பெரும்பாலான ஆயர்கள் அறிவார்கள். நாங்கள் தனித்து விலகி காட்டுக்குள் நிற்கும் பசுவை அருகே அழைப்பதற்கு அதன் உடலைக் கூர்ந்து நோக்கி ‘பார், பார், பார்’ என அகத்துக்குள் சொல்லிக்கொள்வோம். நம் அகவல்லமையை முழுக்க அந்தச் சொல்லில் குவித்தால் நாம் பார்வையைக் குவித்திருக்கும் பசுவின் உடற்பகுதியின் தோல் சிலிர்த்து அசையும். பசு திரும்பி நம்மை நோக்கும். நாம் அதன் கண்களைப்பார்த்து அருகே வா என்றால் அருகே வரும்’ என்றேன். ‘சிறுவயதிலேயே இவ்வித்தையை நானும் என் தமையனும் கற்றோம். அதை நான் மானுடரிலும் விரிவாக்கிக் கொண்டேன்’ என்றேன்.
முனிவர் வியப்புடன் “பெண்ணே, நான் இப்போது இச்சுவடியில் கற்றறிந்துகொண்டிருந்ததும் அதே வித்தையைத்தான். சூக்ஷ்மகதனம் என்று இதை முனிவர்கள் சொல்கிறார்கள். ஒரு மனம் இன்னொரு மனத்துடன் குரலில்லாமலேயே உரையாடமுடியும். அணுக்கள் பூச்சிகள் புழுக்கள் போன்ற சிற்றுயிர்கள் அவ்வாறு ஒன்றோடொன்று உரையாடிக்கொண்டிருக்கின்றன. உயிர்களின் அறிவும் மொழியும் விரிவடையும்தோறும் அத்திறன் இல்லாமலாகிறது. சித்தம் ஒருங்கமைந்த மனிதர்களிடம் அத்திறன் முற்றிலும் இல்லை” என்றார்.
“ஆனால் நம்மனைவருக்கும் உள்ளே நம் அறிவின் அலைகளுக்கு அடியில் அந்த முதற்பேராற்றல் உறைந்திருக்கிறது. குழந்தை அழுவதற்கு ஒருகணம் முன்னரே அன்னை அது அழப்போவதை உணர்ந்துகொள்கிறாள். காதல்கொண்ட மனங்கள் ஒன்றாகின்றன. தியானத்திலமரும் முனிவர்களின் உள்ளங்கள் ஒற்றைப்பெரும்படலமாக ஆகின்றன. சித்த அலைகளை அடக்கி அந்த ஆற்றலை உள்ளிருந்து துயிலெழுப்புவதையே சூக்ஷமகதனம் என்று சொல்கிறோம்” என்றார் முனிவர்.
நான் வியப்புடன் அதைப்பற்றி கேட்டேன். “அதன்மூலம் மனிதர்களின் உள்ளங்கள் ஒன்றாக முடியும். வேதங்கள் உங்கள் உள்ளங்கள் சுருதியால் ஒன்றாகட்டும் என அறைகூவுவது இதைப்பற்றித்தான். ஆயிரமாண்டுகாலமாக மானுடஞானம் மண்ணுக்கு அடியில் விரிந்திருக்கும் அந்தக் கடலைக் கண்டடைவதற்காகவே முயன்றுகொண்டிருக்கிறது. நான் தவம்செய்யப்போவதும் அந்த ஆலயவாயில் முன்புதான்” என்றார் துர்வாசர்.
No comments:
Post a Comment