Featured Post

Daily Project திருக்குறள்

Dear Readers / Friends, http://DailyProjectThirukkural.blogspot.com/    By interpreting various meanings for every word in a Thirukkur...

June 29, 2019

செடிகள் மலர்கள்

இன்று எங்கள் வீட்டில் ஒரு சட்டியில் வளர்த்த லில்லி செடியில் அழகான ஒரு மலர் பூத்தது. மிகவும் மணத்துடன் நிறைவாக பூத்துள்ளது. 

பொதுவாகவே எனக்கு தோட்டக்கலையில் ஆர்வம் உண்டு. நான் பிள்ளையாய் இருந்த போழுது எங்கள் வீட்டில் 100 சட்டிகளில் செடி இருக்கும். வகை வகையான செடிகள் வண்ணவண்ணமான மலர்கள். எங்களுக்கு சின்ன சின்ன மெய்யான சந்தோஷங்களை கொடுத்தது. 

ஆனால் இப்படி செடி வளர்ப்பதற்கும் உழைப்பு தேவை. அதற்கு உரம் இட்டு, களைகள் களைந்து, தினமும் தண்ணீர் ஊற்றி போற்றவேண்டும்.  சில செடிகளில் ஒரு சில பூச்சிகள் இருந்தால் பரவாயில்லை. ஆனால் செம்பருத்தி போன்ற செடிகளில் பூச்சிகள் எளிதாய் தொற்றிக்கொள்ளும். பலநாள் இருக்கும் செடி அதற்கு ஒன்றும் இல்லை என்று நினைப்போம். இலைகளின் மேலே பளபளவென இருக்கும் ஆனால் கீழே அடி பகுதியில் நம் கண்ணுக்கு தெரியாத வண்ணம் வெள்ளை வெள்ளையாக பூச்சிகள் இருக்கும். அதை காணும் பொழுது மனதிற்கு கடினமாக இருக்கும். அப்படி பார்க்கும் பொழுது அதனை களைந்து எரிவதே சிறந்தது ஏனெனில் மருந்துகள் இதுபோன்ற சூழ்நிலைகளில் உதவாது ஏனெனில் ஆழ் அடிவேர்வரை நோயின் தாக்கமும் இருக்கும். இல்லையேல் அது மொத்த தோட்டத்தையும் கெடுத்துவிடும். அப்படி செய்வதால் தோட்டத்திற்கு நல்லது. அந்த செடியிற்கும் நல்லது. நோயுற்ற செடி அவதி பட வேண்டாமே. பூச்சியுடன் இருக்கும் செடி நமக்கும் மன உளைச்சலே. 

ஆனால் சில நேரம் சில இன்னல்கள் இருந்தாலும், ஒரு மலரை கண்ட உடன் மனம் இலகுவாகிறது. சந்தோஷம் நம்மை நாள் முழுக்க தொற்றிக்கொள்கிறது 




June 02, 2019

1994 - பாலா - நவில்தொறும் நூல்நயம் போலும்

முன் கதை
1994 என் வாழ்வில் ஒரு திருப்புமுனை ஆண்டு. 1994-மார்ச் வரை மாநில பாடத்திட்டத்தில் வரும் ஒரு தனியார் பள்ளியில் படித்துக்கொண்டு வந்தேன். என் அம்மா நான் கல்வித்தரமும் மாணவர்களின் ஆற்றலும் படிப்பில் ஆர்வமும் நன்கு உள்ள நல்லதொரு பள்ளியில் படிக்கவேண்டும் என்று மெனக்கெட்டார்கள்.  அப்பேர்ப்பட்ட பள்ளியில் சோபித்தால் நீண்ட காலத்திற்கு நன்மை என்பதே அவர்களின் தின்னம். அது உண்மையும் ஆயிற்று.

ஆனால் பழைய பள்ளியில் இருந்து நண்பர்களை பிரிகிறோம் என்று எனக்கு எண்ணம் அவ்வளவாக இல்லை. ஆனால் புதிய டான் பாஸ்கோ பள்ளியில் முதல்நாள் துவங்கும் முன்பே எனக்கு பயம். பயத்திற்கு காரணம் பாடத்திட்டம் மாறியதே. Science என்று படித்த எனக்கு பிசிக்ஸ், கெமிஸ்ட்ரி, பாடனி, சூலோஜி, ஹிஸ்டரி, ஜீயோக்ரபி (Physics, Chemistry, Botany, Zoology, History, Geography) என்று பாடங்கள் அதிகம் ஆகின. போதாதைக்கு ஆங்கிலம் Non-Detailed என்று வேறு ஒரு சிறு புத்தகம். என் எடையை விட என் புத்தகங்களின் அடை அதிகம். சின்ன பயன், பயப்பட மாட்டேனா?
சரி, முன் கதையில் இருந்து கதைக்கு செல்வோமா?

2005 April

மைய கதை
பொதுவாக நமக்கு கடந்தகால நாட்கள் பல நினைவில் இருக்காது நினைவில் நிறுத்தினால் ஒழிய. ஆனால் நினைவுகளை மீட்டெழுக்கும் பொழுது சில நாட்கள் நினைவுக்கு வரும். அப்படி ஒரு நாள் தான் 3-ஜூன்-1994.  ஒரு கோடையின் இறுதியில் பள்ளிகளின் துவக்கத்தால் சற்றென தன் வேகத்தை மீட்டெடுத்த சிறு நகரத்தின் புத்துணர்ச்சியில் ஒரு ஒல்லி பையனாக ஒரு அடி கடற்படை நீல நிற ட்ரோஸரில் வெள்ளை நிற அரை கை சட்டையுடன் டை கட்டிக்கொண்டு டான் பாஸ்கோ பள்ளியிற்கு செல்கிறேன். எப்படி இந்த பள்ளியில் படித்து நல்ல ரெங்க் (rank) வாங்க போகிறேன் என்று நினைப்பு இருந்தது (ஏனெனில் அதற்கு முந்தைய பள்ளியில் 6ஆவது ரெங்க் எடுக்கவே மெனக்கெட்டேன்). முதல் நாள் அன்று பிரார்த்தனை மற்றும் பொது கூடுகைக்கு எல்லோரும் வகுப்பு வாரியாக வரிசையாக அணித்திரண்டோம். எல்லாமே ஆங்கில சொற்பொழிவு தான். ஒன்றும் விளங்கவில்லை எனக்கு. பாதர் தாமஸ் (Rev.Fr.Thomas) அன்று பள்ளி முதல்வர் என்பது நினைவில் உள்ளது. அவரின் கனிவான பழகும் குணம் அவர் ஒரு நல்ல மனிதர் என்று இன்று என் நினைவில் உள்ளது. கூடுகை முடிந்து எல்லோரும் வகுப்புக்கு செல்ல வேண்டும்.

எனக்கு எது வகுப்பரை என்று தெரியாமல் பின் தங்கினேன். பின்பு காவலாளி(watchman) என்னை அழைத்து சென்று வகுப்பில் விட்டார் என்று ஞாபகம். முதல் மாடியில் ஒரு குடிசையில் தான் என் வகுப்பு இருந்தது. வகுப்பில் ஆசிரியர் இருந்தார். நான் பின்னே சென்று உட்கார்ந்தேன். அங்கே என்னுடன் சட்டேன்று சகஜமாய் பக்கத்து வீட்டில் விளையாடி கதையாடும் நண்பனின் தோனியில் சற்றும் அண்ணியம் அற்ற ஒரு குரல் என்னுடன் பேசியது. அது பாலாவின் குரல். என்ன பேசினான் என்று தெரியவில்லை. ஆனால் என்னை சகஜ படுத்த தமிழில் பேசினான் என்று நினைக்கிறேன். திரும்பிபார்க்கையில் ஒரு நம்பிக்கை கீற்று அக்னி குஞ்சு போல் அங்கு புதைந்து கிடந்ததை இன்று பார்க்கிறேன். 

வகுப்புகள் முடிந்து மதிய உணவிற்கு சென்றேன். யாருடன் சாப்பிட்டேன் என்று நினைவில் இல்லை. முதல் சில நாட்கள் பாலா, ஐயப்பன் உடனோருடன் சாப்பிட்டேன் என்று நினைக்கிறேன். ஆனால் சில நாள் கழித்து ஸ்ரீராம், விக்ரம், வில்பர்ட், தினேஷ், என்ற ஒரு கோஷ்டியுடன் மாதாவின் குகை ஆலயத்திற்குள் சாப்பிட்டேன். இப்போது நினைத்தாலும் சிரிப்பு தான் வருகிறது அவர்கள் Jurassic Park சொன்ன கதை (அதுவரை பணக்காரன் மாப்பிள்ளை படங்களில் ரஜினி அந்த மொட்ட வில்லனை பதம் பார்த்த கதைகளை ஸ்வாரஸ்யமாக என் 7த் டே பள்ளி நண்பர்கள் சொல்லி கேட்டு பழகியிருந்தேன்) அவ்வளவு பிரம்மிப்பாக இருந்தது. ஆனால் மைக்கல் ஜாக்சன் பாடல்கள், ஆங்கில படங்கள், விடியோ கேம்ஸ் என்று மேல் தட்டு கேளிக்கைகள் எனக்கு அண்ணியமாகவே இருந்தன. அதனைவிட பெரிய அண்ணியம் இவர்கள் எல்லோரும் ஆங்கிலத்தில் தான் பெருவாரியாக உரையாடினார்கள். அவர்களை குறை சொல்லமுடியாது. அது பள்ளியின் சட்டம். என் மனம் வேறு ஒரு கோஷ்டியை நோக்கி தேடிக்கொண்டு இருந்தது. 

அங்கு இங்கு அலைந்து ஒரு வழியாக மரத்தின் நிழலில் காய்ந்த இலைகள் கலந்த மணலின் மேல் அமர்ந்த படி தமிழில் பேசி வீட்டு தெரு கதைகளை கதைத்து கொண்டு இருந்த ஒரு கூட்டத்துடன் இணைந்தேன். அதில் ஐயப்பன், வைத்தியநாதன், சந்திப், பாலா இருந்தனர். (சில காலம் கழித்து செல்வாவும் சேர்ந்தான்) அதன் பிறகு வேறு ஒர் குழுவை என் மனம் என்றும் தேடவில்லை. 

அந்த குழுவில் பல நாட்கள் பாலாவிடம் திட்டு வாங்கி இருக்கிறேன். ஏன்? பல நாட்கள் பீன்ஸ், பீட்ரூட், அவரைக்காய், டர்னிப் பொரியல் கரிகளை கீழே கொட்ட முற்படுவேன். ஒரு நாள் பாலா என்னிடம் அந்த கரியை வாங்கி சாப்பிட்டுவிட்டு, இது அவ்ளோ நல்லா இருக்கு உங்க அம்மா அவ்ளோ கஷ்ட பட்ராங்க, நீ இங்க சாப்பாட கொட்ர என்று திட்டினான். அதன் பிறகு நான் சாப்பாட்டை கொட்டியது இல்லை. எங்கள் கூட்டம் கலகலப்பான கூட்டம், சாப்பிட்டுவிட்டு அப்படியே மற்ற கூட்டங்களுக்கு சென்று ஒரு attendance உம் போடுவோம். அப்படி எல்லோருடனும் சகஜமாய் இருப்போம். பாலா விற்கு எல்லா விஷயமும் நன்றாய் தெரியும். அந்த காலத்திலேயே பிஞ்சாய் இருக்குமோதே ஆனந்த விகடன் குமுதம்லான் விட மாட்டான். கேட்டா? நான் பிரஞ்சு மாணவன். இந்த புக்ஸ்ல தான் தமிழ் படிக்கற்து தொடருதுனு சொல்லுவான்.

வகுப்பில் பாலாவிடம் என்ன சந்தேகமும் கேட்கலாம். எளிமையாக சொல்லி தருவான். இது இவ்வளவு சுலபமா, நம்மால் செய்ய முடியுதே என்று நமக்கே தன்னம்பிக்கை வரும். 9ஆம் வகுப்பு என்று நினைக்கிறேன் பள்ளியில் அறிவியில் கண்காட்சி நடந்தது, அதில் சிறுநிரகம் உறுப்பு பற்றி ஒரு மாதிரி வைத்தோம் நானும் ஜெயசந்திரனும். அதற்கு அன்றைய காலத்தில் ஒரு 100ரூபாய் செலவாகியது என்று நினைக்கிறேன். பாலா தான் left hand rule, right hand  rule, electro-magnetic force லான் எப்படி வேலை செய்யுதுனு எளிமையாக விளக்குவது போல ஒரு LED bulb வைத்துக்கொண்டு செயலியை தயார் செய்து காண்பித்தான். அவனுக்கு இரண்டாம் பரிசு கிடைத்தாக ஞாபகம். அது முடிந்த பிறகு பாலா என்னிடம் கேட்ட கேள்வி உனக்கு அறிவியல் கண்காட்சில ஏதாது பண்ணனும்னா என்கிட்ட கேட்டு இருக்கலாம் இல்ல பேசி இருக்கலாம். நான் உனக்கு ஐடியா கொடுத்து இருப்பேன். சும்மா காச செலவு செய்யாத. ஜெயசந்திரன் உன் தலைல பாதிக்கு மேல செலவையும் கட்டிடான் பாரு என்று சொன்னான்.

8ஆம் வகுப்பு எங்கள் இருவருக்கும் நல்ல ஒரு ஆண்டாக இருந்தது. பாலா முதல் மூன்று ரெங்க்ல உள்ளவர்களுக்கு ஒரு ஆரோக்கியமான போட்டியாக உருவானான். நானுமும் அதுவரை பல பாடங்களில் கோட்டைவிட்ட மாணவனாய் இருந்து படிப்படியாக முன்னேறி 15 ஆவது ரெங்க் எடுத்தேன். ஆண்டு இறுதியில் வரலாறு ஆசிரியரும் வகுப்பாசிரியருமான அமலோர்பவராஜு மாஸ்டர் சொன்ன வார்த்தை எனக்கு நல்லா ஞாபகம் இருக்கு. இந்த வருஷத்தோட find-ந்நா அது பாலாவும் ராஜேஷும் தான். இரண்டு பேரும் ஆண்டு துவக்கத்தில் இருந்து இறுதிக்குள் மிக நல்ல முன்னேற்றம். (வகுப்பே திரும்பிபார்த்தது) இன்னும் நல்ல பண்ணனும் நு மனசார வாழ்த்தினார். 

காலம் ஓடியது 10 ஆம் வகுப்புக்கு வந்தோம். Board exam ஜுரம் எல்லோருக்கும் இருந்தது. எனக்கு தெரிஞ்சு எந்த coaching உம் போகாத ஒரே ஆள் பாலா தான். ஏன் எல்லாரும் Tuition ல 1000, 2000 ரூபாய் நு காசு செலவு பண்ரீங்க. நம்மலே வீட்ல படிக்கலாம் நு சொல்லுவான். அண்ணிக்கி அது புரியல. அவனுக்கு அது தேவை படலனு சொல்லலாம். என்னை போன்றோருக்கு தேவை பட்டது. அன்று அந்த தெளிவும் நிதானமும் அவனிடம் இருந்ததை இன்று நான் பார்க்கிறேன். பத்தாம் வகுப்பு முடிந்தது. என் அம்மா அவசர அவசரமாக எனக்கு பள்ளி மாற்று படிவம் வாங்கினார்கள். யாரிடமும் சொல்லிக்கொள்ள முடியவில்லை. +1, +2 வகுப்புகள் சங்கர வித்யாலாயாவில் சேர்ந்தேன். டான் பாஸ்கோவை மிஸ் செய்தேன். குறிப்பாக பாலாவை மிஸ் செய்தேன். ஆண்டு இறுதியில் வெற்றி coaching centre இல் entrance exam பயிற்சிக்கு சேர்ந்தேன். பாலா அங்கு இருந்தான். மிக்க மகிழ்ச்சி. நல்ல இடத்தில் இருக்கிறோம் என்று ஒரு நம்பிக்கை. ஆனால் அங்கும் ஒரு 3-4 மாதம் தான் இருந்தேன். மாருதி coaching centre க்கு சேர்ந்தேன். பாலா உடனான பிரிவு இருந்தது. 

2016 September

பின்பு பாலவை நான் புதுவை பொறியில் கல்லூரியில் பார்த்தேன். பாலா தனித்துவமானவன். நீர்ப்போல் வந்து காற்றுப்போல் செல்பவன். தப்புனா நேரடியா சொல்லிருவான். உரக்க சொன்னா சரியாயிடும்னு நினைக்க மாட்டான். முன்முடிவு இல்லாம எங்கிட்ட பேசுவான். ஆணிவேர் எதுனு காம்மிப்பான். அவனுடைய சித்தாங்களை திணிக்க மாட்டான். மனசுல காழ்ப்ப வெச்சுகிட்டு சிரிச்சு பேசினு பின்னாடி ஒரு சந்தர்பத்துல கக்க மாட்டான் மட்டு தட்ட மாட்டான். தன் உழைப்பின் மீது நம்பிக்கை உள்ளவன் பிறர் முன்னேற்றங்கள் மீது ரகசிய பொறாமை கொள்ளாதவன். முக்கியமா பொருள்களின் மீது பற்று இல்லாதவன் பாலா. எனக்கு camera அது இதுனு பொருள் மீது பற்று தலைதூக்கினபோது எல்லாம் என்னை அடக்கினவன்.  (இவன் என்ன சொல்லா போறானு தெரியல என்று) சற்று அச்சப்பட்டாலும் உள்ளூர வாஞ்சையுடன் யானையிடம் வேண்டும் வேண்டும் என்று பெறும் துதிகை அடி போல பல தடவை ஹிட்டுகளும், ஷொட்டுகளும், குட்டுகளும் அவனிடம் இருந்து வாங்கி இருக்கிறேன். அது இல்லாம பாலாவோட ரசனையும் உயர்வா இருக்கும். அவன் வாசிக்கிற புத்தகங்கள் நல்ல இலக்கிய தரமா இருக்கும். அவன்கிட்ட நான் கத்துக்கிட்ட முக்கியமான ஒன்னு அதுக் கூட. 

இனையர் இவரெமக்கு இன்னம்யாம் என்று 
புனையினும் புல்லென்னும் நட்பு (குறள் 790)

இவர் எமக்கு இத்தன்மையானவர், யாம் இவர்க்கு இத் தன்மையுடையேம் என்று ஒருவரை ஒருவர் அலங்காரமாகப் பாராட்டிச் சொன்னாலும் நட்பு சிறப்பிழந்து விடும். ஆதலால் இத்துடன் முடித்துக்கொள்கிறேன் முடிவுரையில்லாமல்.

2018 November

தொடரும்....

(இதை வாசித்தவர்கள் கண்ணு போடாதீங்க ப்ளீஸ்).