Featured Post

Daily Project திருக்குறள்

Dear Readers / Friends, http://DailyProjectThirukkural.blogspot.com/    By interpreting various meanings for every word in a Thirukkur...

January 02, 2026

ஆரோமலே: அன்பின் வழியது உயிர்நிலை

 நேற்று (30-டிசம்பர்-2025) நான் ஆரோமலே படம் பார்த்தேன்.



எனக்கு அது குணப்படுத்தும் மருந்தாக ஒரு அழகிய நினைவாக இருந்தது எனலாம். கொஞ்சம் trans regressive ஆகும் இருக்கும்

2010 இல் நான் வெண்தாமரையை விரும்பி என் காதலை சொன்னேன். ஆனால் அவள் நிராகரித்துவிட்டால். அப்போது மனதளவிலும் அறிவிலும் நான் மிக பலகீனமாக இருந்தேன். அதை எப்படி கையாள்வது என்றே தெரியவில்லை. அவளிடம் மன்றாடினேன்..நல்லவேளை நான் அப்போது ஒருவாரத்தில் தென் கொரியா சென்றுவிட்டேன். இல்லையேல் அவளிடம் மன்றாடி அவளுக்கு தர்மசங்கடமும் மன உளைச்சலும் கொடுத்திருக்க வாய்ப்பிருக்கிறது.

ஆனால் அக்காலகட்டத்தில் நான் ஒரு depression இல் இருந்தேன். கட்டினா அவளை தான் கட்ட வேண்டும். வெளிநாட்டில் படித்து ஒரு நல்ல முன்னேறிய நிலைமைக்கு வந்து அவர் பெற்றோரிடம் பெண் கேட்கவேண்டும் என்ற மனக்கோட்டையெல்லாம் கட்டி இருந்தேன். 2014 இல் வெளிநாட்டிற்கு படிக்கவும் சென்றேன்.

ஆனால் 2015 இல் internship இல் இருந்த சமயம் வசந்த் போன் செய்து வெண்தாமரைக்கு கல்யாணம் ஆகிவிட்டதாக சொன்னான். எனக்கு உண்மையிலேயே சந்தோஷம். அவளுக்கு கல்யாணம் ஆனதற்காக அல்ல. அப்பாடா இந்த ரோட் இங்கே முடிந்தது, இனிமேல் take diversion போன்ற நிறைவு. ஒரு ஆசுவாசம். இனிமேல் மனம் பகற்கனவுகளில் உழலாதல்லவா? (உண்மையாக take diversion என்பது போல் அடுத்த பெண்ணை பார்க்க ஆரம்பித்தேன் 😜)

பின்பு முத்து, விவேக் போன்ற சில நண்பர்களிடம் இதைப்பற்றி பேசி இருக்கிறேன். எல்லோருமே இதை போல் தான் அந்த நிராகரிப்பையை கையாள்வதில் சிக்கல்கள் இருந்ததாக சொன்னார்கள். 

ஜெயமோகனை படித்து ஆரம்பித்த சில ஆண்டுகள் அப்போது. பல கடிதங்களில் ஒரு கடிதம் இந்த காதல் நிராகரிப்பை பற்றி. ஜெயமோகன் தயவு சாட்சிநியம் இன்றி நீங்க புண்பட்டது உங்கள் அகங்காரத்தால் என்று அந்த வாசகருக்கு பதில் அளித்து இருந்தார். அது என் மனதை தைத்தது என்றே சொல்லலாம். நம்மை சிதில் சிதிலாய் உடைத்து பின்பு கட்டி எழுப்புவது தானே இலக்கியம். அதுதான் ஜெ கடிதம் செய்தது. 

நாம் அதுவரை அடைந்த வெற்றிகள் முன்னேற்றங்கள் நம்மை எந்தப் பெண்ணும் நிராகரிக்க மாட்டாள் என்ற ஆணவம். மேலும் நம் குறைகளை அவர்கள் காணுவார்கள் என்பதை காணத் தவறியது. மேலும் அந்த பெண்ணை impress/கவரும் அளவு நான் எதுவும் பெரிதாய் செய்யவில்லை. நானும் ஒரு சராசரியாகவே இருந்தேன்.  பின்பு எனது தவறுகளை உணர்ந்தேன். அதுவே எனக்கு மருந்தாக இருந்தது எனலாம். 

ஆயினும் எப்போதும் அவளை அடுத்த முறை airport போன்ற இடத்தில் சந்தித்தால் அவளுக்கும் ஒரு நல்ல தருணமாக  ஒரு வேளை அவளுக்கும் ஒரு closure வேண்டுமெனில் எங்கள் சந்திப்பு அத்தகையதாக அமைய வேண்டும். பால்ய கால குடும்ப நண்பரையோ அல்லது குடும்ப நண்பர்(uncle இல்) பிள்ளைகளையோ நாம் ஊருக்கு வரும்போது எதேச்சையாக பார்க்கும் கதைக்கும் பொது வரும் வாஞ்சை போல. 

பின்பு வாழ்க்கை இல்லாத வாழ்க்கையில் பல ஹேர்பின் வளைவுகள். பெரிதாக ஒன்றும் இல்லை. 

இத்தகைய நிலையில் நவம்பர் 2025 மாதம் எனது hard disk இல் இடம் இனிமேல் இல்லை என்ற சூழ்நிலை வந்தது. கண்டிப்பாய் பார்க்க மாட்டேன் என்ற படங்களை நீக்கினேன். பின்பு சில படங்களை தேர்ந்தெடுத்து பார்த்தேன். 

டிசம்பர் கடைசி வாரத்தில் Alt+Tab - Life of Ram என்ற சிStand up comedian Ramkumar இன்' 2 மணி நேர நகைச்சுவை நிகழ்ச்சியை youtube இல் பார்த்தேன். Ramkumar உம் 1984 பிறந்தவர் தான். அவர் அவருடைய கல்லூரி ,  IT career, weight loss, standup comedy career வாழ்க்கை தழுவி ஒரு நகைச்சுவை நிகழ்ச்சியை செய்து இருந்தார். அதில் கௌதம் வாசுதேவ் மேனன் படங்கள் போல் காதல் நம் வாழ்வில் இல்லை. Onsite இல்லை என்று பேசி இருப்பார். அப்போதே என் மனநிலை வாரணம் ஆயிரம் விண்ணைத்தாண்டி வருவாயா படங்கள் தரும் கிரக்கத்திலிருந்தது. விண்ணைத்தாண்டி வருவாயவில் அரும் ஆரோமலே பாடல் அப்படம் வந்த சமயத்தில் எனக்கு மிக பிடித்த பாடலாக என் காதுகளில் ஒலித்துக்கொண்டிருந்தது

வருட கடைசி ஆயிற்றே என்று 30 டிசம்பர் அன்று ஒரு நாள் பீல்  குஃட் பார்க்கலாம் என்று ஆரோமலே படம் பார்த்தேன். எவ்வளவு நல்ல தேர்வு.

ஒரு கல்லூரி படிக்கும் இளைஞன் அஜித் (கிஷென் தாஸ்) சினிமா பார்த்து சினிமாவில் வருவதுபோல் காதல் அமையும் என்று கனவுலகத்தில் (fantasize செய்து கொண்டு) சஞ்சரிக்கிறான். அவனுக்கு பள்ளி கல்லூரிகளில் காதல் தோல்விகள். ஒரு கட்டத்தில் வேலைக்கு செல்கிறான். அங்கு ஒரு பெண்ணை பார்க்கிறான். அவள் மீதும் காதல் fantasy கொள்கிறான். ஆனால் அந்த அஞ்சலி (ஷிவாத்மிகா) பெண்ணோ மிகவும் உறுதியான பெண்.  இளவயதிலேயே கவனம் குவித்து உழைத்து முன்னேறியவள். இவனுக்கு மேலாளர்.  இவன் சோம்பலை முதல் meeting இறுதியில் திடமாய் கண்டிக்கிறாள். பின்பு இருவருக்கும் ஒரு cold professional உறவு தான் இருந்து வந்தது. 

ஒரு கட்டத்தில் அஞ்சலி  அஜித் இன் வேலை பிடிக்காமல் அவனை வேலையைவிட்டு நீக்கிவிடுவாள். அது வாக்குவாதமாக மாறி இருவருக்கும் இடையில் சண்டைமூண்டுவிடும். அப்போது அங்கு இருக்கும் நரசிம்மன் கதாபாத்திரத்தால் ஒரு சவாலிற்காக அவன் மீண்டும் வேலையில் சேருவதுபோல் ஆகும். பின்பு ஒருகட்டத்தில் நரசிம்மன் (நடிகர் VTV கணேஷ்) இருவரையும் திட்டிவிடுவார். அதனால் அஞ்சலி 2-3 நாட்கள் அலுவகத்திற்கு வரமாட்டாள். அஜித்தோ இவனால் தான் இந்த நிலைமை என்ற குற்ற உணர்ச்சியால் அவள் வீட்டிற்கு சென்று என்ன ஆயிற்று என்று கேட்பான். அதுவே அவர்களுக்கு ஒரு உறவு முளைக்க பாலமாய் அமைந்தது. பின்பு இருவரும் நட்பு பாராட்டுவார்கள். இவர்கள் ஈஷுவதைப்பார்த்து அலுவலகமே கண்ணு போடும் (இதைப் போல் கண்ணு போடத்தா இந்த உலகமே இருக்கிறதே. எனது ரூட் 4 பஸ்ஸில் கண்கள் எல்லாம் நினைவிற்கு வருகிறது.அக்கண்களை சபிக்கிறேன். இதன் வாயிலாக).












இருவருக்கும் இடையில் காதல் தான் என்று கூட இருக்கும் நண்பன் சச்சின் சொல்லுவான். அதனால் அஜிதுக்கு ஒரு பிறந்தநாள் கொண்டாட்டத்தை ஏற்பாடு செய்வான் சச்சின். அஞ்சலி அவனுக்கு அவர்கள் இருவரும் இருக்கும் ஒரு புகைப்படத்தை ஓவியமாக தீட்டு பரிசளிப்பாள். அதை பார்த்து இது காதல் என்று நினைத்துக்கொள்வான் அஜித். அந்த நம்பிக்கையில் அவளிடம் தன் காதலை சொல்ல தயாராவான். இருவரும் இருட்டில் ரோட்டில் அவள் கார் வரையில் நடந்து செல்வார்கள். அப்போது இந்த ஓவியம் பற்றி பேசுவார்கள். பின்பு அவள் நேரம் ஆயிற்று. நாளை பார்க்கலாம் என்று சொல்லி இவனை மெலிதாக அரவணைத்திவிட்டு செல்ல முற்படுவாள். அஞ்சலி அஜிதை அரவணைக்கும்பொழுது “நாம இப்படியே இருந்துவிடுவோமா” என்று அஜித் சொல்லுவான். அஞ்சலிக்கு ”பழைய” நினைவுகள் வரும். ஆனால் அவள் சூழ்நிலையை நன்றாக கையாளுவாள். நாம் பின்பு நாளை பேசுவோம் என்று. ஆனால் (என்னை போன்ற சராசரி) அஜித் இருக்கானு சொல்லு என்று கேட்டு தொந்தரவு கட்டாயப்படுத்துவான். அஞ்சலி தவிர்பாள். ஆனால் அஜித் விடமாடான். அந்த பொழுதே break up ஆகிவிடும். அஞ்சலி கண்காணா இடத்திற்கு சென்றுவிடுவாள்.

விஜய் சேதுபதி, திரிஷா, ஆதித்யா பாஸ்கர், கௌரி கிஷன் நடித்த 96 படத்தில் ராமசந்திரனும் என்ற ராமும், ஜானகி என்ற ஜானுவும் பள்ளியில் சொல்லிக்கொள்ளாமல் காதலிப்பார்கள். பின்பு வீட்டின் சூழ்நிலையால் சொல்லிக்கொள்ளாமல் ஊரைவிட்டு காலி செய்து சென்றுவிடுவான். பின்பு 25 ஆண்டுகள் கழித்து ஒரு reunion இல் சந்திப்பார்கள். ஜானுவிற்கு கல்யாணம் ஆகி குழந்தை இருக்கும். ராம் இன்னமும் ஒண்டிகட்டை. அந்த reunion முடிந்தப்பின்பு அன்று இரவு ஜானுவும் ராமும் ஒன்றாக பொழுதை பகிர்ந்துக்கொள்வார்கள். அந்த இரவில் ஒரு இரவுநேர restaurant இற்கு செல்வார்கள். அங்கு ராமின் assistance photographers பெண்கள் அவர்களில் ஒருவருடைய பிறந்தநாளை கொண்டாட வந்திருப்பார்கள்.



அவர்கள் ஜானுவையும் ராமையும் எதேச்சையாக பார்த்துவிடுவார்கள். இருவரும் கணவன் மனைவி என்று தவறாக நினைத்து பேசிக்கொண்டு இருப்பார்கள். ஜானும் ஆம் என்பதுபோல் அந்த பொய்யை சிறிது நேரம் நடிப்பாள். அப்போது இது பள்ளிக்கால காதல் என்று தெரிய வரும். யார் propose செய்தார்கள் என்று கேட்க ராம் என்று ஜானு சொல்லுவாள். அந்த தருணத்தை விளக்கவும். அதுவே எனது பிறந்தநாள் பரிசு என்று பிறந்தநாள் பெண் அன்புகட்டளை இடுவாள்.

ஜானு அப்போது அவர்கள் இருவரும் கல்லூரியில் சந்திக்க இருந்த தருணம் காலத்தின் ஒரு விளையாட்டால் கைவிட்டுப்போன அந்த தருணத்தை மாற்றி ராம் எப்படி propose செய்தான் (செய்து இருப்பான்) என்று சொல்லுவாள். அந்த காட்சிக்கு தியேட்டரே ஆராவரமிட்டு கை தட்டியது. கேட்கும் அந்த assistants ராம் அதை சொன்ன ஜானும் (நாமும்) கண்கலங்கிவிட்டார்கள். அது ஒரு happy ending எனலாம். ஆனால் இயல்புவாழ்க்கையில் அன்று அதிகாலை ஜானு விமானம் பிடித்து சிங்கப்பூர் சென்றுவிடுவாள். எதற்கு எதை சொல்கிறேன் என்றால் திரையில் ஒரு பொய் happy ending ஆக நடக்கும். அது இருவருக்குமே மிக இதமாக இருக்கும். நமக்கும் தான். ராமிற்கு அது ஒரு பெரிய closure எனலாம்.



அதுபோல் எல்லோரும் கற்பனை செய்துத்தான் பார்ப்போம் அல்லவா?

அஜிதோ பித்திபிடித்தவன் போல் சவமாய் அலைவான். அப்போது அவன் அம்மா (நடிகை துளசி) அஜித்க்கு தனது கதையை  தனது அப்பாவிற்கும் அம்மாவிற்கு உள்ள கல்யாண உறவைப்பற்றி சொல்லுவாள். அதன்பின்பு அஜித் தனது தவறை உணருவான். (தவறை உணர்வதாக காண்பிக்க மாட்டார்கள். அது ஒரு போதனை).

பின்பு படத்தின் இறுதியில் ஒரு client இன் கல்யாணத்தில் அஜித் அஞ்சலியை சந்திப்பான். அவள் ஆஸ்திரேயாவிற்கு உடனே கிளம்புவதாக சொல்லுவாள். பிரியும் பொழுது கார் வரையில் வரமுடியுமா என்று கேட்பாள். அப்போது அவள் அன்று காதல் இருக்கிறதா என்று கேட்டாய். எனக்கு தெரியலை அஜித் என்று சொல்லுவாள். அப்போது அஜித் நீ எதுவும் சொல்ல வேண்டாம் அஞ்சலி. என்னோட life முழுக்க எதுவும் சொல்ல வேண்டாம். நான் செய்தது தவறு. என்னை மன்னித்துவிடு. பராவாயில்லை என்று சொல்லுவான். அப்போது அஞ்சலி முகத்தில் ஒரு healing தெரியும்.  அந்த பதிலைக்கேட்டு சந்தோஷப்படுவாள். அது cinematic ஆக எல்லாம் காண்பிக்க மாட்டார்கள். வாவ். நல்ல இயக்குனர் சாரங் தியாகு (நடிகர் தியாகுவின் மகன்). பின்பு இருவரும் கொஞ்சம் நடந்தப்பின்பு கார் ஏறப்போகும் தருவாயில் இருவரும் ஒன்று சேர்வர்.

என்னடா டப்புனு கதைய சொல்லிட்டேனு நினைக்காதீங்க. படத்தைப்பாருங்க. உங்களுக்கு நிறையாவே இருக்கும். நான் சொன்னது கொஞ்சம் தான். 

காரிற்கு அஞ்சலியுடன் உடன் செல்லும் அஜிதாய் தான் உணர்கிறேன். சுமைகள் அற்று. இலகுவாக. எந்த validation உக்கும் ஏங்காதவனாக. அஞ்சலியைப் போன்று வெண் தாமரையும் கண்டிப்பாய் கொஞ்சம் இலகுவாக உணருவாள் என்று நினைக்கிறேன்.  அன்றாடத்தில் நடக்குமோ என்னம்மோ ஆனால் எனக்கு ஆரொமலே படத்தின் இறுதிகாட்சி என் வாழ்விற்கு நடந்த ஜானுவிற்கும் ராமிற்கும் நடந்தது போன்ற ஒரு ஜோடையான happy ending.
















இப்படியாக 2025 இலகுவாக முடிந்தது. இதனை நான் 2026 க்குள் எழுத்தாய் வடித்து சேமித்துக்கொண்டேன்.

நடிகர் கிஷன் சிறப்பாய் நடித்திருந்தார். அதுவும் அஞ்சலியுடன் உறவு மலர்ந்தப்பின்பு இறுதி வரை நடிப்பு மிக நன்றாக இருந்தது. அவரின் முதல் நீ முடிவும் நீ படத்திற்கும் நான் ரசிகன். நடிகை ஷிவாத்மிகாவும் சிறப்பாய் நடித்திருந்தார். ஒரு bold strong girl ஆக கச்சிதமாய் நடித்திருந்தார். கொஞ்சம் அதிகமாய் செய்திருந்தாலும் ஒரு ஆணவமிக்க பெண் பாத்திரமாக மாறியிருக்கும். ஆனால் அளவான நடிப்பு. அஜித்தின் அம்மா கதாபாத்திரத்தில் நடிகை துளசியும் அருமையாக நடித்திருப்பார். 

அன்பின் வழியது உயிர்நிலை. அன்பு செய்க! 

அனைவருக்கும் இனிய புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்

அன்பு

ராஜேஷ்

January 20, 2025

உன்னை யாரும் அணைத்துக் கொள்ளவில்லையா

”மார்போடு கண்கள் மூடவா” என்பதின் ஆன்மீக தொடர்ச்சி.

17-Jan-2025 - 18-Jan-2025

வெள்ளிமாலை கல்வி சார்ந்த ஒரு ஆய்வு செய்வதில் இருந்தேன். அதை பற்றி விசாரிக்க அவளை அழைத்தேன். அவளிடம் அதைப்பற்றி கதைத்துவிட்டு உறங்கினேன். 

நான் சற்று அயர்ச்சியுடன் படுத்துக்கொண்டிருக்கிறேன். அவள் எனக்கு பணிவிடை செய்கிறாள். பின் தன் அன்றாட வேலைகளை அன்றாடத்திற்கே உரிய அலட்டலில்லா இயல்புடன் ஒரு சுங்கடி ஸ்டையில் நைட்டியில் செய்துகொண்டிருக்கிறாள். அவளை அப்படிக்காண்பது அதுவே முதல்முறையா? பலவேறு அலைச்சல்களில் நாம் சிலவற்றை நிதானமாக அசைப்போட நினைப்பதில்லை. ஆனால் அப்போது அவளை நான் என் மனதில் அசைப்போட்டேன். எங்களுள் அப்படி ஒரு அந்நியோனமா என்று உணர்கையில் என் உடலெல்லாம் நான் உணர்ந்த பரவசமென்பது ஒரு பசு நல்ல இதமான வெய்யிலில் ஆர அமர பெறவிரும்பும் கதகதப்பைபோன்றது. அப்படி ஒரு லயிப்பு.

அவளைப்பார்த்துக்கொண்டே இருக்கிறேன். அவள் செய்யும் ஒவ்வொரு அசைவும் என்னுள் தித்திப்பைக்கூட்டிக்கொண்டே சென்றது. இப்போது யோசிக்கையில், ஒரு கூழாங்கலை எத்திசை தொட்டாலும் அழகு எத்திசையில் நோக்கினாலும் எப்படி நோக்கினாலும் அழகு. அதுப்போல் அவள் அசைவுகள் என்னுள். 

(புத்தகத்தின் அட்டைப்படத்தை தலைப்பைமட்டும் வைத்துக்கொண்டு photoshop செய்துவிட்டேன்)

எனக்குள் அவளை அப்போதே சென்று அணைத்துக்கொள்ள வேண்டும்போல் இருந்தது. எழுந்துச்சென்று வேலையில் இருந்தவளை அணைத்துக்கொண்டேன். அவளும் என்னை அணைத்துக்கொண்டது அவளுக்கு என்னை அணைத்துக்கொள்ள ஏங்கியதாகப்பட்டது. அவளை நான் எழுந்துச்சென்று அணைத்துக்கொண்டேன் என்றா சொன்னேன். தெரியவில்லை. அவளை அவ்வளவு எளிதாக சென்று அணைத்துக்கொண்டேனா என்று. எளிதல்ல. என்னை நானே அத்தனை முறை உசாவினேன். இவ்வணைப்புத்தான் நம் உறவை ருசுபிக்கும்மா என்ன? இல்லை. இல்லை. அவ்வணைப்பு எனக்கு தேவைப்பட்டது. அந்த சில நிமிடங்கள் எனக்கு நாள் முழுதும்  மனதுள் ஒளிபரப்பி ஒரு காலை சூரியனாக இருந்தது. 

ஒரு அணைப்புத் தரும் அணுக்கத்தின் உத்திரவாதம் வேறு ஏதாவது தந்துவிட முடியுமா என்ன? ஆனால் அவளை அணைக்க ஏன் இந்த கூச்சம் தெரியவில்லை. எதை எதையோ நார்மலைஸ் செய்யும் இந்த உலகம் ஹகையும் நார்மலைஸ் செய்திற்கலாம் குறைந்தது இரு தசாப்த்தங்கள் முன்பே.

மனுஷ்யபுத்திரனின் “உன்னை யாரும் அணைத்துக்கொள்ளவில்லையா?” கவிதை தொகுப்பை அந்த தலைப்பிற்க்காகவே வாங்கவேண்டும். அதுவும் அது விற்றுத்தீர்க்கும் முன்பே. 

February 19, 2024

மார்போடு கண்கள் மூடவா

 18 Feb 2024 - 4:45am Regina

என் கனவுலகில் என் அன்பிற்கு உரியவள் வந்தாள். நாங்கள் இருந்தது பூங்காக்களும் விளையாட்டிடங்களும் கொண்ட பலர் கூடும் ஒரு வளாகம் போன்ற கட்டிடம். கட்டிடத்திற்கு சாம்பல் வண்ண பூச்சு இருக்கலாம். 

நான் அவள் மேல் உள்ளார்ந்த அன்பை எப்பொழுதும் கொண்டு இருந்தேன். அன்பென அன்பு. பிரேமை. 

அவளை அக்கோலத்தில் அன்று காண்கையில் என் உள்ளம் உடைந்து உள்ளாரா அமைதியாக விம்மியது யாராவது நோக்கிவிடுவாரோ என்று கைகளை அசைத்துக்கொண்டு அத்தருணைத்தை கடந்தேன். அவளுக்கும் எனக்கும் 100 வித்தியாசங்கள் இருக்கும். ஆனால் அவ்வித்தியாசங்களே அவளை எனக்கு மேலும் மனதுக்கு நெருக்கமானது. அந்த ஊடலில் நான் தோற்கவும் தயந்தியதில்லை ஆனால் வெள்ளவே போராடுவேன். அந்த அனல் பறக்கும் வாதம் நீள்நேரம் தொடரவே விரும்புவேன். அதன் இறுதியில் இருவரும் அவரவர் நிலைப்பாட்டை மேலும் திடமாக்கிக்கொண்டு அதில் நிற்பதை இருவருமே வெற்றியென கொள்வோம். அப்படிப்பட்ட நூற்றுக்கணக்கான பிணக்குகளே என்னை அவளிடம் ப்ரேமைக்கொள்ள செய்ததா தெரியவில்லை.

அவளுக்கு என்மேல் மதிப்பா பரிவா என்று கூட தெரியாது. உள்ளாரா ஒரு அன்பு. பிரேமையாக இருக்க வாய்ப்புகள் மிகமிக குறைவு. எங்கள் தீவிர பிணக்குகள் கூட காரணம் இருக்கலாம். ஆனால் அத்தீவிர பிணக்குகள் பின்னால் ஓர் ஸ்னேகம். 

நான் இது பிரேமையாக இருக்க வாய்ப்பு இல்லை. அதற்கான சாத்தியங்கள் இல்லையே என்று மனதுக்குள் கூறிக்கொண்டு வந்துள்ளேன். ஆனால் இன்னொருத்தியின் மீது அவா எப்பொழுதும் உண்டு. சமீப காலங்களில் அது இன்னும் அதிகம். ப்ரேமை என்றே நினைத்தேன். ஆனால் சுக்ரர் கசன் கதையை படித்த பொழுது அவ்வுறவின் ப்ரேமை ஏன் என புரிந்தது. ஆனாலும் அவள் என்ற இவள் மீது ஒன்றும் விஷேஷ கவனம் ஏதும் இல்லை. ஏனேனில் அது சாத்தியமில்லை என்று நினைத்தேன். ஏனெனில் எங்கள் அக உலகங்களே வேறு வேறாக இருப்பதாகவே நினைத்துவந்தேன். 

நேற்று அதாவது 17 பிப்ரவரி 2024 அன்று சில பல சம்பவங்கள் 1) கடந்த 4-5 நாட்களாக நளன் தமயந்தி கல்யாணம் வரையிலான கதை வாசித்துக்கொண்டு வந்தேன். அதுவும் முதல் நிலவிரவு வரை. 2) எனக்கு மிக பிடித்த wolf of wall street இல் we're not gonna be friendச் வசனத்தை பார்த்தேன் 3) 96 படத்தை பற்றிய ஒரு நினைவு பதிவைப் பார்த்தேன். 4) நடிகர் அர்ஜுன் (மற்றும் நடிகை ரஞ்சிதா) நடித்த, கர்ணா திரைப்படத்தில் வந்த, பாடகர்கள் எஸ்.பி.பாலசுப்ரமணியன் எஸ்.ஜானகி குரல்களில் பதிவுசெய்யப்பட்ட, வித்யாசாகர் இசையில் அமைந்த, மலரே மௌனமா பாடலை, விஜய் டிவி யின் சூப்பர் சிங்கர் நிகழ்ச்சியில், பாடகர்கள் மனோவும் அனுராதாவும், மிகவும் ரசித்து பாடினார்கள். அவர்கள் குறிப்பிட்ட இந்த வரிகளை பாடினார்கள் “ஏதோ சுகம் உள்ளூறுதே ஏனோ மனம் தள்ளாடுதே விரல்கள் தொடவா விருந்தை பெறவா மார்போடு கண்கள் மூடவா”. எனக்கு எப்பவும் பிடித்த வரிகள் இவை. காமன் அம்புகள் மனதை தைக்கும் வரிகள். மார்பின் மீது கண்கள் வைத்து உறங்க அவள் மீது எத்தனை ப்ரேமை இருக்க வேண்டும். அந்த உன்னதம் வார்த்தைகளால் வடித்ததே அழகு. அதை மதுரமான இசையில் பாடியது சுகானுபவம். இவையெல்லாம் என் ஆழ் மனதை பாதித்ததா என்று தெரியவில்லை.

ஆனால் இன்று 18 பிப்ரவரி 2024 காலையில் என் கனவுலகில்  முதலில் சொன்னப்படி ஒரு கட்டிடத்தில் சஞ்சரித்துக்கொண்டு இருக்கையில். அவளை ஒரு நடைக்குடத்தில் (corridor) இல் சந்திக்கிறேன். அவளிடம் நேரடியாக சென்று நான் நீ சொன்ன சவாலை செய்துமுடித்துவிட்டேன். அவளுக்கு பரம சந்தோஷம். பார். உன்னால் முடியும். அவ்ளோதானே என்பதுப்போல் என்னை உள்ளார அணைத்துக்கொண்டாள். அவள் அதற்குமுன் என்னை அணைத்துள்ளாளா என்ற நினைவே இல்லை எனக்கு. ஆனால், அவளை நான் இறுகப்பற்றினேன். [என் மகளை இருக்கைகளாலும் தழுவி இறுக்கி அணைப்படுத்துப்போல. (இன்னும் கொஞ்ச வருடங்கள் தான் உன்னை இப்படி இறுக்கி அணைக்கமுடியும் என்பதுபோல).] அவளை இறுகப்பற்றியது ஒரு சில நொடிகள் கூட இருக்காது. ஆனால் அதுப்போல் அவள் தோள் மேல் என் கைகள் படர எங்கள் உடல்கள் அப்படி ஒட்டும் என்று நான் நினைத்தது இல்லை. அந்நேரம் பார்த்து வேறு ஏங்கோ இருந்து அவளுக்கு ஒரு அழைப்பு வருகிறது. சரி ராஜேஷ். நான் போனும் என்கிறாள். ஆனால், நான் அவள் கைகளின் மணிக்கட்டை இறுகப்பிடித்து ஏங்கே போற? என்பதுபோல் கேட்டேன். அவள் புன்னகைத்து, நான் கிளம்பனும் என்கிறாள். 

அவளுக்கு தெரியும் அவள் செல்வது தான் உசித்தம் என்று. சரி, சவாலை வென்றால் தருகிறேன் என்றாயே. தந்துவிட்டுப்போ என்கிறேன். அவளுக்கு அப்போது தெரியும் அது வேறும் ஒரு உந்துசக்திக்காக சொல்லபட்ட வார்த்தைகள் அல்ல என்று. ஆனால் அது இவ்வளவு விரைவாக வரும் என்று நினைக்கவில்லை. அதற்கான சந்தர்ப்பம் அமையும் என்று நினைக்கவில்லை. இல்ல ராஜேஷ். நான் கிளம்பனும் என்கிறாள். யாராவது பார்த்துவிட போகிறார்கள். உனக்கு கண்டிப்பா வேணுமா என்று கேட்டாள். தவறு என்றோ, நான் விளையாட்டாக சொன்னேன் என்றோ கூட சொல்லவில்லை. அவள் தயங்குகிறாள் என்று எனக்குப்பட்டது. இந்த சந்தர்ப்பத்தை கடக்க நினைக்கிறாள். பிறகு பார்த்துக்கொள்ளலாம் என்று நினைக்கிறாளோ என்று தெரியவில்லை. ஆனால் இதுபோல் ஒரு தருணத்தை அத்தருணத்தின் ஓட்டத்திலேயே அதன் போக்கிலே சென்றால் தான் உண்டு. பிறகு என்று ஒத்திப்போட்டால் அது செயற்கையாக இருக்கும் என்று எண்ணினேனோ என்று தெரியாது. ஆனால் இச்சவாலை செய்து முடித்ததற்கு பரிசாக அவள் கூறியதின் பின்னில் உள்ள ப்ரேமையை உணர்ந்துக்கொண்டு இருந்த தருணம், அவளை சுவரின் ஓரமாக தள்ளி அவளை ஆரத்தழுவி வாயோடு வாய் வைத்து இதழ்கள் பரிமார முத்தமிட்டேன். இருவரும் பிரிதொன்றாக இல்லாமல் ஒன்றாய் உணர்ந்த தருணம். இச்சிறுகாலத்துளியை எவ்வளவு நீட்டிக்கமுடியுமோ அவ்வளவு நீட்டிக்கவேண்டும் என்று எல்லாம் நினையாமல் அத்தருணைத்தை அத்தருணத்தின் அமுதத்தை பருகினோம். இருவரும் மீச்சிறு துளி கூட தவறவிடக்கூடாது என்று இருந்தோம் என்று படுகிறது. ஆனால் அந்நிலையில் மனிதன் ஒழுக்கம் ஒழுங்கீனம் என்று தன்னை செயற்கையாக்கிகொள்ளும் அனைத்திலிருந்தும் இருவரும் விடுபட்டு இயற்கை படைத்த விலங்குகளாய இருந்தோம் எனலாம். இயற்கைக்கு மிக அருகில். எங்களை சுற்றி அந்த இயற்கை மட்டுமே இருந்தது. எந்த நியாய தராசுகளும் இல்லை மதிப்பீட்டுகளும் இல்லை. 

ஆனால் காலம் நம்மீது அவ்வளவு அன்புக்கொண்டது அல்ல. ஒரு நொடி இருவரும் - போதும். இது போதும். இது போதும் வாழ்நாளிற்கு! என்பது போல் எங்களை நாங்களே விலக்கினோம். அவள் கண்ணங்களில் கைவைத்து என் கண்களில் நீர் கசிய, thank you, thank you so much என்று அவள் கண்ணத்தில் முத்துமிட்டு விலகினேன். சரி பட்டா போட்டாச்சுல என்பதுபோல அவள் பார்வையும் உடல்மொழியும். okay. கிளம்பு ராஜேஷ். போதும் என்று என்னை அவள் வழி அனுப்பிவைத்தாள்.  அந்த நொடி “அவள் மார்பில் கண்கள் மூடி” உறங்கிய ஒரு உன்மத்தத்தை அடைந்தேன் எனலாம்.  அவளுக்கும் என்னை முத்தமிட்டதில் ஒரு உன்மத்தம் என்றே நான் உணர்ந்தேன் ஏனெனில் அம்முத்தத்தில் ஒரு சிறு பிசிறு விலக்கமும் அவளிடம் இல்லை.

எங்களுக்குள் இப்படி ஒரு காதலா என்றே நாங்கள் இருவரும் இம்முத்தத்திற்கு பிறகு உணர்ந்தோம் எனலாம். ஏன் இதை சொல்லிக்கொண்டதுக்கூட இல்லை என்றே தோன்றுகிறது.  உள்ளங்களுக்கு கண்கள் தெரியவில்லை? மூளைக்கு சொற்கள் சிக்கவில்லையா? தெரியவில்லை.

எனக்கு அராத்து, சாரு போன்றோரை வாசித்ததில் பெற்ற நற்பேறாகவே இதை கருதுகிறேன். ஏனெனில் இது மிகவும் இயற்கையான விஷயம். இருவர் அன்பை பரிமாறிக்கொள்ள முத்தம் எவ்வளவு அழகான இயற்கையான விஷயம். அதுவும் அழகாக அமையும் பொழுது அது மேலும் அழகாகிறது. அந்நாளையே அழகாக்குகிறது. அவ்வுறவை மேலும் அழகாக்குகிறது. இது எப்படிப்பட்ட உறவு என்ற ஐயங்கள் இப்போது இல்லை. ஒழுக்கம் ஒழுங்கீனம் என்ற குழப்பங்கள் இல்லை. வருத்தங்கள் இல்லை. இவ்வுறவு முத்தத்தோடு கனிந்தது என்றே சொல்லாம். 

what a dream. thank you dream என்றே சொல்லுவேன். உன்னால் தான் இந்த அனுபவம்.

Fyodor Dostoevsky போல் இந்த சிறு தருணத்தை ஒரு 50 பக்கத்திற்குக்கூட எழுதலாம். பல வருட wine ஐ சிறுக சிறுக உண்ணுவதுபோல் திளைக்கலாம்.  இப்போது யோசித்தால், 96 படத்தில் கற்பனையில் கல்லூரி நாட்களில் ஜானுவும் ராமும் சேர்வது போன்ற ஒரு Happy Ending ஆக தோன்றுகிறது. ஆனால் அதுவும் ஒரு நிறைவுதானே. இல்லையேல் என்றுமே சொல்லபடாத தட்டையான பேர் கொண்ட உறவாகவே இருந்து இருக்கும். 

January 20, 2023

செந்தில் ஜெகன்நாதன் - மழைக்கண் - பிற கதைகள் சிறுகதைகள் தொகுப்பு

 


அன்புள்ள செந்தில்,

தங்களுடைய மழைக்கண்&பிற கதைகள் தொகுப்பை வாசித்தேன். கதை வாரியாக எனது எண்ணங்கள்..


1. அன்பின் நிழல்

பலருடைய வாழ்வில் இக்கதையில் உள்ளது போல் ஒரு template உண்டு.  சுயம்பு பெற்றோர், பண கஷ்டத்தின் விறத்தி, ஒரு கணமும் காயாத அந்த இரவின் கண்ணீர், தற்கொலை பூச்சாண்டிகள். ஆயினும் என் பெற்றோர் என்ற நிலைப்பாடு.  கதையின் முடிவு அபாரம். பேரன்பில் இருந்த வந்த முடிவு அது. 

2. நித்தியமானவன் 

கலையின் மீது ஆசைப்பட்டு மிக பெரிய திட்டமிடலும் வழிகாட்டுதலும் இல்லாமல் வாழ்க்கையையும் தொலைத்து career-ஐயும் தொலைத்து அல்லோல் படுவதை ஒரு பெரிய பத்தி முழுவதும் விவரித்தது மிக உண்மையாக இருந்தது. அந்தக் கலைஞனை போல் வாழ்வில் புதிய லட்சியங்கள், கனவுகள் என்று புதிய துறைகளுக்குள் சென்று வாழ்வை இழந்தவர்களை பிரதிபலித்து இருந்தது. மேலும், அந்த agent வந்து “உன்னால் முடியும் பாஸ்கர்” என்று பாஸ் (எ) பாஸ்கரன் நயந்தாரா போல் pep talk கொடுப்போர்க்கு அக்கலைஞன் கொடுக்கும் பதில் மிக நேர்த்தி. நெத்தி அடி என்று கூட கூறலாம். ஏனெனில் யதார்த்தில் நமது பிரச்சனைகளை நம்முடன் இருந்து அதன் வேர்களை கண்டடைந்து தீர்ப்போர் அரிதினும் அரிது. நிதி உதவி செய்வார் உண்டு. மறுப்பதற்கு இல்லை. ஆனால் அதுமட்டும் போதாது தானே. ஒரு problem solving இருக்காது. அவனா தேடிக்கிட்டது அல்லது நமக்கு அதுல என்ன பெருசா தெரியும் என்று விட்டுவார்கள். இல்லை என்றால் எங்க நமக்கு நேரம் இருக்கு. நான் அந்த பக்கம் போமோது பேசுரேன் என்பார்கள். ஆனால் அந்த பக்கம் போகவே மாட்டார்கள். வருடங்களும் வயசும் கரைந்துவிடும்.

கதையின் இறுதியில், ஒரு பாரட்டு கூட செவியின் ஓராமாய் தான் கிடைக்கிறது. ஆனால் ஒரு கலைஞன் தன்னை கண்டடையும் இடம் - ஒரு infectious ஆன தருணம்.  அதன்பிறகு பின்நோக்கா தருணம்.  ஒரு நம்பிக்கை ஒளி அது.

3. எவ்வம்

இந்த கதை ரொம்ப நல்லா இருந்துச்சு. ஆனா அந்த சிறுவனின் இடத்தில் இருந்து பார்க்கும் பொழுது மிக துன்பமாக இருந்தது. ஒரு சிறுவன் அடி உதையை கூட தாங்கிக்கொள்வான். ஆனால் தன் பெற்றோர் குறிப்பாக தந்தை அவனை ஒரு மனிதனாக கூட பார்க்காமல் அன்பு இல்லாமல் நடந்துக்கொள்ளும் தருணங்கள் மிக கொடுமை. ஒரு தந்தை தவறான வேலை செய்வது, வலிப்பு வந்தது நல்லது என்று சொல்வது, ஏன் நீ வலிப்பு வந்து நடிச்சி என்ன காப்பாத்துல என்று கேட்பது, பிள்ளை காண்பித்து காசு வாங்குவது, பஸ்ஸில் சீட்டு வாங்குவது அந்த குழந்தைக்கு எவ்வளவு ரணத்தை உண்டாக்கும். குழந்தை வைத்து பிறர் முன் வேஷமிட்டு பச்சோதாபம் தேடுவதெல்லாம் இழிவான / நேர்மையற்ற செயல்கள். குழந்தைகள் என்று நினைத்து செய்கிறார்கள். ஆனால் குழந்தைகள் என்றாலும் அது மிக ஆழமான விரிசல்களை உண்டாக்கும். பெற்றோருக்கும் குழந்தைகளுக்கும் இடைவேளை அதிகரித்துக்கொண்டே இருக்கும். பெரும்பாலும் பெற்றோர் தான் என்ன தவறு செய்தேன். ஊர்ல செய்யாததையா செய்தேன்? பட்டினியா போட்டு விட்டேன் என்று கூறுவர். எல்லாம் பசங்களுக்காக தானே செய்தேன். ஆனால் இவர்கள் செய்யும் சின்ன சின்ன தவறுகள் ஒரு அணையில் நீர் தேங்குவது போல் தேங்கிக்கொண்டே இருக்கும். ஒரு சிறு தவறு அந்த குழந்தையின் மனதில் அவர்கள் உறவை அத்துப் போக செய்துவிடும். வெளில இருந்து பார்ப்பவர்களுக்கு அது என்ன பெரிய குத்தம் என்று தோன்றும். ஆனால் அது ஒரு tipping point. அதை சொன்னா புரியவே புரியாது. கொஞ்சம் தண்ணீர் அதிகமானாலும் உடைந்த அணை உடைந்தது தான். அதனை கட்டமைப்பது எளிதல்ல.

4. முத்தத்துக்கு (கனலி)

எனக்கு இந்த கதையில் இரண்டு விஷயங்கள் பிடித்தது 1. ஒரு 40 வயது இளைஞன் காலாகாலத்துல கிடைத்து இருக்க வேண்டியவை கிடைக்காமல், அவனுக்கு அது கிடைக்கும் பொழுது அது முற்றிலும் வேறு அனுபவமாக இருந்து விடுகிறது. இளவயதில் கிளர்ச்சியாக (அதில் ஒன்றும் தவறில்லை) அனுபவித்து இருக்க வேண்டிய ஒரு முத்தம் 40 வயதில் பதற்றமாக (ஏதோ குற்றத்தை யாரும் செய்யாததை செய்வதுப்போன்று) மாறி விடுகிறது. அதன்பின் பல மன தடுமாற்றங்கள். 2.  இச்சமுதாயத்தில் (நண்பர்கள், உறவினர்கள், அலுவகத்தில் இருப்பவர்கள்) பலர் எப்படி நுண்ணுணர்வு அற்று இருக்கிறார்கள் என்று திரையிட்டு காண்பித்தது. 

5. மழைக்கண்

இந்த கதையில் அந்த அம்மாவின் மூலம் பருத்தி விவசாயத்தை கண்முன் காண்பித்து விட்டீர்கள் என்றே சொல்வேன். (நேத்து order பன்ன 30 books வந்ததா வீட்ல photo எடுத்து அனுப்பினார்கள். அதை பார்த்த போது மகப்பேறு மருத்துவமனை குழந்தைகள் தான் நினைவுக்கு வந்தது. அந்த படிமத்தை மறக்கமாட்டேன் என்று நினைக்கிறேன்).

எனக்கு அந்த இறுதி முடிவு(?) பருத்தி புடவையை தொட்டுப்பார்க்கும் இடம் கண்கலங்க செய்துவிட்டது. அவள் வேலையில் பருத்தி செடியை எப்படி பார்த்துக்கொண்டாள், புச்சிகள் புழுக்கள் கால்நடைகள் களைகள் என்று எல்லாவற்றிலிருந்தும் பாதுகாத்தாள். ஒரு பூச்சி கடி என்றதும் அந்த பருத்தியே புடவையாக அவளுக்கு ஒரு மருந்தாக ஒரு அரவணைப்பாக அமைவதாக எனக்கு தோன்றியது. நாம் ஒரு வேலையை ஒழுங்கா செய்தால், இப்பிரபஞ்சத்தில் நம் வேலை எப்படி எல்லாம் கைகொடுகிறது.

7.நெருநல் உளளொருத்தி 

இக்கதைப் வாசித்த பின்பு எனக்கு என்ன தோன்றியது என்றால், 1) ஒருவேளை பூங்கோடி அவள் நாத்தனாரை முதலிலேயே ஒழுங்காக நடத்தி இருந்தால் பிற்காலத்தில் அவளுக்கு அந்த நிலைமை வந்து இருக்காதோ? காலம் நம்மை மிக கொடுமையாக தண்டிக்கும் 2) தங்கை மாறியதில் ஆச்சர்யம் இல்லை எனினும் அது மிக தவறு 3) பூங்கொடி ஒரு குழந்தையாவது இந்த வறுமையில் கஷ்டப்படாம இருக்கட்டுமே என்று ஊரைவிட்டு சென்று விடுகிறாளோ?

8.காகளம் (தமிழினி)

ரொம்ப பிரமாதமா எழுதப்பட்ட கதை. அந்த உலகத்துக்கு மிக எளிதாக செல்ல முடிந்தது. எனக்கு சில விஷயங்கள் ரொம்ப பிடிச்சது 1) நம்ம மனசு உடம்பு இரண்டும் நல்லா இருக்கனும். இல்லாட்டினா முகம் மலர்ச்சியா இருக்காது. இல்லாடினா அது நம்ம வேலைல வியாபரத்துல பிரதிபலிக்கும் 2) முதலாளிக்கு இசை ஒரு பற்று என்பதை தாண்டி எப்படி அவருக்கு ஒரு மன அமைதியை தருகிறது அவரை ஒரு பண்பட்டவராக வைத்துகொள்கிறது. எல்லாருக்கும் வாழ்க்கைல அந்த மாதிரி ஒன்னு வேண்டும். இல்லை என்றால் (கல்லாவில், ஊதியத்தில் வரும்) பணம் நம்மை சமநிலையிலும் சந்தோஷத்தில் அமைதியிலும் வைக்காது 3) (புத்தகத்தில் /இனையத்தில் சில பத்தி வித்தியாசம் இருக்கு) - அவன் மன்னிப்பு கேட்க வேண்டும் என்று நினைத்தாலும் ஊர்ல யாரும் பன்னாத தப்பையா பன்னிட்டேன் இல்ல அப்படி என்ன பெரிய தப்பு பன்னிட்டேன் என்று கேட்போர்க்கு - இதுக்கு பேரு ஆணவம் என்று தெளிவாக கூறியது 4) இறுதியாக எது முதலாளியை முதலாளியாக ஆக்கியது. அது இசை, இசை கொடுத்த அமைதி/ நிறைவு/ நல்லெண்ணம் என்று எதுவாக இருக்கலாம். ஆனால் எல்லோரும் அந்த கேள்வியை கேட்டுக்கொள்ள வேண்டும். நான் பல சமயம் செய்வது. பொதுவாக பலர் செய்துக்கொள்ளும் ஒப்பீடு தான்  - ஏன் அந்த குடும்பத்தில் பிரச்சனை இல்லை? உறவுகள் சீராக இருக்கிறது? வசதிகள்/வாய்ப்புகள்..?. அவர்களிடம் பேசிப்பார்த்தால் எங்கும் பிரச்சனை இருக்கிறது ஆனால் அடிப்படையில் அவ்வீட்டில் இருக்கும் அமைதி / ஒழுங்கு / முதிர்ச்சி என்று ஏதோ ஒன்று அங்கு இருக்கிறது. இப்பிரசச்னைகள், ஆசைகளை தாண்டி பார்ப்பதற்கு ஒரு மனபக்குவம். அவர்களை தரையில் கால் வைத்து நடக்க வைக்க.  ஆனால் அது வெறும் பணம் மட்டும் அல்லது. அது பல காலமாக கட்டமைத்து பாதுக்காக்கபட்ட தலைமுறைகளாக கவனமாக கைமாற்றப்பட்ட ஒரு ஒழுங்கு. அப்படி ஒன்றை கண்டடைந்தவராக முதலாளி இருக்கிறார். இவற்றையெல்லாம் சொல்லிக்கொடுக்க முடியாது. நாம் தான் பார்த்து பின்பற்ற வேண்டும்.

மொத்தமாக இந்த சிறுகதைள் தொகுதியில் எனக்கு பிடித்த அம்சம் என்னவென்றால், (ஜெயகாந்தனின் ஆவணப்படத்தில் அவர் சொல்வது போல்) ஒரு எழுத்தாளராக எதையும் வாசகரிடம் ஒளித்து வைத்து விளையாடவில்லை. அதற்ககென்று placard வைத்தும் வாசகரின் கண்ணை நிறைக்கவில்லை. 

உங்கள் எழுத்துப்பணியும், மற்ற ஆக்கங்களும் மேன்மேலும் வர, வெற்றிபெற வாழ்த்துக்கள்.

அன்புடன்

ராஜேஷ்
bit.ly/3wf3IeH

November 25, 2022

ஐயப்பன் பூஜை - நாமாவளிகள் மற்றும் பஜனைப் பாடல்கள்

ஓம் ஸ்வாமியே சரணம் ஐயப்பா

ஐயப்பன் பூஜை - நாமாவளிகள் மற்றும் பஜனைப் பாடல்கள் கீழ்க்காணும் link இல் இருந்து copy செய்துக்கொள்ளவும்

Web Link (to google docs) - https://docs.google.com/document/d/e/2PACX-1vSwcVqQRP7b9_36_GPYH2Y0aJSxcn157I-AxsFjxuxsQiHPCxifbvtRsqhfN8m1SmfvUuX2NDgmrSbz/pub#h.jpxrowdh7fi0

PDF வடிவில் வேண்டும் என்றால்

A) ஐயப்பன் பூஜை - நாமாவளிகள் மற்றும் பஜனைப் பாடல்கள் (with ஸஹஸ்ரநாமம்) 

B) ஐயப்பன் - ஸஹஸ்ரநாமம் பூஜை - செய்முறை template - short but detailed

C) ஸ்ரீ ஐயப்பன் ஹரிஹர புத்ர ஸஹஸ்ரநாமம் 1001 - ஸ்தோத்ரம்  - Sanskrit Documents

D ) ஸ்ரீ ஐயப்பன் ஹரிஹர புத்ர ஸஹஸ்ரநாமம் 1001 - நாமாவளி - Sanskrit Documents

E) ஸ்ரீ ஐயப்பன் ஹரிஹர புத்ர ஸஹஸ்ரநாமம் 1001 - நாமாவளி  - Shop book


பஜனையில் பாடக்கூடிய பெருவாரியான கே.வீரமணி, பெங்களூர் ரமணி அம்மாள், தேக்கம்பட்டி சுந்தர ராஜன் பாடல்கள் உள்ளன.


ஸ்வாமியே சரணம் ஐயப்பா

இம்மின்நூல் என்னால் முழுவதுமாக தயாரிக்கபட்டது. இவற்றில் உள்ளவை வலையுலகத்தில் இருந்து எடுக்கப்பட்டவை. ஆனால பல பாடல்களும் சரணகோஷங்களும் சொந்தமாக பாடல்களை கேட்டு தட்டச்சு செய்யபட்டவை. 

November 11, 2022

நேற்று ஒரு துக்க செய்தி ஒன்று வந்தது. அது அதிர்ச்சியாக இல்லை. ஏனெனில் அது 1-2 வருடங்கள் முன் அதன் ஓசையை அடித்திருந்தது. எனது பள்ளிக் கல்லூரிகாலங்களில் என்னுடன் ட்யூஷ்ன்களிலும் கல்லூரியிலும் உடன் படித்த ஒரு தோழியின் கணவர் வயிற்று புற்றுநோயால் இறந்துவிட்டார். அவளுக்கு அப்படி ஆகியிருக்க வேண்டாம். 

வாழ்க்கை எவ்வளவு குரூரமானது. யார் வாழ்வை எப்படி திருப்பிப்போடும் என்றும் சொல்ல முடியாது. இதனை பார்த்து நாம் நமது வாழ்விற்கு நன்றியோடு இருப்பதா என்றால் இல்லை என்றே சொல்லவேன். ஏனெனில் பிறரின் கஷ்டத்தில் நாம் பரவாயில்லை என்று நினைப்பது எவ்வளவு கேவலம். எனக்கு நான் எனது வாழ்வில் என்ன செய்துக்கொண்டு இருக்கிறேன் என்ற கேள்வி தான் பிரதானமாக வருகிறது. நாம் இழப்பு சோகம் என்று நினைப்பதெல்லாம் உண்மையில் இழப்போ சோகமோ இல்லை. இறைவன் சிலருக்கு வாழ்வில் ஒரு தூணையே துணையையே பறித்திருக்கிறான். வாழ்வில் சடார் என்று பலூவை கூட்டி இருக்கிறான். 

வாழ்வில் இன்னி ஒவ்வொன்றும் அவளுக்கு வேறு. முன்பு போல் இல்லை. ஒவ்வொரு முடிவும் ஒவ்வொரு செயலும் நிதானித்து செய்வதாகிவிட்டது.  அடுத்த 7-8 வருடங்கள் கம்பில் நடக்கும் விளையாட்டு என்றால் மிகையாகது.டீனேஜ் பிள்ளையை அமெரிக்காவில் வளர்ப்பது ஒன்றும் லேசல்ல. மேலும் ஒரு பெண் பிள்ளையை அமெரிக்காவில் தனியாக வளர்ப்பது லேசல்ல. 6 வயதாக இருக்கும்பொழுதே தந்தையை இழந்தவன் என்ற முறையில் இப்பயணம் எளிதல்ல என்றுணர்வேன்.

எனக்கு அந்த ஆண்பிள்ளையை நினைத்தால் தான் கஷ்டமாக இருக்கிறது. பள்ளிகளில் ஜெனட்டிக்ஸ் போன்ற பாடங்களை இனிமேல் படிக்கும் பொழுது அது தலையில் ஓராயிரம் அச்சங்களை விதைக்கும். அதன் பிறகு உறக்கமற்ற நாட்களை சந்திக்க வேண்டும். இறைவா அப்பிள்ளைக்கு சக்திகொடு.

August 18, 2022

அஞ்சலி - தமிழ்க்கடல் நெல்லை கண்ணன்

தமிழ்க்கடல் நெல்லை கண்ணன் (27 Jan 1945 - 18 Aug 2022)



2008 வரைநான் தமிழ் மீது வெறும் ஆர்வமும்  பெருமையும் மட்டுமே கொண்டிருந்தேன். தில்லியில் வசித்தபோது வார வாரம் ஞாயிறு காலை சீக்கிரமாக நான் எழுவதற்கு ஸ்டார் விஜய் டிவி யில் வந்த "தமிழ்ப் பேச்சு எங்கள் மூச்சு" நிகழ்ச்சி தான் காரணம். ஐயா தான் நடுவர். பிறகு 2013 அந்நிகழ்ச்சி சில வாரங்கள் மட்டும் நடத்தபட்டு முடிந்தது.  (இன்று news7-டிவியில் இல் முக்கிய பத்திரிக்கையாளராக/anchor-ஆக பணியாற்றும் விஜயன், பேச்சு, youtube என பல தளங்களில் பணியாற்றும் ராஜ்மோகன்(rajmohan report) இவர்கள் எல்லாம் அந்நிகழ்ச்சியின் அடையாளப்படுத்தபட்ட வைரங்கள்).


போட்டியில் பேசியவர் நன்றாக பேசினால் இவர் சிலாகிப்பதும், ஒரு கட்டத்தில் மனமுறுகி அழுது ஆசி வழங்குவதும் அந்தக் கடலில் குணம் (விஜயன் இவரை பலமுறை அழ வைத்து உள்ளார் (youtube science development part 1,  science development part 2). அதேப்போல், தவறாகவோ தேவையற்றோப் பேசினால் கண்டிக்க தவறமாட்டார்.


இவரின் பேச்சின் மூலம் பாரதியாரின் உலகம் (youtube இல் (Yaar Bharathi - Part 3 Nellai Kannan (சுட்டியை தட்டவும்)) பாரதி பற்றிய இவரின் பேச்சை கேட்கலாம்), திருக்குறள்-இன் விரிவும் ஆழமும் அறிந்தேன்.இல்லை, தமிழின் ஆழத்தையும் அகலத்தையும் தன் பேச்சினாலே காட்டியவர் என்றால் மிகையாகாது. இவரின் பல பட்டிமன்றங்கள் காமராஜர் காலத்தில் பிறந்திருந்தால் அவரைப் பார்த்திருக்கலாமோ என்று தோன்றும். தமிழில் பலதரப்பட்ட இலக்கியங்களில் இருந்து பல பாடல்களை திருக்குற்றால அருவிப்போல் டன் டன் டன் என்று மனப்பாடமாக பொழிந்து நம்ம உள்ளத்தை குளிரவைப்பார் அறிவையும்  சீண்டுவார் அறியாமையை தூபம் போட்டு காண்பிப்பார். (அப்படி அறியாமையை அறியமுற்பட்டு நெல்லை (கண்ணன்)-இல் ஆரம்பித்தேன் விரைவில் நாகர்கோவில்(ஜெயமோகன்)-க்கு சென்றேன் என்பது வேறு கதை).


திருக்குறளின் ஆழத்தையும் அகலத்தையும் காண்பித்தவர் என்று சொன்னேன். இவர் ஒழுக்குமுடைமைக்கு காமராஜரை காண்பித்தது எல்லாம் என்றும் நினைவில் உள்ளது. ஆனால் காமத்துப்பால் என்றாலே முக சுளிப்பும் இளகாரமும் தான் பெரும்பாலும் அதிகம். ஆனால், கோடி மக்கள் பார்க்கும் ஒரு வெகுஜன தொலைக்காட்சியில், தமிழ்ப் பேச்சு எங்கள் மூச்சு நிகழ்ச்சியில், காமத்துப்பால் என்றால் ராதையாக மாறுவார் கண்ணனாக மாறுவார். காமத்துப்பால் குறள்களை விறைப்பாக பேசும் வாலிபர்களிடம் காமத்துப்பால் குறள்களை கொஞ்சி கொஞ்சி பேசி அதன் கவித்துவத்தை காண்பித்து காமத்துப்பாலை ரசிக்கவும் சிந்திக்கவும் வைத்தார். ஒரு நோக்கு இருநோக்கு குறளுக்கு குழைந்தும், காமக் கணிச்சி உடைக்கும் நிறையென்னும் நாணுத்தாழ் வீழ்த்த கதவு குறளுக்கு ஆவேசமாக முறுக்கியும் இவர் அளித்த விளக்கம் எல்லாம் என் கண்முன்னே வந்து செல்கின்றன. நான் 1330 குறள்களுக்கும் பொருள் அறிந்துக்கொள்ள முனைய ஒரு முக்கிய உந்துதலாக இருந்தவர் இவர். [https://dailyprojectthirukkural.blogspot.com/


இவரைப்போன்ற பேச்சாளர்கள் 100 பேராவது இன்று வேண்டும். (ஆனால் நமது துர்பாக்கியம் நகைச்சுவை நிகழ்ச்சிகளில் பங்கேற்கும் காமெடியன்கள் எல்லாம் பட்டிமன்றங்களில் வந்து கிச்சு கிச்சு மூட்டுவது அபத்தம்.)


இந்தியா செல்லும் பொழுது நெல்லை சென்று இவரை பார்க்கவேண்டும் என்று நினைத்திருந்தேன். கி.ரா-வை போல் இவரையும் பார்க்க முடியாமல் போயிற்று.


இவர் பேச்சாளர் என்றாலும் வாசி வாசி புத்தகங்கள் வாசி நன்றாக வாசி நிறைய வாசி என்று நன்றாக பேசியவர்களிடம் சொல்லிக்கொண்டே இருந்தார்.


தாகம் கொண்ட சமூத்திரம் இந்தத் தமிழ்க்கடலை பருகியப்பின் நிரம்பியிருக்குமா என்ன? இருக்காது ஏனெனில், இத்தமிழ்க்கடல் என்றும் தீராத விடாய் பசியின் வடிவம். 


தமிழ்க்கடலே
போற்றுதலும்
புகழஞ்சலியும்

- ராஜேஷ்
18.08.2022

July 22, 2022

ஆரோக்கிய நிகேதனம் - வாசிப்பு

தாராசங்கர் பந்த்யோபாத்யாய (Tarasankar Bandyopadhyay) எழுதிய ஆரோக்கிய நிகேதனம் (Arogya Niketan) நாவலில் இருந்து நான் பெற்றவற்றை கீழ்வருமாறு தொகுத்துக்கொண்டேன். ஐயமின்றி கூறலாம் இது ஒரு செவ்வியல் என்று.

இந்நாவலை பற்றி ஜெயமோகனின் தளத்தின் மூலமாக முதலில் அறிமுகம் கொண்டேன். தொடர்ந்து வரும் கட்டுரைகள், கடிதங்கள் மூலம் உந்தப்பட்டு வாசித்தேன். ஜெ-விற்கு நன்றிகள். 

ஆரோக்கிய நிகேதனம் பற்றிய கட்டுரைகள்

ஆரோக்கிய நிகேதனம் - அறிமுகம் - தமிழ்.விக்கி / tamil.wiki தாரா சங்கர் பானர்ஜியின் ‘ஆரோக்கிய நிகேதனம்’ - எழுத்தாளர் ஜெயமோகன் மரணமின்மை எனும் மானுட கனவு- ஆரோக்கிய நிகேதனம் ஒரு வாசிப்பு - (ஆயுர்வேத மருத்துவர், எழுத்தாளர்) சுநில்கிருஷ்ணன் ஆரோக்யநிகேதனம்- சௌந்தர்


ஆயினும் சாஹித்திய அகெடமி வெளியிட்டுள்ள இந்நாவலின் மூன்றாம் பதிப்பைப் பற்றிய என் வருத்தத்தை பி.கு வில் கூறியுள்ளேன்.




ஆரோக்கிய நிகேதனம்

மனிதன் ஓர் உதவியற்ற பிராணி. மனிதன் உதவியின்றி இருக்கமுடியாது. உதவியை எதிர்நோக்கும் பிராணி அவன். ஆயுர்வேதம், நவீன ஐரோப்பிய மருத்துவமுறைகளைத் தாண்டி, மனிதனை அருவருப்புடன் நோக்காமல் அவனுக்கு எழுதப்பட்டதே இந்நாவல் என்று சொன்னால் மிகையாகாது.


ஆரோக்கியம்

உடம்புக்கு ஒன்றுமில்லை  என்ற சௌக்கியம் தான் வாழ்க்கைக்கு மிக அவசியம். உடம்பை நன்கு பாதுகாத்தால், கண்பார்வை கிழவயதில் மங்கவேண்டிய காரணமே இல்லை. 

உழைப்பால் உறுதியான தேகம், தெளிவான பார்வை, பரந்த மனநோக்கு கொண்ட ஒரு ஆள் அறையினுள் நுழைந்ததுமே ஒரு சோபை வருந்துவது போல் இருக்கும். 

ஆனால் ஒருவன் ஆழ்மனதில் அதிருப்தி இருந்து கொண்டே இருந்தால் அமிர்தத்தை ஒருவன் பெற முடியாது.

உயிருக்குள்ள ஆயுட்காலம், ஆரோக்கியமான நிலை இரண்டும் வெவ்வேறு. ஒருவனுக்கு நீண்ட ஆயுள் என்றால் அவனுக்கு ஆரோக்கிய வாழ்வென்பதென்று. அப்படிக் குறைந்த ஆயுள் உள்ளவன் என்றால், அவன் ஆரோக்கியமாக இருக்கமாட்டான் என்று அர்த்தமன்று. வாழ்வில் தூய்மையுடன் காலங்கழிப்பவனே ஆரோக்கியம் நிரம்பியவனாவான். இல்லாதுபோனால், சக்தியை விருத்தி செய்துகொள்ளத் தெரிந்தால் மனிதனுக்கு ஆரோக்கிய திடகாத்திரம் ஏற்படும். எந்த நோயையும் அவனால் தடுத்துக் கொள்ளவோ சகித்துக்கொள்ளவோ முடியும். மாறாக உடலை தன் உடலை, இந்த நோய்களின் வித்து நன்கு வளர்ச்சி பெறுவதற்கு வளமான இடமாக்கிக்கொண்டானெனில், எரிபொருளில் சிறு தீப்பொறி பற்றினால், பயங்கர ஜ்வாலையாக எழும்புவதுபோல், ஒரு நோய் மரணமாக மாறிவிடும்.

உடல்

மனிதன் நம்பிக்கொண்டிருக்கும் இந்த ஆத்மா மனிதனின் உடலை நம்பியே உள்ளது. இந்த உடற்கூடு ஒன்று இராதுபோனால் அது எதையும் பற்றி நிற்கமுடியாமல் தொங்கும் - அப்புறம் அது ஒன்றுமே இல்லை. 

தெய்வம் வீற்றிருக்கும் கோயிலை நன்றாகக் கவனிக்காதுபோனால் தெய்வம் அதில் எப்படி தெய்வம் உறையும்? தேகத்தை வருத்தி, அதைச் சீக்கிரமாக ஒழித்து விடப் பார்ப்பது ஒருவகை ஆத்ம தற்கொலை. இந்த உடலையும் பாதுக்காக்கவேண்டும். 

உரிய காலத்தில் பக்குவமாவது வேறு; பிஞ்சிலே பழுத்துப்போவது வேறு. அகாலத்தில் பழுப்பதில் ஏதாவது ஒச்சம் (குறைபாடுகள், பழுதுகள்) இருக்கும். அதன் திரட்சியில் ஏதவாது குறை தென்படும். ஆனால் உரிய காலத்தில் பக்குவமாவதில் பூரணப் பொலிவே தோன்றும்; குறையென்பதே இராது. உரிய பருவத்தில், நன்கு திரண்டுவரும் பழந்தான் ருசியாலும், மணத்தாலும், நிறத்தாலும் மனத்தை வசீகரம் பண்ணும். இம்மூன்று தன்மைகள் சேர்ந்து நிறை எழிலுடன் விளங்கும். 

ஒழுக்கம்

நீதி வழுவாத ஒரு லட்சிய புருஷர், எண்பது வயதிலும் சிறிதும் கூண் விழாமல் நிமிர்ந்து நிற்கமுடியும். நிலைத்து நோக்க முடியும். கண்ணில் சிறு துளியேனும் நீர் வராது. 

சாது சந்நியாசிகளின் தன்மை, நாடி இவற்றின் இயல்பே தனியானது; சாதாரண மனிதர்களிடம் பழக்கங்களைக் கடைப்பிடிப்பதால் இத்தகையோருக்குத் தேகத்தில் தாங்கும் சக்தி அதிகமாகிறது. கொடுத்த மருந்து வியப்பூட்டும் வகையில் வேலை செய்யும் (பெண் படாத நிலத்தில் போட்ட முதல் பயிருக்கான வித்துப்போல்)

யோகசாதனையில் ஈடுபட்டவரின் மனம் அற்புத சக்தி வாய்ந்ததாகும். அந்த உடலின் நலிவோ, பலவீனமோ அந்த ஒள்ளிய ஆத்மாவைச் சிறிதும் பாதிக்காது. மனதுள் உணர்வெழுந்து பொத்தலான உடலைத் துறந்து புதிய உடலையே கொள்வர்.

உண்மையில் ஒரு மகான்/யோகி, யோக சாதனையின் வாயிலாகத் தம் உடலின் அக உறுப்புக்களை வலிமை மிக்கதாகச் செய்துகொண்டுள்ளனர். விசித்திர விரதங்களை அநுஷ்டித்து வெளி இயற்கையின் சூழலை அடிக்கடி ஆளும் திறமையைப் பெற்றுள்ளனர்.

நியமப்படி இருப்பவர்களுக்கு நோய் கட்டாயம் தீரும். 

ஆயுள்

ஆயுள் என்பது ஒரு பெரிய மருந்து. பல யோகங்கள் செய்து சாதாரண மனிதர்களிடம் இருந்து வித்தியாசப்படலாம். அப்படி யோகங்கள் செய்வதால் எதையும் சகித்துக்கொள்ளும் வலிமை உண்டு. நோயுடன் போரிடுவது மருந்தைக்காட்டிலும், இந்த இந்த ஜீவசக்திதான். இந்த ஆயுள்பலந்தான்.

ஆயுட்காலம் எத்தனை நாள் நீடிக்கும் என்பது சாஸ்திரப்படி கூறலாம். ஆனால் கர்மபலத்தால் (வினைப்பயன்) அந்த ஆயுளின் வரம்பு கூடக் குறுகலாம்; பெருகலாம். விபசாரம் செய்து மனிதன் மரணத்தை அழைத்துக்கொள்ளலாம். தான் செய்த பாவத்தினாலேயே தன் வாழ்நாளை ஒருவன் எதிர்பாராதவிதமாகவும் குறுக்கிக் கொள்கிறான்.

மரணம்

இன்று இருப்பவர் நாளை இல்லை என்ற பெருமை உடையது இவ்வுலகு.  மரணம் எதையும் பார்ப்பதில் பட்சபாதமற்றது. எவரும் அமரர்கள் அல்ல. மரணம் சம்பவிப்பது நிச்சயமென்று அறிந்து அதை வரவேற்கக் கூடிய ஒரு மனோதிடம் மிக உயர்வானது; அப்படி ஒரு நிலை ஏற்படுமாயின், தேன் இல்லாத குறையை வெல்லம் கொண்டு நீக்குவது போலாகும். உலகைவிட்டுச் செல்வதென்றால் இதுபோல் விடைபெற்றுச் செல்லவேண்டும்; மரணதேவதையின் அதிதியாக, துளியேனும் முகம் கடுத்துக் கொள்ளாமல் சந்தோஷமாகவே பயணப்படவேண்டும். ஆனால் இந்த நாளில் மரணத்துக்கு இதுபோன்ற விருந்தினர் கிடைப்பது அரிது. 

மரணமே சாசுவதமான (எந்த உயிரும் மரித்தே ஆக வேண்டும் என்ற பேருண்மைமிக்க)  இப்புவியில் இப்படி அதை நினைந்து வருந்தியோ சஞ்சலப்பட்டோ ஒரு பயனுமில்லை. வாழும் பொழுது, குறிப்பாக முதுமையில், மரணத்தை நினைத்து துக்கப்படத்தேவையில்லை. 

அகால மரணம், பயங்கரமிக்கது தான். பயங்கர வலியையும், எரிச்சலையும் மூட்டி வாழ்க்கையே கசந்து போகும்படி செய்துவிடும் வியாதி. இந்த எரிச்சலைத் தணிக்கக் குளிர் மழைத் தாரையென மரணம் வந்து அமைதியையும் ஆறுதலையும் தருகிறது. ஆதலால் முதிய வயதில் மரணம் அமிருதம் போன்றது; இனிமை தருவது! அதைக்கண்டு பயப்படத்தேவையில்லை. மரணம் தான் முக்தி (விடுதலை). இதைவிட வேறு ஏதும் தேவையில்லை. ஏனெனில் அங்கே நம்முடைய கணவனோ/மனைவியோ, அம்மா, அப்பா, சகோதர்கள்,  உறவினர்கள் வரவேற்கக் காத்திருக்கிறார்கள்.

ஆனால், பலர் கிழவன் கிழவிகள் இறக்க விரும்புவதில்லை. ஆதாவது பெயரன் கல்யாணம் என்று சாக்குக் கண்டுப்பிடித்துக்கொண்டே இருப்பார்கள்.

ஜீவன் மஷாயின் தந்தை ஜீவனிடம் இப்படி கூறுகிறார் “நீ என்னுடைய வீரமகனடா! இந்த வாழ்க்கைப் போருக்கு அஞ்சாதவன். பின்வாங்கவில்லை; இளைப்பும் ஆறவில்லை. போர் முனையிலேயே மாள்கிறாய்! அதற்காக நீ அவமானப் படுவானேன்? எதன் எதிரே நீ தோற்றாய்? நீ யாரிடம் தோற்று நிற்கிறாயோ, அதனிடம் ராமன், கிருஷ்ணன், புத்தன், பீஷ்மன், துரோணன், நெப்போலியன் எல்லாருமேதான் தோற்று நின்றனர். அதைப்பற்றி வருத்தப்படாதே!” அதாவது மரணத்திடம் வரலாற்று நாயகர்களே தோற்று இருக்கிறார்கள். ஆதலால், வீரமாக அதுனுடன் தொடர்ந்து போரிட்டதனால், அவமானப்பட வேண்டாம்.

இளமை

இளமையில் ஒன்று உள்ளது; சரிவான தரையில் நீரின் ஓட்டம் விசைகொள்வதுபோல் ஒரு வேகம் உள்ளது. அச்சமயம், நல்லது கெட்டதுபற்றிய அறிவு, நீதி உபதேசங்கள், சமூகக் கட்டுப்பாடு யாவும் துச்சமாகிவிடும். மனக் குரங்கு எந்தக் கட்டுக்கும் அடங்காது. இந்த நீதி உபதேசங்கள் யாவும் மணலில் விட்ட நீர்போல் ஆகும். இளமையின் போக்கு சரிவான கீழிடம் நோக்கியே விரையும். டாக்டர் ஜீவன் மஷாய் மஞ்சரி அவருக்கு செய்த நம்பிக்கை துரோகத்தில் வெறுத்துப்போய் அவ்விஷத்தை கடைசிச் சொட்டுவரை பருகிவிட்டார். அதுவே அவருக்கு ரிபுவாக மாறியது.

பின்நாட்களில், இத்தனை வண்ண விசித்திரமான ஆசைகள் எதற்காக எழுந்தனவோ என்று நினைத்துக்கொண்டார் ஜீவன் மஷாய். ”இரு வண்ணங்கள் - பகல் இரவு - வெண்மை கருமை இவ்விரண்டையும் தவிர மற்ற வண்ணங்களை நீயேதான் உன் கையாலேயே அழித்துவிட்டாய். தகுதியற்றவன் கையில் கிடைத்தால் இந்த வண்ணங்கள் அழிந்து வீணாகத்தான் போகும். வேதனையின் விழிநீரினால் இதெல்லாம் பொய்யென்று நினைத்து அழித்தாய்” என்றது அவரது மனது. 

இந்த உலகில் அவமானம் ஏற்பட்டதும், உள்ளுக்குள் ஒரு மெலிவு பஞ்சினுள் நெருப்பெனக் கனலத் தொடங்கும். அந்த நெருப்புபழி தீர்த்துக்கொள்ளவேண்டுமென்ற உற்சாகத்தினால் தான் அணையும். தம் இதயத்துள் பற்றிய இந்த வெவ்வழல் எதிரியையும் பற்றி அவன் எரிந்து சாம்பலானால்தான் தணியும். இது நிறைவேறாதுபோனால், அந்தக் கனல் துளித்துளியாக அவனையே பொசுக்கிவிடும்.  பெருந்தகையோர், மகாத்மாக்கள் இவர்கள் விஷயமே தனிப்பட்டது. அவர்கள் இந்த மாதிரி அவமானம் ஏற்பட்ட சமயங்களில், தம் பொறுமையாலும், மன்னிப்பாலும் அதைத் தணித்துவிடுவர்!

ஆற்றாமை

மனிதனில் உள்ள ஆற்றாமயே அவனுக்கு சத்ருவாக வரும். அதைவிட்டொழிக்காவிட்டால் அதற்கு தீர்வில்லை ஏனெனில் ஆற்றாமை எந்த மருந்தாலும் தீராது

சாதாரண மனிதன் பணம், புகழை ஈட்ட நினைப்பான். அவன் அமைதியின்மையில் இருப்பான். அவனுக்கு இருந்த வேட்கை தீராது. பசி தீராது. சுற்றுவான், அலைவான். மனிதனின் முயற்சியால் ஏற்படுவது சாதனை. அது வருவதற்கு முன்னால் நல்ல நிலை வருகிறது. அதிலிருந்து ஆற்றாமை (இன்னும் சம்பாதிக்க வேண்டுமென்ற நசை); இதுவே பகையாகும். இதன் தூண்டுதலினால், மனிதன் அளவுக்கு மீறிப் போய் நோயில் விழுகிறான். அவன் எதிரே வந்து நிற்கிறாள் அந்தச் மரண தேவதை!

நோய்

பிரபஞ்சத்தில் இந்த மரணம் நிச்சயமானது; பிறப்பன யாவும் இறந்தே தீரவேண்டும். இம் மரணம் பலவிதமாகத் தோன்றும்; இது தடுத்தற்கரிது. சிலர் நோய் நொடியினால் மரிப்பர்; சிலர் காயம் பட்டு இறப்பர்; சிலர் தம் இச்சையால்/இச்சைபோல் இறப்பர், தற்கொலை புரிந்துகொண்டு. ஆனால் இந்தப் பிணிகள் தாம் மரணத்துக்கு இட்டுச் செல்லும் பெரும்பாதை. இந்த நோய் ஒன்றே மரணத்தின் ஸ்பரிசத்தை ஏந்தி வருகிறது. எல்லா வியாதிகளாலும் மனிதன் இறப்பதில்லை. ஆனால் அதற்கு இவை வழிகோலிடுகின்றன.

இந்தப் பிரபஞ்ச வாழ்வில் மனிதன் சந்நியாசிக்குரிய சக்தியைப் பெறாது போனாலும், எல்லா நசைகளையும் கட்டிப் பிடிக்காமல் போனாலும், சிலவற்றையாவது அவன் வென்று வரவேண்டும். ஏதோ இரண்டு அல்லது மூன்று வகையான நசைகள். சிலர் ஐந்து வகையினையும் (ஆறு பகைகளில் ஐந்து) வென்று வருகின்றனர். ஆனால் ஒன்று அவர்களால் முடியவில்லையென்றால் அதுவே அவர்களுடையை பலவீனத்திற்கான வாசலைத் திறந்துவிடும். மரணப் படைகள் அந்த வாசல் வழியாகவே மனிதனின் உடலில் புகுந்துக்கொள்ளும்.

மனிதன் பிராணி ஆயினும் அவன் உள்ளத்தில் மிருகத்திற்குரிய காமம், குரோதம், உலோபம் யாவும் நிரம்பியுள்ளவன். ஆனால் மிருகத்திற்குரிய சகிப்புத் தன்மை அவன் உடலில் இல்லை.  பசிக்கு அடிமைகள், உலோபத்திற்கு அடிமைகள், காமத்துக்கு அடிமைகள். பண ஆசை, புகழ்மோகம், வேலைப் போதை, ருசிகள், சபலங்கள் .. என, ஒவ்வொருவருக்கு ஒவ்வொன்று என, நம்மை பலவீனப்படுத்தி, நோய்க்கான காரணியாக ஆகி, மரணத்திடம் சேர்கிறது. “மிகினும் குறையினும் நோய்செய்யும்” என்பதே வள்ளுவர் கூறுவதும்.

மனிதன் தன் உடலை இந்த நோய்களின் வித்து நன்கு வளர்ச்சி பெறுவதற்கு வளமான இடமாக்கிக்கொண்டான் எனில் அது அவனுக்கு அழிவை தேடித்தரும்.  எரிபொருளில் சிறு தீப்பொறி பற்றினால், பயங்கர ஜ்வாலையாக எழும்புகிறது. 

ஒரு வேலையிலும் ஈடுபடாத மனிதனின் புத்தியைச் சோம்பல் வந்து சூழ்ந்துக்கொள்ளும்.

மனிதன் தான் செய்யும் தீய வினையாலேயே அழிகிறான். மனிதனின் நடத்தையே அவனுக்குச் சத்துருவாக நிற்கும். அநாசாரம், வரம்பு மீறிப் போகும் நடத்தை, விபசாரம் இவற்றின் விளைவாக மனித இனம் நோய்வாய்ப்படும். இவற்றை விடவில்லை என்றால் நோய் அதிகமாகும். விட்டுத்தொலைத்தால் குறையும்.  குடி/மதுபானம், கஞ்சா, சிகரேட், புகையிலை, விபசாரம் மற்றும் அதையொட்டிய பல தீய செயல்களாலும் தன்னையே ஒருவன் நிர்மூலமாக்கிக்கொள்வான். இதைத் தவிர ஏதாவது நோயில் படுத்தால், உருக்குலைந்துப்போவான். 

நோய் அதிகரித்தால், மடமடவென்று பனையளவு ஏறிப்போகும்; ஆனால் குறையும்பக்ஷத்தில் தினையளவாகத்தான் இறங்கிவரும்.

நோயுடன் கஞ்சா போன்ற கெட்ட பழக்கமும் சேர்ந்தால் சொல்லுவானேன்? நோயாளி தேறமாட்டான். ஏனெனில் கஞ்சாவுக்கு ஏங்கிப்போய் வெறிப்பிடித்தவனாவான். அவர்களை மருத்துவர்களின் சிகிச்சை காப்பாறுவது கடினம்.

தீய பழக்கங்கள்

வீட்டில் நெருப்புப் பற்றினால், வீடே எரிந்து சாம்பலாகப் போக வேண்டுமென்பதில்லை. தண்ணிரைக் கொண்டு அணைக்கலாம். அணைக்கவும் முடியும். ஆனால் நெருப்புக்குத் துணையாகக் காற்று வீசத் தொடங்கினால் அது எவ்வளவு நீர்தான் கொட்டினாலும், அணையவே அணையாது! கடைசிவரை எரிந்து, சாம்பலாக்கிவிட்டுப் பின்புதான் நிற்கும். பலருக்கு வியாதிகள் வருவர்தற்கு முக்கியமான காரணம் அவர்களுக்குள் இருக்கும் கெட்ட பழக்கங்கள் ஆகும். 

மேலும், பிணி மரண ரோகமாக மாறும் சமயம் ஒருவனது தீய பழக்கமே அவன் புத்தியை ஆட்டிவைக்கும். அமுதமென்று எண்ணி நஞ்சை உட்கொள்ள அது தூண்டும். 

கெட்ட பழக்கங்கள் பலநாள் இருக்கும். ஆனால் இயற்கை எத்தனை நாள் இந்த அநாசாரத்தைச் சகித்துக் கொண்டிருக்கும்? வரம்புக்கு மீறிச் செல்லும், சிறிதும் உஷார் இல்லாமல் சென்றால் நோயில் படுக்கவேண்டியது தான்.  

கெட்ட பழக்கங்கள் அதிகமானால், பிணி மிகவும் சிக்கலாகிவிடும். உடல் இளைக்கும், ஆயுளும் குறையும்.  உதாரணமாக, லிவர், ஸ்ப்ளீன், அந்தப் பழைய மலேரியா, ரத்தச் சோகை, மதுபானத்தினால் வரும் விளைவுகள் இவையனைத்தும் சேர்ந்தால் ஒரு குழுப்பமான வியாதியாகிவிடும். இதனால் அகால மரணம் ஏற்படக்கூடும்.

நோயாளிகளின் பயங்கரத் தீயபழக்கங்களால் அவர்களை பிழைக்க வைப்பது எந்த ஒரு மருத்துவருக்கும் இயலாத காரியமாகிவிடும். 

மருத்துவம் / ஆயுர்வேதம்

வாள், கத்தி இரண்டுமே படைக்கலங்கள்தாம்; ஆனால் வித்தியாசம் இருக்கிறதே! வாளால் எருமையைப் பலி கொடுக்கமுடியாது. கத்தியைச் சுழற்றினால் மட்டும் இந்த காலத்துப் போர்முறை ஆகிவிடாது; ஆதலால், ஆயுர்வேதம், சித்தா போன்ற மருத்துவமுறைகளும் நம் சாஸ்திரங்களும் காலத்துக்குச் சரிசமமாக நடைபோடவேண்டும்.

டாக்டர் ஜீவன் மஷாய் தனது குரு ரங்லாலின் அறிவுரையின் படி டாக்டரின் சிகிழிச்சை முறை, கவிராஜ் வைத்தியம், கைவைத்தியம் இந்த மூன்றையும் வைத்துக்கொண்டு ஒரு ட்ரை சைக்கிளிங் வாழ்க்கை ப் பயணம் செய்தார். அது ட்ரை-மோட்டார் போல் சென்றது.

இன்று, ஒரு கிளினிக் மட்டும் இருந்தால் பல உயிர்களை பிழைக்கச் செய்யலாம். மே! முதலிலேயே ‘ப்ளட் கல்சர்’ செய்தால், நல்ல மருந்துகள் கொடுத்தால் உயிர்களை பிழைக்க வைக்க முடியும்.  விஞ்ஞான முறைகள், ரத்த மல மூத்திர சோதனைகள், எக்ஸ்-ரேக்கள்,  மைக்ரோஸ்ப்கள் போன்ற க்ளினிக்கில் டெஸ்ட் இராமல் இந்தக் காலத்தில் ஓர் அடி எடுத்துவைக்க முடியாது

இந்தக் காலத்தில் எத்தனையோ நாட்டு மக்கள் ஓரிடத்திலிருந்து ஓரிடம் போவது சகஜமாகிவிட்டது. அவர்கள் வரும்போது புதுப்புது நோய்களை கொண்டுவந்து விடுகின்றனர். நீர், காற்று, நிலம் இவை மாறிப்போய் புதிய தோற்றம் கொண்டுள்ளன.

பழைய நோயால் தவிப்பவர்களுக்கு இன்றும் இந்நாட்டு வைத்திய முறைகள் மூலம் சிகிச்சை செய்து குணமாக்க முடிகிறது. ஆயினும், இன்னும் நிறைய இருக்கிறது. 

இன்னும் எத்தனையோ வகை புரியாத நோய்கள் இருந்தாலும், அதைரியமடையாமல், வெட்கப்படாமல், அதன் லக்ஷணங்களை ஆய்ந்து சிகிச்சை செய்ய முடியும். மேலைநாடு வைத்தியமுறைகள், விஞ்ஞான ரீதியான லாபரெடரிகள் போன்ற அன்று இங்கு இல்லாத இன்றைய சௌகரியங்களின் துணையுடன் ஆராயலாம். இவை உண்மையில் போராட்டமே. மரணத்துக்குச் சரிநிகர் நின்று நடத்தும் போர். இதில் தோற்றுப் போவதில் அகௌரவம் ஒன்றுமில்லை. 

உணவு

சாப்பாட்டு விஷயத்தையே எடுத்துக்கொண்டால், இயற்க்கையாக நம் உடலுக்கு சுவைப்பற்று இருக்கும்போது, கெட்ட உணவைத் தின்னாது. வயிறு நிரம்பியதும், இத்துடன் நில் என்று சொல்லிவிடும். அதற்குத் (மன)திருப்தியின் மூலம் நிவிருத்தி ஏற்படுகிறது. (விருப்பு ஓரளவுக்கு; அளவுக்குமேல் போனால் தெவிட்டுகிறது; வெறுப்பு ஏற்படுகிறது). 

ஆனால் இந்த இயற்கைக்குக் கெட்டதில் ருசி ஏற்பட்டுவிட்டாலோ, அதுவே இதற்குப் பகையாகி விடுகிறது. அப்போது ஆற்றாமை அதிகமாகிறது. திருப்தியே ஏற்படுவதில்லை. அந்த (இயற்கையான) வெறுப்புணர்வு ஓடிவிடுகிறது. ஊரெல்லாம் திரிந்து வயிறு வளத்துத் தன் உலோப குணத்தைத் திருப்தி செய்வதை குறியாக இருந்தால் ஆற்றாமை தீராது. நோய்களுக்கு ஆளாக நேரிடும்.  அவ்வுணவினால் தேக புஷ்டிக்குப் பதிலாக உடல் நலிவே ஏற்படும். அதனால்தான் இந்த நசைகள் - பகைகள் - சேர்ந்துவிட்டால், நோய் தடுக்கமுடியாதபடி மரணத்தை நோக்கி விரைகிறது. திருடி தின்ன தூண்டுகிறது. அப்படி உண்டு வயிறும்,  சிறுகுடலும் (இன்டெஸ்டைனும்) நொய்ந்து போகும்.(அகால) மரணத்தை அடைவேண்டி இருக்கிறது.

நாக்குச் சபலம் அதிகரித்துவிடக்கூடாது. நாக்கின் நீளத்தை அறுக்க வேண்டும். பசி எடுத்தால் கண்டதையுமா வயிற்றுள் தள்ளுவது தவறு.

சில அம்மாக்கள், குழந்தைக்கு உடம்பு நல்லதல்லவெனத் தெரிந்தும் கெடுதலான பட்சணங்களை மறைவாகக் கொடுப்பார்கள். டாக்டர் கூடாதென்று தடுத்தவிட்டபோதிலும், மனைவி ரகசியமாக மதுபானம் தருவித்துக் கணவனுக்குத் தருவாள்.

லிவரை கெடுக்கும் சாராயம் போன்றவற்றை அம்பாளின் பேரில் நிவேதனம் செய்து உண்ணாமல், அதற்கு பதிலாக உடலுக்கு தீங்குவிளைவிக்காத உணவுகளை நிவேதனம் செய்து உண்ணலாம்.

மருந்து

மருந்தினால் நோயைப்போகும் - ஆனால் மரணத்தை விலக்க அதனால் ஆகாது. 

ஆற்றாமை எந்த மருந்தாலும் தீராது.

மருந்து சாப்பிடுவதில் மோகம் இருத்தல் கூடாது. பன்னிரண்டு மாதங்களும் ஏதாவது ஒரு மருந்து சாப்பிட்டுக்கொண்டே இருப்பது; இங்கிலீஷ் மருந்து, ஆயுர்வேத மருந்து, யுனானின், கை மருந்து - இப்படிப் பல தினுசு - என மாற்றி மாற்றி சாப்பிடுவது உகந்ததல்ல.

கைவைத்தியம் - இந்த உலகில் எளிதாகக் கிடைக்கும் பொருள். (ஆனால் எவரும் அதற்கு மதிப்பு கொடுப்பதில்லை).

மீட்சி / மீள்தல்

உங்கள் மனத்தில் ஏதாவது மறைவாக இருந்து அந்தத் துர்ச்சிந்தனை உங்களை வாட்டியெடுக்கும் பட்சத்தில், அதனை வெளிப்படையாகச் சொல்லி நிம்மதியுறுங்கள்.

துயருற்றபோதும் மனச் சலனம் இன்றி இருத்தல் வேண்டும். 

நோயாளியிடமே அந்த நோயை எதிர்க்கும் சக்தியிருக்கு. மனிதனுக்குள்ள எண்ணம் பயங்கரமான வேலையைச் செய்யும். இனி நம்பிக்கையில்லை, படுத்துவிடுவோமென்று நினைப்பவரைப் பிழைக்கவைப்பது எளிதல்ல. இந்தச் சாது சந்தியாசிகள் மன உறுதி மிக்கவர் - இவர்களுக்கு அமோக இச்சா சக்தி உண்டு. மரணத்தை நினைத்தபோது இவர்களால் வரவழைத்துக்கொள்ள முடியும். 

நட்பு, தயை, அன்பு இவை அதிகப்படி இருந்தால் ஒருவனை அது விட்டுவிடாது.

நோயில் இருந்து விடுதலையை விரும்பினால் அது வந்தே தீரும். ஆனால் ஒருவனுக்கு இஷ்டமில்லை என்றால் அவனுக்கு அது கிடைக்காது. 

மீட்சிக்கு உதாரணமாக ஜீவன் மஷாயையே சொல்லலாம். டாக்டர் ஜீவன் மஷாயின் தந்தை ஒருதரம் அவருக்கு அறிவுரை கூறுவார். அதன்பிறகு ஜீவன் மஷாயின் மூளையைக் குழப்பிய ஒரு மூடுபனி விலகிப் போயிற்று. ஜீவனின் வாழ்வில் மீண்டும் சுவாலை எழுந்தது. அவருடைய ரிபு-களான மஞ்சரியும், பூபி போஸும் அவர் நினைவிடு மறைந்தனர்.  ஆத்தர்-பௌவும் அவர் நினைவில் இல்லை. புதுப்பிறவி எடுத்தாற்போல் இருந்தது - புதுப் பிறப்பிற்கான தவம். அச்சமயம் ஜீவனுடைய புலனுக்கு ரங்கலால் ஒருவரே புலப்பட்டார். கையில் தடிமனான நோட்டுப் புத்தகம்; கண்ணெதிரே, ஒளிமயமான எதிர்காலம்! அடுத்த நான்கு ஆண்டுகள், ஜீவனதத்தரின் வாழ்க்கையிலே நல்ல உச்சதிசையெனலாம்.

மற்றும்

வெம்மை பற்றினால் எந்தப் பொருளும் வெம்மை கொள்வது இயற்கையின் தருமம். வெம்மையுற்ற பொருள் எதுவும் விரிவடையுமென்பது விஞ்ஞான் உண்மையாகும். அளவுக்கு மீறிய செல்வம் இருக்கும் இடத்தில் அகம்பாவமும் செருக்கும் குடிக்கொள்ள வாய்ப்புகள் உள்ளன.

ஜீவன் மஷாயின் தந்தை ’உஹூம் முடியாது’ என்று கூறிவிட்டார் என்றால் அது முடியாது என்று பொருள். ஆனால் அந்த வன்மையில் ஒரு மென்மை கலந்திருந்தது. அவ்வளவு கடினத்திடையேயும் ஒரு மெதுத்தன்மை  ஒலிப்பதுதான் மிக அதிசயம்.

சாஸ்திரம் படிப்பது வேறு, சாஸ்திரஞானம் பெறுவது வேறு - நம்முடைய சாஸ்திரங்கள் கூறுகின்றன: குரு இல்லாமல் எந்த வித்தையும் வராது. படித்து விடலாம் பல நூல்களை. நெட்டுருவும் போட்டு விடலாம். ஆனால் இந்தப் பயிற்சியுடன் அறிவாற்றலும் இணைந்துவிட்டால் உலகத்துக் காட்சிகளே வேறுவிதமாகத் தோற்றம் கொள்ளும்.

ஜீவனின் குரு ரங்லால் கூறுவார்: ஜீவன், உன்னிடத்தில் எனக்கு ஆசை எதனால் தெரியுமா? நீ வாழ்க்கையில் தோல்வியைக் கண்டு மருண்டு போகாதவன் என்பதனால். இந்த நாட்டின் வைத்தியர்கள் தோல்வியை ஏற்று இந்த அலோபதி முறையை வீட்டில் குந்தியபடி சபித்துத் தீர்த்துவிட்டார்கள். இதற்குப் போட்டியாகத் தம் சாஸ்திர ஞானத்தை விருத்தி செய்துகொள்ளவில்லை. வைத்திய முறையில் புதுமையைப் புகுத்தவில்லை. அரைப்பிணங்கள் இப்படித்தான் செத்தொழியும். நீ உயிர் துடிப்புள்ள மனிதன்; அதனாலேயே உன்னிடம் எனக்கு மதிப்பு. தோற்றுப்போவதைவிட அவமானம் தரும் விஷயம் வேறில்லை. தோல்வியை ஏற்பதும் சாவதும் ஒன்றே; செத்தவன் செத்தவனே, புரிகிறதா?

பாவம், புண்ணியம் நிரம்பிய இந்தப் பிரபஞ்சத்தில் மனிதன் புண்ணியம் செய்யவே விழைகிறான். ஆனால் அவனால் முடிவதில்லை.  சாதாரண மனிதன் பணம் சம்பாத்திக்கிறான், பெயரும் புகழும் ஈட்டுகிறான், ஜோராக செலவும் செய்கிறன். இதை தவிர வேறு எதையும் விரும்பாதவன்.

ஆனால் மனதில் ஒருவனுக்கு திருப்தி ஏற்படவில்லையென்றால் ஒருவன் எப்படி ஆனந்தத்துடன் பொருளீட்டுவார்? புகழால் உண்மையான இன்பம் ஏற்படாது போனால் அது மனத்தைப் பரிபூரணமாக நிரப்பாதுபோனால், அது வெறும் பொய்யே. அதன் ஆயுட்காலம் சில நாளைக்கே. அந்த நாட்கள் சென்றதும் அந்தப் புகழும் பெயரும் வெறும் பொய்யாகிவிடும்!’ பிராந்திக் கோப்பையில் இருக்கும் போதையைப் போல்.

வம்சத்தின் நல்ல பெயரைக் கெடுப்பவன் துரோகியாவான். இதனால் பெற்ற அப்பன், அம்மா இவர்களுக்கெல்லாம் தலையிறக்கமடா... மேலே இருக்கும் பதினான்கு தலைமுறையான பெரியவர்களும் நடுங்குவார்களடா - அந்த மறுமை உலகிலும் இந்த அவமானத்தால் அவர்கள் கண்ணீர் சிந்துவார்களடா’

மரணம் தடுத்தற்கரியது. துயரமோ சோகமோ நிரந்தரமானதன்று. வாழ்க்கையில் அறுசுவையும் கலந்தே இருக்கும். வானிலும், காற்றிலும், இம்மாநிலத்திலும், ஆறு பருவங்களின் நடனம் நிகழ்கிறது. இம்மண்ணின் ஒவ்வோர் அணுவிலும் வெம்மையுடன் வேட்கையும் நிரம்பியிருப்பதுபோலவே உயிரினத்தின் வாழ்க்கையிலும், அதே போல் தேகத்தின் புரைகளிலும் இந்த வேட்கையும் சுவைபற்றிய நசையும் தேங்கியுள்ளன. இவை இராதுபோனால் வாழவே முடியாது - மனிதனின் உள்ளத்துள் ஆனந்தத்தைப் பெற வேண்டிய தாகம் இருக்கிறது. சோகம் என்பது எதற்காக? அது ஏன் நீடிக்கவேண்டும்? 

வருங்காலம்

மரணத்தை வென்று வரவே முடியாது;  ஆனால் அகால மரணத்தைப் காட்டிலும் துக்ககரமானது வேறெதுவுமில்லை. அகால மரணத்தைத் தடுப்பதே இந்த உலகில் மங்களமான காரியமாகும். எல்லாவற்றையும்விட இன்பம் தருவதாகும்.

மனிதன் அகால மரணத்தை வென்று வரலாம்; நிச்சயமாக அவனால் முடியும். நோய்களிலிருந்து அவன் மீட்சி தருவான். நல்ல பழுத்த வயதில் யோகியரைப்போல், தவசிகளைப்போல் மனிதன் ஒவ்வொருவனுக்கும் உடம்பை நீத்துச் செல்வான். அப்போது சிகிச்சர்களுக்கோ, டாக்டர்களுக்கோ தேவையிராது. நல்ல பக்குவ வயதில் ஆரோக்கியமான உடலுடன் மனிதர் யோகியரைப்போல், தவசிகளைபோல் உடலை நீத்துச் செல்வார்கள். வைத்தியனை விளித்து, ‘இனித் தேவையில்லை; போதும். ஓய்வுவேண்டும் - நான் தூங்கவேண்டும் புட் மீ டு ஸ்லீப் ப்ளீஸ் (Put me to sleep please) என்பார்கள். அது ஒரு பெருந்துயில் - மகாநித்திரை!

நன்றி ஜெ.

அன்புடன்

ராஜேஷ்

பி.கு: இந்நாவலை ஓர் ஆண்டாக நான்கு பிரபலாமன நூல்விற்பனை வலைத்தளங்களில் order செய்தும், பின்பு stock இல்லை என பதில்பெற்றேன். ஒருவழியாக நண்பரின் உதவியால் 2022 சென்னை புத்தககண்காட்சியில், சாஹித்திய அகேடமியின் 2020 வெளியிட்ட மூன்றாம் பதிப்பை பெற்றேன். ஆனால் இப்பதிப்பு நாவலின் வாசிப்பு அனுபவத்தை குளைத்துவிட்டது என்றே சொல்லலாம். 

ஒவ்வொரு பக்கத்திற்கும் சராசரியாக 1-2 பிழைகள். ஒற்றெழுத்து பிழைகள், வலிமிகும் மிகா பிழைகளை விட கண்ணுக்கு அப்பட்டமாக தெரியும் பிழைகளில் 90% தட்டச்சு பிழைகள் தான். உதாரணமாக ஆணடு (ஆண்டு), ஏதவது (ஏதாவது), அவவ்றையில் (அவ்வறையில்), தேற்றுப் (தோற்று), அநத்த் (அந்தத்), உணமை (உண்மை), இபபடி (இப்படி)... இந்த பதிப்பு Draft 2 என்றுக்கூட சொல்ல முடியாது அளவில் தட்டச்சுப்பிழைக்ள் நிரம்பியிருக்கின்றன. ஆனால், இது மூன்றாவது பதிப்பு என்று சொல்வது நம்ப முடியவில்லை. இத்தனைக்கும் 2015 பதிப்பை பற்றி வலைத்தளங்களில் பதிவுகள் உள்ளன. சாஹித்திய அகேடமியின் இ-மெயில் எழுதி ஒருவாரம் ஆகிறது. இதுவரை ஒரு பதிலும் இல்லை.

இந்நூலை படித்தப்பின்பு, அழிசி குழு சமீபத்தில் கிண்டிலில் வெளியிட்டுள்ள பதிப்பை (சொடுக்கை தட்டவும்) நண்பர்களுக்கு பரிந்துரைக்கிறேன்.

Paperback வடிவில் வேண்டும் என்றால் வ.உ.சி நூலகம்/பதிப்பகம் வெளியிட்டுள்ள பதிப்பு (சொடுக்கை தட்டவும்) கிடைத்தால் வாங்கலாம். சாஹித்திய அகேடமியின் (2022 வரையிலான) பதிப்பை தவிற்பது நல்லது. (2022 ஜுலை-22 எழுதியது இக்கட்டுரை)