October 17, 2013

வாடிவாசல் - 1959 - சி.சு.செல்லப்பா

சென்ற வெள்ளிக்கிழமை (11-அக்டோபர்) அன்று பெங்களுரில் இருந்து புதுவைக்கு சரஸ்வதி பூஜைக்காக சென்றேன். அன்று மாலை ரயிலுக்கு புறப்பட சிறிது நேரம் இருந்தது. அப்போது சமீபத்தில் புத்தக கண்காட்சியில் வாங்கிய வாடிவாசல் என்ற குறுநாவலை வாசிக்கலாம் என்று எடுத்தேன். ரயிலில் மீதி பாதியை வாசித்தேன்.வாடிவாசல் அமரர் திரு.சி.சு.செல்லப்பா அவர்கள் 1959 ஆண்டு எழுதியது. இந்த நூல் ஜல்லிக்கட்டு நடக்கும் இடத்தில் உள்ள ஒரு கிழவன் மற்றும் கிழக்கில் இருந்து வந்துள்ள பிச்சி, முருகு ஆகியவர்களின் நடுவே நடக்கும் உரையாடலில் துவங்குகிறது. கிழவன் ஜல்லிகட்டை பற்றி சற்று விவரிக்கிறான். கிழவனுக்கும் தெரியும் வகையில் பிச்சியும், முருகுவும் மனம் பாதி பேச்சிலும் பாதி நோட்டம் விடுவதுமாக இருந்தார்கள். அப்போது அம்புலி என்கிற ஒரு ஜல்லிக்கட்டு வீரரை பற்றி சிலாகிக்கும் வகையாக பேசுகிறார். அம்புலிக்கு காரி என்னும் காளையால் நேர்ந்த துயரத்தை வருத்துடன் சொல்கிறார். அப்போது கிழவன் திகுதிகுக்கும் வகையில் இது அம்புலி புள்ள பிச்சி என்று முருகு சொல்கிறான். தன் தந்தையிடம் அவரின் மரணப் படுக்கையில் கொடுத்த வாக்கிற்காக காரியை அடக்குவதற்க்காக வந்திருக்கிறான் பிச்சி. வழக்கம் போல் காரி போன்ற பிசாசு காளைகளை ஜல்லிக்கட்டில் விட்டு மிருகங்களின் மூலம் பேர் ஈட்டிக்கொள்ளும் ஜமிந்தார் வந்திருந்தார். மற்றும் திறளாய் திரண்டிருந்த மக்கள். இது தான் கதைகளம் ஆடுகளுமும் கூட. இதில் இருந்து இம்மி அளவும் வெளியே செல்லவில்லை. சி.சு.செல்லப்பா அவர்கள் இதனை ஒரு முழு நாவலாக படைப்பதற்கு அனைத்து சாத்திய கூறுகள் இருந்தப்பின்னும் அவர் அவ்வழியே செல்லவில்லை. ஒரு போதும் வாடிவாசல் நடக்கும் ஊரை பற்றியோ, அல்லது, அங்கு திருவிழாக்கு கூடியிருப்பதுப்போல் கூடியிருக்கும் மக்களை பற்றியோ, அல்லது, பிச்சி, பிச்சியின் தந்தை அம்புலி, ஜமிந்தார்களின் பின்புலத்தை பற்றி ஒருப் போதும் நாவல் செல்லவில்லை.

வாடிவாசல் என்பது ஜல்லிக்கட்டில் காளைகள் ஆடுகளத்திற்குள் நுழைவதற்கான நுழைவு கதவு. அதன் வழியாக தான் நூற்றுக்கணக்கான காளைகளை பலர் விடுவர். இந்த நூலில் சி.சு.செல்லாப்பா அவர்கள் ஜல்லிக்கட்டின் ஆடுகளத்தை அவரது வர்ணஜாலத்தின் மூலம் கண் முன் நிறுத்துகிறார் என்பதே மெய். காளை சீறும் விதம், மனிதன் காளையின் கொம்பை பிடிக்கும் விதம், மனிதன் காளையை நோக்கம் (காளையின் குணாதிசியங்களை சுதாரிப்பது) விடும் விதம், காளை மனிதனை தூக்கி வீசும் இடம், ஆகியவற்றை மிக நேர்த்தியாக சொல்லி இருப்பார். மனிதன் காளையை வீழ்த்தும் தருணங்களில் ஜமிந்தார், கிழவன், காரி காளை, பிச்சி, மக்கள் ஆகியோரின் மிக யதார்த்தமான மனநிலையை மிக அழகாக பதிவுசெய்து இருப்பார். சினிமாவில் காட்டுவது போல் அவ்வளவு எளிதல்ல காளையின் கொம்பை பிடித்து அதனை அடக்குவது என்பது நமக்கு புரியும். 
வாடிவாசல் மூலம் நான் உணர்ந்த சில உண்மைகள் : 
1) மனிதனுக்கு தெரியும் அது விளையாட்டு என்று. ஆனால் காளைக்கு தெரியாது அது விளையாட்டு என்று. நம்மிடம் இரக்கம் எதிர்ப்பார்த்தே அது உள்ளது. அதனை நாம் யாரும் தருவதில்லை.

2) காளை மூலம் வெற்றி பெற்று தன் அதிகாரத்தை தனது சுற்றுப்புரத்திற்ககும் தன்னிடம் உள்ள மனிதர்களும் ஊர் மக்களுக்கும் காண்பிக்கிறான் ஜமிந்தார். ஆனால் அதே காளை தோற்றால் தயவு தாட்சியம் இல்லாம் அங்கேயே கொல்கிறான். அதை கொன்று விட்டு திரும்பிக் கூட பார்க்காமல் ஒரு வருத்தமும் இல்லாமல் வீடு திரும்புகிறான்.

3)மனிதனில் உள்ள மிருகம் சினம் கொண்டு வருவதை பிச்சியின் விளையாட்டில் காணலாம். 

4) தன் காளை தோற்றாலும் பரவாயில்லை காளையை வீழ்த்து என சொல்லும் ஜமிந்தார் மனிதர்கள் மிருகங்களையும் (மனிதர்களையும்) அடக்கி ஆள நினைக்கும் அதிகாரத்துவுத்தின் நிகரில்லா சான்று.

5) வெரும் இரண்டு பவுன் தங்க காசுக்கிற்காக காளையிடம் உயிரை தூக்கி விசுகிறார்கள் மனிதர்கள்.

6) தொடை குத்து தான் நாலு நாள்-அ சரியாப் போய்டும். வேப்ப எண்ணை காச்சு ஊத்தினா சரியாப் போய்டும் என கிழடுகளும் மனிதர்களும் அதை சொல்பவர்கள் பலர் உண்டு.

இதனை படித்துவிட்டு ஜல்லிகட்டுப் போன்ற விளையாட்டுக்கள் தேவையா போன்ற பல கேள்விகள் எல்லோர் மனதிலும் எழும். எனக்கும். ஆனால் இந்த குறுநாவல் அதனை சொல்வதற்கு அல்ல. நான் மேற்சொன்ன அடிப்படை உண்மைகளை பின்புலத்தில் மிக நேரகா நேர்த்தியாக திரு.சி.சு.செல்லப்பா அவர்கள் சொல்லி இருப்பார். இன்னொரு முறை படித்தால் இன்னும் சில உண்மைகளை உணர்வேன் என்று நம்புகிறேன். 

ஒரு 2 மணி நேர வாசிப்பிற்கான ஒரு நல்ல வாசிப்பு இந்த 50-60 பக்க குறுநாவல். மிக சிறந்த் இச்சிற்றிலக்கியத்தை தங்களுக்கு அன்போடு பரிந்துரைக்கிறேன்.


பி.கு: குறிப்பாக ஒன்று சொல்லவேண்டும், சி.சு.செல்லப்பா இந்நூலில் சொல்லாதது, வேரு எங்கோ நான் வாசித்தது, ஜல்லிகட்டு என்றென்பது தமிழர் பண்பாட்டில் ஆயிரம் ஆண்டு காலத்திற்கும் மேலாக வரலாற்றில் அருபடாமல் தொடரும் ஒரு விளையாட்டு. 

பொருள்: துன்பம் விளைவிக்கும் எந்த செயலையும் செய்யாதே. 
Meaning: Do not do anything that may hurt (self & others)

No comments:

Post a Comment