Featured Post

Daily Project திருக்குறள்

Dear Readers / Friends, http://DailyProjectThirukkural.blogspot.com/    By interpreting various meanings for every word in a Thirukkur...

February 12, 2014

சுப்ரை

இன்று எழுத்தாளர் ஜெயமோகனின் வெண்முரசுவில் (மகாபாரதம் தமிழில் மறு ஆக்கம்) சுப்ரை என்ற ஒரு பறவையை பற்றிய ஒரு (தாய்மை பற்றிய) கதைப் படித்தேன். மிக அருமையாக இருந்தது.

அந்த கதையை இங்கு வெட்டி ஒட்டி உள்ளேன்.

சுட்டிகள் (சொடுக்கலாம்)

முன்னொரு காலத்தில் இந்திராவதி என்னும் ஆற்றின் கரையில் கௌரன் என்னும் சாதகப் பறவை தன் துணையுடன் வாழ்ந்து வந்தது. மழைநீரை வானிலிருந்து அருந்தும் சாதகப்பறவை பிற உயிர்கள் அறியாத ஆற்றிடைக்குறைக்குச் சென்று அங்குள்ள மரப்பொந்தில் முட்டையிடும் வழக்கம் கொண்டது. தந்தை அமைக்கும் மரப்பொந்துக்குள் சென்று அமரும் தாய்ப்பறவை உள்ளே முட்டையிட்டு இறகுகளால் பொத்தி அடைகாக்கும். ஆண்பறவை பறந்துசென்று இரைதேடிக்கொண்டுவந்து தன் துணைக்கு உணவூட்டும்.

காட்டெருதின் கொம்புகளைப் பிணைத்ததுபோல் அலகுள்ள சாதகப்பறவையான கௌரன் தன் துணைவி சுப்ரை ஐந்து முட்டைகளுடன் மரப்பொந்துக்குள் முட்டைமீதமர்ந்து தவம் செய்யத்தொடங்கியதும் அதை உள்ளே வைத்து தன் உடற்பசையால் மூடியது. பின்பு காட்டுக்குள் சென்று உணவுகொண்டு வந்தது. நாற்பத்தொருநாட்கள் அவ்வாறு கௌரன் தன் மனைவிக்கு ஊட்டியது. ஒருநாளில் நூறுமுறை அது உணவுடன் வந்தது. கிடைக்கும் உணவில் ஏழில் ஒருபங்கை மட்டுமே அது உண்டது. மெலிந்து சிறகுகளை வீசும் வல்லமையை இழந்தபோதிலும் கௌரன் சோர்வுறவில்லை.

ஒருநாள் வானில் உணவுதேடிச்சென்ற கௌரன் சிறகு ஓய்ந்து ஒரு மரத்தில் அமர்ந்திருக்கையில் ஒரு வேடன் அதை அம்பெய்து வீழ்த்தினான். இறகுகள் முழுக்க உதிர்ந்து கருக்குழந்தைபோல ஆன சுப்ரை சிறகுகள் முளைக்காமல் புழுக்கள் போல நெளிந்த சிறு குஞ்சுகளுடன் மரப்பொந்தில் காத்திருந்தது. ஐந்து குஞ்சுகளும் தீராப்பெரும்பசியுடன் அன்னையை முட்டி உணவுக்காகக் குரலெழுப்பின. இரண்டுநாள் காத்திருந்தபின் சுப்ரை என்ன நடந்திருக்குமென புரிந்துகொண்டது.



சுப்ரை தன் குஞ்சுகளிடம் சொன்னது, ‘குழந்தைகளே, இந்த ஆற்றிடைக்குறையில் இருந்து நாம் தப்ப ஒரேவழிதான் உள்ளது. நீங்கள் என்னை உண்ணுங்கள். முதலில் என் குருதியைக் குடியுங்கள். பின்பு என் கால்களை உண்ணுங்கள். அதன்பின் என் கைகளை. என் இதயத்தை கடைசியாக உண்ணுங்கள். உங்கள் சிறகுகள் வளர்ந்ததும் பறந்துசெல்லுங்கள். என்னை நீங்கள் சிறிதும் மிச்சம் வைக்கலாகாது.’

அன்னையின் ஆணைப்படி ஐந்து குஞ்சுகளும் அதனை உண்டன. அதன் குருதியை அவை குடித்து முடித்ததும் சுப்ரை வெளுத்து வெண்ணைபோல ஆகியது.  அவை அதன் கால்களையும் கைகளையும் உண்டன. கடைசியாக மெல்ல அதிர்ந்துகொண்டிருந்த இதயத்தை உண்டன. அன்னையை சற்றும் மிச்சமில்லாமல் உண்டு முடித்த அவை புதியசிறகுகளுடன் வானில் எழுந்து பறந்து சென்றன. அந்த ஐந்து குஞ்சுகளில் ஒன்றுக்கு மட்டும் அன்னையின் கடைசி ஆணை நினைவில் இருந்தது. அது திரும்பி வந்தது. அந்தப்பொந்தில் அன்னையின் வாசனை எஞ்சியிருப்பதை அதுமட்டும்தான் அறிந்தது. அதை எப்போதும் போக்கமுடியாதென்பதை புரிந்துகொண்டது.

தேவருலகு நோக்கி ஒளிமிக்கச் சிறகுகளுடன் பறந்துகொண்டிருந்த சுப்ரையை மூதாதையரின் உலகில் கௌரன் சந்தித்தது. ‘நான் உன் துணைவன்.. என் சிறகுகள் ஏன் ஒளிபெறவில்லை?’ என்று கேட்டது. ‘நான் மண்ணில் தாய்மையின் பேரின்பத்தை அடைந்து முழுமைகொண்டேன். என் பிறவிக்கண்ணி அறுந்தது’ என்றது சுப்ரை. ‘ஆம், நான் என் இச்சை அறாமல் இறந்தேன்’ என்றது கௌரன். ‘நீ மண்ணில் மீண்டும் பிறந்து நான் பெற்ற முழுமையைப் பெறுவாய்’ என சுப்ரை கெளரனை வாழ்த்தி விண் ஏகியது.’

No comments:

Post a Comment