அன்புள்ள செந்தில்,
தங்களுடைய மழைக்கண்&பிற கதைகள் தொகுப்பை வாசித்தேன். கதை வாரியாக எனது எண்ணங்கள்..
1. அன்பின் நிழல்
பலருடைய வாழ்வில் இக்கதையில் உள்ளது போல் ஒரு template உண்டு. சுயம்பு பெற்றோர், பண கஷ்டத்தின் விறத்தி, ஒரு கணமும் காயாத அந்த இரவின் கண்ணீர், தற்கொலை பூச்சாண்டிகள். ஆயினும் என் பெற்றோர் என்ற நிலைப்பாடு. கதையின் முடிவு அபாரம். பேரன்பில் இருந்த வந்த முடிவு அது.
2. நித்தியமானவன்
கலையின் மீது ஆசைப்பட்டு மிக பெரிய திட்டமிடலும் வழிகாட்டுதலும் இல்லாமல் வாழ்க்கையையும் தொலைத்து career-ஐயும் தொலைத்து அல்லோல் படுவதை ஒரு பெரிய பத்தி முழுவதும் விவரித்தது மிக உண்மையாக இருந்தது. அந்தக் கலைஞனை போல் வாழ்வில் புதிய லட்சியங்கள், கனவுகள் என்று புதிய துறைகளுக்குள் சென்று வாழ்வை இழந்தவர்களை பிரதிபலித்து இருந்தது. மேலும், அந்த agent வந்து “உன்னால் முடியும் பாஸ்கர்” என்று பாஸ் (எ) பாஸ்கரன் நயந்தாரா போல் pep talk கொடுப்போர்க்கு அக்கலைஞன் கொடுக்கும் பதில் மிக நேர்த்தி. நெத்தி அடி என்று கூட கூறலாம். ஏனெனில் யதார்த்தில் நமது பிரச்சனைகளை நம்முடன் இருந்து அதன் வேர்களை கண்டடைந்து தீர்ப்போர் அரிதினும் அரிது. நிதி உதவி செய்வார் உண்டு. மறுப்பதற்கு இல்லை. ஆனால் அதுமட்டும் போதாது தானே. ஒரு problem solving இருக்காது. அவனா தேடிக்கிட்டது அல்லது நமக்கு அதுல என்ன பெருசா தெரியும் என்று விட்டுவார்கள். இல்லை என்றால் எங்க நமக்கு நேரம் இருக்கு. நான் அந்த பக்கம் போமோது பேசுரேன் என்பார்கள். ஆனால் அந்த பக்கம் போகவே மாட்டார்கள். வருடங்களும் வயசும் கரைந்துவிடும்.
கதையின் இறுதியில், ஒரு பாரட்டு கூட செவியின் ஓராமாய் தான் கிடைக்கிறது. ஆனால் ஒரு கலைஞன் தன்னை கண்டடையும் இடம் - ஒரு infectious ஆன தருணம். அதன்பிறகு பின்நோக்கா தருணம். ஒரு நம்பிக்கை ஒளி அது.
3. எவ்வம்
இந்த கதை ரொம்ப நல்லா இருந்துச்சு. ஆனா அந்த சிறுவனின் இடத்தில் இருந்து பார்க்கும் பொழுது மிக துன்பமாக இருந்தது. ஒரு சிறுவன் அடி உதையை கூட தாங்கிக்கொள்வான். ஆனால் தன் பெற்றோர் குறிப்பாக தந்தை அவனை ஒரு மனிதனாக கூட பார்க்காமல் அன்பு இல்லாமல் நடந்துக்கொள்ளும் தருணங்கள் மிக கொடுமை. ஒரு தந்தை தவறான வேலை செய்வது, வலிப்பு வந்தது நல்லது என்று சொல்வது, ஏன் நீ வலிப்பு வந்து நடிச்சி என்ன காப்பாத்துல என்று கேட்பது, பிள்ளை காண்பித்து காசு வாங்குவது, பஸ்ஸில் சீட்டு வாங்குவது அந்த குழந்தைக்கு எவ்வளவு ரணத்தை உண்டாக்கும். குழந்தை வைத்து பிறர் முன் வேஷமிட்டு பச்சோதாபம் தேடுவதெல்லாம் இழிவான / நேர்மையற்ற செயல்கள். குழந்தைகள் என்று நினைத்து செய்கிறார்கள். ஆனால் குழந்தைகள் என்றாலும் அது மிக ஆழமான விரிசல்களை உண்டாக்கும். பெற்றோருக்கும் குழந்தைகளுக்கும் இடைவேளை அதிகரித்துக்கொண்டே இருக்கும். பெரும்பாலும் பெற்றோர் தான் என்ன தவறு செய்தேன். ஊர்ல செய்யாததையா செய்தேன்? பட்டினியா போட்டு விட்டேன் என்று கூறுவர். எல்லாம் பசங்களுக்காக தானே செய்தேன். ஆனால் இவர்கள் செய்யும் சின்ன சின்ன தவறுகள் ஒரு அணையில் நீர் தேங்குவது போல் தேங்கிக்கொண்டே இருக்கும். ஒரு சிறு தவறு அந்த குழந்தையின் மனதில் அவர்கள் உறவை அத்துப் போக செய்துவிடும். வெளில இருந்து பார்ப்பவர்களுக்கு அது என்ன பெரிய குத்தம் என்று தோன்றும். ஆனால் அது ஒரு tipping point. அதை சொன்னா புரியவே புரியாது. கொஞ்சம் தண்ணீர் அதிகமானாலும் உடைந்த அணை உடைந்தது தான். அதனை கட்டமைப்பது எளிதல்ல.
4. முத்தத்துக்கு (கனலி)
எனக்கு இந்த கதையில் இரண்டு விஷயங்கள் பிடித்தது 1. ஒரு 40 வயது இளைஞன் காலாகாலத்துல கிடைத்து இருக்க வேண்டியவை கிடைக்காமல், அவனுக்கு அது கிடைக்கும் பொழுது அது முற்றிலும் வேறு அனுபவமாக இருந்து விடுகிறது. இளவயதில் கிளர்ச்சியாக (அதில் ஒன்றும் தவறில்லை) அனுபவித்து இருக்க வேண்டிய ஒரு முத்தம் 40 வயதில் பதற்றமாக (ஏதோ குற்றத்தை யாரும் செய்யாததை செய்வதுப்போன்று) மாறி விடுகிறது. அதன்பின் பல மன தடுமாற்றங்கள். 2. இச்சமுதாயத்தில் (நண்பர்கள், உறவினர்கள், அலுவகத்தில் இருப்பவர்கள்) பலர் எப்படி நுண்ணுணர்வு அற்று இருக்கிறார்கள் என்று திரையிட்டு காண்பித்தது.
5. மழைக்கண்
இந்த கதையில் அந்த அம்மாவின் மூலம் பருத்தி விவசாயத்தை கண்முன் காண்பித்து விட்டீர்கள் என்றே சொல்வேன். (நேத்து order பன்ன 30 books வந்ததா வீட்ல photo எடுத்து அனுப்பினார்கள். அதை பார்த்த போது மகப்பேறு மருத்துவமனை குழந்தைகள் தான் நினைவுக்கு வந்தது. அந்த படிமத்தை மறக்கமாட்டேன் என்று நினைக்கிறேன்).
எனக்கு அந்த இறுதி முடிவு(?) பருத்தி புடவையை தொட்டுப்பார்க்கும் இடம் கண்கலங்க செய்துவிட்டது. அவள் வேலையில் பருத்தி செடியை எப்படி பார்த்துக்கொண்டாள், புச்சிகள் புழுக்கள் கால்நடைகள் களைகள் என்று எல்லாவற்றிலிருந்தும் பாதுகாத்தாள். ஒரு பூச்சி கடி என்றதும் அந்த பருத்தியே புடவையாக அவளுக்கு ஒரு மருந்தாக ஒரு அரவணைப்பாக அமைவதாக எனக்கு தோன்றியது. நாம் ஒரு வேலையை ஒழுங்கா செய்தால், இப்பிரபஞ்சத்தில் நம் வேலை எப்படி எல்லாம் கைகொடுகிறது.
7.நெருநல் உளளொருத்தி
இக்கதைப் வாசித்த பின்பு எனக்கு என்ன தோன்றியது என்றால், 1) ஒருவேளை பூங்கோடி அவள் நாத்தனாரை முதலிலேயே ஒழுங்காக நடத்தி இருந்தால் பிற்காலத்தில் அவளுக்கு அந்த நிலைமை வந்து இருக்காதோ? காலம் நம்மை மிக கொடுமையாக தண்டிக்கும் 2) தங்கை மாறியதில் ஆச்சர்யம் இல்லை எனினும் அது மிக தவறு 3) பூங்கொடி ஒரு குழந்தையாவது இந்த வறுமையில் கஷ்டப்படாம இருக்கட்டுமே என்று ஊரைவிட்டு சென்று விடுகிறாளோ?
8.காகளம் (தமிழினி)
ரொம்ப பிரமாதமா எழுதப்பட்ட கதை. அந்த உலகத்துக்கு மிக எளிதாக செல்ல முடிந்தது. எனக்கு சில விஷயங்கள் ரொம்ப பிடிச்சது 1) நம்ம மனசு உடம்பு இரண்டும் நல்லா இருக்கனும். இல்லாட்டினா முகம் மலர்ச்சியா இருக்காது. இல்லாடினா அது நம்ம வேலைல வியாபரத்துல பிரதிபலிக்கும் 2) முதலாளிக்கு இசை ஒரு பற்று என்பதை தாண்டி எப்படி அவருக்கு ஒரு மன அமைதியை தருகிறது அவரை ஒரு பண்பட்டவராக வைத்துகொள்கிறது. எல்லாருக்கும் வாழ்க்கைல அந்த மாதிரி ஒன்னு வேண்டும். இல்லை என்றால் (கல்லாவில், ஊதியத்தில் வரும்) பணம் நம்மை சமநிலையிலும் சந்தோஷத்தில் அமைதியிலும் வைக்காது 3) (புத்தகத்தில் /இனையத்தில் சில பத்தி வித்தியாசம் இருக்கு) - அவன் மன்னிப்பு கேட்க வேண்டும் என்று நினைத்தாலும் ஊர்ல யாரும் பன்னாத தப்பையா பன்னிட்டேன் இல்ல அப்படி என்ன பெரிய தப்பு பன்னிட்டேன் என்று கேட்போர்க்கு - இதுக்கு பேரு ஆணவம் என்று தெளிவாக கூறியது 4) இறுதியாக எது முதலாளியை முதலாளியாக ஆக்கியது. அது இசை, இசை கொடுத்த அமைதி/ நிறைவு/ நல்லெண்ணம் என்று எதுவாக இருக்கலாம். ஆனால் எல்லோரும் அந்த கேள்வியை கேட்டுக்கொள்ள வேண்டும். நான் பல சமயம் செய்வது. பொதுவாக பலர் செய்துக்கொள்ளும் ஒப்பீடு தான் - ஏன் அந்த குடும்பத்தில் பிரச்சனை இல்லை? உறவுகள் சீராக இருக்கிறது? வசதிகள்/வாய்ப்புகள்..?. அவர்களிடம் பேசிப்பார்த்தால் எங்கும் பிரச்சனை இருக்கிறது ஆனால் அடிப்படையில் அவ்வீட்டில் இருக்கும் அமைதி / ஒழுங்கு / முதிர்ச்சி என்று ஏதோ ஒன்று அங்கு இருக்கிறது. இப்பிரசச்னைகள், ஆசைகளை தாண்டி பார்ப்பதற்கு ஒரு மனபக்குவம். அவர்களை தரையில் கால் வைத்து நடக்க வைக்க. ஆனால் அது வெறும் பணம் மட்டும் அல்லது. அது பல காலமாக கட்டமைத்து பாதுக்காக்கபட்ட தலைமுறைகளாக கவனமாக கைமாற்றப்பட்ட ஒரு ஒழுங்கு. அப்படி ஒன்றை கண்டடைந்தவராக முதலாளி இருக்கிறார். இவற்றையெல்லாம் சொல்லிக்கொடுக்க முடியாது. நாம் தான் பார்த்து பின்பற்ற வேண்டும்.
மொத்தமாக இந்த சிறுகதைள் தொகுதியில் எனக்கு பிடித்த அம்சம் என்னவென்றால், (ஜெயகாந்தனின் ஆவணப்படத்தில் அவர் சொல்வது போல்) ஒரு எழுத்தாளராக எதையும் வாசகரிடம் ஒளித்து வைத்து விளையாடவில்லை. அதற்ககென்று placard வைத்தும் வாசகரின் கண்ணை நிறைக்கவில்லை.
உங்கள் எழுத்துப்பணியும், மற்ற ஆக்கங்களும் மேன்மேலும் வர, வெற்றிபெற வாழ்த்துக்கள்.
அன்புடன்
ராஜேஷ்
bit.ly/3wf3IeH
No comments:
Post a Comment