளவு நிலத்தை கூட வாங்கியது இல்லை. ஏனெனில் வெறும் நிலத்தை வாங்கி அது காசு கொடுக்கும் என்று நம்புவோர் போன்று சோமு நம்பவில்லை. ஏனெனில் பலர் நிலத்தை வாங்கி வைத்துவிட்டு அதுனை உழாமல் நாளைக்கே அது வளர்ந்து பொன் தரவேண்டும் என்று நினைக்கின்றனர். உழைக்க தயாராக இல்லை. பிறர் எவ்வளவு சம்பாதிக்கின்றனர் என்று அக்கறைக்கொள்கின்றனர் அந்த சோம்பேறிகள்.
ஆனால் இவ்வளவு உழைக்கும் சோமு தன் சிந்தனைகளை எல்லாம் பணத்தில் குவித்து இருக்கும் சோமு கோட்டை விட்டது ஆத்ம பலத்தில். ஏனெனில் இவன் வாலிபனாக இருக்கும் பொழுது அளவு கடந்த காம கற்பனைகளிலும், கூத்தியாள் சகவாசங்களிலும் திரிந்தான். ஆனால் பின்பு உழைப்பின் பக்கம் வந்தாலும் அவன் இரகசியமாக மறுபடியும் கூத்தியாள்களிடமே செல்கிறான். ஆனால் இதற்கு நேர் எதிராக க.நா.சு ரங்கா ராவையும் அவரதும் மாப்பிள்ளை சாம்பமுர்த்தியையும் காண்பிக்கிறார். ரங்கா ராவ் ஒரு சொத்து வழக்கில் தோற்றாலும் மனம்விடாது உயர்நீதிமன்றத்தில் போராடி வெற்றிப் பெறுகிறார். அதேப்போல் சாம்பமூர்த்தி அவன் மனைவி கங்காபாய் இறந்தப் பிறகு தனது பணத்தை எல்லாம் தீர்த்தப் பிறகு கூத்தியாளிடம் சென்று தவறு செய்கிறான். ஆனால் அவன் ஆத்மபலம் அவனை ஒரு வினாடியில் துவக்கத்திலேயே காப்பாற்றிவிடுகிறது. அவனை நல்வழிப்படுத்தி மறுபடியும் கோயில் பூஜை சேவை என்று ஈடுபடவைக்கிறது. ஏன் சாம்பமூர்த்தியின் ஆத்ம பலம் அதிமாக இருந்தது என்றால் அவன் பூஜை, சேவை, என்று மனதை நல்வழிப்படுத்தினான். நேர்மையாக இருந்தான். பொருளின் மீது மயக்கம் கொள்ளவில்லை. மேலும் தர்மம் தலைக்காக்கும் என்பதுப்போல், அவன் மகன் சுப்ரமணியம் நன்கு படித்து நல்ல ஒரு வியாபாரத்தை துவங்குவான்.
ஆனால் சோமு முதலி அப்படி அல்ல. சாம்பமூர்த்திக்கு இருந்த ஆத்மபலத்தில் ஆயிரத்தில் ஒரு பங்கு கூட சோமுவிடம் இல்லை என்பதை சோமுவே உணர்ந்திருந்தான். சோமுவுக்கு பணம் ஒன்றே பிராதனம். அதனால் தான் அவனால் ஆத்ம சக்தியை வளர்த்து எடுக்க முடியவில்லை. அதனால் தான் அவன் எவ்வளவு பணம் சம்பாத்தித்தும் பூரண மனிதன் ஆகவில்லையே என்று சோமு வருந்தினான். புண்ணியத்தையும் சம்பாத்திக்கவில்லை. சோமுவின் மகன் நடராஜன் சீர்கேட்டு உதவாக்கரையாக வளர்வான்.
சோமு தவறு செய்யும் பொழுது எல்லாம் “கறுப்பு முதலி பையன் கறுப்பு மாதிரி தான் இருப்பான்” என்ற வார்த்தைகள் அவன் காதில் விழுத்துக்கொண்டே இருக்கின்றன. இவ்வூரும் இரக்கமற்று அதையே நினைவூட்டுகிறது. ஏனெனில் அது அவன் பால்யத்திலும் வாலிபத்திலும் அவன் மனதில் கொண்ட தவறான எண்ணங்களால் விளைந்தவை.
ரங்கா ராவ் மீது தவறுகள் உண்டு. அவர் ஆடம்பரமாக கல்யாணத்தை கடன் வாங்கி செய்தார். அதன் விளைவாக வட்டியும் கடனும் கட்ட அவர் செல்வத்திலும் நிலம் போன்ற ஆஸ்திகளை விற்று இழந்தார். ரங்கா ராவும் சரி சாம்பமூர்த்தியும் சரி தங்கள் பரம்பரை சொத்தை விற்று தானம் செய்தார்கள். ஆனால் அது தவறு. இவற்றையெல்லாம் அவர்கள் துவக்கத்திலேயே திருத்தி இருக்க வேண்டும். ஒரு திட்டத்துடன் இறங்கி இருக்க வேண்டும். வரும் பொழுது பார்த்துக்கொள்ளலம் என்பதெல்லாம் தவறு. போகும் இடம் தெரியாதவன் எந்த ஒரு ஊருக்கும் போய் சேர மாட்டான். ரங்காவும் சாம்பமூர்த்தியும் தங்களது சொத்துக்களை விருத்தி செய்து இருக்கவேண்டும். வரும் இலாபத்தில் இருந்து தானங்களையும் சேவைகளையும் செய்து இருக்க வேண்டும். அதுவே நல்ல ஒரு ஏற்பாடு. அவர்கள் பொருளை பெரிதாக எடுத்துக்கொள்ளவில்லை. பொருள் இல்லார்க்கு இவ்வுலகில்லை. இறுதியில் பொருள் இல்லாமல் மிகவும் சிரமத்துக்கு உள்ளானார்கள்.
மேட்டுத் தெருல பிறந்த சோமு கடைசி வரைக்கும் அங்கேயே இருக்கான். ஏன்னா அவன் ஆத்மா சக்தி ஓங்கவில்லை என்பதே காரணம். ஏன் ஆத்ம சக்தி ஓங்கவில்லை? அவன் பணம் சம்பாத்தித்தான். ஆனால் அவன் கீழ்மைகளை உதரவில்லை அறுக்கவுமில்லை. அவன் கீழ்மைகள் அவனுள் ஆழமாக இருந்தது. சமயம் பார்த்து அவனை வஞ்சித்தது (வாலிபம் திரும்பி பெண்களிடம் சென்றான். தன் மதிப்பை குறைத்துக்கொண்டான்). கீழ்மையில் இருப்பதை உணரவில்லை. சாக்கடைப் போன்ற மேட்டுத் தெருவும் கீழ்மையின் சின்னம் என்பதை உணரவில்லை. அதனால் தான் அவன் மேட்டுத் தெருவிலேயே இருந்துவிட்டான். அது ஒரு குறியீடு. சொல்லப்போனால் அவர் சிறையில் இருந்து விடுதலையாகி வந்தப் பிறகு வேறு ஏதோ ஒரு சாத்தனூர் கிராமத்தில் இறக்கிறான். அவ்வூரிலும் மேட்டுத் தெரு இருக்கிறது.
அதனால் மனிதன் அவ்வப்போது சிந்திக்க வேண்டும். அதற்கு அவகாசமும் வேண்டும். இரண்டும் வேண்டும். சிந்திப்பதை தொடர்ந்து செய்யவேண்டும். ஆனால் சிந்தனையுடன் நிறுத்திவிடக் கூடாது. செயலில் தன் சிந்தனையை காண்பிக்க வேண்டும். அதுவே அவனை நல்வழிப்படுத்தும். அவன் ஆத்ம பலத்தைக் கூட்டும்.
எல்லோரும் தவறு செய்வது ஒரு நொடியில். அந்த ஒரு நொடியை கடக்க சிந்திக்க வேண்டும்.
”உலகம் பொறந்த நாள் முதல் இன்னிவரையில் எவ்வளவு விநாடி உண்டோ அவ்வளவு தெய்வமும் உண்டு - இனி இருக்கப்போற விநாடிக்கும் விநாஅடிக்கொரு தெய்வம் உண்டு” என்று சோமு பண்டாரம் சொல்வதாக க.நா.சு சொல்கிறார். இதன் உள்ளார்ந்த அர்த்தம் பணம் (மட்டுமே) தெய்வம் அல்ல. சொல்லப்போனால் பணம் ஒரு பொய்த்தேவு / பொய்யான தெய்வம். பணம் இருந்தால் எல்லாம் கிடைத்துவிடும் என்னும் மாயம் கொண்ட தெய்வம். வாழ்வில் மற்ற முக்கியமான தெய்வங்கள் உண்டு. அதனால் தான் நாவலின் கடைசியில் சாமா சொல்கிறான் சோமு போன்ற உழைப்பால் முன்னேறிய பணக்காரர்கள் இவ்வுலகிற்கு வேண்டாம், ஏனெனில் இவர்கள் ஒரு விதத்தில் பணக்காரர்களாக இருந்தாலும் பல முக்கியமான விஷயங்களில் ஏழையாகவே இருக்கிறார்கள். குறிப்பாக கீழ்மைகளை கொண்டுள்ளார்கள். ஆனால் இவ்வுலகிற்கு சாம்பமூர்த்திப் போன்ற ஆசாமிகள் தான் தேவை ஏனெனில் அவரிடம் செல்வம் குறைந்தாலும் குணம் குறையவில்லை. அவரிடம் ஆத்மபலம் அதிகமாகவே இருந்தது. அவரைப்போன்றோர் செயலாற்ற வேண்டும்.
============================================
மேலும் - நாவலில் இருந்து சில பத்திகள்
ஏழைகளாகப் பிறந்து பசி தாகத்தைப் பரிபூரணமாக அறிந்தவர்களுக்கு மட்டுமே உள்ளத்திலே எண்ணிறந்த அற்புதமான கனவுகள் நிறைந்திருப்பதற்கும், பணக்காரர்களாகப் பிறந்து விட்டவர்களுக்கு ஒரு திருப்தி, வயிறு நிறைந்த தன்மை, சோம்பல், தூக்கம் இவை தவிர வாழ்க்கையிலே வேறு ஒன்றுமே இல்லாதிருப்பதற்கும் பொதுவாக இதுதான் காரணம் போலும்! பசியையும் தாகத்தையும் தலை தூக்க விடாமல் வயிற்றை நிரப்பிக்கொண்டு வளர்ந்து பெரியவர்களாகி விட்டவர்களுக்கு இவ்வுலகில் வாழ்வதன் மகிமைகள் பூராவும் நிச்சய்மாக தெரியது என்று தைரியமாகவே சொல்லலாம்.
ஒரு மனிதனுடைய வாழ்க்கையிலே ஒவ்வொரு வினாடியுமே முக்கியமானதுதான் - அற்புதமானது தான் - முடிவற்றதுதான்!
ஒரு மனிதனுடைய ஆசைகள் ஒரே வினாடியில் பூர்த்தியாகி விடுகின்றன. இன்னொருவனுடைய ஆசைகள் ஏழேழு தலை முறைக்கும் பூர்த்தியாக மாட்டாதவை என்று அதே வினாடியில் தெரிகிறது. ஆமாம், ஒப்புக்கொள்ள வேண்டியதுதான். ஆசைகளே இல்லாத மனிதர்களும் இருந்து, வாழ்ந்து வினாடிக்குப் பின் வினாடியாகக் கழித்து வாழ்க்கை நடத்துகிறார்கள்.
இவ்வுலகிலே ஒரு விஷயத்தை எண்ணி ஆசைப்படுவதற்கே தெம்பு வேண்டியிருக்கிறது. அந்த ஆசை பூர்த்தியாகும் வரையில் ஆசையாக நீடிக்க வேண்டும் - அதாவது சிலகாலமாவது நீடிக்க வேண்டும். ஆசை என்று தோன்றிவிட்டு மறைந்து விடக்கூடாது. பரிபூரணமாக அடைவதற்கு இடைவிடாது பாடுபட்டு உழைக்க வேண்டும். ஆசையும் அந்த ஆசை காரணமாக உழைப்பும், சோமுசுந்தர முதலியாரிடம் பரிபூரணமாகக் கலந்து அமைந்திருந்தன.
இந்தப் பிரபஞ்சத்திலே உழைப்பு என்ற ஒரு சக்தியும், அந்தச் சக்தியை இயக்கும் காரணமாக ஆசை என்று ஒரு சக்தியும் ஒன்றையொன்று தழுவி நெருங்கி நிற்கின்றன. இவை இரண்டும் நித்தியமான, அழியாத சக்திகள். இந்த இரண்டு சக்திகளையும் மீறி மனிதன் வாழ முடியாது. வாழ முயல்வது மதியீனம் - பைத்தியக்காரத்தனம்.
சாம்பமூர்த்தி ராயர் மிகவும் நல்லவர். தூய்மையான எளிய உள்ளம் படைத்தவர். தான தருமங்கள் செய்வதே பொருள் படைத்தவரின் கடமை என்று எண்ணுபவர். நிஷ்காமியமாக வாழ்கை நடத்தி அதைப் பரத்துக்குப் பூரானா சாதகமாக வைத்து விடவேண்டும் என்று எண்ணினார்.
பெரியவன், சின்னவன், பணக்காரன், ஏழை என்கிறோம். ஆனால் கடவுள் இரண்டு பேரையுந்தான் படைச்சிருக்கான். பணத்திலே பணக்காரணாக இருப்பவன் மற்ற எவ்வளவோ விஷயங்களில் ஏழையாக இருப்பதை நாம் பார்க்கிறோம்; பெரியவனுக்கு பெரிய கஷ்டங்களும்.
மனிதனுடைய மனசிலே, உள்ளத்திலே, அந்தரங்கத்திலே விதவிதமான் சக்திகள், நவ நவமன உணர்ச்சிகள் விநாடிக்கு விநாஅடி மூளுகின்றன - மூண்டு மூண்டு போராடுகின்றன. இந்தப் போராட்டமே மனிதனுடைய வளர்ச்சிக்கு முக்கியக் காரணமாக அமைகிறது. ஒரு சக்தி, ஓர் உணர்ச்சி வெற்றி பெற்று ஒரு விநாடி தலை தூக்கி நிற்கும். ஆனால் அடுத்த விநாடியே இன்னொரு சக்தி தோன்றி அதை வீழ்த்திவிட்டு ஆட்சி செலுத்தத் தொடங்குகிறது. ஆனால் இந்தச் சக்தியுனுடைய ஆட்சி நீடிப்பதும் ஒரே விநாடிதான். இந்தப் போராட்டத்துக்கெல்லாம் பின்னணியக மனிதன் உள்ளத்திலே ஒரு லட்சியத்தை, ஒரு தெய்வத்தைக் கற்பனை பண்ணிக்கொண்டு வாழ ஆரம்பித்து விட்டானானால் அவனைப் பாக்கியசாலி என்றே சொல்லவேண்டும்.
சிந்திப்பவன் தன் சிந்தனைகளின் பலாபலன்களைப் பற்றி நினைக்காதவனாக இருக்க வேண்டும். ஆனால் சிந்தனை தன்னை எங்கே கொண்டுபோய் விடுமோ, என்ன செய்யத் தூண்டுமோ என்று பயப்படுகிறவன் சிந்திக்கச் சக்தி இல்லாமல் இருப்பதே நலம். தவிரவும் வாழ்கையிலே சிந்திக்கவேண்டியவற்றை எல்லாம் பற்றிச் சிந்தித்து, கூடுமானவரையில் முடிவு கட்டி விட்டுப் பிறகு வாழ ஆரம்பிப்பவனே கெட்டிக்காரன். பழைய காலத்துக் குருகுல வாழ்க்கைக்கு இதுதான் அர்த்தம் போலும். வாழ்க்கை வழிகள் குருகுலத்தை விட்டு வெளியேறுமுன் திடமாகிவிட வேண்டும். இந்த வழி போகலாமா, அந்த வழி போகலாம என்று வழி நெடுகிலும் யோசித்துக்கொண்டே போகிறவன் எங்குமே போய்ச் சேரமாட்டான் என்பது நிச்சயம். வேறு ஒன்றும் இல்லாவிட்டாலும் குறைந்தபட்சம் ஒவ்வொரு மனிதனும் அவன் போகிற திசைப்பற்றியேனும் நிச்சயம் செய்த்துக்கொண்டுதான் ஆகவேண்டும். சிறுசிறு பிரச்சனைகளைக்கூட அவை எழும்பொழுது, விநாடியிலே, தீர்த்துக்கொண்டுவிடலாம் என்று எண்ணுவது பிசகு என்பதுதான் அனுபவ ரகசியம். அப்படித் தீத்துக்கொள்ள முடியவே முடியாது. சிந்தித்து முடிவு கட்டுவதற்குள் பிரச்சனைகளின் தன்மை தீர்ந்துவிடும். முடிவு கட்டிப் பிரச்சனையைத் தீர்த்து வைக்கும் வரையில் பிரச்சனைகள் பிரச்சனைகளாகக் காத்திருக்க மறுக்கின்றன.
===========================
எனது மற்ற வலைப்பதிவுகள்
நாளும் ஒரு திருக்குறள் - https://DailyProjectThirukkural.blogspot.com/
No comments:
Post a Comment