என் வாழ்க்கையில் திருக்குறளுக்கு என்று ஒரு தனி இடம் உண்டு. 2011-2013 ஆண்டு காலகட்டங்களில் பல புத்தகங்களை ஒரு வரையறையில்லாமல் ஒரு தெளிவு இல்லாமல் தேர்ந்தெடுத்து படித்த நாட்க்கள். அவற்றில் பல எனக்கு எவ்வித ஒரு ஆழ்ந்த தாக்கத்தையும் ஏற்படுத்தவில்லை. அந்தக் காலகட்டத்தில் தான் தமிழ்ப் பேச்சு எங்கள் மூச்சு என்ற நிகழ்ச்சி விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பப்பட்டது. அதில் மரபான நூல்களுக்கு முக்கியத்துவம் கொடுக்கப்பட்டது. அப்பொழுது திருக்குறள் மீது ஆர்வம் வந்தது. மேலும் தமிழ் பொதிகை தொலைக்காட்சியில் ஒளவை நடராஜன் போன்றோரின் திருக்குறளைப்பற்றிய ஆழந்த விளக்கங்களும் ஈர்த்தது. ஆதலால் மரபான ஒரு கல்வி மிகுந்த பலனை கொடுக்கும் என்று பட்டது. ஆதலால் 2013இல் நாள்தொறும் ஒரு திருக்குறள் கற்கலாம் என்று துவங்கினேன். வெறுமென உரை எழுதுவது பொழுது போகாமல் செய்யும் ஒரு காரியமாக பட்டது. ஆதலால் ஒவ்வொரு சொல்லுக்கு பொருள் அறிந்து மனப்பாடம் செய்து படிக்க வேண்டும் என்று நினைத்தேன். அவ்வாறு தொடர்ந்து செய்து வருகிறேன். இது வரை சுமார் 76 சதவிகிதம் முடித்துவிட்டேன்.
ஜெயமோகன் அவர்கள் திருக்குறளை ஒரு ஆபத்வாக்கியமாக மாற்றிக்கொள்ளுங்கள். அது உங்களுக்கு மிக பெரிய ஒரு திறப்பை பின்பு கொடுக்கும் என்றார். அதுபோலவே என் வாழ்வில் சில தருணங்கள் ஏற்பட்டன. அவற்றில் சிலவற்றை எழுதி பதிவு செய்து வைக்கலாம் என்று நினைக்கிறன்.
ஆபத் வாக்கியம் - 1
1. எண்ணித் துணிக கருமம்
எனது நண்பன் ராஜேஷ் (இன்று ராஜேஷ் ஐ.பி.எஸ்)-இன் கூகிள் டாக் நிலை செய்தி (Google Talk /Chat status ) எண்ணித் துணிக கருமம் என்று இருந்தது. இவ்வாக்கியம் என்னை மிகவும் ஈர்த்தது. கடைசியில் அது ஒரு குறள் என்று தெரியவந்தது.
எண்ணித் துணிக கருமம் துணிந்தபின்
எண்ணுவம் என்பது இழுக்கு
திருக்குறளை கற்க துவங்கிய பொழுது நான் முதல் முதலாக பதிவு செய்த குறள் "எண்ணித் துணிக கருமம்". ஆதலால் ஒரு வைராக்கியமாக எடுத்துக்கொண்டு இதுவரை திருக்குறளை கற்று வருகிறேன். இவ்வாண்டுக்குள் கற்று முடித்துவிடுவேன். இக்கற்றல் எனக்கு தந்த மாற்றங்கள் ஏராளம்.
2. யாதனின் யாதனின் நீங்கியான் நோதல்
அதனின் அதனின் இலன்
இக்குறளை நான் ஒரு மருத்துவர் அலுவகத்தில் வாசித்தேன். அதில் இருந்து எனக்கு இதன் மேல் ஒரு ஈடுபாடு உண்டு. வேண்டாம் வேண்டாம் என்று முடிவு எடுப்பதே சுதந்திரம். அதுவே விடுதலை. அதுவே இன்பம் என்று கற்றுக்கொண்டேன். பல நேரங்களில், குறிப்பாக ஒரு பொருளை வாங்கும் பொழுது இக்குறள் எனக்கு உதவியது.
3. ஆகுல நீர பிற
"மனத்துக்கண் மாசிலன் அனைத்து அறன்
ஆகுல நீர பிற" என்ற குறளில் இருந்து எடுத்த ஆபத் வாக்கியம். எழுத்தாளர் ஜெயமோகன் ஒரு காணொளியில் கற்றுக்கொடுத்தது. இவையெல்லாம் சத்தம் என்பதே ஆகுல நீர பிற என்பதின் அர்த்தம்.
ஒரு இரண்டு ஆண்டுகளாக தர்மத்தின் படி மனசாட்சியின் படி உதவ எண்ணி என்னை ஒரு செயலில் ஈடுபடுத்துக்கொண்டேன். துவக்கத்தில் ஒத்துழைப்பு இருந்தாலும், எனது கேள்விகள் பெண்ணின் கைகள் போல் கொடிப்போல் தழுவாது/வளையாது அம்புபோல் நேராக இருந்தது. வேறு வழியில்லை. ஏனெனில் பிரச்சனை வேரின் ஆழம் அதல பாதாளத்தில் உள்ளது. இங்குப் பிரச்சனை என்னும் குழி மிக மிக பெரிது. அதை நிரப்ப நேரமும் ஆகும்.
மேலும் என்னை தவிர வேறு யாரும் பிரச்சனையின் வேருக்கு செல்லவில்லை.
சென்றதனாலும் கேள்விகள் கேட்டதனாலும் ஒரே பயன் உதாசீனமும் ஏளனமும் வாடிக்கையாயிற்று. ஒரு சிறு பலனும் இல்லாத இக்காரியத்தை ஏன் செய்கிறாய் விட்டுவிடு ஏன் இவ்வளவு மெனக்கெட்டு செய்கிறாய் அதுவும் காதுகொடுத்து கேட்காத பொழுது. இதை விட உனக்கு வேறு வேலைகள் இருக்கிறது அல்லவா என்ற நியாயமான கேள்விகள் உள்ளன.
வணிக ரீதியாக பார்த்தால் இதன் பயன் கடுகளவுக்கூட இல்லை. ஆனால் மாதத்தில் ஓரிரு நாட்கள் என்பதாலும் பிரச்சனையில் சிக்கித்தவிக்கும் ஒருவனுக்கு உதவும் என்பதாலும் என்னை தவிர வேறுயாரும் அடிவேருக்கு செல்லவில்லையென்பதாலும் வேறு யாரும் வேரின் ஆழத்தை அதிகமாவதை தடுக்காதாதாலும் இங்கு எனது பங்ககளிப்பு அவசியம் எனப்பட்டது எனக்கு. தவறுகளும் அலட்சியமும் பொறுப்பு துறப்பும் கண்முன்னே நடக்கும் பொழுது அதனை கைகட்டி கையறுநிலையில் வேடிக்கைப்பார்க்க மனம் ஒப்பவில்லை. தன்னறத்தின் பால் இச்செயல்களில் தொடர்ந்தேன்.
உதாசீனங்களையும் ஏளனங்களையும் பொருட்படுத்தாமல் இருளில் அறிவே ஒளி என்பதால் என்னை ஈடுபடுத்திக்கொண்டேன். ஏனெனில் அது எனது கடமை. அதுவே நியாயம். ஆனால் நிலைமை கைமீறி சென்றது. எனது கேள்விகளை தலையீடு எனக்கருதி விரும்பவில்லை. எனது தகவல் மேல் நம்பிக்கை கூடுவதை தகவல்கள் தர முற்படாதவர் வெகுவாக ரசிக்கவில்லை. எண்ணங்கள் சொற்களில் வெளிப்படுவது இயற்கை கொடுத்த வரம் தானே.
பிரச்சனையின் வேர்கள் அறுக்கப்படாமல் இன்னும் ஆழ வேரூன்றிய பொழுது பொறுமை இழந்தேன். சற்று நேரம் ஆழ சிந்தித்தேன். அப்பொழுது நான் என்னுள் சொல்லிக்கொண்டது "எண்ணித் துணிக கருமம் துணிந்தபின் எண்ணுவம் என்பது இழுக்கு". மீண்டும் ஈடுபட்டால் இழுக்கு. ஆதலால் ஒரு இருபது தடவையாவது எண்ணி எண்ணி துணிந்தேன். வேண்டாம் என்று முடிவு எடுப்பதே ஆகப்பெரிய சுதந்திரம். ஆதலால் "யாதனின் யாதனின் நீங்கியான் நோதல் அதனின் அதனின் இலன்" என்று சொல்லிக்கொண்டு இச்செயலில் இருந்து என்னை மனதார விலக்கிக்கொண்டேன்.
ஆனால் ஆழ் மனம் நம்மைவிட வலிமை வாய்ந்தது. அதன் வயது நமது வயது. நம் முடிவின் வயதோ நமது தற்கால பிரஞையோ சில நாட்கள் வயதானது தான். ஆழ் மனம் அறம், நியாயம், வேலை, பிரச்சனையின் விளைவுகள் என்றெல்லாம் ஆயிரம் கூப்பாடுகளை போட்டது. அப்பொழுதெல்லாம் நான் சொல்லிக்கொண்டது "ஆகுல நீர பிற". இவை யாவும் சத்தமே.
இவற்றினுடைய பயன் எனது நேரம் மிச்சமாகியது. இப்பிரச்சினைகளை பற்றி நான் தனியே சிந்திப்பது வெகுவாக குறைந்தது. நேரமும் மனமும் என் கைவசம் ஆகியது. வேண்டாம் என்பது எவ்வளவு பெரிய சுதந்திரம் என்பதை உணர்ந்த தருணங்களில் முக்கிய தருணம் இது.
இதையெல்லாம் விமர்சிக்க மனதில் நரைக்கூடியவர்கள் வருவார்கள். அவர்களின் விமர்சனங்களும் ஆகுல நீர பிற. ஏனெனில் வாய்மையின் நல்ல பிற இல்லை.
No comments:
Post a Comment