நேற்று மாலை என் நண்பரின் வீட்டிற்குச் சென்றேன். வழக்கம் போல் அனைத்து உபயகுஷலோபயியும் ஆயிற்று. நண்பரின் குழந்தை நான் சென்ற தருணம் உறங்கிக்கொண்டு இருந்தான். சிறிது நேரம் பிறகு துயில் சிறிது களைந்து எட்டிப்பார்த்தான். நான் அருகில் அவனை சென்று அள்ள முயன்றேன். அழ ஆரம்பித்தான். பிறகு அவன் அப்பா அவனை மார்போடு அள்ளிக்கொண்டு அவனை சமாதானம் செய்தார். துயில் நன்றாய் களைந்த உடன் யார் புதியதாக என்று கூர்ந்து கவனித்தான். நான் சிரித்தேன். கொஞ்சம் சிரித்துவிட்டு தன் முகத்தை அவன் தந்தையின் மார்பில் புதைத்துக்கொண்டான். இம்முறை, நண்பரின் குழந்தை நன்றாக வளர்ந்திருந்தான் என்று எனக்கு தோன்றியது. கொஞ்ச நேரம் கழித்து என்னை எட்டி எட்டிப் பார்த்தான், சிரித்தான் பிறகு முகத்தை திருப்பிகொண்டான். இதை ஒரு விளையாட்டை செய்துக்கொண்டு இருந்தான். சிறிது நேரம் கழித்து நான் வீட்டிற்கு கிளம்பினேன். அப்போது கீழேப் பேசிக் கொண்டு இருந்தோம். அவன் கையை வைத்து என்மேல் மகிழ்ச்சியாக அடித்துக் கொண்டு இருந்தான். அவன் கண்கள் என்னையே நோக்கிக்கொண்டு இருந்தன என்று எனக்கு இப்போழுது தோன்றுகிறது. நான் சிரித்தால் அவனும் சிரிக்கிறான். பல நேரங்களில் அவனே என்னை பார்த்து சிரித்துக்கொள்கிறான். எனக்கு இப்போது தோன்றுவது ஒன்று தான். அவன் என்னிடம் எதிர்பார்த்தது (எதிர்ப்பார்த்தானா என்றால் எனக்கு தெரியாது) பதிலுக்கு ஒரு சிரிப்பு. சிரிப்பு மழையில் நனைந்தபின் நான் வீட்டிற்கு செல்கையில் வழியில் சற்று வான் மழையிலும் நனைந்தேன்.
இன்று மாலை இச்சம்பவத்தை அசைப்போட்டுக்கொண்டு இருந்தேன். அம்மழலை எதர்க்காக என்னிடம் சிரித்தான் ? ஒரு வேளை அவன் என்னிடம் விளையாடிக்கொண்டு இருந்தானா ? நான் ஒரு விளையாட்டு பொம்மையா ? நான் எப்படிப் பார்க்கிறேன் என்றால், அவன் என்மேல் வைத்தது நம்பிக்கை - நான் பதிலுக்கு சிரிப்பேன் என்று. சிரித்தேன். அவனும் சிரித்தான்.
குழலினிது யாழினிது என்பர் தன்மக்கள்
மழலை சொல் கேளாதார்
என்ற வள்ளுவரின் வாக்கை முழுமையாக மற்றுமொரு முறை அனுபவித்தேன்.
அவனுடன் பேசும் நாட்களுக்கு நான் காத்துக்கொண்டு இருக்கிறேன்.
No comments:
Post a Comment