Featured Post

Daily Project திருக்குறள்

Dear Readers / Friends, http://DailyProjectThirukkural.blogspot.com/    By interpreting various meanings for every word in a Thirukkur...

July 22, 2022

ஆரோக்கிய நிகேதனம் - வாசிப்பு

தாராசங்கர் பந்த்யோபாத்யாய (Tarasankar Bandyopadhyay) எழுதிய ஆரோக்கிய நிகேதனம் (Arogya Niketan) நாவலில் இருந்து நான் பெற்றவற்றை கீழ்வருமாறு தொகுத்துக்கொண்டேன். ஐயமின்றி கூறலாம் இது ஒரு செவ்வியல் என்று.

இந்நாவலை பற்றி ஜெயமோகனின் தளத்தின் மூலமாக முதலில் அறிமுகம் கொண்டேன். தொடர்ந்து வரும் கட்டுரைகள், கடிதங்கள் மூலம் உந்தப்பட்டு வாசித்தேன். ஜெ-விற்கு நன்றிகள். 

ஆரோக்கிய நிகேதனம் பற்றிய கட்டுரைகள்

ஆரோக்கிய நிகேதனம் - அறிமுகம் - தமிழ்.விக்கி / tamil.wiki தாரா சங்கர் பானர்ஜியின் ‘ஆரோக்கிய நிகேதனம்’ - எழுத்தாளர் ஜெயமோகன் மரணமின்மை எனும் மானுட கனவு- ஆரோக்கிய நிகேதனம் ஒரு வாசிப்பு - (ஆயுர்வேத மருத்துவர், எழுத்தாளர்) சுநில்கிருஷ்ணன் ஆரோக்யநிகேதனம்- சௌந்தர்


ஆயினும் சாஹித்திய அகெடமி வெளியிட்டுள்ள இந்நாவலின் மூன்றாம் பதிப்பைப் பற்றிய என் வருத்தத்தை பி.கு வில் கூறியுள்ளேன்.




ஆரோக்கிய நிகேதனம்

மனிதன் ஓர் உதவியற்ற பிராணி. மனிதன் உதவியின்றி இருக்கமுடியாது. உதவியை எதிர்நோக்கும் பிராணி அவன். ஆயுர்வேதம், நவீன ஐரோப்பிய மருத்துவமுறைகளைத் தாண்டி, மனிதனை அருவருப்புடன் நோக்காமல் அவனுக்கு எழுதப்பட்டதே இந்நாவல் என்று சொன்னால் மிகையாகாது.


ஆரோக்கியம்

உடம்புக்கு ஒன்றுமில்லை  என்ற சௌக்கியம் தான் வாழ்க்கைக்கு மிக அவசியம். உடம்பை நன்கு பாதுகாத்தால், கண்பார்வை கிழவயதில் மங்கவேண்டிய காரணமே இல்லை. 

உழைப்பால் உறுதியான தேகம், தெளிவான பார்வை, பரந்த மனநோக்கு கொண்ட ஒரு ஆள் அறையினுள் நுழைந்ததுமே ஒரு சோபை வருந்துவது போல் இருக்கும். 

ஆனால் ஒருவன் ஆழ்மனதில் அதிருப்தி இருந்து கொண்டே இருந்தால் அமிர்தத்தை ஒருவன் பெற முடியாது.

உயிருக்குள்ள ஆயுட்காலம், ஆரோக்கியமான நிலை இரண்டும் வெவ்வேறு. ஒருவனுக்கு நீண்ட ஆயுள் என்றால் அவனுக்கு ஆரோக்கிய வாழ்வென்பதென்று. அப்படிக் குறைந்த ஆயுள் உள்ளவன் என்றால், அவன் ஆரோக்கியமாக இருக்கமாட்டான் என்று அர்த்தமன்று. வாழ்வில் தூய்மையுடன் காலங்கழிப்பவனே ஆரோக்கியம் நிரம்பியவனாவான். இல்லாதுபோனால், சக்தியை விருத்தி செய்துகொள்ளத் தெரிந்தால் மனிதனுக்கு ஆரோக்கிய திடகாத்திரம் ஏற்படும். எந்த நோயையும் அவனால் தடுத்துக் கொள்ளவோ சகித்துக்கொள்ளவோ முடியும். மாறாக உடலை தன் உடலை, இந்த நோய்களின் வித்து நன்கு வளர்ச்சி பெறுவதற்கு வளமான இடமாக்கிக்கொண்டானெனில், எரிபொருளில் சிறு தீப்பொறி பற்றினால், பயங்கர ஜ்வாலையாக எழும்புவதுபோல், ஒரு நோய் மரணமாக மாறிவிடும்.

உடல்

மனிதன் நம்பிக்கொண்டிருக்கும் இந்த ஆத்மா மனிதனின் உடலை நம்பியே உள்ளது. இந்த உடற்கூடு ஒன்று இராதுபோனால் அது எதையும் பற்றி நிற்கமுடியாமல் தொங்கும் - அப்புறம் அது ஒன்றுமே இல்லை. 

தெய்வம் வீற்றிருக்கும் கோயிலை நன்றாகக் கவனிக்காதுபோனால் தெய்வம் அதில் எப்படி தெய்வம் உறையும்? தேகத்தை வருத்தி, அதைச் சீக்கிரமாக ஒழித்து விடப் பார்ப்பது ஒருவகை ஆத்ம தற்கொலை. இந்த உடலையும் பாதுக்காக்கவேண்டும். 

உரிய காலத்தில் பக்குவமாவது வேறு; பிஞ்சிலே பழுத்துப்போவது வேறு. அகாலத்தில் பழுப்பதில் ஏதாவது ஒச்சம் (குறைபாடுகள், பழுதுகள்) இருக்கும். அதன் திரட்சியில் ஏதவாது குறை தென்படும். ஆனால் உரிய காலத்தில் பக்குவமாவதில் பூரணப் பொலிவே தோன்றும்; குறையென்பதே இராது. உரிய பருவத்தில், நன்கு திரண்டுவரும் பழந்தான் ருசியாலும், மணத்தாலும், நிறத்தாலும் மனத்தை வசீகரம் பண்ணும். இம்மூன்று தன்மைகள் சேர்ந்து நிறை எழிலுடன் விளங்கும். 

ஒழுக்கம்

நீதி வழுவாத ஒரு லட்சிய புருஷர், எண்பது வயதிலும் சிறிதும் கூண் விழாமல் நிமிர்ந்து நிற்கமுடியும். நிலைத்து நோக்க முடியும். கண்ணில் சிறு துளியேனும் நீர் வராது. 

சாது சந்நியாசிகளின் தன்மை, நாடி இவற்றின் இயல்பே தனியானது; சாதாரண மனிதர்களிடம் பழக்கங்களைக் கடைப்பிடிப்பதால் இத்தகையோருக்குத் தேகத்தில் தாங்கும் சக்தி அதிகமாகிறது. கொடுத்த மருந்து வியப்பூட்டும் வகையில் வேலை செய்யும் (பெண் படாத நிலத்தில் போட்ட முதல் பயிருக்கான வித்துப்போல்)

யோகசாதனையில் ஈடுபட்டவரின் மனம் அற்புத சக்தி வாய்ந்ததாகும். அந்த உடலின் நலிவோ, பலவீனமோ அந்த ஒள்ளிய ஆத்மாவைச் சிறிதும் பாதிக்காது. மனதுள் உணர்வெழுந்து பொத்தலான உடலைத் துறந்து புதிய உடலையே கொள்வர்.

உண்மையில் ஒரு மகான்/யோகி, யோக சாதனையின் வாயிலாகத் தம் உடலின் அக உறுப்புக்களை வலிமை மிக்கதாகச் செய்துகொண்டுள்ளனர். விசித்திர விரதங்களை அநுஷ்டித்து வெளி இயற்கையின் சூழலை அடிக்கடி ஆளும் திறமையைப் பெற்றுள்ளனர்.

நியமப்படி இருப்பவர்களுக்கு நோய் கட்டாயம் தீரும். 

ஆயுள்

ஆயுள் என்பது ஒரு பெரிய மருந்து. பல யோகங்கள் செய்து சாதாரண மனிதர்களிடம் இருந்து வித்தியாசப்படலாம். அப்படி யோகங்கள் செய்வதால் எதையும் சகித்துக்கொள்ளும் வலிமை உண்டு. நோயுடன் போரிடுவது மருந்தைக்காட்டிலும், இந்த இந்த ஜீவசக்திதான். இந்த ஆயுள்பலந்தான்.

ஆயுட்காலம் எத்தனை நாள் நீடிக்கும் என்பது சாஸ்திரப்படி கூறலாம். ஆனால் கர்மபலத்தால் (வினைப்பயன்) அந்த ஆயுளின் வரம்பு கூடக் குறுகலாம்; பெருகலாம். விபசாரம் செய்து மனிதன் மரணத்தை அழைத்துக்கொள்ளலாம். தான் செய்த பாவத்தினாலேயே தன் வாழ்நாளை ஒருவன் எதிர்பாராதவிதமாகவும் குறுக்கிக் கொள்கிறான்.

மரணம்

இன்று இருப்பவர் நாளை இல்லை என்ற பெருமை உடையது இவ்வுலகு.  மரணம் எதையும் பார்ப்பதில் பட்சபாதமற்றது. எவரும் அமரர்கள் அல்ல. மரணம் சம்பவிப்பது நிச்சயமென்று அறிந்து அதை வரவேற்கக் கூடிய ஒரு மனோதிடம் மிக உயர்வானது; அப்படி ஒரு நிலை ஏற்படுமாயின், தேன் இல்லாத குறையை வெல்லம் கொண்டு நீக்குவது போலாகும். உலகைவிட்டுச் செல்வதென்றால் இதுபோல் விடைபெற்றுச் செல்லவேண்டும்; மரணதேவதையின் அதிதியாக, துளியேனும் முகம் கடுத்துக் கொள்ளாமல் சந்தோஷமாகவே பயணப்படவேண்டும். ஆனால் இந்த நாளில் மரணத்துக்கு இதுபோன்ற விருந்தினர் கிடைப்பது அரிது. 

மரணமே சாசுவதமான (எந்த உயிரும் மரித்தே ஆக வேண்டும் என்ற பேருண்மைமிக்க)  இப்புவியில் இப்படி அதை நினைந்து வருந்தியோ சஞ்சலப்பட்டோ ஒரு பயனுமில்லை. வாழும் பொழுது, குறிப்பாக முதுமையில், மரணத்தை நினைத்து துக்கப்படத்தேவையில்லை. 

அகால மரணம், பயங்கரமிக்கது தான். பயங்கர வலியையும், எரிச்சலையும் மூட்டி வாழ்க்கையே கசந்து போகும்படி செய்துவிடும் வியாதி. இந்த எரிச்சலைத் தணிக்கக் குளிர் மழைத் தாரையென மரணம் வந்து அமைதியையும் ஆறுதலையும் தருகிறது. ஆதலால் முதிய வயதில் மரணம் அமிருதம் போன்றது; இனிமை தருவது! அதைக்கண்டு பயப்படத்தேவையில்லை. மரணம் தான் முக்தி (விடுதலை). இதைவிட வேறு ஏதும் தேவையில்லை. ஏனெனில் அங்கே நம்முடைய கணவனோ/மனைவியோ, அம்மா, அப்பா, சகோதர்கள்,  உறவினர்கள் வரவேற்கக் காத்திருக்கிறார்கள்.

ஆனால், பலர் கிழவன் கிழவிகள் இறக்க விரும்புவதில்லை. ஆதாவது பெயரன் கல்யாணம் என்று சாக்குக் கண்டுப்பிடித்துக்கொண்டே இருப்பார்கள்.

ஜீவன் மஷாயின் தந்தை ஜீவனிடம் இப்படி கூறுகிறார் “நீ என்னுடைய வீரமகனடா! இந்த வாழ்க்கைப் போருக்கு அஞ்சாதவன். பின்வாங்கவில்லை; இளைப்பும் ஆறவில்லை. போர் முனையிலேயே மாள்கிறாய்! அதற்காக நீ அவமானப் படுவானேன்? எதன் எதிரே நீ தோற்றாய்? நீ யாரிடம் தோற்று நிற்கிறாயோ, அதனிடம் ராமன், கிருஷ்ணன், புத்தன், பீஷ்மன், துரோணன், நெப்போலியன் எல்லாருமேதான் தோற்று நின்றனர். அதைப்பற்றி வருத்தப்படாதே!” அதாவது மரணத்திடம் வரலாற்று நாயகர்களே தோற்று இருக்கிறார்கள். ஆதலால், வீரமாக அதுனுடன் தொடர்ந்து போரிட்டதனால், அவமானப்பட வேண்டாம்.

இளமை

இளமையில் ஒன்று உள்ளது; சரிவான தரையில் நீரின் ஓட்டம் விசைகொள்வதுபோல் ஒரு வேகம் உள்ளது. அச்சமயம், நல்லது கெட்டதுபற்றிய அறிவு, நீதி உபதேசங்கள், சமூகக் கட்டுப்பாடு யாவும் துச்சமாகிவிடும். மனக் குரங்கு எந்தக் கட்டுக்கும் அடங்காது. இந்த நீதி உபதேசங்கள் யாவும் மணலில் விட்ட நீர்போல் ஆகும். இளமையின் போக்கு சரிவான கீழிடம் நோக்கியே விரையும். டாக்டர் ஜீவன் மஷாய் மஞ்சரி அவருக்கு செய்த நம்பிக்கை துரோகத்தில் வெறுத்துப்போய் அவ்விஷத்தை கடைசிச் சொட்டுவரை பருகிவிட்டார். அதுவே அவருக்கு ரிபுவாக மாறியது.

பின்நாட்களில், இத்தனை வண்ண விசித்திரமான ஆசைகள் எதற்காக எழுந்தனவோ என்று நினைத்துக்கொண்டார் ஜீவன் மஷாய். ”இரு வண்ணங்கள் - பகல் இரவு - வெண்மை கருமை இவ்விரண்டையும் தவிர மற்ற வண்ணங்களை நீயேதான் உன் கையாலேயே அழித்துவிட்டாய். தகுதியற்றவன் கையில் கிடைத்தால் இந்த வண்ணங்கள் அழிந்து வீணாகத்தான் போகும். வேதனையின் விழிநீரினால் இதெல்லாம் பொய்யென்று நினைத்து அழித்தாய்” என்றது அவரது மனது. 

இந்த உலகில் அவமானம் ஏற்பட்டதும், உள்ளுக்குள் ஒரு மெலிவு பஞ்சினுள் நெருப்பெனக் கனலத் தொடங்கும். அந்த நெருப்புபழி தீர்த்துக்கொள்ளவேண்டுமென்ற உற்சாகத்தினால் தான் அணையும். தம் இதயத்துள் பற்றிய இந்த வெவ்வழல் எதிரியையும் பற்றி அவன் எரிந்து சாம்பலானால்தான் தணியும். இது நிறைவேறாதுபோனால், அந்தக் கனல் துளித்துளியாக அவனையே பொசுக்கிவிடும்.  பெருந்தகையோர், மகாத்மாக்கள் இவர்கள் விஷயமே தனிப்பட்டது. அவர்கள் இந்த மாதிரி அவமானம் ஏற்பட்ட சமயங்களில், தம் பொறுமையாலும், மன்னிப்பாலும் அதைத் தணித்துவிடுவர்!

ஆற்றாமை

மனிதனில் உள்ள ஆற்றாமயே அவனுக்கு சத்ருவாக வரும். அதைவிட்டொழிக்காவிட்டால் அதற்கு தீர்வில்லை ஏனெனில் ஆற்றாமை எந்த மருந்தாலும் தீராது

சாதாரண மனிதன் பணம், புகழை ஈட்ட நினைப்பான். அவன் அமைதியின்மையில் இருப்பான். அவனுக்கு இருந்த வேட்கை தீராது. பசி தீராது. சுற்றுவான், அலைவான். மனிதனின் முயற்சியால் ஏற்படுவது சாதனை. அது வருவதற்கு முன்னால் நல்ல நிலை வருகிறது. அதிலிருந்து ஆற்றாமை (இன்னும் சம்பாதிக்க வேண்டுமென்ற நசை); இதுவே பகையாகும். இதன் தூண்டுதலினால், மனிதன் அளவுக்கு மீறிப் போய் நோயில் விழுகிறான். அவன் எதிரே வந்து நிற்கிறாள் அந்தச் மரண தேவதை!

நோய்

பிரபஞ்சத்தில் இந்த மரணம் நிச்சயமானது; பிறப்பன யாவும் இறந்தே தீரவேண்டும். இம் மரணம் பலவிதமாகத் தோன்றும்; இது தடுத்தற்கரிது. சிலர் நோய் நொடியினால் மரிப்பர்; சிலர் காயம் பட்டு இறப்பர்; சிலர் தம் இச்சையால்/இச்சைபோல் இறப்பர், தற்கொலை புரிந்துகொண்டு. ஆனால் இந்தப் பிணிகள் தாம் மரணத்துக்கு இட்டுச் செல்லும் பெரும்பாதை. இந்த நோய் ஒன்றே மரணத்தின் ஸ்பரிசத்தை ஏந்தி வருகிறது. எல்லா வியாதிகளாலும் மனிதன் இறப்பதில்லை. ஆனால் அதற்கு இவை வழிகோலிடுகின்றன.

இந்தப் பிரபஞ்ச வாழ்வில் மனிதன் சந்நியாசிக்குரிய சக்தியைப் பெறாது போனாலும், எல்லா நசைகளையும் கட்டிப் பிடிக்காமல் போனாலும், சிலவற்றையாவது அவன் வென்று வரவேண்டும். ஏதோ இரண்டு அல்லது மூன்று வகையான நசைகள். சிலர் ஐந்து வகையினையும் (ஆறு பகைகளில் ஐந்து) வென்று வருகின்றனர். ஆனால் ஒன்று அவர்களால் முடியவில்லையென்றால் அதுவே அவர்களுடையை பலவீனத்திற்கான வாசலைத் திறந்துவிடும். மரணப் படைகள் அந்த வாசல் வழியாகவே மனிதனின் உடலில் புகுந்துக்கொள்ளும்.

மனிதன் பிராணி ஆயினும் அவன் உள்ளத்தில் மிருகத்திற்குரிய காமம், குரோதம், உலோபம் யாவும் நிரம்பியுள்ளவன். ஆனால் மிருகத்திற்குரிய சகிப்புத் தன்மை அவன் உடலில் இல்லை.  பசிக்கு அடிமைகள், உலோபத்திற்கு அடிமைகள், காமத்துக்கு அடிமைகள். பண ஆசை, புகழ்மோகம், வேலைப் போதை, ருசிகள், சபலங்கள் .. என, ஒவ்வொருவருக்கு ஒவ்வொன்று என, நம்மை பலவீனப்படுத்தி, நோய்க்கான காரணியாக ஆகி, மரணத்திடம் சேர்கிறது. “மிகினும் குறையினும் நோய்செய்யும்” என்பதே வள்ளுவர் கூறுவதும்.

மனிதன் தன் உடலை இந்த நோய்களின் வித்து நன்கு வளர்ச்சி பெறுவதற்கு வளமான இடமாக்கிக்கொண்டான் எனில் அது அவனுக்கு அழிவை தேடித்தரும்.  எரிபொருளில் சிறு தீப்பொறி பற்றினால், பயங்கர ஜ்வாலையாக எழும்புகிறது. 

ஒரு வேலையிலும் ஈடுபடாத மனிதனின் புத்தியைச் சோம்பல் வந்து சூழ்ந்துக்கொள்ளும்.

மனிதன் தான் செய்யும் தீய வினையாலேயே அழிகிறான். மனிதனின் நடத்தையே அவனுக்குச் சத்துருவாக நிற்கும். அநாசாரம், வரம்பு மீறிப் போகும் நடத்தை, விபசாரம் இவற்றின் விளைவாக மனித இனம் நோய்வாய்ப்படும். இவற்றை விடவில்லை என்றால் நோய் அதிகமாகும். விட்டுத்தொலைத்தால் குறையும்.  குடி/மதுபானம், கஞ்சா, சிகரேட், புகையிலை, விபசாரம் மற்றும் அதையொட்டிய பல தீய செயல்களாலும் தன்னையே ஒருவன் நிர்மூலமாக்கிக்கொள்வான். இதைத் தவிர ஏதாவது நோயில் படுத்தால், உருக்குலைந்துப்போவான். 

நோய் அதிகரித்தால், மடமடவென்று பனையளவு ஏறிப்போகும்; ஆனால் குறையும்பக்ஷத்தில் தினையளவாகத்தான் இறங்கிவரும்.

நோயுடன் கஞ்சா போன்ற கெட்ட பழக்கமும் சேர்ந்தால் சொல்லுவானேன்? நோயாளி தேறமாட்டான். ஏனெனில் கஞ்சாவுக்கு ஏங்கிப்போய் வெறிப்பிடித்தவனாவான். அவர்களை மருத்துவர்களின் சிகிச்சை காப்பாறுவது கடினம்.

தீய பழக்கங்கள்

வீட்டில் நெருப்புப் பற்றினால், வீடே எரிந்து சாம்பலாகப் போக வேண்டுமென்பதில்லை. தண்ணிரைக் கொண்டு அணைக்கலாம். அணைக்கவும் முடியும். ஆனால் நெருப்புக்குத் துணையாகக் காற்று வீசத் தொடங்கினால் அது எவ்வளவு நீர்தான் கொட்டினாலும், அணையவே அணையாது! கடைசிவரை எரிந்து, சாம்பலாக்கிவிட்டுப் பின்புதான் நிற்கும். பலருக்கு வியாதிகள் வருவர்தற்கு முக்கியமான காரணம் அவர்களுக்குள் இருக்கும் கெட்ட பழக்கங்கள் ஆகும். 

மேலும், பிணி மரண ரோகமாக மாறும் சமயம் ஒருவனது தீய பழக்கமே அவன் புத்தியை ஆட்டிவைக்கும். அமுதமென்று எண்ணி நஞ்சை உட்கொள்ள அது தூண்டும். 

கெட்ட பழக்கங்கள் பலநாள் இருக்கும். ஆனால் இயற்கை எத்தனை நாள் இந்த அநாசாரத்தைச் சகித்துக் கொண்டிருக்கும்? வரம்புக்கு மீறிச் செல்லும், சிறிதும் உஷார் இல்லாமல் சென்றால் நோயில் படுக்கவேண்டியது தான்.  

கெட்ட பழக்கங்கள் அதிகமானால், பிணி மிகவும் சிக்கலாகிவிடும். உடல் இளைக்கும், ஆயுளும் குறையும்.  உதாரணமாக, லிவர், ஸ்ப்ளீன், அந்தப் பழைய மலேரியா, ரத்தச் சோகை, மதுபானத்தினால் வரும் விளைவுகள் இவையனைத்தும் சேர்ந்தால் ஒரு குழுப்பமான வியாதியாகிவிடும். இதனால் அகால மரணம் ஏற்படக்கூடும்.

நோயாளிகளின் பயங்கரத் தீயபழக்கங்களால் அவர்களை பிழைக்க வைப்பது எந்த ஒரு மருத்துவருக்கும் இயலாத காரியமாகிவிடும். 

மருத்துவம் / ஆயுர்வேதம்

வாள், கத்தி இரண்டுமே படைக்கலங்கள்தாம்; ஆனால் வித்தியாசம் இருக்கிறதே! வாளால் எருமையைப் பலி கொடுக்கமுடியாது. கத்தியைச் சுழற்றினால் மட்டும் இந்த காலத்துப் போர்முறை ஆகிவிடாது; ஆதலால், ஆயுர்வேதம், சித்தா போன்ற மருத்துவமுறைகளும் நம் சாஸ்திரங்களும் காலத்துக்குச் சரிசமமாக நடைபோடவேண்டும்.

டாக்டர் ஜீவன் மஷாய் தனது குரு ரங்லாலின் அறிவுரையின் படி டாக்டரின் சிகிழிச்சை முறை, கவிராஜ் வைத்தியம், கைவைத்தியம் இந்த மூன்றையும் வைத்துக்கொண்டு ஒரு ட்ரை சைக்கிளிங் வாழ்க்கை ப் பயணம் செய்தார். அது ட்ரை-மோட்டார் போல் சென்றது.

இன்று, ஒரு கிளினிக் மட்டும் இருந்தால் பல உயிர்களை பிழைக்கச் செய்யலாம். மே! முதலிலேயே ‘ப்ளட் கல்சர்’ செய்தால், நல்ல மருந்துகள் கொடுத்தால் உயிர்களை பிழைக்க வைக்க முடியும்.  விஞ்ஞான முறைகள், ரத்த மல மூத்திர சோதனைகள், எக்ஸ்-ரேக்கள்,  மைக்ரோஸ்ப்கள் போன்ற க்ளினிக்கில் டெஸ்ட் இராமல் இந்தக் காலத்தில் ஓர் அடி எடுத்துவைக்க முடியாது

இந்தக் காலத்தில் எத்தனையோ நாட்டு மக்கள் ஓரிடத்திலிருந்து ஓரிடம் போவது சகஜமாகிவிட்டது. அவர்கள் வரும்போது புதுப்புது நோய்களை கொண்டுவந்து விடுகின்றனர். நீர், காற்று, நிலம் இவை மாறிப்போய் புதிய தோற்றம் கொண்டுள்ளன.

பழைய நோயால் தவிப்பவர்களுக்கு இன்றும் இந்நாட்டு வைத்திய முறைகள் மூலம் சிகிச்சை செய்து குணமாக்க முடிகிறது. ஆயினும், இன்னும் நிறைய இருக்கிறது. 

இன்னும் எத்தனையோ வகை புரியாத நோய்கள் இருந்தாலும், அதைரியமடையாமல், வெட்கப்படாமல், அதன் லக்ஷணங்களை ஆய்ந்து சிகிச்சை செய்ய முடியும். மேலைநாடு வைத்தியமுறைகள், விஞ்ஞான ரீதியான லாபரெடரிகள் போன்ற அன்று இங்கு இல்லாத இன்றைய சௌகரியங்களின் துணையுடன் ஆராயலாம். இவை உண்மையில் போராட்டமே. மரணத்துக்குச் சரிநிகர் நின்று நடத்தும் போர். இதில் தோற்றுப் போவதில் அகௌரவம் ஒன்றுமில்லை. 

உணவு

சாப்பாட்டு விஷயத்தையே எடுத்துக்கொண்டால், இயற்க்கையாக நம் உடலுக்கு சுவைப்பற்று இருக்கும்போது, கெட்ட உணவைத் தின்னாது. வயிறு நிரம்பியதும், இத்துடன் நில் என்று சொல்லிவிடும். அதற்குத் (மன)திருப்தியின் மூலம் நிவிருத்தி ஏற்படுகிறது. (விருப்பு ஓரளவுக்கு; அளவுக்குமேல் போனால் தெவிட்டுகிறது; வெறுப்பு ஏற்படுகிறது). 

ஆனால் இந்த இயற்கைக்குக் கெட்டதில் ருசி ஏற்பட்டுவிட்டாலோ, அதுவே இதற்குப் பகையாகி விடுகிறது. அப்போது ஆற்றாமை அதிகமாகிறது. திருப்தியே ஏற்படுவதில்லை. அந்த (இயற்கையான) வெறுப்புணர்வு ஓடிவிடுகிறது. ஊரெல்லாம் திரிந்து வயிறு வளத்துத் தன் உலோப குணத்தைத் திருப்தி செய்வதை குறியாக இருந்தால் ஆற்றாமை தீராது. நோய்களுக்கு ஆளாக நேரிடும்.  அவ்வுணவினால் தேக புஷ்டிக்குப் பதிலாக உடல் நலிவே ஏற்படும். அதனால்தான் இந்த நசைகள் - பகைகள் - சேர்ந்துவிட்டால், நோய் தடுக்கமுடியாதபடி மரணத்தை நோக்கி விரைகிறது. திருடி தின்ன தூண்டுகிறது. அப்படி உண்டு வயிறும்,  சிறுகுடலும் (இன்டெஸ்டைனும்) நொய்ந்து போகும்.(அகால) மரணத்தை அடைவேண்டி இருக்கிறது.

நாக்குச் சபலம் அதிகரித்துவிடக்கூடாது. நாக்கின் நீளத்தை அறுக்க வேண்டும். பசி எடுத்தால் கண்டதையுமா வயிற்றுள் தள்ளுவது தவறு.

சில அம்மாக்கள், குழந்தைக்கு உடம்பு நல்லதல்லவெனத் தெரிந்தும் கெடுதலான பட்சணங்களை மறைவாகக் கொடுப்பார்கள். டாக்டர் கூடாதென்று தடுத்தவிட்டபோதிலும், மனைவி ரகசியமாக மதுபானம் தருவித்துக் கணவனுக்குத் தருவாள்.

லிவரை கெடுக்கும் சாராயம் போன்றவற்றை அம்பாளின் பேரில் நிவேதனம் செய்து உண்ணாமல், அதற்கு பதிலாக உடலுக்கு தீங்குவிளைவிக்காத உணவுகளை நிவேதனம் செய்து உண்ணலாம்.

மருந்து

மருந்தினால் நோயைப்போகும் - ஆனால் மரணத்தை விலக்க அதனால் ஆகாது. 

ஆற்றாமை எந்த மருந்தாலும் தீராது.

மருந்து சாப்பிடுவதில் மோகம் இருத்தல் கூடாது. பன்னிரண்டு மாதங்களும் ஏதாவது ஒரு மருந்து சாப்பிட்டுக்கொண்டே இருப்பது; இங்கிலீஷ் மருந்து, ஆயுர்வேத மருந்து, யுனானின், கை மருந்து - இப்படிப் பல தினுசு - என மாற்றி மாற்றி சாப்பிடுவது உகந்ததல்ல.

கைவைத்தியம் - இந்த உலகில் எளிதாகக் கிடைக்கும் பொருள். (ஆனால் எவரும் அதற்கு மதிப்பு கொடுப்பதில்லை).

மீட்சி / மீள்தல்

உங்கள் மனத்தில் ஏதாவது மறைவாக இருந்து அந்தத் துர்ச்சிந்தனை உங்களை வாட்டியெடுக்கும் பட்சத்தில், அதனை வெளிப்படையாகச் சொல்லி நிம்மதியுறுங்கள்.

துயருற்றபோதும் மனச் சலனம் இன்றி இருத்தல் வேண்டும். 

நோயாளியிடமே அந்த நோயை எதிர்க்கும் சக்தியிருக்கு. மனிதனுக்குள்ள எண்ணம் பயங்கரமான வேலையைச் செய்யும். இனி நம்பிக்கையில்லை, படுத்துவிடுவோமென்று நினைப்பவரைப் பிழைக்கவைப்பது எளிதல்ல. இந்தச் சாது சந்தியாசிகள் மன உறுதி மிக்கவர் - இவர்களுக்கு அமோக இச்சா சக்தி உண்டு. மரணத்தை நினைத்தபோது இவர்களால் வரவழைத்துக்கொள்ள முடியும். 

நட்பு, தயை, அன்பு இவை அதிகப்படி இருந்தால் ஒருவனை அது விட்டுவிடாது.

நோயில் இருந்து விடுதலையை விரும்பினால் அது வந்தே தீரும். ஆனால் ஒருவனுக்கு இஷ்டமில்லை என்றால் அவனுக்கு அது கிடைக்காது. 

மீட்சிக்கு உதாரணமாக ஜீவன் மஷாயையே சொல்லலாம். டாக்டர் ஜீவன் மஷாயின் தந்தை ஒருதரம் அவருக்கு அறிவுரை கூறுவார். அதன்பிறகு ஜீவன் மஷாயின் மூளையைக் குழப்பிய ஒரு மூடுபனி விலகிப் போயிற்று. ஜீவனின் வாழ்வில் மீண்டும் சுவாலை எழுந்தது. அவருடைய ரிபு-களான மஞ்சரியும், பூபி போஸும் அவர் நினைவிடு மறைந்தனர்.  ஆத்தர்-பௌவும் அவர் நினைவில் இல்லை. புதுப்பிறவி எடுத்தாற்போல் இருந்தது - புதுப் பிறப்பிற்கான தவம். அச்சமயம் ஜீவனுடைய புலனுக்கு ரங்கலால் ஒருவரே புலப்பட்டார். கையில் தடிமனான நோட்டுப் புத்தகம்; கண்ணெதிரே, ஒளிமயமான எதிர்காலம்! அடுத்த நான்கு ஆண்டுகள், ஜீவனதத்தரின் வாழ்க்கையிலே நல்ல உச்சதிசையெனலாம்.

மற்றும்

வெம்மை பற்றினால் எந்தப் பொருளும் வெம்மை கொள்வது இயற்கையின் தருமம். வெம்மையுற்ற பொருள் எதுவும் விரிவடையுமென்பது விஞ்ஞான் உண்மையாகும். அளவுக்கு மீறிய செல்வம் இருக்கும் இடத்தில் அகம்பாவமும் செருக்கும் குடிக்கொள்ள வாய்ப்புகள் உள்ளன.

ஜீவன் மஷாயின் தந்தை ’உஹூம் முடியாது’ என்று கூறிவிட்டார் என்றால் அது முடியாது என்று பொருள். ஆனால் அந்த வன்மையில் ஒரு மென்மை கலந்திருந்தது. அவ்வளவு கடினத்திடையேயும் ஒரு மெதுத்தன்மை  ஒலிப்பதுதான் மிக அதிசயம்.

சாஸ்திரம் படிப்பது வேறு, சாஸ்திரஞானம் பெறுவது வேறு - நம்முடைய சாஸ்திரங்கள் கூறுகின்றன: குரு இல்லாமல் எந்த வித்தையும் வராது. படித்து விடலாம் பல நூல்களை. நெட்டுருவும் போட்டு விடலாம். ஆனால் இந்தப் பயிற்சியுடன் அறிவாற்றலும் இணைந்துவிட்டால் உலகத்துக் காட்சிகளே வேறுவிதமாகத் தோற்றம் கொள்ளும்.

ஜீவனின் குரு ரங்லால் கூறுவார்: ஜீவன், உன்னிடத்தில் எனக்கு ஆசை எதனால் தெரியுமா? நீ வாழ்க்கையில் தோல்வியைக் கண்டு மருண்டு போகாதவன் என்பதனால். இந்த நாட்டின் வைத்தியர்கள் தோல்வியை ஏற்று இந்த அலோபதி முறையை வீட்டில் குந்தியபடி சபித்துத் தீர்த்துவிட்டார்கள். இதற்குப் போட்டியாகத் தம் சாஸ்திர ஞானத்தை விருத்தி செய்துகொள்ளவில்லை. வைத்திய முறையில் புதுமையைப் புகுத்தவில்லை. அரைப்பிணங்கள் இப்படித்தான் செத்தொழியும். நீ உயிர் துடிப்புள்ள மனிதன்; அதனாலேயே உன்னிடம் எனக்கு மதிப்பு. தோற்றுப்போவதைவிட அவமானம் தரும் விஷயம் வேறில்லை. தோல்வியை ஏற்பதும் சாவதும் ஒன்றே; செத்தவன் செத்தவனே, புரிகிறதா?

பாவம், புண்ணியம் நிரம்பிய இந்தப் பிரபஞ்சத்தில் மனிதன் புண்ணியம் செய்யவே விழைகிறான். ஆனால் அவனால் முடிவதில்லை.  சாதாரண மனிதன் பணம் சம்பாத்திக்கிறான், பெயரும் புகழும் ஈட்டுகிறான், ஜோராக செலவும் செய்கிறன். இதை தவிர வேறு எதையும் விரும்பாதவன்.

ஆனால் மனதில் ஒருவனுக்கு திருப்தி ஏற்படவில்லையென்றால் ஒருவன் எப்படி ஆனந்தத்துடன் பொருளீட்டுவார்? புகழால் உண்மையான இன்பம் ஏற்படாது போனால் அது மனத்தைப் பரிபூரணமாக நிரப்பாதுபோனால், அது வெறும் பொய்யே. அதன் ஆயுட்காலம் சில நாளைக்கே. அந்த நாட்கள் சென்றதும் அந்தப் புகழும் பெயரும் வெறும் பொய்யாகிவிடும்!’ பிராந்திக் கோப்பையில் இருக்கும் போதையைப் போல்.

வம்சத்தின் நல்ல பெயரைக் கெடுப்பவன் துரோகியாவான். இதனால் பெற்ற அப்பன், அம்மா இவர்களுக்கெல்லாம் தலையிறக்கமடா... மேலே இருக்கும் பதினான்கு தலைமுறையான பெரியவர்களும் நடுங்குவார்களடா - அந்த மறுமை உலகிலும் இந்த அவமானத்தால் அவர்கள் கண்ணீர் சிந்துவார்களடா’

மரணம் தடுத்தற்கரியது. துயரமோ சோகமோ நிரந்தரமானதன்று. வாழ்க்கையில் அறுசுவையும் கலந்தே இருக்கும். வானிலும், காற்றிலும், இம்மாநிலத்திலும், ஆறு பருவங்களின் நடனம் நிகழ்கிறது. இம்மண்ணின் ஒவ்வோர் அணுவிலும் வெம்மையுடன் வேட்கையும் நிரம்பியிருப்பதுபோலவே உயிரினத்தின் வாழ்க்கையிலும், அதே போல் தேகத்தின் புரைகளிலும் இந்த வேட்கையும் சுவைபற்றிய நசையும் தேங்கியுள்ளன. இவை இராதுபோனால் வாழவே முடியாது - மனிதனின் உள்ளத்துள் ஆனந்தத்தைப் பெற வேண்டிய தாகம் இருக்கிறது. சோகம் என்பது எதற்காக? அது ஏன் நீடிக்கவேண்டும்? 

வருங்காலம்

மரணத்தை வென்று வரவே முடியாது;  ஆனால் அகால மரணத்தைப் காட்டிலும் துக்ககரமானது வேறெதுவுமில்லை. அகால மரணத்தைத் தடுப்பதே இந்த உலகில் மங்களமான காரியமாகும். எல்லாவற்றையும்விட இன்பம் தருவதாகும்.

மனிதன் அகால மரணத்தை வென்று வரலாம்; நிச்சயமாக அவனால் முடியும். நோய்களிலிருந்து அவன் மீட்சி தருவான். நல்ல பழுத்த வயதில் யோகியரைப்போல், தவசிகளைப்போல் மனிதன் ஒவ்வொருவனுக்கும் உடம்பை நீத்துச் செல்வான். அப்போது சிகிச்சர்களுக்கோ, டாக்டர்களுக்கோ தேவையிராது. நல்ல பக்குவ வயதில் ஆரோக்கியமான உடலுடன் மனிதர் யோகியரைப்போல், தவசிகளைபோல் உடலை நீத்துச் செல்வார்கள். வைத்தியனை விளித்து, ‘இனித் தேவையில்லை; போதும். ஓய்வுவேண்டும் - நான் தூங்கவேண்டும் புட் மீ டு ஸ்லீப் ப்ளீஸ் (Put me to sleep please) என்பார்கள். அது ஒரு பெருந்துயில் - மகாநித்திரை!

நன்றி ஜெ.

அன்புடன்

ராஜேஷ்

பி.கு: இந்நாவலை ஓர் ஆண்டாக நான்கு பிரபலாமன நூல்விற்பனை வலைத்தளங்களில் order செய்தும், பின்பு stock இல்லை என பதில்பெற்றேன். ஒருவழியாக நண்பரின் உதவியால் 2022 சென்னை புத்தககண்காட்சியில், சாஹித்திய அகேடமியின் 2020 வெளியிட்ட மூன்றாம் பதிப்பை பெற்றேன். ஆனால் இப்பதிப்பு நாவலின் வாசிப்பு அனுபவத்தை குளைத்துவிட்டது என்றே சொல்லலாம். 

ஒவ்வொரு பக்கத்திற்கும் சராசரியாக 1-2 பிழைகள். ஒற்றெழுத்து பிழைகள், வலிமிகும் மிகா பிழைகளை விட கண்ணுக்கு அப்பட்டமாக தெரியும் பிழைகளில் 90% தட்டச்சு பிழைகள் தான். உதாரணமாக ஆணடு (ஆண்டு), ஏதவது (ஏதாவது), அவவ்றையில் (அவ்வறையில்), தேற்றுப் (தோற்று), அநத்த் (அந்தத்), உணமை (உண்மை), இபபடி (இப்படி)... இந்த பதிப்பு Draft 2 என்றுக்கூட சொல்ல முடியாது அளவில் தட்டச்சுப்பிழைக்ள் நிரம்பியிருக்கின்றன. ஆனால், இது மூன்றாவது பதிப்பு என்று சொல்வது நம்ப முடியவில்லை. இத்தனைக்கும் 2015 பதிப்பை பற்றி வலைத்தளங்களில் பதிவுகள் உள்ளன. சாஹித்திய அகேடமியின் இ-மெயில் எழுதி ஒருவாரம் ஆகிறது. இதுவரை ஒரு பதிலும் இல்லை.

இந்நூலை படித்தப்பின்பு, அழிசி குழு சமீபத்தில் கிண்டிலில் வெளியிட்டுள்ள பதிப்பை (சொடுக்கை தட்டவும்) நண்பர்களுக்கு பரிந்துரைக்கிறேன்.

Paperback வடிவில் வேண்டும் என்றால் வ.உ.சி நூலகம்/பதிப்பகம் வெளியிட்டுள்ள பதிப்பு (சொடுக்கை தட்டவும்) கிடைத்தால் வாங்கலாம். சாஹித்திய அகேடமியின் (2022 வரையிலான) பதிப்பை தவிற்பது நல்லது. (2022 ஜுலை-22 எழுதியது இக்கட்டுரை)