மகள் எப்போதுமே என் கட்சிதான். எப்போதும் எதற்கும் அப்பா வேண்டும் அவளுக்கு. அம்மாவுடனான, அண்ணாவுடனான சின்னச்சின்ன பிரச்சினைகளுக்கும் தீர்வுகாண அவளுக்கு அப்பா வர வேண்டும்.
நேற்று பகல் சாப்பாட்டின் போதுகூட அம்மாவுடன் ஒரு றகளை.
நேற்று பகல் எங்கள் வீட்டில் மீன் குழம்பு.
மகள் மீன் சாப்பிடுவதில்லை! அவளது மறுப்பின் நியாயம் கருதி நானும் வற்புறுத்தவில்லை.
முன்பெல்லாம் மீன் என்றால் விரும்பி சாப்பிடுவாள். சின்ன மீன் என்றால் மாத்திரம் சற்றே சங்கடப்படுவாள். துண்டு மீன் என்றால் முள் பிரச்சினை கிடையாது. மிகவும் விரும்புவாள். அம்மாவின் மீன் குழம்பு வைப்பே ஒரு தனித்துவமானது. தனிச்சுவையானது. கிராமப் புற சிங்களப் பெண்கள் பலாக்காய்கறி சமைப்பதுபோல, ஒரு அருமையான கைப்பக்குவம் அது!
வெறும் குழம்பை வெறும் தட்டில் விட்டு வழித்து வழித்துச் சுவைப்போம். நானும் மகளும். அப்படி இருந்தும் இப்போது மீன் குழம்பு சாப்பிட மறுக்கின்றாள் என்றாள் அதற்கான் வலுவான காரணங்கள் உண்டு.
கொஞ்ச காலத்துக்கு முன் எதுவிதமான் கேள்வி கேட்பாடுகளுமின்றி இளைஞர் யுவதிகள் கொன்று குவிக்கப்பட்டனர். டயர் போட்டு எரிக்கப்பட்டனர்.
காலெரிந்த, அரையெரிந்த பிணங்கள் காடு மேடென்று கிடந்தன. கூடுதலானவை ஆறுகளில் எறியப்பட்டன.
வாயுப்பி வயிறுப்பிக் கரையொதுங்கி மனிதர்களை பயமுறுத்தியவை ஒன்றிரண்டு! மீதியெல்லாம் ஆற்றிலோடி கடலுக்குள் சங்கமித்து மீன்களுக்கு உணவாகின.
மனிதர்கள் மட்டுமா மீன் தின்னலாம்! மீன்களும் மனிதர்களைத் தின்ன வேண்டாமா! ஓடம் வண்டியிலும் வண்டி ஓடத்திலும் ஏறும் வரலாறுகள் தான்.
அரச இயந்திரத்தை செயலிழக்கச் செய்யும் உறுதியுடன் மேற்கிளம்பிய தென்னிலங்கைச் கிளர்ச்சிக்காரர்களை அரசு அடக்கி காட்டியவிதம் இது.
ஒருநாள் மனைவி சமையலுக்காக மீன் அரிந்து கொண்டிருந்தாள். வழக்கம்போல் மகளும் உடனமர்ந்து ஒத்தாசை செய்து கொண்டிருந்தாள். அரிந்த மீனின் அடிவயிற்றை நசுக்கிக் குடல் எடுக்கும்போது பிதுக்கிய வேகத்தில் விரல்களுக்கூடாக நழுவி ஒடித் தனியாக தரையில் விழுகிறது ஒரு விரல் துண்டு. மனித விரல்! வர்ணம் பூசிய நகத்துடனான ஒரு சுண்டு விரல் துண்டு.
மகள் பயப்படக்கூடும் என்பதால் தாய் லாவகமாக மறைக்க முயன்றிருக்கின்றாள். சின்னஞ்சிறிசுகள் ஆர்வம் மிக்கவர்களாயிற்றே.
‘அது என்னம்மா’ என்றவள் தெறித்தோடி விழுந்த விரல்துண்டைக் கண்டுவிட்டதும் ‘சீக்கே’ என்றப்படி எழுந்தோடிவிட்டள். அந்த சம்பவத்துக்குப் பிறகு மீன் என்றாலே அவளுக்கு ஒரு அறுவறுப்பு சாப்பிட மறுப்பாள். சாப்பிட மாட்டாள். நானும் வற்புறுத்துவதில்லை.
வீட்டில் மீன் குழம்பு என்றால் ஏதாவது மகளுக்கு தனியாக இருக்கும். நேற்றும் மீன் தான். தனியாகச் சமைத்திருக்கும் குழம்பை எடுத்துக் கொடுக்காமல் தாய் மீன் குழம்பை மகளிடம் தள்ள ‘பாருங்கப்பா’ என்று மகள் சிணுங்க. நான் எழுந்துபோய் மற்ற குழம்பை எடுத்து வந்து மகளுக்கு ஊட்டினேன்.
‘நீங்கள்தான் அவளை கெடுக்கிறது’ என்று பொய்யாகச் கோபித்துக்கொண்டாள் மனைவி. மகள் ஒரு நமுட்டுச் சிரிப்புடன் தாயைச் கேலி செய்தபடி ஓரக்கண்ணால் என்னை நோக்கி கண் சிமிட்டுவாள்.
HE IS MY EVERTHING
HE IS MY ALL - HE IS MY EVERYTHING
FOR GREAT THINGS AND SMALL
HE GAVE HIS LIFE FOR ME.
என்று ஏசுவின் நவநாள் பிரார்த்தனையின் போது படிக்கப்படும் பாடலை உயர்ந்த குரலில் பாடினாள். அம்மாவை உசுப்பிவிட.
(இலங்கை மலையக பகுதி எழுத்தாளர் தெளிவத்தை ஜோசப் அவர்களின் குடைநிழல் [2010] குறுநாவலில் இருந்து ஒரு சிறிய பகுதி அல்லது சிறுகதை என்றும் சொல்லலாம்)
மலையக பகுதி - யாழ்ப்பாணம் அல்ல. இந்தியாவில் இருந்து தேயிலை தோட்டதிற்கு அடிமைகளாக சென்றவர்கள்.
No comments:
Post a Comment