தமிழ்க்கடல் நெல்லை கண்ணன் (27 Jan 1945 - 18 Aug 2022)
2008 வரைநான் தமிழ் மீது வெறும் ஆர்வமும் பெருமையும் மட்டுமே கொண்டிருந்தேன். தில்லியில் வசித்தபோது வார வாரம் ஞாயிறு காலை சீக்கிரமாக நான் எழுவதற்கு ஸ்டார் விஜய் டிவி யில் வந்த "தமிழ்ப் பேச்சு எங்கள் மூச்சு" நிகழ்ச்சி தான் காரணம். ஐயா தான் நடுவர். பிறகு 2013 அந்நிகழ்ச்சி சில வாரங்கள் மட்டும் நடத்தபட்டு முடிந்தது. (இன்று news7-டிவியில் இல் முக்கிய பத்திரிக்கையாளராக/anchor-ஆக பணியாற்றும் விஜயன், பேச்சு, youtube என பல தளங்களில் பணியாற்றும் ராஜ்மோகன்(rajmohan report) இவர்கள் எல்லாம் அந்நிகழ்ச்சியின் அடையாளப்படுத்தபட்ட வைரங்கள்).
போட்டியில் பேசியவர் நன்றாக பேசினால் இவர் சிலாகிப்பதும், ஒரு கட்டத்தில் மனமுறுகி அழுது ஆசி வழங்குவதும் அந்தக் கடலில் குணம் (விஜயன் இவரை பலமுறை அழ வைத்து உள்ளார் (youtube science development part 1, science development part 2). அதேப்போல், தவறாகவோ தேவையற்றோப் பேசினால் கண்டிக்க தவறமாட்டார்.
இவரின் பேச்சின் மூலம் பாரதியாரின் உலகம் (youtube இல் (Yaar Bharathi - Part 3 Nellai Kannan (சுட்டியை தட்டவும்)) பாரதி பற்றிய இவரின் பேச்சை கேட்கலாம்), திருக்குறள்-இன் விரிவும் ஆழமும் அறிந்தேன்.இல்லை, தமிழின் ஆழத்தையும் அகலத்தையும் தன் பேச்சினாலே காட்டியவர் என்றால் மிகையாகாது. இவரின் பல பட்டிமன்றங்கள் காமராஜர் காலத்தில் பிறந்திருந்தால் அவரைப் பார்த்திருக்கலாமோ என்று தோன்றும். தமிழில் பலதரப்பட்ட இலக்கியங்களில் இருந்து பல பாடல்களை திருக்குற்றால அருவிப்போல் டன் டன் டன் என்று மனப்பாடமாக பொழிந்து நம்ம உள்ளத்தை குளிரவைப்பார் அறிவையும் சீண்டுவார் அறியாமையை தூபம் போட்டு காண்பிப்பார். (அப்படி அறியாமையை அறியமுற்பட்டு நெல்லை (கண்ணன்)-இல் ஆரம்பித்தேன் விரைவில் நாகர்கோவில்(ஜெயமோகன்)-க்கு சென்றேன் என்பது வேறு கதை).
திருக்குறளின் ஆழத்தையும் அகலத்தையும் காண்பித்தவர் என்று சொன்னேன். இவர் ஒழுக்குமுடைமைக்கு காமராஜரை காண்பித்தது எல்லாம் என்றும் நினைவில் உள்ளது. ஆனால் காமத்துப்பால் என்றாலே முக சுளிப்பும் இளகாரமும் தான் பெரும்பாலும் அதிகம். ஆனால், கோடி மக்கள் பார்க்கும் ஒரு வெகுஜன தொலைக்காட்சியில், தமிழ்ப் பேச்சு எங்கள் மூச்சு நிகழ்ச்சியில், காமத்துப்பால் என்றால் ராதையாக மாறுவார் கண்ணனாக மாறுவார். காமத்துப்பால் குறள்களை விறைப்பாக பேசும் வாலிபர்களிடம் காமத்துப்பால் குறள்களை கொஞ்சி கொஞ்சி பேசி அதன் கவித்துவத்தை காண்பித்து காமத்துப்பாலை ரசிக்கவும் சிந்திக்கவும் வைத்தார். ஒரு நோக்கு இருநோக்கு குறளுக்கு குழைந்தும், காமக் கணிச்சி உடைக்கும் நிறையென்னும் நாணுத்தாழ் வீழ்த்த கதவு குறளுக்கு ஆவேசமாக முறுக்கியும் இவர் அளித்த விளக்கம் எல்லாம் என் கண்முன்னே வந்து செல்கின்றன. நான் 1330 குறள்களுக்கும் பொருள் அறிந்துக்கொள்ள முனைய ஒரு முக்கிய உந்துதலாக இருந்தவர் இவர். [https://dailyprojectthirukkural.blogspot.com/]
இவரைப்போன்ற பேச்சாளர்கள் 100 பேராவது இன்று வேண்டும். (ஆனால் நமது துர்பாக்கியம் நகைச்சுவை நிகழ்ச்சிகளில் பங்கேற்கும் காமெடியன்கள் எல்லாம் பட்டிமன்றங்களில் வந்து கிச்சு கிச்சு மூட்டுவது அபத்தம்.)
இந்தியா செல்லும் பொழுது நெல்லை சென்று இவரை பார்க்கவேண்டும் என்று நினைத்திருந்தேன். கி.ரா-வை போல் இவரையும் பார்க்க முடியாமல் போயிற்று.
இவர் பேச்சாளர் என்றாலும் வாசி வாசி புத்தகங்கள் வாசி நன்றாக வாசி நிறைய வாசி என்று நன்றாக பேசியவர்களிடம் சொல்லிக்கொண்டே இருந்தார்.
தாகம் கொண்ட சமூத்திரம் இந்தத் தமிழ்க்கடலை பருகியப்பின் நிரம்பியிருக்குமா என்ன? இருக்காது ஏனெனில், இத்தமிழ்க்கடல் என்றும் தீராத விடாய் பசியின் வடிவம்.
தமிழ்க்கடலே
போற்றுதலும்
புகழஞ்சலியும்
- ராஜேஷ்
18.08.2022