December 25, 2013

என் வாழ்வில் ஒரு முக்கிய சந்திப்பு

சென்ற வாரம் நான் கோவைக்கு விஷ்ணுபுரம் விருது விழாவிற்காக சென்று இருந்தேன். அது ஒரு மிகப் பெரிய அனுபவமாக இருந்தது. அதைப் பற்றி எனது முந்தய பதிவில் எழுதி இருந்தேன். விழாவை பற்றி ஆழமாக அன்பர் சுனில்கிருஷ்ணன் எழுதி இருந்தார்.

ஆனால் நான் முக்கியமான ஒன்றை எழுதவில்லை. அது ஒரு மிகவும் அரிதான சம்பவம். ஞாயிறு அன்று காலை வானவன் மாதேவி வல்லபி சகோதிரிகளை முதல் முதலாக சந்திக்க நேரிட்டது. அவர்களை முதலில் பார்த்தப் போது எனக்கு அவர்களின் தெவிட்டாத புன்னகை தான் என் கண்ணுக்கு தெரிந்தது. பின்பு அவர்களின் உற்சாகமான குரல். அவர்களை விட்டு என் மனமும் பார்வையும் சில நிமிடங்களுக்கு நகரவில்லை. அவர்கள் இந்திரா பார்த்தசாரதி மற்றும் தெளிவத்தை ஜோசப் அவர்களிடம் அவர்களின் வாசிப்பைப் பகிர்ந்துகொண்டு நுட்பமான கேள்விகளை கேட்டுக்கொண்டு இருந்தார்கள். புதியதாய் இருப்பதால் அவர்களிடம் பேச எனக்கு சற்று தயக்கம். பேசவும் இல்லை. ஞாயிறு மதியம் 3:30 மணிக்கு பிறகு கலந்துரையாடல்கள் எதுவும் நடக்கவில்லை. அப்போது நான் சற்று தனிமைப் பட்டு முன் இருந்த இருக்கையில் தலை வைத்து சிறிது நேரம் அரைத் தூக்கம் கொண்டேன். 

சிறிது நேரம் கழித்து வல்லபி என்னை பார்த்து சிரித்ததாய் தோன்றியது. பதிலுக்கு நானும் சிரித்தேன். என்னையா பாத்தீங்கனு கேட்டாங்க. எனக்கு என்ன சொல்வது என்று தோனவில்லை. அவர்கள் முதல் தடவையா என்று கேட்டார்கள். ஆம் என்றேன். அதான் தனியா இருக்கீங்க. உங்க பேர் ? ராஜேஷ் என்றேன். உங்க பேரு ? வல்லபி. எங்க இருந்து வரீங்க ? பாண்டிச்சேரி. சிவாவ தெரியுமா ? இல்ல இங்க தான் அறிமுகம் என்று சொன்னேன். பிறகு அவர்களிடம் பேசவில்லை. ஆனால் ஒன்று மட்டும் கண்டேன். அவர்களிடம் எல்லோரும் சென்று பேசினார்கள். எனக்கு பேச வேண்டும் என்று தோன்றியது. ஆனால் என்ன பேசுவது. நான் பேசி அவர்களின் மனதில் ஒரு வருத்தம் வரப்போகிறது என்று எண்ணி பேசவில்லை.

அவர்கள் Muscular Dystrophy எனும் தசைச் சிதைவு நோயால் பாதிக்கப்பட்டவர்கள். அவர்களிடம் எப்படிப் பேசுவது என்பது எனக்கு சற்றும் தெரியவில்லை. ஒருவரின் மனம் எள்ளவும் நோகும் படி நடக்க கூடாது என்பது எண்ணம். ஒருவரிடம் பச்சாபதாபம் காண்பிப்பது ஒருவரின் தன்நம்பிக்கையை அவமானபடுத்துவதாகும். அவர்கள் என்னில் மிகுந்த ஒரு பாதிப்பை ஏற்படுத்தி உள்ளனர். 

நான் பொதுவாக என்னுள் உள்ள சோகங்களை, கவலைகளை வெளியே காண்பித்துக் கொள்ளக் கூடாது என்பதில் மிகுந்த உறுதி உள்ளவன். சுய பச்சாபதாபம் தேட கூடாது என்பது என் கொள்கை (அதற்கு என் வாழ்வில் நான் சந்தித்த சில மனிதர்கள் தான் காரணம்). ஆயினும் ஒரு சில (4-5) மிக நெருங்கிய நண்பர்களிடம் கூட "உனக்கு என்ன தெரியும் எனக்குப் பின்னாடி எவ்வளவு பர்ச்சனைகள் இருக்குனு" கொட்டி தீர்த்து இருக்கிறேன். ஆனால் மனதளவில் பல நாட்கள் சோர்வு அடைந்து இருக்கிறேன். அந்நாட்களில் நேரத்தை விரையம் செய்து இருக்கிறேன். எனது சக்தியை (energy) ஒன்றுக்கும் உதவாத செயல்களில் கொட்டி இருக்கிறேன். எனக்கு மட்டும் ஏன் இந்த சோதனைகள் ? நான் ஒரு தவறும் செய்தது இல்லையே. யாருக்கும் கெடுதல் நினைத்து இல்லையே. என் வாழ்வின் ஒரு சில திருப்பங்களை ஏன் ஒரு சிலரது திருப்பங்கள் தீர்மானித்தது என்று எண்ணிய நாட்கள் பல. ப்ரகாசமாக (well settled) இருந்து இருக்க கூடிய இன்றைய நாட்கள் ஏன் அப்படி இல்லை. பணம் (அதற்கு உவமையாக வரும் அனைத்தும்) மகிழ்ச்சியின் அளவுகோள் அல்ல என்பதை நான் வேகு நாட்கள் முன்பே நன்கு உணர்ந்தவன். கையில் நல்ல வேலை, பணம்  இருந்தும் ஒரு மனதில் ஒரு நிறைவு இல்லையே. 

நம்மை வழி நடத்த ஒருவர் இல்லையே. குறைந்தது திசை நோக்கி கைக்காட்ட ஆளில்லையே என்று என்னுவேன். அத்தனை அறிவிருந்தும் (அறிவு ஜீவி அல்ல நான்) நாம் எந்த ஒரு முயற்சியும் மேற்க்கொள்ள வில்லையே. இவ்வருத்தங்களுக்கு காரணம் தேடிய நாட்கள் பல. அதற்கு காரணமானவர்களை குற்றம் சாட்டி இருக்கிறேன். காரணங்கள் நேர்மையானலும் அதை தேட நேரம் விரையம் செய்து இருக்கிறேன். தவறு. மிக தவறு. சில நேரம் எனக்கு ஒரு நல்ல தளம் தனை அமைத்துக் கொடுத்த எனது அம்மா, பாட்டி, ஆசான்கள், மேலாளார்கள், நல்வழி நடத்திய நண்பர்கள் இருந்தும் நாம் ஏன் அதனை முழுக்க பயன்ப்படுத்தி நெறியாக செயல்படவில்லை என்று யோச்சித்து இருக்கிறேன். ஒரு சில கேள்விகளிலும் ஒரு சில வாதங்களால் நேர்ந்த வருத்தங்களை என் கவனத்தை மங்க செய்ய ஏன் விட்டேன் என்று கேட்டுக்கொண்டு இருந்தேன். மாறாக நான் எனது பாதையில் இன்னும் கவனுத்துடன் உன்னிப்பாக சென்று இருக்க வேண்டும். என்னை இக்கவலைகள் சூழ விட்டிருக்க கூடாது. விவேகானந்தர் சொன்னதுப் போல் நரம்புகளை ஸ்டீல் (steel) ஆக கொண்டு செயல் பட்டு இருக்க வேண்டும். எப்போதும் ஓர் சோர்வான மனதுடன் உத்வேகம் இல்லாத மனதுடன் தான் இருக்கிறேன். முன்பை விட நான் எனது பயணத்தில் நேரே சென்றாலும் ஒரு பாதுகாப்பு இல்லாதது போன்ற எண்ணத்துடனே செல்கிறேன். வாழ்வை ஒரு பயத்துடனே எதிர்க்கொள்கிறேன். 

ஆனால் இன்று (கண்டிப்பாய் படியுங்கள்) எஸ்.ராமகிருஷ்ணனின் மகத்தான சந்திப்பு  (சுட்டியை தட்டவும்) மற்றும் http://www.jeyamohan.in/?p=37457 தனை பற்றி படித்தவுடன் தான் நான் உலகில் எவ்வளவு மகத்தான இரு மனிதர்களை சந்தித்து இருக்கிறேன் என்பதை உணர்ந்தேன். அவர்களிடம் பேசி இருக்கவேண்டும் என்று இப்போது ஆசைப்படுகிறேன். அவர்களை கண்டது ஒரு விதத்தில் எனக்கு மிகுந்த வேதனை கொடுத்தது. அவர்களை நினைத்து பச்சோதாபம் படவில்லை. அப்படி செய்தால் என்னை விட குறுகிய உள்ளம் கொண்டவன் வேறில்லை. ஆனால் அவர்களை பார்த்ததே மகத்தான பாக்கியமாக கருதுகிறேன். வாழ்வில் இதுப்போன்ற தருணங்கள் எல்லோருக்கும் அமைவதில்லை. எனக்கு அமைந்துள்ளது. என்னை நானே சுய விமர்சனமும் சுயபரிசீலனையும் செய்துக்கொள்ள ஒரு சந்தர்ப்பமாக எடுத்துக்கொண்டேன். என் மேல் நானே சுய பட்சாபதாபம் கொண்டு தேங்கி இருக்க கூடாது என்று உணர்ந்தேன். அப்படி பட்சாபதாபம் பட ஒன்றும் இல்லை. வாழ்வில் இனிமேல் எந்த ஒரு நொடியும் பொருளற்ற செயல்களில் ஈடுபட கூடாது என்று சபதம் பூண்டு உள்ளேன். வாழ்வில் கடந்ததை நிணைத்து சோர்வடைய கூடாது அதற்கு நேரம் செல்விடவும் கூடாது. ஒரு விதத்தில் இது சுயநலமே. ஆனால் வாழ்வில் மேலே நோக்கி ஆக்கபூர்வமாக பாசிடிவாக (positive) வாழ எனக்கு இந்த சந்திப்பு தேவைப்பட்டுள்ளது. இதுப்போல் வாழ்வில் பலதடவை எழுச்சிப் பெற்றுள்ளேன். ஆனால் நான் பின்னோக்கி சென்றது இல்லை. அதன் பிறகு சிறப்பாகவே செயல்பட்டுள்ளேன். இந்த தடவையும் அப்படியே அமையும்.

2 comments: