உளமார எழுத வேண்டிய தருணம் இது.
2013 எனது எம்.பி.ஏ கனவுகளில் ஆயுத்தமாகி எனது மனதை முழுமையாக அதற்கு ஒப்படைத்தேன். அதன் விளைவாக எம்.பி.ஏ-வுக்கு நுழைவுக்கிடைத்தது. அப்போழுது 2014 ஏப்ரல்-ஜூலை ஒய்வு விடுப்பு நேரத்தில் கல்யாணம் பேச்சும் எண்ணமும் ஒலித்தது வீட்டிலும் மனதிலும். எனக்கு அவளின் முகமும் ஞாபகத்திற்கு வந்தது. அவளை எனக்கு பல ஆண்டுகளாக தெரியும். அவளுக்கும் எனக்கும் ஒற்றுமைகள் பல உண்டு. அப்படி இருவருக்கும் ரசனை, குறிக்கோள்கள் (சொல்ல போனால் அவளிடம் நான் நன்றாக பேசிய பொழுது அவளின் லட்சியங்களை கேட்டே அவள் மீது மதிப்புக் கொண்டு அவளின் நட்பு பாராட்ட விரும்பினேன்) உயர்வாக இருப்பதனால் இருவரும் வாழ நன்றாகவும் ஆனந்தமாகவும் இருக்குமே என்று நினைத்தேன்.
நினைவுகள் இருந்தாலும் நாங்கள் இருவரும் வேவ்வேறு பிரிவை சார்ந்தவர்கள். எனது தங்கையின் கல்யானத்தால் ஆன குழப்பமே அதிகம். நான் வேறா ? தம்பியின் கல்யாணமும் சிக்கல்களுக்கு உள்ளாகும். எல்லோரும் முழு நிறைவு என்பது சற்று குறைவாக இருக்க சாத்தியம் அதிகம். முக்கியமாக நான் எம்.பி.ஏ படிக்க போனால் கல்யாணம் நடத்த தாமதம் ஆகும். அவளுடைய வீட்டில் எப்படி சொல்லி கல்யாணத்தை தாமத படுத்தவும் முடியாது. அதுவும் மூன்று நான்கு ஆண்டுகளாக பெண்ணுக்கு வரன் பார்க்கும் பெற்றோர்களிடம். ஆதலால் என் எண்ணத்திற்கு ஓர் முற்றுப்புள்ளி வைத்தேன்.
ஆனால் அவ்வெண்ணம் விளைந்தது. என்னை விட்டு நீங்கா வண்ணம் இருந்தது. இப்படி போய் கொண்டு இருக்கையில் எங்கள் வீட்டிலும் பெண் பார்க்கும் படலம் தீவிரமாய் சென்று கொண்டு இருந்தது. அந்த சுழற்சியிலும் என்னை வேறு வழியின்றி ஆட்படுத்திக்கொண்டேன். ஒன்றும் அமையவில்லை. இப்படி சென்றுக்கொண்டு இருக்கையில் எனது கல்லூரியில் ஒரு பெண் மீஷாவிடம் பல நாள் நடந்த பேச்சுகளில் நான் கற்றுக்கொண்டது என்னவென்றால் - நீ எடுக்கும் முடிவை நீ வாழ்நாள் முழுவதும் சுமப்பாய். இதில் உன் குடும்பத்திற்கு என்று பார்த்தால் உன் மகிழ்ச்சி கேள்விக்குள்ளாகும். ஒருவேளை வீட்டில் பார்க்கும் பெண் சரியில்லை என்றால் என்ன செய்வாய் ? உனக்கு பிடித்ததை செய். வீட்டில் உள்ளவர்கள் உன் வாழ்க்கையில் இருக்கும் நேரம் குறைவு.
அதன் பின் நான் என்னை பற்றி அதிகம் யோசிக்க துவங்கினேன். நான் எனது வாழ்விற்கு என் நலனிற்கு என் அமைதியிற்கு என் மகிழ்ச்சியிற்கு வாழவேண்டிய நேரம் வந்து ஆயிற்று. கடந்த 10 ஆண்டுகளாக குடும்பம் என்னும் வண்டி தனை ஓட்டி ஆயிற்று. போதும். ஆதலால் என் மனதில் உள்ள நியாயமான எண்ணதிற்கு தர வேண்டிய இடத்தை தர நினைத்தேன். முதலில் தம்பியிடம் கூறினேன். அவன் சற்று குழப்பினான். இருப்பினும் என் முடிவு சரி என்றே எனக்கு பட்டது. ஊரில் இருந்து கிளம்பும் முன் அம்மாவிடம் மணக்குள விநாயகர் கோவிலில் வைத்து சொன்னேன். அம்மாவிடம் எதிர்ப்பு எதையும் எதிர்ப்பார்க்கவில்லை. அதேப் போல் அம்மா எதிர்க்கவில்லை. நீ ஒரு முடிவு எடுத்தால் நீ யோசித்து எடுப்பாய். ஆதலால் நான் சம்மதிக்கிறேன் என்று கூறினார்கள். பாட்டியிடம் கூறினேன். நீயுமா ? என்றாள். ஆம் பாட்டி. இவளை எனக்கு பிடித்து இருக்கிறது. நல்ல பெண் குணம் ரசனை என்றேன். பாட்டி முழு சரியும் சொல்லவில்லை முழு மறுப்பும் சொல்லவில்லை. சமூக சூழலில் பழைமைவாதியின் பின்புலத்தில் வாழ்க்கையில் அவள் பட்ட பாடத்தின் பின்னனியில் வைத்து பார்க்கையில் அதை தான் அவளிடம் எதிர்ப்பார்க்க முடியும். ஆனால் அவள் ஆசி எனக்கு இருநூறு சதவிகிதம் உண்டு என்று எனக்கு தெரியும். ஆதலால் துணிந்தேன்.
இருப்பினும் இப்பொழுது தான் மிகவும் கடினமான கட்டதிற்கு வந்தேன். அவளிடம் சொல்லலாமா வேண்டாமா என்ற தயக்க போராட்டம். துன்னுள் விழைந்து மோதினேன். நண்பர்களை நாடினேன். அனைவரும் என்னை ஆதரித்தார்கள். கொலம்பஸ், இண்டியானவில் என் தூக்கங்கள் தொலைந்தது. எண்ணங்கள் அலைந்தது. கொலம்பஸில் வந்த முதல் வாரமே சொல்ல முற்பட்டேன். சொல்லக்கூடிய உன்னதமான தருணம் அல்ல. ஆதலால் பயணத்தை தள்ளிப்போட்டேன். ஆனால் அது எத்தனை உரக்கங்களை தள்ளிப்போட்டது தெரியுமா ? அதற்கு அடுத்த வாரம் சொல்ல முற்பட்டேன் . அதுவும் வேலைக்கு ஆகவில்லை. சரி இந்த வாரம் செல்லலாம் என இருந்தேன். செல்ல முடியாத சூழலில் அவள். வேறு வழியில்லை அலைப்பேசியில் சொல்வது தான் இப்போதைய வழி என்று முடிவு எடுத்தேன்.
இதற்கு ஆயுத்தம் என்பது அப்படி ஒரு முதன்மையான் செயல். ஆதலால் என் மனதில் உள்ளதை மிக தெளிவாக சொல்ல வேண்டும். ரத்தினச்சுருக்கமாக சொல்ல வேண்டும். ஆழமாக சொல்ல வேண்டும். அழகின்மையோடு சொல்லவேண்டும். ஆனால் நெஞ்சை பிராண்டும் அளவிற்கு மானே தேனே என்று எல்லாம் சொல்லக்கூடாது. பொதுவாக நான் எனது எம்.பி.ஏ வியூகங்களை வெளியே பேசுவதில்லை. ஆனால் நான் மார்கேட்டிங் ஃபில்ட் ஸ்டடியில் கற்றுக்கொண்டது என்னவென்றால் நீ சொல்வது மிக முக்கியம். அதுவே அடுத்தவர்களுக்கு போய் சேரும். உன் மனதில் என்ன நினைக்கிறாய் என்று அவர்களுக்கு எப்படித் தெரியும் ஆதலால் சொல்வதை நன்றாய் ஆராய்ந்து ஆழமாக தெளிவாக அழகாக சுருக்கமாக சொல். ஆதலால் நான் சொல்ல வேண்டியதை தற்காலிக மின் மடலில் கொட்டினேன். சரி செய்தேன். கூட்டினேன். முறைப்படுத்தினேன். வார்த்தைகளை மாற்றினேன். இரண்டு நாட்களாக. பாரதி சொன்ன மதி தனில் மிக தெளிவு வேண்டியதை பெற்றேன்.
இவ்வளவு ஆயுத்தமாகியும் அவளிடம் சொல்ல நேரம் நெருங்கும் பொழுது அப்படி ஒரு பட படப்பு. ஆனால் ஆயுத்தமாவது எவ்வளவு நன்மை பயவிக்கும் என்பதை அப்பொழுது உணர்ந்தேன். நான் பேச நினைத்தது தெளிவாக இருந்தது. பேசக்கூடாததும் தெளிவாக இருந்தது. முதலில் ஆங்கிலத்தில் தான் எழுதி வைத்துக்கொண்டேன். ஆங்கிலத்தில் சொல்வது ஈசியாக இருக்கும் ஏனென்றால் நம்ம ஓர் அளவு மனப்பாடம் செய்தே பழகிய மொழி. ஆனால் தமிழில் தான் சொல்லுவேன் என்று மனசங்கல்ப்பம் செய்து கொண்டேன். தமிழிலும் ஆயுத்தமானேன். ஏன் என்றால் அது தான் உள்ளார்ந்து வரும் (internalize என்று ஆங்கிலத்தில் சொல்லுவார்கள்)
இன்று ஜுன் 19 2015 வெள்ளி அன்று மாலை 7 மணி. அவளிடம் பேசுவது முன்பு கை பட பட வென்று இருக்கிறது. கால்களோ உட்காரவில்லை. முகத்தை அலம்பினேன். தலைவாரினேன். என்னை பார்த்து கண்ணாடியில் சிரித்துக்கொண்டேன். இது நடந்தால் எவ்வளவு மகிழ்ச்சியாய் இருக்கும் என்று மனதில் நினைத்துக்கொண்டேன். மகிழ்ச்சியும் அடைந்தேன். ஆனால் இனம்புரியாத ஒரு நடுக்கும் இருந்துக்கொண்டே தான் இருந்தது. குளிர்சாதன அரையில் திடீர் என்று ஐந்து-ஆறு டிகிரி குறைந்தால் ஏற்படும் நடுக்கம் போல. மாலை7:35க்கு அவளுக்கு போன் செய்தேன். போனை எடுத்துப் பேசினாள். எடுத்த உடனே சொல்லாதே. அவள் கேட்கும் மனநிலையில் இருக்கிறாளா அல்லது வேறு வேலையா இருக்கிறாளா என்பதை தெரிந்துக்கொள். ஒரு 5-10 நிமிடம் மொக்கையை போட்டேன். பின்பு அவளிடம் சொன்னேன். உங்கிட்ட ரொம்ப நாளா ஒன்னும் சொல்லனும் சொல்லனும்’னு நினைக்கிறேன். இம்பார்டண்ட் மேட்டர். சொல்லலாமா. இப்ப பேச முடியுமா என்று கேட்டேன். என்ன விஷயம் சொல்லு என்றாள். "நான் எம்.பி.ஏ காலேஜுக்க்கு வருவதற்கு முன்பு எனக்கு இவ்வெண்ணம் தோன்றியது. அப்போழுது இரண்டு வருடம் காத்திருக்க சொல்ல என்னால் முடியவில்லை. பெண் வீட்டிலும் பார்த்துக்கொண்டு இருந்தார்கள். எங்க வீட்டிலும் பார்க்க துவங்கவில்லை. சரி மேலே படிப்போம். இந்த எண்ணம் வளருதா பார்ப்போம் என்று இருந்தேன். சரி கேட்கலாம்னு தான் நெனச்சு இந்த முடிவுக்கு வந்தேன். (உம்ம்ம் என்றால். அவள் முகத்தில் ஒரு புன்னகையை கண்டேன். நீயா ராஜேஷ் என்று அவளுக்கு ஒரு எண்ணம் போல) நம்ம இரண்டு பேருக்கும் பல விஷயம் ஒத்துப்போது. we have many things in common. நம்ம இரண்டு பேரும் கல்யாண வாழ்க்கைல சந்தோஷமா இருக்க முடியும்’னு நினைக்குறேன். நீயும் அப்படி நெனச்சா எனக்கு ரொம்ப சந்தோஷம். யோசிச்சு சொல்லு. ஒன்னும் அவசரம் இல்லை. பொறுமையா சொல்லு. எனக்கு புரியுது உனக்கு கொஞ்சம் வித்தியாசமா இருக்கும். எனக்கு அப்படி தான் இருந்துச்சு. ரொம்ப நாள் யோசிச்சு தான் நான் கேக்குறேன்". (பி.கு இதுவரை சொன்னவற்றில் ஒரு 90 சதவிகிதம் சொன்னேன். சில விஷயங்கள் பின்பு தொடர்ந்து பேசும் பொழுது சொல்லி இருப்பேன்) அப்பாடா என்று மூச்சு விட்டேன்.
ஆனால் அவளோ. நான் அப்படி எல்லாம் நினைக்கவில்லை என்றாள். மறுபடியும் (பொதுவாக மிக அதிக படியாக பெண்கள் சொல்லும்)அதே வார்த்தைகளா என்று என் மனம் கன கனத்தது. (இல்ல நீ இப்ப எதுவும் சொல்லாதே. யோசிச்சு சொல்லு என்று மனதில் நினைத்தேன். வாயும் வந்தது). ஆனால் உடனே சொல்லிவிட்டாள். நீ சொல்லுவது சரி. ஆனால் எனக்கு சிரிப்பு சிரிப்பா வருது. உண்மையை சொல்லி விடுகிறேன் என் வீட்டில் ஒரு விஷயம்(கல்யானம்) முடிவு அடையும் நிலையில் உள்ளது. நான் அந்த பையனிடம் பேசிக்கொண்டு இருக்கிறேன் என்று சொன்னாள். அப்படியா. ரொம்ப சந்தோஷம். Happy for you. Wish you good luck என்றேன். எப்ப கல்யாணம் என்று கேட்டேன். அது போய் கொண்டு இருக்கு. கொஞ்சம் இழுவையாதான் இருக்கு. அடுத்த மாசம் ஆகும் என்றாள். என்ன மன்னிச்சுரு. நான் உன்ன ஒரு வார்த்தை கேட்டு இருக்கலாம். இப்ப என்ன நிலைமைல கல்யாண தேடல் போய்னு இருக்குனு கேட்டு இருக்கலாம். இல்ல ராஜேஷ், நீ கேட்டு இருந்தாலும் சொல்லி இருக்க மாட்டேன் என்றாள். முடியும் வரை சொல்ல வேண்டாம் என்றே சித்தம் (பாடங்கள்) . உனக்கு தோனிச்சானா எனக்கு தெரியாது. எனக்கு தோனிச்சு கேட்டேன். சாரி என்றேன். பரவா இல்லை ராஜேஷ். அது மிக இயற்கையான ஒரு எண்ணம் ஒரு தவறும் இல்லை. நீ இருக்கும் சந்தர்பத்தில் நானும் இதை தான் செய்வேன். தவறு இல்லை. நீ தவறாகவும் கேட்கவில்லை. நீ நேராக என்னிடம் கேட்டதே நல்ல விஷயம் தான். ஒன்னும் தப்பு இல்லை என்றாள். நம்ம நல்ல நண்பர்களா இருப்போம் என்று சொன்னாள். (ஆமா முஸ்தபா முஸ்தபா-வே தான்) கேட்க நல்ல தான் இருந்துச்சு. ஆனா என் மனதிற்கு அது அதிர்ச்சியே (ஆதாவது அவளுக்கு முடியும் தருவாயில் இருந்தது. ஏனெனில் சென்ற மாதம் தான் அவளின் கல்யானத்தேடல் சொதப்பி கொண்டு இருப்பதாக சொன்னாள்). பின்பு அவளின் கதையை கேட்டு கொண்டு இருந்தேன். பிறகு ஒரு 15-20 நிமிடத்திற்கு இடையில் ஒரு 5 நிமிடம் ஒன்றுமே நிகழாததுப் போலவே இருவரும் பேசிக்கொண்டு இருந்தோம். அவளிடம் பேசிய பின்பு வாய்விட்டு சிரித்தேன். சிரித்தேன். சிரித்தேன். ஆனா ரொம்ப சந்தோஷப்பட்டேன். அவளுக்கு விரைவாக நல்லது நடக்க வேண்டும் என்று எண்ணினேன்.
ஆயிரம் இருந்தாலும் அந்த அளவுக்கு ஒரு பக்குவத்தோட அவ எடுத்துக்குட்டதும் அதுக்கு அப்புறம் அவ பேசினதும் ரொம்ப ஆறுதலா இருந்துச்சு. ஏனா பல பேரு ஏதோ தலைக்கு வந்த தலை வலி தீடீர் என்று இடம் பெயர்ந்து நெஞ்சு வலி வந்தத்து போன்று அவள் பேசுவில்லை. அதுவும் அது இயற்கை என்று சொல்லுவதற்கு வாழ்வின் ஒரு புரிதல் வேண்டும் அல்லவா. ஒரு விதத்துல எனக்கு வருத்தம் (அதன் பின்பு நான் எவ்வளவு தான் நிகழ்ந்ததை நினைத்து வாய்விட்டு சிரித்தாலும் சில உண்மைகள் சிரிது நேரத்திற்கு கொஞ்சம் கசக்கத்தான் செய்யும்) இருப்பினும் பெரிய வருத்தம் இல்லாததிற்கு அவள் அதை எடுத்துக்கொண்டு என்னிடம் பேசிய விதமே காரணம். என் எம்.பி.ஏ கம்யூனிகேஷன்ஸ் ஸ்கில்ஸ் வகுப்பில் சொல்லி தந்தது தான் ஞாபகத்துக்கு வருது. எந்த ஒரு தருணத்திலும் நாம் சந்தர்ப்பத்திலும் (situation) சூழலிலும் தான் கவனம் செல்லுத்த வேண்டும். தனி நபர்(people) மீது கவனம் செலுத்தக்கூடாது என்று சொல்லி கொடுத்து உள்ளார்கள். (In difficult situations focus on situation not on people). அதை தானே அவள் அவ்வளவு அழகாக செய்தாள்.
ஆயிரம் வாசல் இதயம் அதில் ஆயிரம் எண்ணங்கள் உதயம்
யாரோ வருவார் யாரோ இருப்பார் வருவதும் போவதும் தெரியாது
எங்கே வாழ்க்கை தொடங்கும் அது எங்கே எவ்விதம் முடியும்
இதுதான் பாதை இதுதான் பயணம் என்பது யாருக்கும் தெரியாது
பாதையெல்லாம் மாறிவரும் பயணம் முடிந்துவிடும்
மாறுவதை புரிந்துகொண்டால் மயக்கம் தெளிந்துவிடும்
நினைப்பதெல்லாம் நடந்துவிட்டால் தெய்வம் ஏதுமில்லை!!
நடந்ததையே நினைத்திருந்தால் அமைதி என்றுமில்லை
அதனால் தான் நினைப்பதெல்லாம் என்று இப்பதிவின் தலைப்பாக வைத்தேன். சொன்னவை யாவுமே நான் இப்பொழுது நினைப்பது.
இப்பொழுது . . .
என் நெஞ்சுக்குள் முடிந்துவிட்டு
நினைவுகளை மறக்கிறேன்
நிகழ் கணமும் மறக்கிறேன்
This comment has been removed by the author.
ReplyDelete