Featured Post

Daily Project திருக்குறள்

Dear Readers / Friends, http://DailyProjectThirukkural.blogspot.com/    By interpreting various meanings for every word in a Thirukkur...

November 06, 2020

குறள் - நன்றி - கடிதம்

எனது கடிதம் - 26-Oct-2020

அன்பிற்கும் வணக்கத்திற்கும் உரிய ஜெ,

நலமாக இருக்கிறீர்களா?

சில காலமாக கடிதங்கள் எழுதவில்லை. ஆயினும் உங்களையும் வெண்முரசையும் தொடர்ந்து வாசித்து வருகிறேன். 

திருக்குறள் வாசிப்பு 
2013 இறுதியில் நாளும் ஒரு திருக்குறள் (https://DailyProjectThirukkural.blogspot.com/) கற்க வேண்டும் என்று ஒரு செயலில் இறங்கினேன். ஆனால் தொடர்ச்சியாக செய்யவில்லை. ஆனால் கடந்த 2.5 வருடங்களாக நாளும் அரைமணிநேரம் எடுத்துக்கொண்டு தொடர்ந்து திருக்குறளை கற்றேன். சென்ற வாரம் அதனை (முதல் நிலை கற்றல்/ஸ்வாத்யாயம்) நிறைவு செய்தேன்.

துவக்கத்தில் வெறுமென  திருக்குறளைப் படித்துக்கொண்டிருந்த நான், பின்பு திருக்குறளில் இருந்து அதிகம் பயன்பெற்றேன் என்றால் அதற்கு காரணம் நீங்கள் கூறியதுப்போல் ஒவ்வொரு சொல்லுக்கும் அகராதியில்(agarathi.com) இருந்து எல்லா அர்த்தங்களையும் அறிந்து குறளை ஸ்வாத்யாயம் செய்தது தான். உங்களின் “மனப்பாடம்” கட்டுரையும், யூட்யுபில் உள்ள உங்களது குறளினிது உரைகளும் மற்றும் இந்திய சிந்தனை மரபில் குறள் கட்டுரைகளும் எனக்கு வழிகாட்டியாக அமைந்தன. நீங்கள் பரிந்துரைத்த கி.வா.ஜகன்னாதன் ஆராய்ச்சிப் பதிப்பும் (மற்ற இலக்கியங்களில் திருக்குறள் எடுத்தாளப்பட்டது) உதவியாக இருந்தது. மனனம் செய்த பல குறள்களில் சில குறள்கள் ஆப்த்வாக்கியமாக தோன்றி தெளிவு கொடுத்ததும் உண்டு. சில குறள்கள் பல குழப்பங்களுக்கு தீர்வை கொடுத்தது என்றும் கூறலாம். குறள்கள் எனது சுயமுன்னேற்றத்திற்கும் நிர்வாக மேலாண்மைக்கும் வழிக்காட்டியாக இருந்தது. 

இக்கற்றல் பயணம் எனக்கு பயனுள்ளதாகவும் மனதிற்குநிறைவாகவும் இருந்தது.

திருக்குறளை (பொதுவாக இலக்கியங்களை) விவாதிப்பது பற்றி நீங்கள் கூறியதுப்போல் என் தோழி ஒருவருடன் (இதுவரையில் 79 குறள்கள்) விவாதித்து வந்துக்கொண்டு இருக்கிறேன். அதன் விளைவாக பிழைத்துணர்ந்த ஒன்றை இழைத்துணரும் வாய்ப்பும் கிடைத்தது/கிடைக்கிறது. ஆதலால் திருக்குறள் மறுவாசிப்பும் விவாதமும் மேலும் தெளிவுப்பெற உதவுகின்றன. 

மேலும் எனது தங்கையின் 7 வயது மகள் ப்ரத்ன்யாவிற்கு மனனம் செய்ய பயிற்சி அளித்துக்கொண்டு இருக்கிறேன். இதுவரையில் 94 திருக்குறள்கள் ஆயிற்று. துவக்கத்தில் வெறுமென மனனம் செய்தாள், போக போக அதன் அர்த்தத்தையும் கேட்டு அறிந்துக்கொள்கிறாள். பிற்காலத்தில் அவளுக்கு திருக்குறள் பயனாக அமையும் என்று நம்புகிறேன். ஒருவிதத்தில் எனக்கும் மனனம் ஆகிறது. இவ்வாறு ப்ரத்ன்யாவிற்கு சொல்லித்தர வாரத்தில் மூன்று நாட்கள் ஒரு 10 நிமிடம் எடுக்கவில்லை என்றால் திருக்குறளை மனனம் செய்வேனா என்று தெரியவில்லை. இந்த இருவழி கற்றல் வழி நன்மையாகவும் இனிமையாகவும் உள்ளது. 

மிக்க நன்றி ஜெ🙏. 

அன்புடன்
அன்புள்ள ராஜேஷ்

ஒரு செவ்வியல்நூலை வாழ்நாள் முழுக்க பயிலலாம். குறள் அதற்கு அப்பால் சூத்திரமும் கூட. அது பயிலப்படவேண்டிய நூல் மட்டுமல்ல, பிற நூல்களை பயில்வதற்குரிய அடித்தளத்தை அமைக்கும் நூலும்கூட.

சமீபத்தில் ஒரு நாவலை வாசித்துக்கொண்டிருந்தேன். அதிலிருந்த தந்தைமகன் உறவை புரிந்துகொள்ள முயன்றபோது

தம்பொருள் என்பதம் மக்கள் அவர்பொருள்
தத்தம் வினையான் வரும்
என்றவரி வந்து நினைவை தட்டியது. பொருள் என்று நாம் இங்கே உணர்வனவற்றில் குழந்தைகள்தான் உண்மையான பொருள். அது நாம் செய்த ஊழ்வினையால் அமையும்.

நெடுந்தொலைவு செல்லவைத்தது

ஜெ

No comments:

Post a Comment