Featured Post

Daily Project திருக்குறள்

Dear Readers / Friends, http://DailyProjectThirukkural.blogspot.com/    By interpreting various meanings for every word in a Thirukkur...

Showing posts with label Functions. Show all posts
Showing posts with label Functions. Show all posts

December 23, 2013

விஷ்ணுபுரம் விருது விழா 2013 - ஜெ மற்றும் நண்பர்களுக்கு ஒரு கடிதம்

அன்புள்ள ஜெ மற்றும் விஷ்ணுபுரம் இலக்கிய வட்ட நண்பர்களே,

கடந்த வார இறுதி எமக்கு மிகுந்த ஒரு மகிழ்ச்சியையும் ஒரு புது உலகையும் கொடுத்தற்கு திரு.ஜெயமோகனின் விஷ்ணுபுரம் இலக்கிய வட்டம் ஒரு மிக பெரிய காரணம். ஆனால் எல்லோருடனும் சொல்லிக்கொண்டு செல்ல முடியவில்லை. அதற்கு என்னை மன்னிக்கவும். தெளிவத்தை அவர்களின் ஏற்புரை முடிந்தவுடன் நேரம் ஆனதால் பெங்களுருக்கு பஸ் எடுக்க கிளம்பிவிட்டேன்.

ஜெ அவர்களின் வலைதளத்தை கடந்த சில மாதங்களாக பின்பற்றி வருகிறேன். விழா அறிவிக்கபட்ட உடன் கட்டாயம் செல்லவேண்டும் ஒரு எண்ணம் இருந்தது. வாசகர்கூட்டத்திற்கு வருவதா வேண்டாமா என்ற தயக்கம் இருந்துக்கொண்டே இருந்தது. புதன்க்கிழமை அன்று சேலம் ப்ரசாதிற்கு டெலிபோன் செய்தபிறகு அந்த அச்சம் உடைந்தது. 

நான் சனிக்கிழமை மாலை சீனு வழிகாட்டுதலுடன் s.v.n கல்யாண மண்டம் சேர்ந்தேன். பிறகு, திரு ஜெ மற்றும் இந்திரா பார்த்தசாரதி ஆகியோருடன் அனைவரும் கலந்துரையாடிக்கொண்டு இருப்பதில் பங்கேற்றது எனக்கு ஒரு புது அனுபவம். இதுப்போல் அனைவரும் கேட்ட ஆழமான கேள்விகளும் அவர்களின் நுண்வாசிப்புதனை எனக்கு காண்பித்தது. உண்மையில் நான் அவ்வளவு உன்னிப்பாக வாசித்தது இல்லை. ஆனால் அப்படிபட்ட நுண்வாசிப்பு மிக முக்கியம் இல்லையேல் மூளைக்கு வெறும் ஒரு பயிற்சியாக (intellectual exercise) வாசிப்பு அமையும் என்றென்பதை மறுபடியும் உணர்ந்தேன். 

இவ்விரு நாட்களின் உச்சமாக நான் பார்ப்பது எல்லோருடனுமான கலந்துரையாடல்கள் தான். ஜெ, இந்திரா பார்த்தசாரதி, தெளிவத்தை ஜோசப், சுரேஷ் இந்த்ரஜித், வேணுகோபால், யுவன், நாஞ்சில் ஆகியோரின் கலந்துரையாடல்களை கவனித்தது ஒரு புதிய அனுபவத்தைத் தாண்டி மனதில் ஒரு தாக்கத்தை ஏற்படுத்தியது என்று சொல்வேன். இவ்வனுபவம் எமது வாசிப்பு ஆர்வத்தை அதிகப் படுத்தியது என்றே சொல்லவேண்டும். ஜெ வை தவிர மற்றவர்களின் எழுத்துக்களை வாசிக்கவேண்டும் (இதுவரை வாசித்தது இல்லை) என்ற ஒரு உந்துதலை தந்த ஒரு வாசலாக இந்த வாசகர்க் கூட்டத்தை நான் பார்க்கிறேன்.

​​நான் முக்கியமாக சொல்ல நினைப்பது அனைவரும் ஒருவருடன் ஒருவர் அன்புசெலுத்தியதை பற்றித் தான். கூச்சம் காரணமாக நான் பொதுவாக ஒரு புதிய இடத்தில் முதற் சென்று அறிமுகப் படுத்திக்கொண்டு பேசுபவன் அல்ல. ஆனால் என்னிடம் பலர் தாமாக முன் வந்து அறிமுகம் செய்துக் கொண்டு என்னுடன் உரையாடி நம்முள் இருந்த பனியை உடைத்து உங்களின் உரையாடல்களில் என்னை சேர்த்துக்கொண்டது என்னை உங்களில் ஒருவன் போல் எண்ணச் செய்தது. அதேபோல் அனைவரும் ஒருவருகொருவர் உணவு பரிமாறிக் கொண்டு, இரவு தரையில் ஜமுக்காளம் விரித்து படுத்துக்கொண்டு, காலையில் டீ குடித்துக்கொண்டு வயது வித்யாசமின்றி பள்ளிக்கூட நண்பர்கள் போல் அரட்டை அடித்துக்கொண்டு இருந்தது நான் சற்றும் எதிர்பாராத ஒரு இன்ப அனுபவமாக இருந்தது.  விழாவில் 84 வயதான இந்திரா பார்த்தசாரதி அவர்கள் ஒரு இரண்டு நாள் நான் என் வயசையே மறந்துவிட்டேன் என்று கூறும் போது அதற்கு காரணம் விஷ்ணுபுரம் இலக்கிய வட்டம் அன்பர்கள் என்பதை தவிர வேறு காரணம் இருக்க முடியாது என்றென்பது அங்கு இருந்தவனாக என்னுடைய எண்ணம்.

கலந்துரையாடல்களிளும் விழாவிலும் தெளிவத்தை அவர்களின் பேச்சு எனக்கு இலங்கை தமிழ் மக்களுக்குள்ளேயே உள்ள மற்றுமொரு மலையக தேசத்தை அறிமுகம் செய்தது. அது வருத்ததிற்க்குரிய அறிமுகமாகும். ஜெவின் வலையத்தில் உள்ள தமிழின் சிறந்த நாவல்கள் வரிசையில் இலங்கை எழுத்தாளர்கள் பற்றி அதிகம் அறிமுகம் இல்லை என்று கூறியிருப்பார். ஏன் நமக்கு அறிமுகம் இல்லை என்று நான் அவ்வளவு நினைத்தது இல்லை. போர் சூழல் காரணமாக இருக்கலாம் என்று நினைத்துக்கொண்டு சென்றுவிடுவேன். அதற்கு காரணம் அரசியல் என்பது கண்டிக்கத்தக்க மிகப் பெரிய துயரமாகும். தெளிவத்தை ஜோசப் அவர்களின் எழுத்து இலங்கை தமிழ் எழுத்துக்களுக்கு ஒரு நல்ல சாளரமாக எனக்கு அமைந்துள்ளதாக கருதுகிறேன். அதற்கு ஜெவிற்கும் வி.இ.வட்டதிற்கு நன்றி கூறுகிறேன். வரும் காலங்களில் நிரம்ப இலங்கை எழுத்துக்கள் இந்தியாவிற்கு வரும் என்று நம்புகிறேன். அதற்கும் வாசலாக வி.இ.வட்டம் இருக்கும் என்று எண்ணுகிறேன்.

மொத்ததில், இந்த இரண்டு நாட்கள் எனக்கு மிகுந்த ஒரு உத்வேகத்தையும் மன நிறைவையும் அளித்தது. இதைப்போன்று அடுத்து எங்குக் கூடினாலும் கலந்துக்கொள்ள ஆவலாய் உள்ளேன். இத்தனை பெரிய விழாவையும், அற்புதமான கலந்துரையாடல்களையும் நான்காவது முறையாக சாத்தியப் படுத்திய ஜெ மற்றும் வி.இ.வட்டதிற்கு நன்றிப் பாராட்டுகிறேன். 

பேரன்புடன்
ராஜேஷ்.
http://rajeshbalaa.blogspot.in/
FandFstores.com
எண்ணித் துணிக கருமம்