முதல் முறையாக ஒரு தொலைக்காட்சி நிகழ்ச்சியை பற்றிய எனது கருத்தை சொல்லப்போனால் எனது ஆதங்கத்தினால் முதல் முறையாக எதிர்வினையை எழுதுகிறேன்.
ஸ்டார் விஜய் தொலைக்காட்சிகளிலேயே நான் மதித்து விரும்பி முக்கியமாக நடுவர்கள் நடுநிலையானவர்கள் என்ற முழுநம்பிக்கையுடன் பார்த்த ஒரு நிகழ்ச்சி தமிழ்ப் பேச்சு எங்கள் மூச்சு. இந்த நிகழ்ச்சி கடந்த 2009ஆம் ஆண்டு முதல் முறையாக ஒளிபரப்பப்பட்டது. அப்போது நான் தில்லியில் இருந்தேன். காலை 9 மணிக்கு ஒளிபரப்பாகும். எனக்கு வயலின் வகுப்பு 10 மணிக்கு இருக்கும். ஆதலால் 9:50 வரை பார்ப்பேன். என்னை மிகவும் கட்டிப்போட்டு வைத்தது. நான் புத்தகம் வாசிக்கும் பழக்கத்தை அப்போது தொடங்க ஒரு உந்துதலாக இந்நிகழ்ச்சி . அன்று முதல் திரு. நெல்லை கண்ணன் ஐயா மீது மிகந்த மதிப்பு இருந்து வருகிறது. முதல் தொகுப்பில் விஜயன் எல்லோரையும் மிரட்டினார். அவரது கருத்துக்கள் மிக சுயமாக ஆழ்ந்த அவதானிப்புகளின் பிரதிபலிப்பாக இருந்தது. பல நேரங்களில் நெல்லை கண்ணன் ஐயா அவர்கள் கண்கலங்கி இருக்கிறார். இந்த நிகழ்ச்சியின் மூலம் பல நல்ல பேச்சாளர்கள் எழுத்தாளர்களை கண்டுகொண்டேன். இந்த ஆண்டு நிகழ்ச்சியை கண்டபின் திரு நெல்லை கண்ணன் ஐயா அவர்களின் பேச்சுக்கள் பலவற்றை யூட்யூபில் பார்த்தேன். 2009 பிறகே இவரது பேச்சுக்களின் ஒளிப்பதிவுகள் யூட்யூபில் ஏற்றம் அதிகம் பெற்றன என்றென்பது குறிப்பிடதக்கது.
முதல் தொகுப்பை தொடர்ந்து தமிழ்ப் பேச்சு எங்கள் மூச்சு - சுட்டிகள் வந்தது. அலுவுலக பணி இட மாற்றம் மற்றும் படிப்பு காரணமாக அதை நான் முழுவதுமாக காணவில்லை. பார்த்த சில நாட்களில் குழந்தைகள் நன்றாய் பேசுவது மகிழ்ச்சியளித்தது.
இந்த ஆண்டு 2013இல் ஜூலை மாதம் முதல் மறுபடியும் தமிழ்ப் பேச்சு எங்கள் மூச்சு நிகழ்ச்சியின் இரண்டாம் தொகுப்பு ஒளிப்பரப்பானது. துவக்கம் முதலே இதன் மீது மிகுந்த எதிர்பார்ப்பு இருந்தது. அதற்கேற்றார்ப்போல் பல நல்ல பேச்சாளர்கள் உரையாற்றினார்கள். திரு நெல்லை கண்ணன் அவர்கள் தலைமை நடுவராக இவர்களை நல்பாதையில் வழிநடத்தி சென்றார். நிகழ்ச்சியின் துவக்க காலம் நல்துவக்கமாக அமைந்தது. இராமநாதன், கல்யாணசுந்தரம், ராஜ் மோகன், சரவண சித்தார்த், ஷண்முக சுந்தரம், மஞ்சரி, பௌசியா பானு, முனீஸ் பவித்ரா, இளமுருகன், காசிநாதன் ஆகியோர் நல்ல ஒரு தொகுப்பிற்கு நம்பிக்கையை விதைத்தார்கள். முதல் மூன்று சுற்றுக்கள் சில போதிய பயிற்சி அல்லாதவர்களை களைவதாக அமைந்தது. இதில் ஒரு உறுத்தலான ஒன்று கண்ணுக்கு தெரியாமல் பின்புலத்தில் நடந்தது. அகிலா போன்ற நல்ல பேச்சாளரும் ராம் கபிலாவும் மற்றும் சிலரும் அடுத்தடுத்த சுற்றுகளுக்கு தாங்கலாக வரவில்லை என்று சொல்லப்பட்டது. தாங்களாகவே திடீரென்று விலகினார்கள். ஒரு வேளை அவர்கள் உச்சரிப்பு அவ்வளவு சரியில்லை இல்லை தாங்கள் இன்னும் சிறுமிகளே என்று வரவில்லையோ தெரியவில்லை.
என்னை பொறத்தவரை நிகழ்ச்சி கலைகட்டியது நான்காவது சுற்றில் திருக்குறளை பற்றி அனைவரும் ஒவ்வொரு அதிகாரத்தில் பேசியது தான். அதுவும் மஞ்சரியின்
ஒழுக்கமுடைமை, இளமுருகனின் உழவு, ஷண்முகசுந்தரரின் புணர்ச்சிவிதும்பல், முனீஸ் பவித்ராவின் நெஞ்சொடுகிளத்தல் பேச்சுக்கள் அபாரம் அபாரம். அதுவும்
காமத்துப்பாலில் உள்ள உளவியல் ரீதியான செய்திகளை அன்று தான் முதல் முதலில் உணர்ந்தேன் என்று சொல்ல கடமைப்பட்டு இருக்கிறேன். எனது எதிர்ப்பார்ப்பு பன்மடங்கு உயர்ந்தது. வரும் வாரங்களில் சங்க இலக்கியம், கவியரங்கம், இசையரங்கம் போன்றவற்றில் திளைப்பேன் என்று நினைத்தேன்.
ஐந்தாவது சுற்று. இங்கு தான் பயணம் திசை மாறியது. நெல்லை கண்ணன் ஐயா அவர்கள் நடுவர் இருக்கையில் இல்லை. எங்கள் மனதில் சந்தேகம் வர காரணம் அவர் மிக நேர்மையானவர். இந்த நிகழ்ச்சி தமிழுக்கு செய்யக்கூடிய ஒரு தேவையான தொண்டு என்று உணர்ந்தவர். அவருக்கு இதை தவிர்க்கும் அளவிற்கு வேறு வேலை வைத்து இருப்பாரா என்றால் ? இருக்கும். ஆனால் அவர் இதன் வீச்சை அறிவார். ஆதலால் ஒரு காலமும் அவர் வராமல் இருக்க வேறு காரணம் இருக்காது என்று எண்ணுகிறேன். வந்த இரு நடுவர்களும் அருண்மொழி அவர்களும் தமிழச்சி தங்கபாண்டியனும் பேச்சாளர்களை மிகுந்த வருத்தத்துக்கு உள்ளாக்கினார்கள். பேச்சாளர்களை மெருகேற்றவே எதிர்வினைகள். ஆனால் தமிழச்சி தங்கபாண்டியன் தன் திராவிட முன்னேற்ற கழக கொள்கைகளையே முன்னிறுத்தி கொண்டு இருந்தார். அவரை ஒரு படித்த பண்பட்ட உலக அறிவு கொண்ட ஒரு பகுத்தறிவு பீரங்கியாக தன்னை ப்ரபலபடுத்திகொள்ளவே ஈடுபட்டார் என்பது பார்க்கும் யாருக்கும் விளங்கும். எதற்கு தமிழச்சியை அமர்த்தினார்களோ ? ஸ்டார் விஜய் தொலைகாட்சிக்குதான் வெளிச்சம். நிகழ்ச்சியின் முடிவில் சுமார் 6 பேரு நீக்க பட்டனர். பேர் அதிர்ச்சி. இந்த நிகழ்ச்சி குட்டிச்செவுரு என்று வருத்ததுடன் கொந்தளிப்புடன் எனக்கு உறுதியானது. திறமையான மஞ்சரி, முனீஸ் பவித்ரா, போசிய பானு நீக்கப்பட்டனர். நான்காம் பத்தியில் கடைசியில் சொன்னது எனக்கு இப்போது ஐயமாக தோன்றுகிறது. ஒரு வேளை ஸ்டார் விஜய் தொலைக்காட்சியே அவர்களை வரவேண்டாம் என்று சொல்லிவிட்டாதோ ?
ஆறாம் வாரம் திரு நெல்லை கண்ணன் ஐயாவை மறுபடியும் கண்டதில் ஒரு நம்பிக்கை துளிர்த்தது. ஆனால் தமிழச்சியின் பங்கேற்பு கசப்பாகவே என் மனதை உறுத்தியது. ஆனால் ஆறாவது சுற்றே அரையிறுதிச்சுற்று என்று எண்ணுகையில் ஈடுபாடு அவ்வளவுவாக இல்லை. திரு நெல்லை கண்ணன் ஐயா பேருக்கு தான் உட்கார்ந்து இருந்தார் என்று தோன்றிற்று. இந்த சுற்றில் எட்டில் நான்கு பேர் விலக்கம். அதுவும் முதலில் பேசிய நான்கு பேர்.
இந்த வாரம் இறுதிச்சுற்று. ஒரு நடுவர் அருண்மொழி அவர்கள் நேரம் குறைவாக கொடுக்கப் பட்டதனால் நீங்கள் குறைவாக செய்திகள் சேகரித்து உள்ளீர்கள் என்று கூறினார். இதில் இருந்து எனக்கு மிக தெளிவாக தெரிந்தது அரையிறுதிச்சுற்றும் இறுதிச்சுற்றும் ஒரிரு நாள் இடைவேளியில் ஒளிப்பதிவு செய்யப்பட்டது என்று. அதுவும் முதலில் பேசிய இருவரும் மிகுந்த குறைந்த நேரமே பேசினார்கள். 'வியப்பில்லாமல்' அவர்கள் இருவரும் கடைசிச்சுற்றுக்கு தேர்ந்தெடுக்கபடவில்லை. கடைசியாக ராஜ்மோகன் வெற்றிப்பெற்றார். அவர் நல்ல பேச்சாளர். ஆனால் முதல் பரிசு வாங்கும் அளவிற்கு அவரது உரை ஒன்று கூட இருந்தது இல்லை. ஷண்முக சுந்தரம், ராமநாதன், மஞ்சரி, முனிஸ் பவித்ரா, கல்யாண சுந்தரம், இளமுருகன் ஆகியோர் இவரை விட முன்பு பல நல்ல ஆழமான பேச்சாற்றியுள்ளனர். கடந்த மூன்று வாரங்களில் (திருக்குறள் வாரத்திற்கு பிறகு) வெளியேற்றபட்ட யாவர் முகங்களிலும் ஒரு வருத்தமோ ஏமாற்றமோ இல்லை. வருத்தபட ஒன்றும் இல்லை - நிகழ்ச்சி சீர்கெட்டுவிட்டது என்று அறிவார் அவர்.
ஆக இந்த நிகழ்ச்சி அவசர அவசரமாக முடிக்கப்பட்டது. அதுவும் ஏழே சுற்றுகளில். இதில் ஒரு கவியரங்கம், விவாதம், பட்டி மன்றம் போன்ற சுற்றுக்கள் இல்லை. இங்கு தான் நான் இவ்வளவு நேரம் தொலைக்காட்சி மேல் சந்தேக பட்ட நான் சற்று ஒரு படி உள்ளே சென்று அவதானிக்க விரும்புகிறேன். 2009 ஒன்பது போல் 9 மணிக்கு அல்லாமல் 10 மணிக்கு இந்நிகழ்ச்சி ஒளிபரப்பானது ஒரு ஆரோக்கியமான ஒன்று. 10 மணி என்பது சற்று அதிக டி-ஆர்-பி கொண்ட நிகழ்ச்சிகளுக்கு கொடுப்பார்கள் என்று எண்ணுகிறேன். அப்படியென்றால் மக்களின் மீது நம்பிக்கை வைத்தே இரண்டாம் தொகுப்பை நடத்தி உள்ளனர். ஆனால் அவசர அவசரமாக ஏழே சுற்றுகளில் முடிக்க பெரும் காரணமாக நான் மக்களையே பார்க்கிறேன். கண்டிப்பாய் டி-ஆர்-பி குறைவாக இருந்து இருக்கும். இது தொலைகாட்சியின் குற்றமா ? இல்லை. மக்களின் குற்றம். இங்கே மற்ற நிகழ்ச்சிகள் போல் அழுகைகளும் ஆராவரங்களும் போலி நாடங்களும் இல்லை. திறமையும் நேர்மையும் கைகோர்க்கும் இடமாகவே இருந்தது. ஆனால் மக்களுக்கு நல்ல அறிவுள்ள பேச்சுகளை கேட்க ஆயுத்தமாக இல்லை. அவர்களுக்கு மலிவான சராசரியான பொழுதுபோக்கான நிகழ்ச்சிகள் மட்டுமே தேவை என்ற அவல நிலை உள்ளது. அவர்கள் மொழி, வாசிப்பு தன்மை, இலக்கியம், சொற்பொழிவு, கலாசாரம், விவாதங்கள் போன்றவற்றில் இருந்து எவ்வளவு தொலைவில் உள்ளார்கள். வேதனை அள்ளிக்க கூடிய ஒன்று. பாரதி சொன்ன "தேடிச் சோறுநிதந் தின்று - பல சின்னஞ் சிறுகதைகள் பேசி - மனம் வாடித் துன்பமிக உழன்று - பிறர் வாடப் பலசெயல்கள் செய்து - நரை கூடிக் கிழப்பருவ மெய்தி - கொடுங்கூற்றுக் கிரையெனப்பின் மாயும் - பல வேடிக்கை மனிதர்கள்" உள்ளவரை இது போன்ற நிகழ்ச்சிகள் பெருவாரியான வெற்றிப்பெறாது.
தமிழ் மக்களை காப்பாற்றுக! தமிழை காப்பாற்றுக!