Featured Post

Daily Project திருக்குறள்

Dear Readers / Friends, http://DailyProjectThirukkural.blogspot.com/    By interpreting various meanings for every word in a Thirukkur...

January 20, 2021

அஞ்சலி : டாக்டர் ஷாந்தா / Dr.Shanta - வாழ்க உன் புகழ்

டாக்டர் ஷாந்தா அவர்களின் பெயரை சில வருடங்கள் முன்பு ஒரு தொலைக்காட்சி நிகழ்ச்சியின் மூலமாக கேள்விப்பட்டேன். அவர் சென்னையில் உள்ள அடையாறு புற்றுநோய் நிறுவனத்தில் பல ஆண்டுகளாக சேவை செய்துவருகிறார் என்ற அளவிலேயே கேள்விப்பட்டேன். பின்பு அவரைப் பற்றி அறிந்துக்கொண்டதில் அவர் தந்நலம் இன்றி பிறர்நலத்திற்காக தன் வாழ்வை முழுவதுமாய் அளித்தவர் என்று உணர்ந்தேன். 

அவ்வளவு தான் அவரைப் பற்றி எனக்கு தெரியும். ஆனால் அதற்கு மேல் அவரைப் பற்றி ஒன்றும் தெரியாது என்பதை ஒப்புக்கொள்கிறேன். ஆனால் இந்தியா போன்ற வளர்ந்துவரும் ஒரு நாட்டில் ஒரு மாபெரும் நிறுவனத்தை பிரதிபலன் பாராமல் 60 ஆண்டுகளுக்கும் மேலாக (குறிப்பாக இந்தியாவின் சுதந்திரத்திற்குப் பிறகு) சேவையாற்றி அதனை பல ஆண்டு காலம் இயக்குவதும் ஏழைகளுக்கும் புற்றுநோய்க்கான சிகிழ்ச்சை வசதிகளை அளிப்பது என்றால் அது ஒரு இமாலாய செயல் என்று என்னால் உணர முடிகிறது. 

மேலாண்மையை கற்ற ஒரு மாணவனாக எனக்கு ஒரு மருத்துவ நிறுவனத்தை நடத்தும் சிக்கல்கள் என்ன, பொருளாதார தேவைகள் என்ன, அதற்கு தேவைப்படும் நிர்வாக திறன் என்ன என்று ஓரளவு உணர முடியும். ஆனால் அவற்றையெல்லாம் தாண்டி அதனை பல ஆண்டு காலமாக செயலாற்ற வேண்டும் என்றால் அதற்கு பிறர் மீது அன்பு, ஒப்புரவு, கண்ணோட்டம் எவ்வளவு அவசியம் என்பதை மறுக்க முடியாது. தன் செயலை வாழ்வின் பொருளாக மாற்றிக்கொண்டார். பிறருக்கு பயனுள்ள வாழ்வே வாழ்வு. அதனால் தான் அவர் சான்றோர். பெரியோர். 

டாக்டர் ஷாந்தா, மெட்ரோ மேன் ஈ.ஸ்ரீதரன்(Metro Man E.Sridharan) போன்றோர் பெருஞ்செயல்களை செய்தவர்கள். இவர்களை பற்றிய நல்ல ஒரு வாழ்க்கை குறிப்பு புத்தக வடிவில் இல்லை என்பது எவ்வளவு பெரிய இழப்பு நம் சமூகத்திற்கு. அவர்களைப் பற்றிய நல்ல புத்தகங்கள் விரைவில் வெளிவரவேண்டும்.

யோகிகள், எழுத்தாளர்கள் என்று சிலர் ஞானமே பாதையேன கொண்டவர்கள். அது ஞானமார்க்கம். கிருஷ்ணம்மாள் ஜெகந்நாதன் போன்ற சிலர் செயல் வழி ஞானம் அடைந்தவர்கள். டாக்டர் ஷாந்தா போன்றோர் தான் பெற்ற அறிவை சேவையில் பயன்படுத்தி வாழ்வின் நிறைவை பெற்றவர்கள். ஆனால் வாழ்வில் ஒருபோதும் சென்றடையவில்லை எனும் நிறைவின்மை கொண்டு வாழ்ந்தவர்கள். 

வாழ்வில் பலர் நல்ல சூழ்நிலைகளாலும் நல்ல முன் உதாரணங்களாலும் சூழப்பட்டு இருக்கிறார்கள். ஆனால் எத்தனைப் பேர் அவற்றைப் பயன்படுத்தி பிறருக்கு பயனுள்ளதாய் வாழ்ந்துள்ளார்கள் என்று கணக்கிட்டால் நமக்கு மிக குறைவான மக்களே எஞ்சுவார்கள். இவ்வுலகில் சொகுசும் வசதியும் மூச்சு காற்றுப்போல் வேண்டும் என்று நினைக்கும் மக்களே அதிகம். குறிப்பாக வசதிப்படைத்தவர்களும் அறிவை (ஞானத்துடன் குழுப்பிக்கொண்டு) ஆணவமாய் தலையில் சூடிக்கொண்டு அலையும் மக்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்துக்கொண்டு இருக்கிறது. மனதில் தராசை வைத்துக்கொண்டு மற்றவர்களை எடைப்போடும் மக்களே மிகுதி. அவர்கள் பிறருக்கு என்ன செய்தார்கள் என்று அவர்கள் திரும்பிபார்த்தால் அவர்களே வெட்கி தலைகுனிவார்கள் அல்லது சால்ஜாப்பு சொல்வார்கள். உண்டு உறங்கி புணர்ந்து பின் மாயும் இந்த எளியோர்கள் சிறுமை வாய்ந்தவர்கள். இவர்கள் தங்களின் சூழலால் பயனுற்ற கல்வியைக்கொண்டு ஊதியத்திற்காக சில அன்றாட வேலைகளை செய்து தன்னை ஒரு படி மேல் என்று தவறாக நினைத்துக்கொள்ளும் சிறியோர்கள்.

மேற்சொன்ன பத்தியில் கூறப்பட்டுள்ள எண்ணற்ற சிறியோர்கள் மத்தியில் வாழ்ந்த ஒரு பெரியோர் என்றால் அது டாக்டர் ஷாந்தா போன்றவர் தான். செய்வதற்கு அரிய செயல்களை செய்தவர். அதனால் தான் அவர் பெரியோர். தன்னுயிர் தான் அற வாழ்ந்தவர். எழை எளியோர்க்கென வாழ்ந்தவர். அதனால் தான் இவரை இவ்வுலகத்தில் உள்ள எல்லா உயிர்களும் கைத்தொழுகின்றன.

டாக்டர் ஷாந்தா போன்று நான் வாழ்வில் ஒரு சில வருடங்கள் சேவையாற்றினால் கூட நான் பயனுள்ள ஒரு வாழ்வை வந்ததாய் உணர்வேன்.

டாக்டர் ஷாந்தவை நினைத்தால் எனக்கு நான்கு திருக்குறள்கள் நினைவுக்கு வருகின்றன. அவை

1) குறள் 268 (பொருளுக்கு சுட்டியைத் தட்டவும்)
தன்னுயிர் தான்அறப் பெற்றானை ஏனைய
மன்னுயி ரெல்லாந் தொழும்

2) குறள் 26 (பொருளுக்கு சுட்டியைத் தட்டவும்)

3) குறள் 505 (பொருளுக்கு சுட்டியைத் தட்டவும்)

4) குறள் 983  (பொருளுக்கு சுட்டியைத் தட்டவும்)

1965-ல் எம்.ஜி.ஆர். நடிப்பில் வெளிவந்த ‘பணம் படைத்தவன்’ திரைப்படத்தில் கவிஞர் வாலி எழுதிய “கண் போன போக்கிலே கால் போகலாமா” பாடலில் இறுதியாக வரும் வரிகள் இவை 
”இருந்தாலும் மறைந்தாலும் பேர் சொல்ல வேண்டும்
இவர் போல யார் என்று ஊர் சொல்ல வேண்டும்…”

டாக்டர் ஷாந்தா பேர் நீடூடி வாழும்.

டாக்டர் ஷாந்தாவின் புகழ் வளரட்டும்.

டாக்டர் ஷாந்தாவுக்கு அஞ்சலி
Date 19 Jan 2021












No comments:

Post a Comment