Featured Post

Daily Project திருக்குறள்

Dear Readers / Friends, http://DailyProjectThirukkural.blogspot.com/    By interpreting various meanings for every word in a Thirukkur...

Showing posts with label Inspirational. Show all posts
Showing posts with label Inspirational. Show all posts

January 20, 2021

அஞ்சலி : டாக்டர் ஷாந்தா / Dr.Shanta - வாழ்க உன் புகழ்

டாக்டர் ஷாந்தா அவர்களின் பெயரை சில வருடங்கள் முன்பு ஒரு தொலைக்காட்சி நிகழ்ச்சியின் மூலமாக கேள்விப்பட்டேன். அவர் சென்னையில் உள்ள அடையாறு புற்றுநோய் நிறுவனத்தில் பல ஆண்டுகளாக சேவை செய்துவருகிறார் என்ற அளவிலேயே கேள்விப்பட்டேன். பின்பு அவரைப் பற்றி அறிந்துக்கொண்டதில் அவர் தந்நலம் இன்றி பிறர்நலத்திற்காக தன் வாழ்வை முழுவதுமாய் அளித்தவர் என்று உணர்ந்தேன். 

அவ்வளவு தான் அவரைப் பற்றி எனக்கு தெரியும். ஆனால் அதற்கு மேல் அவரைப் பற்றி ஒன்றும் தெரியாது என்பதை ஒப்புக்கொள்கிறேன். ஆனால் இந்தியா போன்ற வளர்ந்துவரும் ஒரு நாட்டில் ஒரு மாபெரும் நிறுவனத்தை பிரதிபலன் பாராமல் 60 ஆண்டுகளுக்கும் மேலாக (குறிப்பாக இந்தியாவின் சுதந்திரத்திற்குப் பிறகு) சேவையாற்றி அதனை பல ஆண்டு காலம் இயக்குவதும் ஏழைகளுக்கும் புற்றுநோய்க்கான சிகிழ்ச்சை வசதிகளை அளிப்பது என்றால் அது ஒரு இமாலாய செயல் என்று என்னால் உணர முடிகிறது. 

மேலாண்மையை கற்ற ஒரு மாணவனாக எனக்கு ஒரு மருத்துவ நிறுவனத்தை நடத்தும் சிக்கல்கள் என்ன, பொருளாதார தேவைகள் என்ன, அதற்கு தேவைப்படும் நிர்வாக திறன் என்ன என்று ஓரளவு உணர முடியும். ஆனால் அவற்றையெல்லாம் தாண்டி அதனை பல ஆண்டு காலமாக செயலாற்ற வேண்டும் என்றால் அதற்கு பிறர் மீது அன்பு, ஒப்புரவு, கண்ணோட்டம் எவ்வளவு அவசியம் என்பதை மறுக்க முடியாது. தன் செயலை வாழ்வின் பொருளாக மாற்றிக்கொண்டார். பிறருக்கு பயனுள்ள வாழ்வே வாழ்வு. அதனால் தான் அவர் சான்றோர். பெரியோர். 

டாக்டர் ஷாந்தா, மெட்ரோ மேன் ஈ.ஸ்ரீதரன்(Metro Man E.Sridharan) போன்றோர் பெருஞ்செயல்களை செய்தவர்கள். இவர்களை பற்றிய நல்ல ஒரு வாழ்க்கை குறிப்பு புத்தக வடிவில் இல்லை என்பது எவ்வளவு பெரிய இழப்பு நம் சமூகத்திற்கு. அவர்களைப் பற்றிய நல்ல புத்தகங்கள் விரைவில் வெளிவரவேண்டும்.

யோகிகள், எழுத்தாளர்கள் என்று சிலர் ஞானமே பாதையேன கொண்டவர்கள். அது ஞானமார்க்கம். கிருஷ்ணம்மாள் ஜெகந்நாதன் போன்ற சிலர் செயல் வழி ஞானம் அடைந்தவர்கள். டாக்டர் ஷாந்தா போன்றோர் தான் பெற்ற அறிவை சேவையில் பயன்படுத்தி வாழ்வின் நிறைவை பெற்றவர்கள். ஆனால் வாழ்வில் ஒருபோதும் சென்றடையவில்லை எனும் நிறைவின்மை கொண்டு வாழ்ந்தவர்கள். 

வாழ்வில் பலர் நல்ல சூழ்நிலைகளாலும் நல்ல முன் உதாரணங்களாலும் சூழப்பட்டு இருக்கிறார்கள். ஆனால் எத்தனைப் பேர் அவற்றைப் பயன்படுத்தி பிறருக்கு பயனுள்ளதாய் வாழ்ந்துள்ளார்கள் என்று கணக்கிட்டால் நமக்கு மிக குறைவான மக்களே எஞ்சுவார்கள். இவ்வுலகில் சொகுசும் வசதியும் மூச்சு காற்றுப்போல் வேண்டும் என்று நினைக்கும் மக்களே அதிகம். குறிப்பாக வசதிப்படைத்தவர்களும் அறிவை (ஞானத்துடன் குழுப்பிக்கொண்டு) ஆணவமாய் தலையில் சூடிக்கொண்டு அலையும் மக்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்துக்கொண்டு இருக்கிறது. மனதில் தராசை வைத்துக்கொண்டு மற்றவர்களை எடைப்போடும் மக்களே மிகுதி. அவர்கள் பிறருக்கு என்ன செய்தார்கள் என்று அவர்கள் திரும்பிபார்த்தால் அவர்களே வெட்கி தலைகுனிவார்கள் அல்லது சால்ஜாப்பு சொல்வார்கள். உண்டு உறங்கி புணர்ந்து பின் மாயும் இந்த எளியோர்கள் சிறுமை வாய்ந்தவர்கள். இவர்கள் தங்களின் சூழலால் பயனுற்ற கல்வியைக்கொண்டு ஊதியத்திற்காக சில அன்றாட வேலைகளை செய்து தன்னை ஒரு படி மேல் என்று தவறாக நினைத்துக்கொள்ளும் சிறியோர்கள்.

மேற்சொன்ன பத்தியில் கூறப்பட்டுள்ள எண்ணற்ற சிறியோர்கள் மத்தியில் வாழ்ந்த ஒரு பெரியோர் என்றால் அது டாக்டர் ஷாந்தா போன்றவர் தான். செய்வதற்கு அரிய செயல்களை செய்தவர். அதனால் தான் அவர் பெரியோர். தன்னுயிர் தான் அற வாழ்ந்தவர். எழை எளியோர்க்கென வாழ்ந்தவர். அதனால் தான் இவரை இவ்வுலகத்தில் உள்ள எல்லா உயிர்களும் கைத்தொழுகின்றன.

டாக்டர் ஷாந்தா போன்று நான் வாழ்வில் ஒரு சில வருடங்கள் சேவையாற்றினால் கூட நான் பயனுள்ள ஒரு வாழ்வை வந்ததாய் உணர்வேன்.

டாக்டர் ஷாந்தவை நினைத்தால் எனக்கு நான்கு திருக்குறள்கள் நினைவுக்கு வருகின்றன. அவை

1) குறள் 268 (பொருளுக்கு சுட்டியைத் தட்டவும்)
தன்னுயிர் தான்அறப் பெற்றானை ஏனைய
மன்னுயி ரெல்லாந் தொழும்

2) குறள் 26 (பொருளுக்கு சுட்டியைத் தட்டவும்)

3) குறள் 505 (பொருளுக்கு சுட்டியைத் தட்டவும்)

4) குறள் 983  (பொருளுக்கு சுட்டியைத் தட்டவும்)

1965-ல் எம்.ஜி.ஆர். நடிப்பில் வெளிவந்த ‘பணம் படைத்தவன்’ திரைப்படத்தில் கவிஞர் வாலி எழுதிய “கண் போன போக்கிலே கால் போகலாமா” பாடலில் இறுதியாக வரும் வரிகள் இவை 
”இருந்தாலும் மறைந்தாலும் பேர் சொல்ல வேண்டும்
இவர் போல யார் என்று ஊர் சொல்ல வேண்டும்…”

டாக்டர் ஷாந்தா பேர் நீடூடி வாழும்.

டாக்டர் ஷாந்தாவின் புகழ் வளரட்டும்.

டாக்டர் ஷாந்தாவுக்கு அஞ்சலி
Date 19 Jan 2021












October 03, 2020

எஸ்.பி.பாலசுப்ரமணியம் [1946-2020]



எஸ்.பி.பாலசுப்ரமணியம் என்கிற எஸ்.பி.பி (SPB) என்னும் மூன்றெழுத்து மந்திரச்சொல்லை பற்றி அறிமுகம் செய்ய நான் ஒன்றும் அதிகப்ரசங்கியல்ல.  

அவரை பற்றி நான் கொண்ட சில நினைவுகளையும் நான் கற்ற சில துளிகளைமட்டும் இங்கு பதிவிட விரும்புகிறேன்

நான் தத்தி தவழும் பருவத்தில் அதாவது எனக்கு இரண்டு வயது இருக்கும் பொழுது நான் அதிகம் பாடிய? (உளறிய) பாடல் ”அம்மன் கோவில் கிழக்காலே” திரைப்படத்தில் வந்த எஸ்.பி.பி அவர்கள் பாடிய ”சின்ன மணிக் குயிலே” என்ற பாடலை. இதை நான் ”கம்மணி கம்மணி” என பாடுவேன் என்று எனது பாட்டியார் கூறிய நினைவுகள் உண்டு. அதன் பின்பு நினைவு தெரிந்த நாள் முதல் எஸ்.பி.பி பாடல்கள் அன்றாடம் காதில் விழுந்துக்கொண்டே இருக்கும். 

நான் பள்ளியில் படிக்கும் பொழுது என் உள்ளுர நான் பாடிய பாடல் எனில் அது ”தர்மத்தின் தலைவன்” திரைப்படத்தில் எஸ்.பி.பி, பி.சுசீலா மற்றும் மலேசியா வாசுதேவன் அவர்கள் இணைந்துப் பாடிய “தென்மதுரை வைகை நதிப் பாடலை” தான். பல நாட்களுக்கு அதன் வரிகள் தெரியாது. அந்த மெட்டைமட்டும் பாடிக்கொண்டு இருப்பேன்.  கல்லூரி நாட்களில் ”புன்னகை மன்னன்” திரைப்படத்தில் வந்த ”என்ன சத்தம் இந்த நேரம்” போன்று பல பாடல்களை கேட்டே வளர்ந்தேன். குறிப்பாக ”இளையநிலா பொழிகிறது”, “பனி விழும் மலர்வனம்” ஆகிய பாடல்களை எனது கல்லூரி சீனியர்களுக்கு கொடுக்கப்பட்ட (மூத்தவர்கள்) பிரிவு உபச்சார நிகழ்ச்சியில் நண்பர்கள் (பத்மா, ஜூட், பரச்சன்ன தேவி மற்றும் சிலர்) உடன் பாடிய அனுபவமும் உண்டு. (அந்த கொடுமையெல்லம் நடந்ததா என்று தானே கேட்கிறீர்கள்) பசுமையான நினைவுகள். எனது கல்யாண நலங்கு வைபத்தில் நான் இரண்டு பாடல்களைப் பாடினேன் ஒன்று ”வாழ்வே மாயம்” படத்தில் வந்த ”நீல வான ஓடையில்” பாடல் மற்றொன்று “தளபதி” படத்தில் வந்த “சுந்தரி கண்ணால் ஒரு சேதி” பாடல். ரஜினியும் வந்தார்கள் கமலும் வந்தார்கள் எஸ்.பி.பி வழியாக. 

இப்படி எஸ்.பி.பியின் பாடல்களை நாள்தோறும் கேட்டு முனுமுனுத்து வளர்ந்தவன் நான். 

அவரைப்போல் இந்திய இசைக்கும் இந்திய திரைப்பட இசைக்கும் பிரதிநிதி யாரும் இல்லை. 40000+ பாடல்களை பாடிய ஒரே பாடகர். அந்த சாதனையை இனியாராலும் முறியடிக்க முடியாது என்றே கூறுவேன். சச்சின் டெண்டுல்கரின் ரன் சாதனைகளில் சிலவற்றை விராட் கோலி கடந்து புதிய சாதனைகளை படைப்பார். ஆனால் எஸ்.பி.பியின் சாதனைகளை கடப்பது கற்பனையில் கூட நிகழாது எனலாம். 




அவரை போல் ஒரு உன்னதமான பணிவான ஆத்மார்த்தமான மனிதரை நான் கண்டதில்லை கேட்டதுஇல்லை. அவர் மேடையில் பாடுவதை தொலைக்காட்சிகளில் பார்த்தால் நமக்கு அப்படி ஒரு உத்வேகமும் நேர்மறை சக்தியும் கிடைக்கும். அவருடைய குழந்தைப்போன்ற குதுகலமும், நகைச்சுவையும், மகிழ்ச்சியும், கலகலப்பும், கள்ளம் கபடம் அற்ற சிரிப்பும், வாழ்கையின் மீது இருந்த நேசமும், அன்பும், பண்பும், பணிவும், மேன்மையும் வியக்கதக்கவை கற்றுக்கொள்ளவேண்டியவை. அவர் பாடகராக இருந்தும் அவர் உணவு மீதுக்கொண்ட அலாதிப்பிரியம் பற்றி கேட்பதுக்கூட சுவாரசியமான ஒன்று. அவர் கிரிக்கெட் பற்றி பேசுவதை சில சந்தர்பங்களில் தொலைக்காட்சிகளில் கேட்டு இருக்கிறேன். ஒரு பள்ளிக்கூட சிறுவனின் ஆர்வத்துடன் கிரிக்கேட் பற்றி பேசுவார். பெரியவராயினும் சிறியவராயினும் எல்லோருக்கும் மரியாதை கொடுத்தே பேசிவந்தார். அவருக்கு கோபம் வந்து பார்த்தது இல்லை பொதுவெளியில் கோபப்பட்டதாக கேள்விபட்டதுமில்லை.

அவரைப்போல் நேர்மையான மனிதரை காண்பதும் அரிது. குடும்ப வாரிசு ஊக்குவிப்பு அன்றாடமான திரைத்துறையில் தனது குடும்பத்தாருக்காக என்றும் சிபாரிசு செய்யாதவர். தனது நண்பர்களான இசையமைப்பாளர்களான இளையராஜா மற்றும் அதன்பின் வந்த இளைய தலைமுறை இசையமைப்பாளர்களான ஏ.ஆர்.ரஹ்மானிடம் தனது தங்கை எஸ்.பி.சைலஜா அல்லது தனது மகன் எஸ்.பி.பி.சரண் ஆகியோருக்கு என்றும் வாய்ப்புகள் கேட்டதில்லை. தனது நட்புறவுகளை என்றும் எளிதாய் எடுத்துக்கொள்ளாமல் நேர்மையாக இருந்தவர். 

எஸ்.பி.பி மிக மிக நேர்மறை எண்ணங்களை சக்தியை மற்றவர்களுக்குக் கொடுத்துக்கொண்டு இருந்த உன்னத மனிதர். அவர் வாயில் இருந்து ஒரு தவறான சொல்லோ செய்தியோ நான் கேட்டது இல்லை. அவர் வாயில் இருந்து மற்றவர்களைப்பற்றிய குறையோ அவமதிப்போ கேட்டது இல்லை. எல்லோரையும் ஊக்கப்படுத்திக்கொண்டே இருந்தவர் எஸ்.பி.பி அவர்கள். அவர் பல இசை போட்டிகளில் நடுவர்களில் ஒருவராக இருக்கும் பொழுதும் கூட எந்த ஒரு போட்டியாளர் மனதும் புண்படாமல் தான் தனது கருத்துக்களை கூறுவார். குறைகளாக கூறாமல் முன்னேற்றத்திற்கான படிகளாக கூறுவார். இதுவே சிறுவர்களாக இருந்தால் உங்கள் வயதில் நான் இந்த அளவுக்கூட பாடியதில்லை என்று கூறி தனது பாராட்டை வெளிப்படுத்துவார். ஒரு போட்டியாளர் நன்றாக பாடினாலோ அல்லது தான் மேடையில் அதிகம் பாடாத பாடலை தேர்ந்தெடுத்து நன்றாக பாடினாலோ மனதார பாரட்டும் குணம் கொண்டவர். அக்குணம் யார்க்கு வரும்?  அதுவும் 40000+ பாடல்கள் பாடியவருக்கு வருகிறது என்றால் அது அனைவரும் கற்றுக்கொள்ள வேண்டியதே. 

எல்லோரையும் பாராட்டும் குணம் படைத்தவர் ஆயினும் யாரைப்பார்த்தும் பொறாமை படாதவர். ஒருவேளை பொறாமையோ கர்வமோ இருந்தாலும் அது  கற்கும் ரசிக்கும் மனநிலையில் இருக்கும் ஆரோக்கியமான ஒன்று தான். பொறாமை இல்லாமல் இருந்ததால் தான் அவரால் மனதால் ஆரோக்கியமாக இருந்தது. அதனால் தான் அவரது சங்கீதமும் குரலும் பாடலும் தூய்மையாக ஆத்மார்த்தமாக இருந்தது.

எஸ்.பி.பி பற்றி மற்றொன்று சொல்லவேண்டும் என்றால் அவர் பூசல்களையும் வம்புகளையும் சர்ச்சைகளையும் அறவே விரும்பாதவர். சில ஆண்டுகள் முன்பு வந்த சர்ச்சையும் மிக மிக தேர்ந்த ஒரு வல்லுநர்ப்போல் கையாண்டார். குறிப்பாக யார் மனதையும் புண்படுத்தாமல். அவர் அவ்விடத்தில் தடித்த வார்த்தைகளை பேசியிருந்தாலும் அவரை யாரும் குறைக்கூறி இருக்கமாட்டார்கள் ஏனெனில் அவரிடத்தில் நியாயம் இருந்தது. ஆயினும் அவர் சர்ச்சையை பெரிதாக்கவில்லை. பெரிதாக்க விரும்பவுமில்லை.

எஸ்.பி.பி யிடம் எல்லோரும் கற்றுக்கொள்ள வேண்டியது ஒன்று உண்டு. அவர் என்றும் இறைவனுக்கு நன்றித் தெரிவித்துக்கொண்டே இருந்தார். தனக்கு கொடுக்கபட்ட வாய்ப்புகளுக்கு அவர் நன்றி தெரிவித்துக்கொண்டே இருந்தார். உலகில் எதிர்மரை செய்திகள் பல இருந்தும் அவரை சுற்றி இருந்த நன்மைகளுக்கு நன்றி தெரிவித்துக்கொண்டே இருந்தார். மனிதர்களுக்கு அக்குணம் கண்டிப்பாக வேண்டும். தன்னிடம் இல்லாததை நினைத்தை வாழ்க்கையையும் நேரத்தையும் அழித்துக்கொள்வோர் அதிகம் இவ்வுலகில். 

அதுமட்டும் இன்றி எஸ்.பி.பி பற்றி அவர் மறைந்தப்பிறகு நான் வாசித்த செய்தி ஒன்று என்னை சற்று சிந்திக்க வைத்தது. 7-10-2020 ஆனந்த விகடனில் இருந்து “பாடகராகத் தன்னிறைவான வாழ்க்கை வாழ்ந்திருக்கிறேன். சில வருடங்களுக்கு முன் கடனிலிருந்து முழுவதும் மீண்டுவந்தேன். தினமும் 5 பாட்டு பாடிவிட்டு வீட்டுக்கு வந்தால் வீட்டு வாசலில் சேட்டு நிற்பான். ஆனா, நாளைக்கு வா என்று சொல்லும் நிலையை இறைவன் எனக்குக் கொடுக்கலை. அந்த அளவுக்கு என் குரலைக் கேட்டு வளர்த்துவிட்ட ரசிகர்களுக்குக் கைம்மாறு செய்ய இன்னொரு ஜென்மம் எனக்கு வேண்டும்!” என்பதே பாலுவின் மறு ஜென்ம ஆசை!”. அதாவது அவர் கொஞ்ச காலம் முன்பு நிதி நெருக்கடி அதாவது கடன் சுமைகளில் இருந்தார் (அவரது மகன் கீழ் நடந்து வந்த திரைப்பட தயாரிப்பு நிறுவனத்தில் சில திரைப்படங்கள் (நல்ல படங்கள் ஆயினும்) தொடர்ந்து தோல்வி அடைந்தததால் கடனில் தள்ளப்பட்டார்) என்றும் ஆனால் அவற்றை அடைத்துவிட்டார் என்றும். அத்தகைய நெருக்கடியான காலத்திலும் சேட்டுக்கள்(கடன்காரர்கள்) தினமும் வீட்டிக்கு வந்தால் அவர்களுக்கு காசுக்கொடுக்கும் நிலையில் ஆண்டவன் தன்னை தினமும் பாடவைத்துக்கொண்டு இருந்தான் என்று கூறுவாராம் எஸ்.பி.பி. அந்த நெருக்கடியிலும் கடவுளுக்கு நன்றி தெரிவித்துக்கொண்டு இருந்தார். அவர் 40000பாடல்களை பாடியப்பின்பும் பல நாடுகளுக்கு பலமுறை கச்சேரி நடத்தி வருமானம் ஈன்றும் அவருக்கு பொருளாதார நெருக்கடி என்றால் சில விஷயங்களை நாம் கற்றுக்கொள்ளலாம். நாம் என்றும் கடனில் தள்ளப்படும் சூழ்நிலைகளில் சிக்கிவிடக்கூடாது. மிக மிக எச்சரிக்கையாக இருக்க வேண்டும். ஒருவர் எவ்வளவு ஈன்றாலும் அல்லது கடனில் இருந்தாலும் அவற்றுக்கெல்லாம் ஒரு பொருளும் இல்லை. ஒருவரின் புகழ் அவர் செய்த செயலில் இருக்கிறது. எஸ்.பி.பிக்கு அவர் பாடிய பாடல்களில் இருந்தது. காலம் உள்ளவரை அப்பெருமை அவருக்கு இருக்கும். ஆதலால் பணக்காரர்கள் தங்கள் வசதியை நினைத்து கர்வப்படவேண்டாம். அவர் நிதியில் சற்று சராசரிக்கு மேலாக இருப்பினும் அவர் பெரிய பணக்காரர்களை விட பல பல நிலைகள் மேலே உள்ளார். ஏனெனில் பெருமைக்கும் ஏனை சிறுமைக்கும் தத்தம் கருமமே கட்டளைக்கல். எஸ்.பி.பி என்றும் பெருமைக்கு உரியவர்.

பத்து ஆண்டுகள் முன்பு விஜய் தொலைக்காட்சியில் வந்த காபி வித் அனு நிகழ்ச்சியில் எஸ்.பி.பி அவர்களும் அவரது நண்பர் கங்கை அமரன் அவர்களும் நண்பர்களாகவே பங்கேற்றனர். அவ்வளவு உற்சாகமான நிகழ்ச்சி. எஸ்.பி.பியை முழுக்க முழுக்க ஒரு குழந்தையாக பார்க்க வேண்டும் என்றால் அந்நிகழ்ச்சியை பாருங்கள். அதுப்போல் எஸ்.பி.பிக்கும் இளையராஜவுக்கும் உள்ள நட்பை பார்க்க வேண்டும் என்றால் 20-25 ஆண்டுகள் முன்பு தூர்தர்ஷன் / டி.டி.பொதிகையில் வந்த நேர்காணலை பார்க்கலாம். ஒரு சில ஆண்டுகள் முன்பு Zee தொலைக்காட்சியில் எஸ்.பி.பி ஒன்று கூறியிருப்பார். இந்த நூற்றாண்டில் (அதாவது அவர் வாழும் காலத்தில்) இந்திய இசையில் குறிப்பாக திரை இசையில் இளையராஜா எஸ்.பி.பி கூட்டணி தான் மிகச்சிறந்த கூட்டணி என்று. அதுப்போல் வேறு ஒன்றில்லை என்று. அது அவ்வளவு உண்மை. அதேப்போல் வேறு ஒரு கட்டுரையில் (07-10-2020 ஆனந்த விகடன் கட்டுரையில்) எஸ்.பி.பி கூறியதாக ஒன்றைப் படித்தேன்- எனக்காக(எஸ்.பி.பிக்காக) இறைவன் இளையராஜாவை படைத்தான். இளையராஜாவுக்காக இறைவன் என்னை (எஸ்.பி.பிபை) படைத்தான். அதுவும் உண்மை [“டேய் எனக்கு உன் அளவுக்கு பஞ்சமம் சட்ஜமம்... ராகம்லாம் தெரியாதுடா... அப்படியே ஹை பிட்ச்ல போறேன். பிசிர் தட்டுற இடத்துல சிக்னல் கொடு!”- இப்படித்தான் நோட்ஸ் கொடுக்கும் இளையராஜாவிடம் சொல்லுவார் பாலு. பெரும்பாலும் சொதப்பாமல் பாடி, “டேய் படவா, எங்கே கத்துக்கிட்டே இந்த வித்தைய?” என ராஜாவிடமே பாராட்டு வாங்கிடுவார் பாலு! “எனக்காகத்தான் ராஜா பிறந்தான்... அவனுக்காக நான் பிறந்தேன்!” - இதயத்தின் அடி ஆழத்திலிருந்து இந்த வார்த்தைகளை பாலு சொன்னபோது இந்தக்கூட்டணியின் ஆயிரக்கணக்கான பாடல்களின் முதல்புள்ளி நம் முன் மின்னலாய் வெட்டிச் செல்லும்]. 

40000 பாடல்களை பாடியுள்ளார். அவற்றில் ஒரு 5 சதவிகிதத்தை கூட நான் கேட்டு இருப்பேனா என்று தெரியவில்லை. ஆயினும் எனக்குப் பிடித்த சில எஸ்.பி.பி பாடல்கள் இங்கே பட்டியலிடுகிறேன். 

சின்ன மணிக் குயிலே
தென்மதுரை வைகைநதி
காதலின் தீபம் ஒன்று
சுந்தரி கண்ணால் ஒரு சேதி
மௌனமான நேரம்
கேளடி கண்மணி
கல்யாண மாலை கொண்டாடும் பெண்ணே
மாங்குயிலே பூங்குயிலே
வானில் எங்கும் தங்க விண்மீன்கள்
நிலாவே வா
வா வெண்ணிலா
நிலவு தூங்கும் நேரம்
மாடத்திலே கன்னி மாடத்திலே
கொஞ்சி கொஞ்சி
என்ன சத்தம் இந்த நேரம்
கால காலமாக வாழும் காதலுக்கு 
சிங்களுத்து சின்ன குயிலே
சாமிக்கிட்ட சொல்லி வெச்சு
அடுக்கு மல்லித் தொடுத்து வெச்ச
வலையோசை கல கல
இளையநிலா பொழிகிறது
பனிவிழும் மலர்வனம்
ரோஜாவை தாலாட்டும் தென்றல்
நலம் வாழ எந்நாளும்
அடியே மனம் நில்லுனா நிக்காதடி
ஓ வசந்த ராஜா தேன் சுமந்த ரோஜா
மாலை சூடும் வேலை
அட மச்சம் உள்ள மச்சான புதுவித ரகம்
புஞ்சை உண்டு நஞ்சை உண்டு
உண்ணால் முடியும் தம்பி தம்பி
என்ன சமையலோ
முத்துமணி மாலை
இது ஒரு பொன்மாலை பொழுது
மன்றம் வந்த தென்றலுக்கு
மண்ணில் இந்த காதல் அன்றி
பொத்திவெச்ச மல்லிக மொட்டு
மனசு மயங்க மௌன கீதம்
துள்ளி துள்ளி நீ பாடம்மா
என்னவென்று சொல்லுவதமா
செம்பூவே பூவே பூவே
ஆணென்ன பெண்ணென்ன
வாழ வைக்கும் காதலுக்கு ஜே
ஒன்ன நினனெச்சேன் பாட்டுப்படிச்சேன்
ஸ்ரீ ரங்க ரங்க நாதனின் பாதம்
வனிதா மணி
என் ஜோடி மஞ்சகுருவி
ராக்கமா கைய தட்டு
காட்டுக்குள்ளே மனசுக்குள்ளே
ராகங்கள் பதினாறு
சந்தா காற்றே
பேச கூடாது
என்னைத்தொட்டு உன்னை தொட்டு
பச்சைமல பூவு
வெள்ளி நிலவே வெள்ளி நிலவே
வானிலே தேனிலா
மலையோரும் வீசும் காற்று
வா வா பக்கம் வா
சிட்டுக்குருவி வெக்கபடுது
நாத விநோதங்கள் நடன சந்தோஷங்கள்
இளமை இதோ இதோ
அந்திமழை பொழிகிறது
அதிகாலை நேரமே புதிதான காலமே
இன்னும் என்னை என்ன செய்யப்போகிறாய் அன்பே
இதழில் கதை எழுதும் நேரமிது
கண்மணியே கண்மணியே சொல்லுறத கேளு
கூ கூ என்று குயில் கூவாதோ
கண்மணியே பேசு மௌனம் என்ன கூறு
ஓ மானே மானே
சாந்துப்பொட்டு ஒரு சந்தனப்பொட்டு
ராமன் கதைக்கேளுங்கள்
ரம் பம் பம் ஆரம்பம்
சந்தைக்கு வந்த கிளி
சிறியப் பறவை
தோட்டத்தில பாத்திக்கட்டி
வா வா வா கண்ணா வா
உச்சி வகுடு எடுத்து பிச்சி வெச்சக்கிளி
தலையை குனியும் தாமரையே
தேன் பூவே பூவேவா
ஒரே நாள் உனை நான்
என் கண்மணி என் காதலி
இளமை என்னும் பூங்காற்று
கண்மணியே காதல் என்பது
மடை திறந்து
சத்தாம் போடதே முத்தம் போதாது
பூங்காற்று உன் பேர் சொல்ல
காதல் கவிதைகள் படித்திடும் நேரம்
எங்கிருந்தோ இளங்குருவி
ராஜாதி ராஜா உன் தந்திரங்கள்
ஆலப்போல் வேலப்போல்
அடி ராக்க முத்து ராக்கு
ஒரு நாளும் உனை மறவாத
சித்தகத்தி பூக்களே
சங்கீத ஜாதி முல்லை
வெள்ளிச் சலங்கைகள்
சங்கீத மேகம் தேன் சிந்தும் நேரம்
நெஞ்சுக்குள்ள இன்னாருனு சொன்னா புரியுமா
பட்டுக்கன்னம் தொட்டுக்கொள்ள ஒட்டிக்கொள்ளும்
பாடு நிலாவே தேன் கவிதை
பெண் மானே சங்கீதம் பாடிவா
சொர்க்கம் மதுவிலே

ஆயிரம் நிலவே வா
இயற்கை என்னும் இதய கண்ணி
வான் நிலா நிலா அல்ல
வண்ணம் கொண்ட வெண்ணிலவே
இதோ இதோ என் பல்லவி
எங்கேயும் எப்போதும்
சிப்பி இருக்குது முத்துமிருக்குது
நீல வான ஓடையில்
சங்கீத ஸவரங்கள்
சாதி மல்லி பூச்சரமே
சேலைக்கட்டும் பெண்ணுக்கொரு வாசம் உண்டு
சோகம் இனி இல்லை வானமே இல்லை
ஒரு காதல் தேவதை பூமியில் வந்தாள்
உனக்கென்ன மேலே நின்றாய் ஓ நந்தலாலா
நந்தா நீ என் நிலா
கண்ணம்ம்மா கனவில்லையா
மலரே மௌனமா
சத்தம் இல்லாத தனிமை கேட்டேன்
அண்ணாமலை அண்ணாமலை
வந்தேண்டா பால்காரன்
வெற்றி நிச்சயம்
இக்கட ரா ரா ராமையா
ஆட்டோகாரன்
அழகு அழகு நீ நடந்தால் நடை அழகு
நலம் நலமறிய ஆவால்
முன் பனியா
வாலிபா வா வா
ஐயையோ நெஞ்சு அலையுதடி
உன்னை பார்த்த பின்பு நான்
என் கண்ணுக்கொரு நிலவா
கொண்ட சேவல் கூவும் நேரம்
கண்ணுக்குள் நூறு நிலவா
லைலா லைலா நீ தானே அந்த லைலா
சசசசனி தாசனி பாணித மாதபாமக நிவேதா பப்பதனி சரி
யாரோ யாருக்குள் இங்கு யாரோ
நான் போகிறேன் மேலே மேலே
கம்பன் எங்கு போனான்
என்ன அழகு எத்தனை அழகு
கவிதைகள் சொல்லவா உன்பெயர் அள்ளவா
பெண் ஒருத்தி பெண் ஒருத்தி பிறந்துவிட்டால்
நெஞ்சு துடிக்குது ஜெமினி ஜெமினி
சந்தோசம் சந்தோசம் வாழ்க்கையில் பாதி பலம்
ஒரு கடிதம் எழுதினேன்

தொட தொட மலர்ந்ததென்ன
ஓடகார மாரித்து
மின்னலே நீ வந்ததேனடி
காதல் ரோஜாவே
அஞ்சலி அஞ்சலி
வெள்ளி மலரே
என் காதலே என் காதலே
ஒருவன் ஒருவன் முதலாளி
கொக்கு சைவ கொக்கு
சுத்தி சுத்தி வந்தீக
காதலென்னும் தேர்வெழுதி காத்திருந்த
என் வீட்டு தோட்டத்தில்
தீண்டாய் மெய் தீண்டாய்
மெதுவாகத்தான்
காதலிக்கும் பெண்ணின் கையில்
எர்ரானி கொரதானி கோப்பாலா
எனை காணவில்லையே நேற்றோடு
மானூத்து மந்தையிலே
சொல்லாயோ சோலைகிளி
தங்க தாமரை மகளே
ஸ்வாசமே ஸ்வாசமே
ஜூலை மாதம் வந்தால்
தழுவுது நழுவுது
அழகான ராட்சசியே
சக்கரை இனிக்கிற சக்கரை
பெண்ணல்ல பெண்ணல்ல ஊதாப்பூ

(என்னடா ராஜேஷ், எஸ்.பி.பியோட hit-songs எல்லாத்தையும் எழுதிட்டனு கேக்றீங்களா? உண்மை. ஆனால் இதில் உள்ள 90 சதவிகித பாடல்கள் எனது தேர்ந்தெடுக்கப்பட்ட (curated songs list) பாடல்கள் கிடங்கில் பல ஆண்டுகளாக உள்ளது (பலரிடமும் இருக்கும்)). மேற்சொன்னவை இல்லாமல் இன்னும் சில பாடல்களை விட்டுவிட்டேன். தெலுங்கு, ஹிந்தி பாடல்களைக்கூட விட்டுவிட்டேன். 

சில மற்ற மொழிப்பாடல்கள் 
1. தெலுசா மனசா 
2. தேரே மேரே பீச்சு மே 
3. திதி தேரா தீவர் தீவானா 

ஒரு வாழ்வு போதாது அவர் பாடிய எல்லா பாடல்களையும் கேட்க. ஆனால் ஒரு வாழ்வு முழுவதும் அவர் பாடல்களை கேட்டுக்கொண்டே இருக்கலாம்.

அவர் இறந்து ஒரு வாரமாக அவர் நினைப்பு தினம் தினம் மனதில் ஓடுகிறது. அவர் தொலைக்காட்சிகளில் கலந்துக்கொண்ட நிகழ்ச்சிகள் நேர்காணல்கள் நினைவில் நீங்காமல் உள்ளது.

நான் கர்நாடக சங்கீதமும் ஹிந்துஸ்தானி சங்கீதம் கேட்டப்பிறகு ஒரு சிலரின் கச்சேரிகளை நேரில் கேட்டு இருக்கவேண்டும் என்று நினைத்தது உண்டு. எம்.எஸ்.சுப்புலக்‌ஷ்மி அவர்கள், மகாராஜபுரம் சந்தானம் அவர்கள், வயலின் எம்.எஸ்.கோபாலகிருஷ்ணன் அவர்கள், கிஷோரி அமோன்கர் அவர்கள், லால்குடி ஜெயராமன் அவர்கள், நாதஸ்வரம் ராஜரத்தினம் பிள்ளை அவர்கள் ஆகியோரின் கச்சேரிகளை நேரில் கேட்டிருக்க வேண்டும். ஆனால் அவர்கள் ஒன்று எப்பொழுதோ இறந்துவிட்டார்கள் இல்லையே அவர்கள் கச்சேரிகளை காண வாய்ப்பு அமையவில்லை என்று கூறலாம். ஆனால் எஸ்.பி.பி கச்சேரி காண வாய்ப்புகள் பல இருந்தும் அதற்கு நான் முயற்சிக்கவில்லை. அவர் இருப்பதனால் பின்பு கேட்டுக்கொள்ளலாம் என்று இருந்துவிட்டேன். அது எவ்வளவுப் பெரிய இழப்பு என்பதை இப்பொழுது உணர்கிறேன்.

அவர் இறந்த செய்தியை நான் கேட்க விரும்பவில்லை. அவர் தேக உடல் இன்று இல்லை என்பதை நம்ப முடியவில்லை. ஆனால் பொய்யுடம்பு ஒரு நாள் போகத்தானே வேண்டும். போய்விட்டது. ஆனால் அவர் குரல் இன்றும் உள்ளது தொழில்நுட்பம் நமக்கு கொடுத்த பரிசு. கடவுள் அவரை கொஞ்சம் சீக்கிரமாவே எடுத்துக்கொண்டுவிட்டார். அவருக்கு என்ன அவசரமோ. ஓம் சாந்தி!


எஸ்.பி.பியின் ஆல்பத்தில் இருந்து சில


































பின் குறிப்பு:
எஸ்.பி.பி அவர்கள் தனது 50 ஆண்டுகால பாட்டு பயணத்தில் 40000+ பாடல்களைப் பாடி புகழுக்கும் உலக சாதனைக்கும் சொந்தகாரர். அவருக்கு பாரத் ரத்னா விருது வழங்க வேண்டும். அது அவருக்கு கொடுக்கப்படும் விருது அல்ல. பாரத் ரத்னா விருது தனது க்ரீடத்தில் பதித்துக்கொள்ள வேண்டிய ரத்னம் எஸ்.பி.பி அவர்கள். எஸ்.பி.பிக்கு அதனால் அங்கீகாரம் இல்லை. பாரத் ரத்னா விருதுக்கு தான் அது அங்கீகாரம் மரியாதை. கொடுக்கபடவில்லை என்றால் அது அவ்விருதுக்கு தான் இழுக்கு. அவ்விருது அதன் பொருளை இழந்துவிடும். அரசு ஆவண செய்யவேண்டும்.

September 04, 2020

1000 மணிநேர வாசிப்பு சவால் - வாசிப்பெனும் தவம்

கடந்த 2019 ஆண்டு ஏப்ரல் மாதம் 14ஆம் தேதி எழுத்தாளர் ஜெயமோகன் வலைத்தளத்தில் ஒரு 1000 மணிநேர வாசிப்பு சவால் அரைக்கூவப்பட்டது. ஆயுர்வேத டாக்டர் சுனில் கிருஷ்ணன் முன்னெடுத்தார் என்று நினைக்கிறேன். அவர் தொடர் வாசிப்பை வளர்க்க, வாசிப்பை தொடர் பழக்கமாக ஆக்கிக்கொள்ள இந்த மராத்தான் பயணத்தை துவங்கினார். 

இந்த சவால் எனக்கு பயனுள்ளதாக  அமையும் தோன்றியது. ஏனெனில்

1) சில ஆண்டுகளாக நிறைய புத்தகங்கள் (ஒரு ஆண்டுக்கு 30-40 புத்தகம்) வாசிக்க வேண்டும் என்று goodReads.com தளத்தில் சபதம் ஏற்பேன். ஆனால் 25 புத்தகங்கள் படித்து முடிப்பதற்குள்ளாகவே நாக்கு தள்ளிவிடும். சில சமயம்  டிசெம்பர் மாதங்களில் 100-150 பக்கங்கள் மட்டுமே கொண்ட குட்டி குட்டி புத்தகங்கள் படிப்பேன். 

2) வாசிப்பு பழக்கதை ஒரு அன்றாட பழக்கமாக மாற்றிக்கொள்ள வேண்டும் 

3) கவனம் சிதராமல் நெடுந்நேரம் படிக்க வேண்டும்

4) பேரிலக்கிய படைப்புகளை படிக்க வேண்டும்

5) வீட்டில் வாங்கி வைத்து தூங்கும் 100+ புத்தகங்களை படித்து முடிக்க வேண்டும். (அதில் தேராது என்று இப்பொழுது தோன்றுவதை ஒதுக்கிவிட வேண்டும்). 

விதி 1) வாங்கு குவித்துள்ளவற்றையெல்லாம் படித்து முடிக்கும் வரையில் புது புத்தகங்கள் வாங்கக் கூடாது என்னும் வைராக்கியத்தையும் சேர்த்துக்கொண்டேன் (கடைகளில் கிடைக்க அரிதான புத்தங்களை வாங்க அனுமதி உண்டு)

விதி 2) எனது கிண்டிலிலும்(Kindle) ஆடிபலிலும் (Audible) காட்சியாய் நிற்கும் புத்தகங்களை படித்து முடிக்கும் வரையில் புதிதாய் எதையும் வாங்க கூடாது என்று சபதமிட்டுக்கொண்டேன். விலை தள்ளுபடிகளை கண்டுக்கொள்ள கூடாது என்றும் விதிக்கொண்டேன்.

மேற்சொன்ன காரணங்களுக்காக நான் 1000 மணிநேர வாசிப்பு சவாலில் பங்கேற்றேன். முதலில் இரு வாரங்கள் படித்தேன். பிறகு ஒரு தொய்வு. பின்பு மறுபடியும் தொடர்ந்தேன். முதலில் வெல்ல வேண்டும் என்ற எண்ணமெல்லாம் இல்லை. ஆனால் தொடர்ந்து பயணிக்க வேண்டும் என்று மட்டுமே தோன்றியது. ஆதலால் தினமும் வாசித்தேன். ஒரு 30 நிமிடமாவது வாசித்திவிட வேண்டும் என்பதே எனது இலக்காக இருந்தது. பிறகு தினமும் வாசித்தேன். 

2019 அக்டோபர் நவம்பர் மாதங்கள் ஒரு தொய்வு. ஆனால் விட்ட இடத்தில் துவக்குவதில் ஒரு கசப்பும் இல்லை. அப்படியே விட்டால் தான் தவறு. யாரும் என்னை ஏன் என்று கேட்டு குற்ற உணர்வு ஏற்படுத்தவில்லை. [இச்சவாலின் நோக்கமே ஒருவரை ஒருவர் உற்சாகப்படுத்தி வாசிப்பு பழக்கத்தை வளர்த்துக்கொள்வதே ஆகும். ஆதலால் யாரும் என்னை இகழவில்லை] தொடர்ந்து வாசிக்க வாசிக்க முதலாம் வெற்றியாளர் சாந்தமூர்த்தி அவர்கள் ஒவ்வொரு 100 மணிநேரங்கள் கடக்கும் பொழுதும் ஊக்கபடுத்தினார். அவருக்கு எனது நன்றிகள். பின்பு வாசித்துக்கொண்டே இருப்பேன். 

சில சமயங்களில் விட்டுவிடலாம் என்று தோன்றும். ஆனால் என்றும் நான் சொல்லிக்கொள்ளும் ஆபத் வாக்கியம் “எண்ணித் துணிக கருமம் துணிந்தபின் எண்ணுவம் என்பது இழுக்கு” என்றென்பதே ஆகும். அதையும் நான் இங்கு சொல்லிக்கொண்டேன். இப்பொழுதும் சொல்லிக்கொண்டேன். நீ விரைவாக முடிக்க வேண்டாம். ஒரு 30-45 நிமிடம் படித்தால் போதும். ஆனால் சராசரியாக 2 மணி நேரம் படிப்பேன். பெரும்பாலும் காலையில் எழுந்த உடன் 90 நிமிடங்கள் படிப்பேன். பின்பு நடைப்பயிற்சி செய்யும் பொழுது ஒலிவடிவில் (Audible (மாத சந்தா உறுப்பினராக்கும் நான்)) 30 நிமிடங்கள் கேட்பேன். இப்படி தினமும் படித்தேன்.

இப்படி தொடர்ந்து வாசித்ததால் நான் செப்டம்பர் ஒன்று அன்று 1000 மணி நேர வாசிப்பு சவாலை அடைந்தேன். 

இப்பயணத்தில் நான் கற்றவை

1) தொடர்ந்து ஒன்றை முயற்சி எடுத்து செய்தால் அது ஒரு நல்லொழுக்கமாக மாறும். அந்த நல்லொழுக்கத்தை நாம் மற்ற பழக்கங்களுக்கும் செலுத்தினால் பயன் கிடைக்கும் என்ற நம்பிக்கை உண்டாகியது. நாமே நமக்கு ஒரு முன்மாதிரி 

2) இப்போட்டியில் இலக்கியம் என்றில்லை துறைசார் புத்தகங்களை வாசிக்கலாம் என்று அனுமதி இருந்தது. ஆதலால் நான் Audible-இல் மாத சந்தா உறுப்பினராகி பல தரப்பட்ட புத்தகங்களை கேட்டேன். வாழ்க்கை வரலாறு, உடல் ஆரோக்கியம், சுயமுன்னேற்றம், வணிகம், மேலாண்மை, என்று எல்லா தளங்களிலும் கேட்டேன். அப்படி கேட்கையில் உடல் ஆரோக்கியம் பற்றி ஆர்வம் பிறந்து தினமும் நடைப்பயிற்சியும் ஓட்டப்பயிற்சியும் சிறிது உடல் எடை பயிற்சிகளும் யோகாவும் செய்தேன். மேலும் உணவு பற்றியும் சற்று அறிந்துக்கொண்டு எனது உணவு பழக்கத்தையும் கண்காணித்து மாற்றிக்கொண்டேன்.அங்கேயும் வாசிப்பு பயணத்தில் இருந்த ஏற்றத் தாழ்வுகள் தொய்வுகள் இருந்தன. ஆனால் பயணத்தை விட்ட இடத்தில் தொடர்ந்தேன். கிட்ட தட்ட 13 கிலோ எடை குறைத்துள்ளேன். தக்கவைக்கக்கொள்ளக் கூடிய எடை குறைப்பாகவே ( sustainable weight loss ஆக) மாற்றிக்கொண்டு இருக்கிறேன்.  ஆனால் அதற்கு ஒழுக்கம் மிக அவசியம் என்பதை உணர்ந்தேன். அதற்கு நான் படித்த புத்தகங்களும் உதவின. ஒவ்வொரு நாளும் 1% முன்னேற்றம் ஒரு வருடத்தில் 360% சதவிகித முன்னேற்றத்தை கொடுக்கும். ஒரே நாளில் 50% முன்னேற்றம் கொள்வது தான் கடினம். ஒவ்வொரு அடியாக அடிமேல் அடி வைத்து முன்னேறலாம். 

3) இவ்விரு பழக்கங்களும் ஒழுக்கத்தின் அவசியத்தை உணர்த்தின. நமக்கு எக்காலமும் உந்துதல் இருக்காது. சலிப்பும் அவசியமின்மையும் வரும். நமது ஆழ்மனது 1000 தந்திரங்களை செய்து நம்மை தோல்வி அடைய செய்யும். ஆனால் அதனை எதிர்க்கொள்ள ஒழுக்க தேவை. சிறுக சிறுக நமது ஆழ் மனதை மாற்ற முடியும் என்று.

4) பல துரைகளில் நான் பலவற்றை கற்று, அவற்றை குறிப்புகளாக எழுதி வைக்கும் பழக்கம் எனக்கு எனது கவனத்தை அதிகப்படுத்தியுள்ளது. எனது எழுத்தின் ஆழத்தையும் சிந்தனை திறனையும் அதிகப்படுத்தியுள்ளது. பல நேரங்களில் நான் படித்த பலவற்றை ஒன்றுடன் ஒன்று தொடர்பு படுத்திப் பார்க்கும் பொழுது எனக்கு அவை நன்றாக மனதில் பதிகின்றன

5) ஒரு நேர்காணல் உரையாடலில் எழுத்தாளர் எஸ்.ராமகிருஷ்ணன் அவர்கள் "எனக்கு எழுத்து பணி. தான் அதை திட்டமிட்டே செய்வேன். அதுப்போலவே வாசிப்பையும் திட்டமிட்டே செய்வேன்" என்றார். எனக்கு அப்பொழுது நான் வாசித்த/கேட்ட ஒரு புத்தகம் (Measure What Matters) நினைவுக்கு வந்தது. நாமும் வாசிப்பைத் திட்டமிட்டு செயல்படுத்த வேண்டும் என்று. அப்படிச் செய்வதனால் எந்தப் புத்தகத்தை அடுத்து வாசிப்பது என்று தேர்வு செய்வதில் நேரவிரயத்தை குறைக்கலாம் மற்றும் ஒவ்வொரு காலாண்டும் ஒரு குறிப்பிட்ட எண்ணிக்கையில் படித்து சீராக படிக்கலாம் என்னும் ஒழுங்கு உருவாகியது. அது மிகவும் பயனுள்ளதாக அமைந்தது. 

6) GoodReads.com இல் 2019 ஆம் ஆண்டு 45 புத்தகம் (44 புத்தகம் இலக்கு) படித்தேன. இப்பொழுது 2020 ஆம் ஆண்டு ஏற்கனவே 40 புத்தகம் படித்துள்ளேன் (60 என்பதே எனது இலக்கு. இன்னும் 4 மாதங்கள் உள்ளன). 

7) என்னை அறிந்துக்கொள்ள இந்த வாசிப்புகள் உதவியது. பல புத்தங்களில் என்னைப்பற்றி அறிந்துக்கொண்டேன். இந்த சவாலை முடிக்கையில் நான் ஒரு குறிக்கொளை எடுத்துக்கொண்டால் அதை முடிப்பவன் அதற்கான மனதிடம் உள்ளவன் என்பதை மீண்டும் நிறுபித்துக்கொண்ட நேரம் இது. இந்த ஊக்கம் எனக்கு மிகவும் தேவையான ஒரு காலக்கட்டமும் கூட.

8) நான் திருக்குறள் கற்கும் ஒரு திட்டத்தை 2013 இறுதியில் துவங்கினேன். பல்வேறு காரணங்களால் அது இழுத்துக்கொண்டே சென்றது. ஆனால் இந்த வாசிப்பு சவாலுக்கு வந்த உடன் திருக்குறள் கற்பதை ஒரு தவம் போலவே செய்தேன். இன்னும் சுமார் 53 நாட்கள் மட்டுமே இருக்கிறது. 2020 அக்டோபரக்குள் திருக்குறளை கற்று அதற்கான உரையினையும் முடித்துவிடுவேன். திருக்குறளில் நான் கற்றவற்றின் பயணத்தை நவம்பரில் எழுதவேன்.

இச்சவாலில் 2019 ஏப்ரல் 18ஆம் தேதி முதல் பங்கேற்று 2020 செப்டம்பர் 1ஆம் தேதி 1000 மணிநேரம் வாசித்து முடித்தேன். நான் நான்காவதாக வாசித்து முடித்தேன். (முதலில் முடித்தவர் ஒரு வருடம் முன்பே முடித்து இப்பொழுது 2800 மணிநேரங்கள் கடந்து சென்றுக்கொண்டு இருக்கிறார்) நான் எடுத்துக்கொண்டது மொத்தம் 502 நாட்கள். சராசரியாக 2 மணிநேரம் ஒரு நாளைக்கு.

இப்பதிவை எழுதும் பொழுது என் மனதுக்குள் வரும் ஒரு திருக்குறள் ஆபத்வாக்கியமாய் தோன்றியது
குறள் 611
அருமை உடைத்தென்று அசாவாமை வேண்டும்
பெருமை முயற்சி தரும்

நம் குறிக்கோள்கள் அருமையானது என்று மனதிற்கு தோன்றுமளவு ஒரு குறிக்கோளை அமைத்துக்கொண்டு தளராது முயற்சி செய்தால் நமக்கு பலனும் பெருமையும் கண்டிப்பாய் கிட்டும்.

இதுப்போல் சவால்களை வாழ்வில் ஒவ்வொரு விஷயத்திலும் அமைத்துக்கொண்டால் வாழ்வில் பல விஷயங்கள் எவ்வளவு சீர் படும். நன்மை பயக்கும். செய்வோம்.

அடுத்த 87 நாட்களில் மற்றுமொரு சுய குறிக்கோளை அடைய  முற்பட்டுள்ளேன். இறைவனின் துணைபுரியட்டும்.


பி.கு: 2-3 மாதங்கள் முன்பு கூட சிலர் புதிதாய் இந்த சவாலில் சேர்ந்து 200 மணிநேரங்களை கடந்துள்ளனர். ஒரு 8ஆவது படிக்கும் மாணவிக்கூட (ஒரு வாசகரின் பேத்தி) இதில் தீயாய் படித்து 300 மணி நேரங்களை கடந்துள்ளாள். ஆதலால் இந்த வாசிப்பு சவாலில் இப்பொழுதுக் கூட யார்வேண்டுமானாலும் சேரலாம். அவர்கள் செய்யவேண்டியது எல்லாம் சுனீல் கிருஷ்ணன் அவர்களுக்கு ( முகவரி: drsuneelkrishnan@gmail.com) ஒரு மின் அஞ்சல் அனுப்பவேண்டியது தான்.


========================================================

முதலில் சவாலை கடந்து இன்றும் தொடர்ந்து சென்றுக்கொண்டு இருக்கும் திரு.சாந்தமூர்த்தி அவர்களின் வாழ்த்து


@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@

சுரேஷும்,ராஜேஷும் அருகருகே இருந்தனர். 996 மணியில் இருவரும் அசைவற்று நின்று விட்டனர்."நீங்கள் முதலில் செல்லுங்கள்." "இல்லையில்லை நீங்கள் முதலில் செல்லுங்கள்." என்பது போல் இருவரும் பெருந்தன்மையுடன் தயங்கினர்.ஒரு வழியாக இன்று ராஜேஷ் 1000 மணி நேரத்தைக் கடந்தார். இன்றிரவோ நாளையோ சுரேஷ்பிரதீப்பும் 

இலக்கை அடைந்து விடுவார்.எனவே இருவருமே நம்  வாழ்த்துகளுக்கு உரியவர்கள்.

@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@ 

வணக்கம்!"சரியான போட்டி! (வெல்வதற்கல்ல) " என்ற புதிய கட்டுரை இன்று என் வலைப் பூவில் வெளியாகியுள்ளது. அதன் சுட்டி:                          

https://wp.me/patmC2-r0   


சாந்தமூர்த்தி

அவரது கட்டுரை கீழே

சரியான போட்டி! (வெல்வதற்கல்ல)

@ இன்று (02-09-2020) காலையில் நான் பார்த்த பதிவுகளின் படி ராஜேஷ் ஆயிரம் மணி நேர வாசிப்பு சவாலில் வெற்றிகரமாக ஆயிரம் மணி நேர இலக்கைக் கடந்து சாதனை புரிந்திருக்கிறார். அவருக்கு நெஞ்சம் நிறைந்த வாழ்த்துக்கள்!சுரேஷ் பிரதீப்புக்கு அதை விட அதிக வாழ்த்துக்கள்!

 

@ ராஜேஷ் 900 மணி நேரத்தைக் கடந்தவுடன் அவரை வாழ்த்தும் போது சிக்ஸரும்,பவுண்டரியுமாக விளாசி முடியுங்கள் என்று நான் குறிப்பிட்டேன். அவர் தனக்கு டெஸ்ட் மேட்ச் தான் பிடிக்கிறது என்றார்.மெதுவாகவே இலக்கு நோக்கி நகர்ந்தார்.ஆனால் கடைசி நேரத்தில் போட்டியில் தீ பற்றத் தொடங்கியது.

 

@ சுரேஷும்,ராஜேஷும் அருகருகே இருந்தனர். 996 மணியில் இருவரும் அசைவற்று நின்று விட்டனர்.”நீங்கள் முதலில் செல்லுங்கள்.” “இல்லையில்லை நீங்கள் முதலில் செல்லுங்கள்.”என்பது போல் இருவரும் பெருந்தன்மையுடன் தயங்கினர்.ஒரு வழியாக இன்று ராஜேஷ் 1000 மணி நேரத்தைக் கடந்தார். இன்றிரவோ நாளையோ சுரேஷ் பிரதீப்பும் இலக்கை அடைந்து விடுவார்.எனவே இருவருமே நம் வாழ்த்துகளுக்கு உரியவர்கள்.

 

@ சுனீல் கிருஷ்ணன் இதைத் தொடங்கும் போது சவால், போட்டி  என்று சொன்னார்.சுரேஷும்,ராஜேஷும் இது இரண்டுமில்லை;ஜெயமோகன் சொன்னது போல் வாசிப்பு தவம்.இதில் முதலென்ன,முடிவென்ன? என்று அழகூட்டியுள்ளனர்.போட்டி என்று சொல்வதெல்லாம் ஒரு நடிப்பு தான்,பாவனை தான்.

 

@ இளம் எழுத்தாளர் சுரேஷ் பிரதீப் திட்டம் தொடங்கும் போது முதல் இடத்தில் இருந்தார். அலுவலகப் பணியோடு இலக்கியப் படைப்பு,உரை,திறனாய்வு என்று இவ்வளவு பரபரப்பில் வாசிப்பை இத்தனை தீவிரமாகத் தொடர்வது என்பது நாம் கற்கத் தகுந்தது. ஒரு முறை ஒரே நாளில் பன்னிரெண்டு மணி நேரம் வாசித்தார். அந்த அசுர சாதனையை என்னால் நினைத்துக் கூட பார்க்க முடியாது.

 

@ ராஜேஷ் போட்டி தொடங்கியவுடன் இணைந்து விட்டார். என்றாலும் பின் நடுவில் கொஞ்சம் காணவில்லை.பின்னர் நிதானமாக தொடர்ந்து சீராக முன்னேறினார். நான்காவது வாசகராக இலக்கைக் கடந்துள்ளார். அவர் எழுத்தாளரா என்று எனக்குத் தெரியவில்லை. ஜெயமோகனின் வாசகராக இருப்பவர் எழுத்தாளராக இல்லாதிருப்பது கடினம். ராஜேஷிடம் எனக்குப் பிடித்தவை இரண்டு பண்புகள். ஒவ்வொருவரின் வெற்றிக்கும் வாழ்த்து தெரிவிப்பார்.பெறும் வாழ்த்துக்களுக்கு நன்றி தெரிவிப்பார். ஆட்டோ கார மாணிக்கம் போலவே ராஜேஷுக்கு இன்னொரு பெயர் உண்டு. பாலசுப்ரமணியன். 

 

@ எப்போதோ முடித்திருக்க வேண்டிய ராதாவும், சரவண குமாரும் பிறரும் என்ன நினைக்கிறார்கள் என்று தெரியவில்லை. யாரோ ஸ்டேச்சூ என்று சொன்னது போல. நிச்சயம் எல்லோரும் நிறைய வாசிக்கிறார்கள். பொதுவாக நம்  தமிழ் மக்களுக்கு எதிலும் ஆவணம் பராமரிப்பதிலும், அதற்காக சிறிது மெனக்கெடுவதிலும் ஆர்வமின்மையும், சோம்பலும் உண்டு. இந்த அலட்சியத்தால் தேசிய அளவிலான வரை இழப்பு நேர்ந்திருக்கிறது. அதை மாற்ற முயல்வது நல்லது.

 

@ மூன்றாவது முறையாக எல்லோரையும் முந்திச் செல்லப் போகிறேன் என்ற இந்தக் கிழவரின் மிரட்டல்களைக் கணக்கில் எடுத்துக் கொள்ளாத இளைய போட்டியாளர்கள் என் பேத்தியின் வேகம் கண்டு வெருண்டு விரைவது நன்று. என் வாசகிப் பேத்தி–மதுமிதா! பத்தாமிடத்தில் உள்ள, தலைவர் போல எப்போதாவது எட்டிப் பார்க்கிற சுனீல் கடந்திருப்பது 392 மணி நேரம். நேற்று வந்த மதுமிதா இப்போது கடந்திருப்பது 377 மணி நேரம். அவர் வாசிக்கத் தொடங்கியிருப்பது ஜெயமோகனின் உலக சாதனையான வெண்முரசு காவியம்.இந்திர நீலம் நிறைவடையப் போகிறது.

 

@ குழுவில் உள்ள எல்லோரையும் ஊக்குவித்துக் கொண்டே  இருப்பதற்கு ராமானுஜம் நன்றி தெரிவித்துள்ளார்.எங்கோ சொன்னதை மீண்டும் சொல்கிறேன்: வயது முதிர்ந்தவர்கள் எல்லோரையும் வாழ்த்திக் கொண்டே இருக்க வேண்டும். ஆசிரியர்கள் தகுதியுள்ள எல்லோரையும் பாராட்டிக் கொண்டே இருக்க வேண்டும். நான் இரண்டும். நான் அப்படி இல்லாவிட்டால் தான் தவறு.

 

@ வாசிப்பு மாரத்தனில் முதல் பத்து இடங்களில் உள்ளவர்கள்:

 

சாந்தமூர்த்தி ஜெகநாதன் …… 2739

அருண்மொழி நங்கை         …….1000

லாவண்யா சுந்தர்ராஜன்   …….1102

பாலசுப்ரமணியன்/

ராஜேஷ்                                          …….1000

 

1.சுரேஷ் பிரதீப்                         ………996

2.V.ராதா                                          ………800

3.சரவணகுமார்                         ………771

4.கமலாதேவி                              ………721

5.GSSV நவீன்                                   ……..614

6.முத்துகிருஷ்ணன்                 ……. 526

7.ஜெயந்த்                                       …….. 521

8.சௌந்தர்ராஜன்                     ……..452

9.வேங்கட பிரசாத்                     ……..410

10.சுனீல் கிருஷ்ணன்               ……..392

 


August 30, 2020

வாழ்தலின் பரிசு

இன்று 29-ஆகஸ்ட-2020 மிக இனிதாகவே திட்டமிட்டபடி தொடங்கியது. காலையில் 4:45க்கு எழுந்து டீ போட்டுக் குடித்துவிட்டு, திருக்குறள் படித்துவிட்டு, 10கிலோமீட்டார் (56 நிமிடத்தில்) ஓடிவிட்டு, பிராணாயமம்-தியானம் செய்துவிட்டு நன்றாக துவங்கியது.

நண்பர்கள் சிலருடன் குழுவாக காணோளி உரையாடல் (நடையாடல்) செய்துவிட்டு புத்துணர்ச்சியுடன் இருந்தது. நல்ல செய்திகள். கவலையற்ற  அழுக்காறு அல்லாத உரையாடல்கள். 

பிறகு, நண்பருடன் வாராந்திர திருக்குறள் வகுப்பு (பதினான்காகவாது வகுப்பு) எடுக்க / உரையாட சென்றேன். இணைய வழி வகுப்பில் வந்த உடன் நண்பர் முதலில் சொன்னது -- “ராஜேஷ், first/முதல உனக்கு ரொம்ப thanks/நன்றி சொல்லனும். ஏன்னா, உன்னால தான் எனக்கு தமிழ் இப்ப நல்லா புரியுது. அதனால நான் என்னோட பொன்னுக்கு தமிழ் சொல்லி தர முடியுது. அதனால ஏன் பொன்னு தமிழ்ல அவளோட வகுப்புல(classல) மூனாவது (mark)மதிப்பெண் எடுத்து இருக்கிறா. பயங்கர improvement(முன்னேற்றம்). அவுங்க class miss (வகுப்பு ஆசிரியார்)லான் ஒரே பாராட்டுதான் போ. இத்தனை வருஷமா தமிழ் சொல்லிக்குடுக்காம விட்டுருவேன் ஏன்னா எனக்கே தமிழ் சரியா புரியாது. இப்ப உன்கிட்ட திருக்குறள் வகுப்பு படிச்சுனு இருக்கற்தனால் என்னால அவ பாடத்தை படிச்சு சொல்லி தரமுடியுது. அவளும் குஷி. எனக்கும் செம குஷி. அதுக்கு நான் உனக்கு thanks/நன்றி சொல்லனும்”.

அதுப்போல் இன்று மதியம் என் மனைவியுடன் உரையாடுகையில் அவளுடைய குழந்தைப் பிறந்த உடன் கூடிய/ஏறிய எடையை இழக்க ஒரு ஒருவருட எடைகுறைப்பு திட்டத்தில் மூன்று மாதங்கள் முன்பு (ஜூன் துவக்கதில்) சேர்த்திருந்தேன். சற்று சிரமப்பட்டுத்தான் சேர்த்துவிட்டேன். ஏனெனில் இதற்கு சுமார் 15000 ரூபாய் முதலீடு இருந்தது. ஆதலால் முதலில் மனைவி ஒப்பவில்லை. பின்பு ஒருவழியாக சமாளித்து சேர்த்துவிட்டேன். முதல் இரண்டு மாதங்கள் சற்று ஐயத்துடன் தான் அவள் அதில் பங்கேற்றால். ஆனால் மூன்று மாதங்களில் பின்பு சுமார் 5+ கிலோ எடை குறைத்துள்ளாள். அதுமட்டும் இன்றி. தனது உடம்பின் வாகும் சீராக உள்ளது என்று கூறினாள். அவளுக்கு கொடுக்கபட்ட ஒரு உடற்பயிற்சி திட்டம் நன்கு திட்டமிடபட்டுள்ளதாக கூறினாள். [இதற்கு முன்பு இலவச Apps, Youtube videos பார்த்து செய்ததில் தசைகளின் வளர்ச்சி சீராக இல்லை எனவும் எடையும் சரியாக குறையவில்லை என்றும் கூறினாள்] அவளுக்கே இத்திட்டத்தின் மீது நம்பிக்கை வந்துள்ளதாகவும் அது பயனுள்ளதாகவும் இருப்பதாக கூறினாள். அவளுக்கும் மகிழ்ச்சி. எனக்கும் மகிழ்ச்சி.

நம்ம வாழ்க்கைல நம்ம பன்றது அடுத்தவங்க வாழ்க்கைல ஒரு சிறு துரும்பு அளவுக்காவது உதவுதுனு நினைக்கும் பொழுது ரொம்ப சந்தோஷமா இருக்கு. The Innovator's Dilemma புத்தகத்தை எழுதிய உலகப்புகழ்பெற்ற Prof.Clayton Christensen என்றொரு (Harvard University Professor) பேராசிரியர் சொல்லுவார் - வாழ்க்கையை நீ எப்படி அளப்பாய்? (How will you measure your life?) அதற்கு பதில் நீ எத்தனை பேரின் வாழ்வில் நல்லதொரு தாக்கமாய் (அல்லது பயனாய்) இருந்தாய் என்பதில் அளக்கலாம் (Answer: Number of lives you touch upon). அதுப்போன்ற ஒரு தருணம் இது.

September 16, 2016

M.S. Subbulakshmi 100

When I started listening seriously to Carnatic Music / Indian Classical music, in 2007, I was listening to multiple sources/musicians. It was like a cat running in a closed dark room trying to find a way out. My violin guru Shri Babu advised me to listen to @M.S.Subbulakshmi. I followed it blindly falling more in love with the music. Her music is so simple which IMO is very difficult to achieve. Her music is so spiritual with 100% Bhakti. Not to forget her perfect diction in any language that she sung in. If anyone listens to her music they can easily sing it along. She showed that one can attain Brahman (immortality) by Bhakti, hardwork and simple way of life irrespective of the birth (here her devdasi birth(no offense)). #MSS100 #birthCentenaryYear #MSSubbulakshmi #Inspiration


August 15, 2016

மானுட சாத்தியத்தின் எல்லைகள் | தீபா கர்மாகர்

முன் குறிப்பு: இப்பதிவினை எழுதுவதற்கு முன் நான் ஒன்றை கூறிக்கொள்ள விரும்புகிறேன். நான் கிரிக்கேட் விளையாட்டினை தவிர வேறு எந்த விளையாட்டினையும் தீவிர ஈட்டுபாட்டுடன் கவனித்தவனும் அல்ல தொடர்ந்து கவனித்தவனும் அல்ல. அவ்வப்போது சில விளையாட்டுகளை தொலைக்காட்சியில் பார்த்திருக்கிறேன். அவ்வளவு தான். பொதுவாக தனி நபர் (Athletics) விளையாட்டுகளுக்கான உலக பிரபல விளையாட்டு போட்டி என்றால் அது ஒலிம்பிக்ஸ் (Olympics) தான். எனக்கு விவரம் தெரிந்து அட்லாண்டா (Atlanta) 1996 தான் நான் முதல் முறையாக கேள்விப்பட்ட ஒலிம்பிக்ஸ். அதன் பின் பல ஒலிம்பிக்ஸ் வந்தாலும் 2008 பிஜீங் (Beijing) ஒலிம்பிக்ஸ்-இன் துவக்கம் மற்றும் நிறைவு நிகழ்ச்சிகளை கண்டுகளித்திருகிறேன். அதன் பின் அவ்வளவு பார்த்தது இல்லை. ஈடுபாடு இல்லை. பொதுவாக கடைசியில் இந்தியா ஏதாவது பதக்கம் வென்றதா என்று செய்திகள் மூலம் தெரிந்துக்கொள்வேன். இந்த ஆண்டு ரியோ (Rio) 2016வும் அப்படித்தான். ஆனால் லான்ஸ் ஆர்ம்ஸ்ட்ராங்க் (Lance Armstrong - Cycling) மற்றும் அண்ட்ரி அகாசி(Andre Agassi)  போன்றோரின் சுய வாழ்க்கை வரலாறு புத்தகத்தை வாசித்து  உள்ளேன். அவ்வளவுதான் எனக்கும் விளையாட்டுக்கும் உள்ள உறவு. 

​இந்த ஆண்டு ரியோ 2016 ஒலிம்பிக்ஸில் தீபா கர்மாகர் (Dipa Karmakar) என்கிற இருபத்தி மூன்று வயது பெண் ஜிம்னாஸ்டிக்கில் (Gymanstics) பங்கேற்று உள்ளார் என்று செய்தி அறிந்தேன். அதற்கு முன் எனக்கு தீபாவை தெரியாது. அதுமட்டும் அல்லாமல் இந்தியாவில் ஜிம்னாஸ்டிக்கில் இருந்து ஒருவர் ஓலிம்பிக்ஸில் பங்கேற்கும் அளவுக்கு இந்தியாவில் அதை பயில்கிறார்கள் என்பதே புதிய செய்தி. ​ஆக தீபா ஜிம்னாஸ்டிக்ஸில் விளையாட்டு பிரிவில் பங்கேற்கிறார் என்பதே எனக்கு ஆச்சர்யம் தான்! 

தீபா கர்மாகர்

இந்தியாவின் வடகிழக்கு மாநிலமான திரிப்புராவின் (Tripura) தீபா கர்மாகர் ஜிம்னாஸிட்டிக்கில் ப்ரொடுனோவா (Produnova) என்னும் மிகவும் அபாயம் வாய்ந்த விளையாட்டு பிரிவில்/முறையில் சிறப்பாக (வெற்றிகரமாக நிறைவு செய்தார்) பங்கேற்றார் என்று அறிந்தேன். இந்த ப்ரோடுனோவாவில் ஒரு பிசிரு ஆனாலும் உயிருக்கே ஆபத்தாக விளைவுகள் அமைய வாய்ப்பு உள்ளது. இந்த ஆண்டு ஒரு ஆண் விளையாட்டில் காலினை ஊன்றும் பொழுது உடைத்துக்கொண்டார்.அவ்வளவு அபாயகரம். ஆனால் இதனை 1980 ஒலிம்பிக்ஸில் முதன் முதலாக வெற்றியின்றி முயற்சி செய்து உள்ளார் ஒரு விளையாட்டு வீரர். முதல் முறையாக 1999’இல் எலீனா ப்ரோடுனோவா (Elena Produnova) என்னும் பெண்மணி வெற்றிகரமாக முடித்து உள்ளார் (ஆதலால் ப்ரொடுனோவா என்று இவ்விளையாட்டு பிரிவுக்கு அப்பெயர்). அதன் பின் உலகில் மூன்றாவதாக முறையாக தீபா கர்மாகர் வெற்றிகராமாக உலக மேடைகளில் செய்து உள்ளார். 

தீபா கர்மாகர் - தகுதி சுற்றுகளில் ப்ரோடுனோவா

இந்தியாவில் இருந்து முதல் முறையாக ஒலிம்பிக்ஸில் ஜிம்னாஸ்டிக்ஸின் இறுதி சுற்றிற்கு (பாலினம் பாகு பாடு இன்றி) இந்த ஆண்டு தீபா கர்மாகர் நுழைந்தார். எட்டாவது இடத்தில் இருந்தார். ஆனால் இறுதி சுற்றில் நான்காவது இடத்தில் முடித்தார்.  அவர் எடுத்த புள்ளிகள் 15.066. மூன்றாவதாக எடுத்தவரின் புள்ளிகள் 15.216. வெறும் 0.15புள்ளிகளில் வெங்கல பதகத்தை கைபற்ற முடியவில்லை. ஆனால் இவர் கைப்பற்றிய நெஞ்சங்கள் லட்சோப லட்சம், கோடான கோடி என்று சொல்லலாம். கிரிக்கேட்டை தவிர எந்த விளையாட்டிற்கும் போதிய பயிற்சிகளும் வசதிகளும் ஊக்கமும் பார்வையாளர்களும் இல்லாத இந்திய நாட்டில் இந்த இடம் மிக முக்கியமானது. இது போன்ற பெயர் தெரியாத விளையாட்டில் நுழைந்தாலே இவர்களின் ஊக்கத்தை குறைக்க ஒரு கும்பல் இருந்துக்கொண்டே இருக்கும். வெற்றி பெற்றால் கூட இவர்களின் எதிர்க்கால வேலை வாய்ப்பு கேள்விக்குறியே. கனவுகளையும் லட்சியங்களையும் சுமந்துக்கொண்டு வசதி இல்லாமல் இவர்கள் படும் பாடு இவர்களுக்கு மன வேதனை அளிக்கும். ஊக்கம் இழக்க அதிக வாய்ப்பு உண்டு. 

ஆனால் இத்தனை இடர்களையும் மீறி இவ்வீரர்கள் தோடும் சிகரங்கள் அதிகம். இவர்கள் தொட நினைக்கும் சிகரத்தின் உயரங்களும் அதிகம். இவர்களின் உழைப்பு அசாத்தியம். தன்னுள் நிகழ்வதை ஒருவன் கவனிப்பான் என்றால் தன் சாத்தியங்களும் எல்லைகளும் தெளிவாகும். இத்தகையவர்கள் வெளி உலகம் போடும் இடர்களை பொருட்டாக எண்ணாமல் தங்களை அவதானிக்கிறார்கள். ஆகச்சிறந்த சாத்தியங்களை நோக்கி நாம் ஏன் அடி எடுத்து வைக்கக்கூடாது என்று என்னுகிறார்கள். விளைவுவாக இவ்விளையாட்டுகளில் இவர்கள் மானுட சாத்தியத்தின் எல்லைகளை ஒரு அடி விரிவு படுத்துகிறார்கள். விதி சமைக்கிறார்கள்!!

இப்பெண் என் வாழ்வில் நான் நினைவில் வைத்துக்கொள்ளும் நபர்களில் ஒருவராக அமைவார்!!

2020 டொக்யோ (Tokyo) இவரின் கனவுகளுக்கு மகுடம் சூட்டும்!

December 25, 2013

என் வாழ்வில் ஒரு முக்கிய சந்திப்பு

சென்ற வாரம் நான் கோவைக்கு விஷ்ணுபுரம் விருது விழாவிற்காக சென்று இருந்தேன். அது ஒரு மிகப் பெரிய அனுபவமாக இருந்தது. அதைப் பற்றி எனது முந்தய பதிவில் எழுதி இருந்தேன். விழாவை பற்றி ஆழமாக அன்பர் சுனில்கிருஷ்ணன் எழுதி இருந்தார்.

ஆனால் நான் முக்கியமான ஒன்றை எழுதவில்லை. அது ஒரு மிகவும் அரிதான சம்பவம். ஞாயிறு அன்று காலை வானவன் மாதேவி வல்லபி சகோதிரிகளை முதல் முதலாக சந்திக்க நேரிட்டது. அவர்களை முதலில் பார்த்தப் போது எனக்கு அவர்களின் தெவிட்டாத புன்னகை தான் என் கண்ணுக்கு தெரிந்தது. பின்பு அவர்களின் உற்சாகமான குரல். அவர்களை விட்டு என் மனமும் பார்வையும் சில நிமிடங்களுக்கு நகரவில்லை. அவர்கள் இந்திரா பார்த்தசாரதி மற்றும் தெளிவத்தை ஜோசப் அவர்களிடம் அவர்களின் வாசிப்பைப் பகிர்ந்துகொண்டு நுட்பமான கேள்விகளை கேட்டுக்கொண்டு இருந்தார்கள். புதியதாய் இருப்பதால் அவர்களிடம் பேச எனக்கு சற்று தயக்கம். பேசவும் இல்லை. ஞாயிறு மதியம் 3:30 மணிக்கு பிறகு கலந்துரையாடல்கள் எதுவும் நடக்கவில்லை. அப்போது நான் சற்று தனிமைப் பட்டு முன் இருந்த இருக்கையில் தலை வைத்து சிறிது நேரம் அரைத் தூக்கம் கொண்டேன். 

சிறிது நேரம் கழித்து வல்லபி என்னை பார்த்து சிரித்ததாய் தோன்றியது. பதிலுக்கு நானும் சிரித்தேன். என்னையா பாத்தீங்கனு கேட்டாங்க. எனக்கு என்ன சொல்வது என்று தோனவில்லை. அவர்கள் முதல் தடவையா என்று கேட்டார்கள். ஆம் என்றேன். அதான் தனியா இருக்கீங்க. உங்க பேர் ? ராஜேஷ் என்றேன். உங்க பேரு ? வல்லபி. எங்க இருந்து வரீங்க ? பாண்டிச்சேரி. சிவாவ தெரியுமா ? இல்ல இங்க தான் அறிமுகம் என்று சொன்னேன். பிறகு அவர்களிடம் பேசவில்லை. ஆனால் ஒன்று மட்டும் கண்டேன். அவர்களிடம் எல்லோரும் சென்று பேசினார்கள். எனக்கு பேச வேண்டும் என்று தோன்றியது. ஆனால் என்ன பேசுவது. நான் பேசி அவர்களின் மனதில் ஒரு வருத்தம் வரப்போகிறது என்று எண்ணி பேசவில்லை.

அவர்கள் Muscular Dystrophy எனும் தசைச் சிதைவு நோயால் பாதிக்கப்பட்டவர்கள். அவர்களிடம் எப்படிப் பேசுவது என்பது எனக்கு சற்றும் தெரியவில்லை. ஒருவரின் மனம் எள்ளவும் நோகும் படி நடக்க கூடாது என்பது எண்ணம். ஒருவரிடம் பச்சாபதாபம் காண்பிப்பது ஒருவரின் தன்நம்பிக்கையை அவமானபடுத்துவதாகும். அவர்கள் என்னில் மிகுந்த ஒரு பாதிப்பை ஏற்படுத்தி உள்ளனர். 

நான் பொதுவாக என்னுள் உள்ள சோகங்களை, கவலைகளை வெளியே காண்பித்துக் கொள்ளக் கூடாது என்பதில் மிகுந்த உறுதி உள்ளவன். சுய பச்சாபதாபம் தேட கூடாது என்பது என் கொள்கை (அதற்கு என் வாழ்வில் நான் சந்தித்த சில மனிதர்கள் தான் காரணம்). ஆயினும் ஒரு சில (4-5) மிக நெருங்கிய நண்பர்களிடம் கூட "உனக்கு என்ன தெரியும் எனக்குப் பின்னாடி எவ்வளவு பர்ச்சனைகள் இருக்குனு" கொட்டி தீர்த்து இருக்கிறேன். ஆனால் மனதளவில் பல நாட்கள் சோர்வு அடைந்து இருக்கிறேன். அந்நாட்களில் நேரத்தை விரையம் செய்து இருக்கிறேன். எனது சக்தியை (energy) ஒன்றுக்கும் உதவாத செயல்களில் கொட்டி இருக்கிறேன். எனக்கு மட்டும் ஏன் இந்த சோதனைகள் ? நான் ஒரு தவறும் செய்தது இல்லையே. யாருக்கும் கெடுதல் நினைத்து இல்லையே. என் வாழ்வின் ஒரு சில திருப்பங்களை ஏன் ஒரு சிலரது திருப்பங்கள் தீர்மானித்தது என்று எண்ணிய நாட்கள் பல. ப்ரகாசமாக (well settled) இருந்து இருக்க கூடிய இன்றைய நாட்கள் ஏன் அப்படி இல்லை. பணம் (அதற்கு உவமையாக வரும் அனைத்தும்) மகிழ்ச்சியின் அளவுகோள் அல்ல என்பதை நான் வேகு நாட்கள் முன்பே நன்கு உணர்ந்தவன். கையில் நல்ல வேலை, பணம்  இருந்தும் ஒரு மனதில் ஒரு நிறைவு இல்லையே. 

நம்மை வழி நடத்த ஒருவர் இல்லையே. குறைந்தது திசை நோக்கி கைக்காட்ட ஆளில்லையே என்று என்னுவேன். அத்தனை அறிவிருந்தும் (அறிவு ஜீவி அல்ல நான்) நாம் எந்த ஒரு முயற்சியும் மேற்க்கொள்ள வில்லையே. இவ்வருத்தங்களுக்கு காரணம் தேடிய நாட்கள் பல. அதற்கு காரணமானவர்களை குற்றம் சாட்டி இருக்கிறேன். காரணங்கள் நேர்மையானலும் அதை தேட நேரம் விரையம் செய்து இருக்கிறேன். தவறு. மிக தவறு. சில நேரம் எனக்கு ஒரு நல்ல தளம் தனை அமைத்துக் கொடுத்த எனது அம்மா, பாட்டி, ஆசான்கள், மேலாளார்கள், நல்வழி நடத்திய நண்பர்கள் இருந்தும் நாம் ஏன் அதனை முழுக்க பயன்ப்படுத்தி நெறியாக செயல்படவில்லை என்று யோச்சித்து இருக்கிறேன். ஒரு சில கேள்விகளிலும் ஒரு சில வாதங்களால் நேர்ந்த வருத்தங்களை என் கவனத்தை மங்க செய்ய ஏன் விட்டேன் என்று கேட்டுக்கொண்டு இருந்தேன். மாறாக நான் எனது பாதையில் இன்னும் கவனுத்துடன் உன்னிப்பாக சென்று இருக்க வேண்டும். என்னை இக்கவலைகள் சூழ விட்டிருக்க கூடாது. விவேகானந்தர் சொன்னதுப் போல் நரம்புகளை ஸ்டீல் (steel) ஆக கொண்டு செயல் பட்டு இருக்க வேண்டும். எப்போதும் ஓர் சோர்வான மனதுடன் உத்வேகம் இல்லாத மனதுடன் தான் இருக்கிறேன். முன்பை விட நான் எனது பயணத்தில் நேரே சென்றாலும் ஒரு பாதுகாப்பு இல்லாதது போன்ற எண்ணத்துடனே செல்கிறேன். வாழ்வை ஒரு பயத்துடனே எதிர்க்கொள்கிறேன். 

ஆனால் இன்று (கண்டிப்பாய் படியுங்கள்) எஸ்.ராமகிருஷ்ணனின் மகத்தான சந்திப்பு  (சுட்டியை தட்டவும்) மற்றும் http://www.jeyamohan.in/?p=37457 தனை பற்றி படித்தவுடன் தான் நான் உலகில் எவ்வளவு மகத்தான இரு மனிதர்களை சந்தித்து இருக்கிறேன் என்பதை உணர்ந்தேன். அவர்களிடம் பேசி இருக்கவேண்டும் என்று இப்போது ஆசைப்படுகிறேன். அவர்களை கண்டது ஒரு விதத்தில் எனக்கு மிகுந்த வேதனை கொடுத்தது. அவர்களை நினைத்து பச்சோதாபம் படவில்லை. அப்படி செய்தால் என்னை விட குறுகிய உள்ளம் கொண்டவன் வேறில்லை. ஆனால் அவர்களை பார்த்ததே மகத்தான பாக்கியமாக கருதுகிறேன். வாழ்வில் இதுப்போன்ற தருணங்கள் எல்லோருக்கும் அமைவதில்லை. எனக்கு அமைந்துள்ளது. என்னை நானே சுய விமர்சனமும் சுயபரிசீலனையும் செய்துக்கொள்ள ஒரு சந்தர்ப்பமாக எடுத்துக்கொண்டேன். என் மேல் நானே சுய பட்சாபதாபம் கொண்டு தேங்கி இருக்க கூடாது என்று உணர்ந்தேன். அப்படி பட்சாபதாபம் பட ஒன்றும் இல்லை. வாழ்வில் இனிமேல் எந்த ஒரு நொடியும் பொருளற்ற செயல்களில் ஈடுபட கூடாது என்று சபதம் பூண்டு உள்ளேன். வாழ்வில் கடந்ததை நிணைத்து சோர்வடைய கூடாது அதற்கு நேரம் செல்விடவும் கூடாது. ஒரு விதத்தில் இது சுயநலமே. ஆனால் வாழ்வில் மேலே நோக்கி ஆக்கபூர்வமாக பாசிடிவாக (positive) வாழ எனக்கு இந்த சந்திப்பு தேவைப்பட்டுள்ளது. இதுப்போல் வாழ்வில் பலதடவை எழுச்சிப் பெற்றுள்ளேன். ஆனால் நான் பின்னோக்கி சென்றது இல்லை. அதன் பிறகு சிறப்பாகவே செயல்பட்டுள்ளேன். இந்த தடவையும் அப்படியே அமையும்.