Featured Post

Daily Project திருக்குறள்

Dear Readers / Friends, http://DailyProjectThirukkural.blogspot.com/    By interpreting various meanings for every word in a Thirukkur...

November 05, 2020

பொய்த்தேவு- கண்டடைதல்

எனது கடிதம் - 26-Oct-2020

அன்பிற்கும் வணக்கத்திற்கும் உரிய ஜெ,

பொய்த்தேவு
சென்ற வாரம் க.நா.சு.வின் “பொய்த்தேவு” நாவலை வாசித்தேன். மிகவும் பிடித்து இருந்தது. அதனை ஒரு சினாப்சிஸ் ஆக தொகுத்துக்கொண்டேன் எனது வலைப்பூவில். 

இந்நாவலில்“ஆத்ம பலம்” பற்றி குறிப்பிட்டு இருக்கப்படும். சாம்பமூர்த்தியின் ”ஆத்மபலம் அவர் எவ்வளவுதான் தவறு செய்தாலும் ஒரு விநாடியில் அவரை திருத்திக் காப்பாற்றிவிடும்” என்று ஒரு வரி வரும். அவ்வரியைப் பற்றி பல முறை யோசித்து இருந்துக்கொண்டு இருந்தேன். ஏனெனில் நான் சமீப காலங்களில் சந்தித்த தோல்விகளுக்கு எனது ஆத்மபலம் குன்றியிருந்தது காரணமோ என்று எனது மனதில் சில காலமாய் ஓடிக்கொண்டு இருந்தது. அவ்வரி அதனைக் கூறியதுப்போல் இருந்தது. மேலும் ”நோயெல்லாம் நோய்செய்தார் மேலவாம்” இக்குறளை பிறர்க்கு என்று எடுத்துக்கொள்ளாமல் எனக்கு என்று பொருத்திக்கொண்டேன். பிரச்சனைக்கான விடையை என்னிடமே தேடிக்கொள்ள முயன்றேன். எனது சில தவறுகள் எனக்குத் தெரியும். அவற்றில் சிலவற்றை சீர் செய்தேன். அதன் பலனும் கிடைத்தது. ஆனால் ஆத்மபலம் அதிகரித்ததாக உணரவில்லை. 

குழந்தைப்பருவம் முதல் என் இருப்பத்தைந்து வயது வரையிலும் பல எதிர்மறை சூழ்நிலைகளைச் சந்தித்து இருந்தாலும் அப்பொழுது நான் நேர்மறையாகவே செயல்பட்டேன். யோசித்துப்பார்த்தால் அப்பொழுது எனக்கு பக்தி மார்க்கத்தில் சீரான ஈடுபாடு இருந்தது. உதாரணமாக வருடா வருடம் ஐம்பது நாட்கள் விரதம் இருந்து சபரிமலைக்கு சென்று வருவது என்னை நெறிப்படுத்தியதுப் போல் இருக்கிறது. கடந்த பத்துவருடங்களில் வேறு ஊர்களிலும் நாடுகளிலும் இருப்பதால் அதனை தொடர்ச்சியாக செய்ய முடியவில்லை ஊருக்கு வரும் பொழுது மட்டும் செய்கிறேன். ஊக்கமும் ஆள்வினையும் இருக்கிறது. ஆனால் தோல்விக்கு பிறகு எதிர்மறை சூழ்நிலைகளை எண்ணங்களை எதிர்க்கொள்வது சவாலாகவே இருக்கிறது. அது மேலும் சோர்வை கொடுக்கிறது. அதனால்தான் என் ஆத்ம பலம் குறைந்ததோ என்று நினைக்கிறேன். 

ஆத்ம பலம் குறைவது எங்கு என்று தெளிவாக தெரியவில்லை. ஒருவேலை அன்று நான் தெரியாமல் /பலாபலன் பார்க்காமல்(பக்தி போன்றவற்றை) செய்ததைதான் இன்று தெரிந்து செய்யவேண்டுமா என்று தெரியவில்லை.   உங்களில் தளத்தில் ஆத்ம பலம் / சக்தி என்று மூன்று நாட்களாக தேடினேன். பதில்கள் கிடைக்கவில்லை.  நீங்கள்  பல கட்டுரைகளில் தன்னறத்தை என்னவென்று கண்டடைந்து செயல்பட்டால் உற்சாகம் கிடைக்கும் என்று கூறியுள்ளீர்கள். அது தான் ஆத்ம பலமா? அல்லது என்ன? ஆத்மபலத்தை பற்றிய உங்கள் பதில் பயனுள்ளதாய் இருக்கும் என்று நம்புகிறேன்.

நன்றி.

அன்புடன்
ராஜேஷ்


அன்புள்ள ராஜேஷ்

ஒரு நாவலை வாசிக்கையில் நமக்கு ஒரு நிலைகுலைவு உருவாகிறது. நாம் அதுவரை நம்மைப்பற்றி கொண்டிருந்த எண்ணங்கள் மாறுபடுகின்றன. நம்மை நாமே உடைத்து ஆராய்கிறோம். மறு ஆக்கம் செய்துகொள்கிறோம். அவ்வாறு பொய்த்தேவு உங்களுக்குள் உருவாக்கிய கேள்விகளும் அலைவுகளுமே நீங்கள் எழுதியவை. அது அந்நாவலின் வெற்றி’

அந்தக் கேள்விகளுக்கான பதில்களை அந்நாவலை முன்வைத்தும், இதுவரை நீங்கள் வாசித்த நூல்களை முன்வைத்தும், வாழ்வறிதல்களைக்கொண்டும் நீங்கள்தான் சென்றடையவேண்டும். அதுவே இலக்கியம் நிகழ்த்தும் அகப்பயணம். அதை வெளியே ஒருவருடன் விவாதிக்கமுடியாது

ஜெ

எனது பதில் - 5-Nov-2020

அன்புள்ள ஜெ,

தங்களது பதில் பதிவை தளத்தில் கண்டேன். நன்றி.
நீங்கள் சொன்னதுப்போல் செய்து விடைத்தேடுகிறேன்.

அன்புடன்
ராஜேஷ்

No comments:

Post a Comment