கணிதம் பன்னிரண் டாண்டு பயில்வர்,பின்
கார்கொள் வானிலோர் மீனிலை தேர்ந்திலார்;
அணிசெய் காவியம் ஆயிரங் கற்கினும்
ஆழ்ந்தி ருக்கும் கவிளம் காண்கிலார்;
வணிக மும்பொருள் நூலும் பிதற்றுவார்;
வாழு நாட்டிற் பொருள்கெடல் கேட்டிலார்
துணியு மாயிரஞ் சாத்திர நாமங்கள்
சொல்லு வாரெட் டுணைப்பயன் கண்டிலார். 23
கம்ப னென்றொரு மானிடன் வாழ்ந்ததும்,
காளி தாசன் கவிதைபு னைந்ததும்,
உம்பர் வானத்துக் கோளை மீனையும்
ஓர்ந்த ளந்ததோர் பாஸ்கரன் மாட்சியும்,
நம்ப ருந்திற லோடொரு பாணினி
ஞால மீதில் இலக்கணங் கண்டதும்,
இம்பர் வாழ்வின் இறுதிகண் டுண்மையின்
இயல்பு ணர்த்திய சங்கரன் ஏற்றமும், 24
சேரன் தம்பி சிலம்மை இசைத்ததும்,
தெய்வ வள்ளுவன் வான்மறை செய்ததும்,
பாரில் நல்லிசைப் பாண்டிய சோழர்கள்
பார ளித்ததும் தர்மம் வளர்த்ததும்,
பேரு ருட்சுடர் வாள்கொண் டசோகனார்
பிழைப டாது புவித்தலங் காத்ததும்,
வீரர் வாழ்த்த மிலேச்சர்தந் தீயகோல்
வீழ்த்தி வென்ற சிவாஜியின் வெற்றியும். 25
அன்ன யாவும் அறிந்திலர் பாரதத்
தாங்கி லம்பயில் பள்ளியுட் போகுநர்;
முன்னர் நாடுட திகழ்ந்த பெருமையும்
மூண்டி ருக்குமிந் நாளின் இகழ்ச்சியும்
பின்னர் நாடுறு பெற்றியுந் தேர்கிலார்
பேடிக் கல்வி பயின்றுழல் பித்தர்கள்;
என்ன கூறிமற் றெங்ஙன் உணர்த்துவேன்
இங்கி வர்க்கென துள்ளம் எரிவதே! 26
--- மகாகவி சுப்ரமணிய பாரதியார்
குறிப்பு -
அன்ன யாவும் அறிந்திலர் பாரதத்
தாங்கி லம்பயில் பள்ளியுட் போகுநர்;
என்பதனை கீழ்வருமாறு படிக்கவும்
அன்ன யாவும் அறிந்திலர் பாரதத்து
ஆங்கிலம் பயில் பள்ளியுட் போகுநர்
நன்றி -
http://temple.dinamalar.com/news_detail.php?id=8149
தொன்மை மறவேல்.
Meaning: Don't forget antiquity