Featured Post

Daily Project திருக்குறள்

Dear Readers / Friends, http://DailyProjectThirukkural.blogspot.com/    By interpreting various meanings for every word in a Thirukkur...

November 17, 2021

வாலறிவன் நூலகம்

2021 மே 26 ஆம் தேதி எங்களது அம்மா ஒரு புது வீடு கட்டி க்ரஹப்ரவேசம் செய்தார்கள். அவ்வீட்டின் பிராதான வடிவமைப்பாளர் அல்லது தேவைகளின் வடிவமைப்பாளர் என் பொறுப்பில் ஏற்றுக்கொண்டு மகிழ்ச்சியாக செய்தேன். அதனில் எனக்கு ஒரு குட்டி நூலகம் வைக்கவேண்டும் என்ற ஆசை வந்தது. அதனால் வாலறிவன் நூலகம் என்ற ஒரு குறுந்நூலகத்தை வீட்டின் வாசலில் வைக்க வடிவமைத்தேன். அதில் ப்ரதானமாக குழந்தைகளுக்கான புத்தகங்களை வைக்க திட்டமிட்டேன். ஏனெனில் இந்நூலகம் குழந்தைகளுக்கானாது. 

இந்நூலகத்திற்கான விதைகள் இரண்டு. 1) நான் வட அமெரிக்கா (யூ.எஸ்.ஏ மற்றும் கனடா) வில் வசித்து வருகிறேன். இங்கு பல வீடுகளில் இதுப்போன்ற இலவச குறுந்நூலகத்தை கண்டுள்ளேன்.நாமும் இதுப்போல் வைக்கவேண்டும் என்ற அவா எனக்கு என்றும் உண்டு 2) எழுத்தாளர் எஸ்.ராமகிருஷ்ணன் அவர்கள் வீடில்லா புத்தகங்கள் தொடரில்/புத்தகத்திலும் பல மேடை பேச்சுகளில் ஒரு முதியவர் அவர் வீட்டிற்கு வருவோர் எல்லோருக்கும் ஒரு புத்தகத்தை அன்பளிப்பாக தருவார் என்று கூறினார். இதுப்போன்ற நல்ல கதைகளே என்னை இதுப்போன்ற முயற்சிகளில் ஈடுப்பட செய்தது.

நூலகம் தயார் ஆக இன்னும் சில மாதங்கள் ஆகி, 23-செப்டம்பர் 2021 அன்று எனது தங்கை கிருத்திகாவின் குழந்தைகள் ப்ரத்ன்யா மற்றும் தன்யா சகோதரிகள் அதனை ரிப்பன் வெட்டி துவங்கி வைத்தார்கள். முதலாவதாக தன்னறம் நூலகள் சிலவற்றை வாங்கி வைத்தோம். மேலும் பல புத்தகங்களை வாங்கி வைத்தோம்.

இந்நூலகத்தின் பெயர் வாலறிவன் நூலகம்.

இந்த நூலகத்தை செய்துக்கொடுத்த எனது பொறியாளர் நண்பர் டென்னீஸ் அவர்களுக்கு மிக்க நன்றி. 

இந்நூலகத்தைப் பற்றி குக்கூ காட்டுப்பள்ளியில் தன்னறம் நூல்வெளியையும் தும்பி சிறுவர் மாத இதழையும் நடத்தி வரும் சிவகுருநாதன் அவர்கள் அவர்களது தும்பி முகநூல் புத்தகத்தில் 17 நவம்பர் 2021 அன்று கீழ்க்காணும் பதிவை எழுதியிருந்தார். அவை கீழே.

தும்பி சிறுவர் மாத இதழ் முகநூல பக்கத்தில் வாலறிவன் நூலகத்தைப் பற்றிய பதிவு

வாசல் சுவற்றில் ஓர் சிறுநூலகம்...

துவக்கந்தொட்டே தும்பி இதழோடும், தன்னறம் நூல்வெளியோடும் கரங்கோர்த்துப் பயணிப்பவர், கனடாவில் வசிக்கும் தோழமை ராஜேஷ் அவர்கள். அவர் மற்றும் அவரின் குடும்பத்தாரின் அகவிருப்பமாக, பாண்டிச்சேரியில் அமைந்துள்ள அவர்களின் வீட்டுவாசல் சுவற்றில் ஓர் சிற்றறை நூலகத்தை அமைத்திருக்கிறார்கள். அதற்கு 'வாலறிவன் நூலகம்' எனப் பெயரிட்டுள்ளனர். அங்கிருக்கும் வீதிக்குழந்தைகளுக்கும் சுற்றுப்புற மனிதர்களுக்குமான குறுநூலகம் போல அது விரைவில் மாறப்போகிறது. 

வழக்கமான நூலகம் போலவே, இங்குள்ள புத்தகங்களை எடுத்துச்சென்று 1-2 வார காலத்திற்குள் படித்துவிட்டு, புத்தகத்தினை திரும்பவும் நூலகத்திற்கு அளித்திட வேண்டும். சில நாட்கள் முன்பாக, அவ்வீட்டுக் குழந்தைகளின் கரங்களால் அந்த எளிய நூலகம் வீதிமக்களின் பொதுப்பயன்பாட்டிற்கு திறக்கப்பட்டுள்ளது. அந்நூலகத்தில் நாராயணகுருவின் 'அறிவு' புத்தகத்தை முகப்புநூலாக வைத்திருந்தமை தன்னறம் நூல்வெளிக்கு நிகழ்ந்த நற்குவியம் என்றே தோன்றுகிறது. 

'வீதிக்கு ஒரு வாசல்-நூலகம்' என்ற பெருங்கனவினை இக்குழந்தைகள் துவக்கி வைத்திருக்கிறார்கள். திண்ணை வைத்த வீடுகள் போல, நூலகம் வைத்த வீடுகள் நம் சமூகத்திற்கான பொது அறங்களில் ஒன்றாக நிலைகொள்ளட்டும். பறவைக்கு நீர்வைத்தல் போல மனிதர்களுக்காக புத்தகம் வைக்கும் இச்செயல் எல்லோருக்கும் சாத்தியப்படக்கூடிய ஒரு கனவுத்திட்டத்தை முன்வைக்கிறது. 'வீட்டுக்கொரு நூலகம்' என்ற உணர்வு, 'வீட்டுக்கொரு வாசல்-நூலகம்' என விரிவுகொள்கையில் எல்லா வீதிகளும் பாடசாலையாகிறது. 

கனவு வெல்க!





No comments:

Post a Comment