வெண்முரசு வண்ணக்கடல் 27 (நன்றி ஜெயமோகன்)
அக்னிவேசர் அவனை கைத்தலம் பற்றி அழைத்துவந்ததைக்கண்ட ஷத்ரிய இளைஞர்கள் திகைத்தனர். அன்றைய தனுர்வேத வகுப்பில் அவனை அவர் முன் நிரையில் அமரச்செய்தபோது ஷத்ரியர்கள் ஒருவரை ஒருவர் நோக்கிக்கொண்டனர். அக்னிவேசர் கேட்டார் “வில் என்பது என்ன?” வில் என்பது வானத்தின் வளைவு என்றான் ஒருவன். மலைச்சிகரங்களின் வடிவம் என்றான் இன்னொருவன். நாகம் என்றான் பிறிதொருவன். அறம் என்றும் வீரம் என்றும் வெற்றி என்றும் சொன்னார்கள் பலர். அக்னிவேசர் துரோணனிடம் கேட்டார் “பரத்வாஜரின் மைந்தனே, நீ சொல்.”
துரோணன் எழுந்து “வில் என்பது ஒரு மூங்கில்” என்றான். மாணவர்கள் நகைக்கும் ஒலிக்கு நடுவே தொடர்ந்து “மூங்கில் என்பது ஒரு புல்” என்றான். அக்னிவேசர் புன்னகையுடன் “அம்புகள்?” என்றார். “அம்புகள் நாணல்கள். நாணலும் புல்லே” என்றான் துரோணன். “அப்படியென்றால் தனுர்வேதம் என்பது என்ன?” என்றார் அக்னிவேசர். “வில்வித்தை என்பது புல்லும் புல்லும் கொண்டுள்ள உறவை மானுடன் அறிந்துகொள்வது.” அக்னிவேசர் தலையசைத்தார். “புல்லை ஏன் அறியவேண்டும் மானுடர்?” என்றார். துரோணன் “ஏனென்றால் இந்த பூமியென்பது புல்லால் ஆனது” என்றான் .
அக்னிவேசர் திரும்பி தன் மூத்தமாணவனாகிய மாளவ இளவரசன் மித்ரத்வஜனிடம் “இவனை என்ன செய்யலாம்?” என்றார். “பிரம்மனில் இருந்து தோன்றியதும் ஐந்தாவது வேதமுமான தனுர்வேதத்தைப் பழித்தவனை அம்புகளால் கொல்லவேண்டும்” என்று அவன் சொன்னான். “அவ்வண்ணமே செய்” என்றபின் துரோணனிடம் “உன் புல் உன்னை காக்கட்டும்” என்றார் அக்னிவேசர். மாளவன் தன் வில்லை எடுத்து அம்பைத் தொடுப்பதற்குள் துரோணன் தன் முதுகுக்குப்பின் கச்சையில் இருந்த தர்ப்பைக்கட்டில் இருந்து இரு கூரிய தர்ப்பைகளை ஒரே சமயம் எடுத்து வீசினான். மாளவனின் கண்ணுக்கு கீழே கன்னச்சதைகளில் அவை குத்தி நிற்க அவன் அலறியபடி வில்லை விட்டுவிட்டு முகத்தைப்பொத்திக்கொண்டான். அவன் விரலிடுக்கு வழியாக குருதி வழிந்தது.
அனைவரும் திகைத்த விழிகளுடன் பார்த்து நிற்க அக்னிவேசர் புன்னகையுடன் சொன்னார் “இதையும் கற்றுக்கொள்ளுங்கள் ஷத்ரியர்களே. கணநேரத்தில் மாளவனின் கண்களை குத்தும் ஆற்றலும் அவ்வாறு செய்யலாகாது என்னும் கருணையும் இணைந்தது அந்த வித்தை. கருணையே வித்தையை முழுமைசெய்கிறது.” மாளவனை நோக்கித் திரும்பி “உன் இரண்டாம் ஆசிரியனின் காலடிகளைத் தொட்டு வணங்கி உன்னை அர்ப்பணம் செய்துகொள். அவன் அருளால் உனக்கு தனுர்வேதம் கைவரட்டும்” என்றார் அக்னிவேசர்.