==================================================================
==================================================================
அன்புள்ள ஜெ,
நலமா?
தங்களின் 'காடு' நாவலை முதலாவதாக 2-3 நாடகள் முன்பே வாசித்து முடித்தேன். நான் நீலத்திற்கு உள்ளே செல்லலாம் என்பதே என் திட்டமாக இருந்தது. ஆனால் காடு கொண்டு சென்ற வழி விரிந்து விரிந்து என்னை வழிதவறினேன். ஆதலால் நீலத்திற்கு முன்பு ஒர் இடைவேளையில் காடு-இனை தொகுத்துக்கொள்ள வேண்டும் என்று பின்வருமாறு எழுதியுள்ளேன். மிக நீளாமான மடல். மன்னிக்கவும்
காடு நாவலை நான் கிரிதரனின் பார்வையிலும், ஐயரின் பார்வையிலுமே அதிகம் அறிந்துக்கொண்டேன். மறுவாசிப்பில் இன்னும் பல திறப்புக்களை கண்டுக்கொள்வேன் என்று நினைக்கிறேன். மற்றவர் பார்வையில் இன்னும் அதிகம் பார்க்கவில்லை. அடுத்த வாசிப்பில் கண்டுக்கொள்வேன். காட்டில் பல தளங்களை காண்கிறேன்.
கிரியின் வாழ்வில் வரும் காதல் வேவ்வேறு காலங்களில் எப்படி இருக்கிறது. அவன் முதல் முதலாக காட்டிற்குள் வரும் பொழுது காட்டின் மேல் கொள்ளும் காதலும், நீலியின் மேல் கொள்ளும் காதலும் அற்புதமான நேரங்கள். மொத்ததில் காட்டின் தீஞ்சுவை எனக்கு மீட்சியரிதாதல்
காதல் / காமம்
கிரி முதலாவதாக காட்டை காணும் பொழுது அப்பச்சை மரத்தடியில் அவன் கொள்ளும் எழுச்சியை போல அவனுள் இயற்கையான காதல் மலர துவங்குகிறது. பின்பு அது தீயின் துளி போல பெருகிறது. பின்பு காதலின் உச்சத்தில் பாறையின் மீது தகிக்கிறது. வழியில் காடு எப்படி பிரித்தறிய முடியாமல் மரங்களும் கொடிகளும் செடிகளும் உருவான பச்சைப்பரப்பு. ஒர் இலைகளினாலான் ஏரி. அதில் கிரி முக்குளியிட்டு செல்கிறான். காதல் அதுபோலே பிரித்தறிய முடியாதது. ஆனால் இக்காடும் / காதலும்/ காமமும் ஒவ்வொரு கணமும் மாறிக்கொண்டே இருப்பது. ஒவ்வொரு இடமும் பார்த்தது போலவே இருந்தாலும் புதிய இடங்கள். திசையற்ற இடம் காடு. ஆனால் மனிதன் அங்கே திசை தேடி அபத்தம் ஆகிறான். ஆனால் காட்டை கண்டவன் காட்டை விட முடியாது. அது போல காதலும் . கிரி காட்டிற்குள் மீண்டும் நுழைப்பொழுது மிக சீக்கிரம் ஓடைப்பாறை அடைகிறான். மேலே செல்ல நினைக்கிறான். அப்படி செல்கையில் காடு தன் எல்லையை விரித்து விரித்து உள்ளே இட்டுச் செல்கிறது. அங்கே கிரி காட்டின் மீது இருந்த பயம் கிளர்ச்சி அடங்குகிற்து. காதலும் காமும் இது போலவே என்று எனக்கு படுகிறது. துவக்கத்தில் காதல் பரவசம் இருந்தாலும் அதில் மனிதன் திளைத்தாலும் அவன் மேலே போவது என்பது அவனுடைய எண்ணத்தை பொருத்தது. அப்படி எண்ணினால் காதல் கூட்டிச்செல்லும். ஆனால் காடு விரும்பினதால் கூட்டிச்சென்றது.
அங்கே காட்டில் கிரியும்/ மனிதனும் அறியாத விஷயம் மீது மோகம் கொள்கிறான், காதிலிக்கிறான். அப்போது வானத்தை பார்க்கிறான். வானம்போல அவன் மனம் விரியமுடிகிறது. மனிதன் இயற்கையாக இருக்கும்பொழுது அவன் மனம் எப்படி இருக்கிறது. ஆனால் செயற்கையான நகரங்களில் மனைவியிடமும் காதலியிடமும் நம் மனம் நேரம் ஒதுக்கி பேசுகையில் எங்கே நமக்கு விரிவடைய முடியும்? .. அத்தகைய கணங்களில் மிக மெல்ல இரவெனும் தாபம் அவனுள் நிகழ்ந்தும் கொண்டு இருக்கிறது.
அதன் பின் மனுஷனுக்கு உள்ள தீ காமகுரோத மோகங்கள்.. அது காடு போல. இலைகள் தளிர்கள் வானை நோக்கி எழும் உயிர் உள்ளவரை. பின்பு மட்கியும் எரியும். காடு ஈவு இரக்கம் அல்லாதது. அங்கே பூக்கள் வசந்த காலத்தில் பூத்து அழிகிறது தடமே இல்லாமல். நம் மனமும் காதலும் எப்படி பட்டது.
நீலியை கண்ட பின்பு ஓர் இடத்தில் அவர்களை தவிர காலமே இல்லாதது போல் தோன்றுகிறது. நினைவும் அறுபடவில்லை. அசையவுமில்லை. அதுபோல சிற காலம் நானும் இருந்து உள்ளேன் என்று என்னை அங்கு காண்கையில் ஒரு புன்னகை. ஆனால் இன்று யோசிக்கையில் அதை பற்றிய ஒரு சுவடு கூட என் நினைவில் பெரியதாய் இல்லை. பின்பு கூறுகிறீர்கள் எப்படி அக்கணங்கள் கொந்தளிப்பாக இருக்கிறது. ஆனால் அனுபவம் முடிந்த மறுகணம் அதனை பகுத்துப்பிரித்து பார்க்கிறோம். எவ்வளவு உண்மை என்றே நினைத்துக்கொண்டேன். ஓர் இடத்தில் கிரி திட்டம் தீட்டுகிறான் பின்பு புதிய திட்டம் ஆனால் குட்டப்பனை கண்ட பின்பு அது ஒரு நினைப்பாகி விடுகிறது. நான் சில ஆண்டுகள் முன்பு ஒரு பெண்ணிடம் என் காதலை கூற முற்படுகையில் அவ்வாறு நடந்து உள்ளது. என்னுடன் பேரூந்தில் பயணிப்பாள். யாராவது வந்து விடுவார்கள். அல்லது மழை பெய்து விடும். சொல்ல வந்ததையே மறந்து விடுவேன். ஆனால் அப்போது அவளுடன் மழையில் சிறிது நேரம் உணவு உண்டாலும் - நீங்கள் குறிப்பிட்டு இருந்தது போல அது ஒரு பெரிய வெகுமதி. பின்பு இதனை "தாண்டிச் சென்றபடியே இருத்தலை, இழந்தபடியே இருத்தலையே வாழ்க்கை என்கிறோம்" என்று குறிப்பிட இடமும் நன்று.
அவன் காதல் முதிர்ச்சி அடையும் பொழுது அவள் வெறும் பெண். முடிந்துபோகும் என்று எண்ணி தன் எண்ணங்களை சாந்தப்படுத்திக்கொள்கிறான். நிதானமாக நடக்கிறான். ஆனால் அந்நிலைக்கு வர ஒருவனுக்கு ஒரு சிறிய காலம் தேவை படுகிறது. அங்கே ஓர் இடத்தில் கூறுகிறீர்கள் நிழல்கள் இடம் மாறியிருந்தன. அது போல காதலும் எப்படி நிறம் மாறுகிறது.
ஐயர் ஓர் இடத்தில் சொல்கிறார் எல்லா பெண்ணிலும் அழகு இருக்கு. காட்டை ரசிகனும்னு நினச்சா நிம்மதியா இருக்கலாம். ஆனால் நீங்கள் சொல்லாமல் சொன்னது அதை (காட்டையும், பெண்ணையும்) அடைய நினைக்கும் பொழுது தான் ஆபத்து. கடைசியில் உனக்கு அகங்காரம் - தன்னை எல்லாரும் பேண வேண்டும் என்னும் எண்ணம். அது போல "காமம் காமம் என்ப காமம்" பாடல் மூலம் ஒரு ஒப்பீடு . காமம் கடைசி வரைக்கும் தீராத ஒரு விருந்து. காதல் என்னும் பழம் ஆதாம் ஏவால் காலத்தில் இருந்தே இருக்கிறது. அதாவது மனிதன் உருவான காலத்தில் இருந்தே காதலும் காமமும் மிக மிக இயற்கையான ஒன்று. அதனை செயற்கை படுத்த கூடாது. அதுபோல ஏங்கி உண்டால் பழத்தின் ருசியினை அறிய முடியாமல் ஆகிவிடும். உண்ணும் தோறும் ருசியும் வெறியும் ஏறும் என்னும் வரிகள!! பொதுவாகவே நீங்கள் குறுந்தொகை பாடல்களை குறிப்பிட்டு அகம் சார்ந்து நோக்கும் பார்வையில் நான் இது வரையில் அணுகியது கிடையாது. இந்நாவல் எனக்கு இன்னொரு திறப்பை கொடுத்தது என்றே சொல்லலாம்.
இருப்பினும் கிரி போல நானும் ஐயரால் எரிச்சல் அடைந்தேன். அவன் அவ்வளவு கற்பனையில் இருக்கும் பொழுது ஐயர் எளிதில் அதில் இருந்து விளகி மற்றொன்றுக்கு சென்று விடுகிறார். அவளின் அழகிற்கு விடுத்த அநீதி, தன் உணர்வுகளை சிறுமைபடுத்தியது போல. ஆனால் ஐயர் முதிர்ந்தவர் இதை போல பல நூறு பெண்களை பார்த்து இருப்பார் என்று நினைக்கும் பொழுது அது அவரது இயல்பு என்று படுகிறது.
அது போல ஓர் இடத்தில் சொல்லுக்குள் வாழ்வதை அனுபவித்து பார்த்தால் தான் அறிந்துக்கொள்ள முடியும் என்பதனையும் ரசித்தேன். அது போல "மனம் அழகை உணரும் விதங்களின் மர்மங்களில் அலைக்கழிந்தேன்" என்னும் வரிகளில் பயணிக்கிறேன் இப்போது. நமக்கு ஏன் இப்படி எல்லாம் இதுக்கு முன்னாடி நடந்தது இல்லை. இப்ப எப்படி இதெல்லான் நடக்குது. அதுவும் நம்மலா இப்படினு நினைக்கும் பொழுது உண்மையாகவே மர்மமாக இருக்கிறது.
நீலியின் பின்னால் அளவிட முடியாத பொன் காற்றில் குலுங்கி எழுந்தமர்ந்து (பொன்னைவிட ஒளி கொண்ட) பூக்கள் உதிர்கிறது. எவ்வளவு அழகான கற்பனை. அது போலவே அவள் பின்னால் காதல் உள்ளது என்றே எனக்கு படுகிறது. காதலே அங்கே பூக்களாக பொழிகிறது. ஆதலால் அவளே முக்கியமற்று இருக்கிறாள். .... ஆனால் "என்னால் அறிந்துகொள்ளவே முடியாத அளவுக்கு மகத்தான அபாயகரமான விஷயங்களின் விளிம்பில் உலவிக் கொண்டிருக்கிறேன் என்று நெஞ்சுக்குள் ஒரு சிறு அச்சம் சோன்றியது. கையில் அந்த மூக்குத்தி இருந்தது ஒரு சிறு கூழாங்கல்போல. உண்ணமுடியாத தானிய மணி போல. அதை ஆற்றை நோக்கி வீசினேன்" .. கிரி எப்படிபட்ட ஒரு அபாய கட்ட இடத்தில் இருக்கிறான். ஒரு படி தவறினாலும் விளைவு மிக மோசம். அங்கே அவன் கையில் எவ்வளவு அழகான ஒரு காதல் அழகிய மூக்குத்தி போல கூழாங்கல் (கூழாங்கல் உறுவாக எத்தனை ஆண்டுகள் ஆகும்) போல தானியம் (அது எத்தனை விதைகளை உள்ளே கொண்டது) போல இருக்கிறது... ஆனால் அவன் அக்கனவை ஆற்றில் வீசுகிறான். எப்படி அதை நீங்கள் எழுதினீர்கள். பலர் அத்தகைய நேரங்களை வாழ்வில் தவறவிடுகின்றனர்.
கிரி காதலின் உச்சியில் எல்லாம் தெரிந்த பறவை இருக்கு என்கிறீர்கள். எனக்கு ஒருமாதிரி தான் புரிந்தது. இரண்டாவது தடவை பறவை தனை குறியீடாக வருகிறது. மீள் வாசிப்பில் அறிவேன் என்று நினைக்கிறேன்.
"காட்டையே ஒற்றைப் பெரும் பூவாக மற்றும் வேங்கை, தீப்பற்றி எரியும் காந்தள், பொன் சொரியும் கொன்றை எத்தனை மலர்கள். மாறாப் பசுமைக் காடு என்பது பூக்களின் பேருலகம். இந்த நிலத்திற்கு அடையாளமாக இந்த அபத்தமான பூவை ஏன் கற்பனை செய்தார்கள்? ஆனால் மொத்த சங்க இலக்கியப் பரப்பிலும் குறிஞ்சிப்பூ பற்றிய வர்ணனைகளே இல்லை என்பது நினைவுக்கு வந்தது." - இவ்விடத்தில் இவனுடைய காதல் என்பது எவ்வளவு சாதாரணமான ஒன்று என்று ஆகிறது. எல்லா மனிதர்களுக்கும் இருக்கும் காதலை போலவே. அதற்கு நீங்கள் மற்ற சில இடங்களில் காவியைத்தை பற்றியும் தூய காதல் பற்றியும் பேசுகிறீர்கள்.
பல இடங்களில் மாமியை நினைக்கும் பொழுதெல்லாம்,தனிமையிலும், அவன் மனம் ஒன்றையே நாடுகிறது மாறாத சடங்காய். குற்ற உணர்வு, இழிவுணர்வு, சுய இரக்கம். அச்செயல் முடிந்த உடன் ஒரு வெறுமை. ஆனால் தவிர்க்க நினைத்தால் இரண்டு நாட்களைத் தாண்டாதது. பிறகு. கண்களை மூடி நினைவுகளை மனதிலிருந்து விரட்டுகிறான். அதுவே பல சமயம் நடக்கிறது. எப்படி அவனுக்கு காமம் ஒரு கேளிக்கையாக மாறிவிடுகிறது.
நான் சில இடங்களில் கிளியை பற்றிய குறிப்புகளை கவனித்தேன். கொஞ்சம் தவறான புரிதலா என்று தெரியவில்லை. பேசி தெரிந்துக்கொள்ள வேண்டும். "கிளி பறந்து போனதும் கிளை சற்று விடுபட்டது. காற்றில் ஆடிச் சரிந்தது. அதன் இலைகள்மீது வெயிலின் ஒரே ஒரு கதிர். இலைகள் கைவிரித்து அதை அள்ள முயன்றன 'கிளி விளி பயிற்றும் வெயில் ஆடு பெருஞ்சினை... பின்பு ஓர் இடத்தில் நீங்கள் மாமி கட்டிலில் அமர்கிறாள் என்றும் கிளிக்கு ஒப்புவாக கிரியை கிளையாக சொல்கிறீர்கள். மாமி சென்ற உடன் அவன் மனம் எப்படி விடுபடுகிறது.
நகரம்
நகரத்தை பற்றியும் காற்றை பற்றியும் நீங்கள் சொன்ன பல குறிப்புகள் மிக மிக சரியாகவே எனக்கு பட்டது. எனக்கு பிடித்த வற்றையும் நான் வாழ்வில் சந்தித்த வற்றையும் கீழே குறிப்பிட்டு உள்ளேன்.
1. காட்டில் மனிதன் எவ்வளவு நிதானமாக இயங்கிக் கொண்டு இருக்கிறான். காட்டை ரசித்துக்கொண்டு, காதல் கொண்டு காமம் கொண்டு. ஆனால் அங்கே இருக்கும் பொழுது தெரியவில்லை வெளியே வரும் பொழுது தான், நகரத்துடன் ஒப்பிடுகையில் தெரிகிறது நாம் எவ்வளவு வேகமாக சென்று கொண்டு இருக்கிறோம் ஒன்றுமே ரசிக்காமல்.
2. காடும் மனிதனின் இச்சைப்போல சீரற்றது. ஆனால் மனிதன் காட்டை சமன் செய்து கொண்டு இருக்கிறான். துல்லிய வடிவங்களால் நிர்ப்புகிறான்.
3. நகரங்களில் காதலிப்பது தவிர வேறு பிரச்சினைகளே இல்லையா என்றும் கேட்கும் இடத்தில் நம் சமூகத்தில் இன்று நடக்கும் சம்பவங்களை (பல பெண்களை கொலை செய்தல், சினிமாக்களில் காதல் இல்லாமல் டூயல் பாடல்கள் இல்லாமல் இல்லை) பார்க்கையில் இது மாறுமா என்றே கேட்டுக்கொள்கிறேன்.
4. குடிசைகள் எவ்வளவு ஆபாசமான ஒன்று. மழை என்னும் அமுதை ஓவ்வொரு அணுவும் திளைக்காமல் மனிதன் எலி போன்று இருட்டில் பதுங்குகிறான். அவனுடைய பயம், பலவீனம், சுயநலத்தின் அடையாளமே குடிசை. நம்முடைய வாழ்வில் சொந்தமான வீடே ஒரு பெரும் லட்சியமாக இருக்கிறது என்று நினைக்கையில் சற்று ஆபாசமாக உள்ளது.
5. நீலியை வரவழைத்து பார்க்க நினைக்கிறான். ஆனால் அதில் நியாயமில்லை என்பதை புரிந்துக்கொள்ள முடிகிறது. "காடு என்பது மனிதன் அனுபவிக்கப்பட வேண்டிய பொருள் என்று நினைக்கும் நகர் மனநிலையின் தொடர்ச்சி அது" ..என்னும் இடம்!!! பின்பு காற்றை வணிக பொருள்களின் (பலகை) உற்பத்தியாகும் இடம் என்று நினைக்கும் மனம். ஒரு தடவை நாஞ்சில் நாடனின் "மணிநீரும் மண்ணும் மலையும் அணிநிழற்
6. "நட்சத்திரங்களை ஏறிட்டுப் பார்த்தேன்.. அலங்காரக் கூரை.. வீட்டிற்க்குள்ளே சென்று விடுக்கிறான். மழையில் இருந்தும் வெயிலில் இருந்தும் தப்புவதற்க்காக இல்லை. அப்படி என்றால் ஆயிரம் வழிகள் உண்டு. ஆனால் தான் தான் என்று சதா நினைத்தபடி ஓடுகிறான். வாழ்வின் துவக்க நாட்களில் தான் நிமிர்ந்து பார்க்க முடிகிறது... இதை பற்றி சில வருடங்களாக நினைத்ததுண்டு. நான் பள்ளிச்சிறுவனாக இருந்த பொழுது அரசு குடியிருப்புகளில் மொட்ட மாடியில் உணவு உண்டு உறங்கிய நாட்கள் உண்டு. ஆனால் இன்றோ அது நடந்து குறைந்தது 10 வருடங்கள் இருக்கும் என்று நினைக்கிறேன். ஏன் நாம் அப்படி இப்பொழுது எல்லாம் செய்ய முடியவில்லை. பல நேரம் சினிமா, கடற்க்கரை, நண்பர்களுடன் உணவகத்தில் என்று வீடு திரும்பவே 10 மணிக்கு மேல் ஆகிறது. இதன் பிறகு எங்கே மொட்ட மாடி. தினசரிகளில் சாலையில் பயணமே 1-2 மணி நேரம், பின்பு எங்கே வானம். கடைசியாக நான் மேல் நோக்கி வியந்து வானம் பார்த்தது என் மனைவியாக போகிறவளுடன் தொலைப்பேசியில் உறையாடிக்கொண்டு இருக்கும் பொழுது. அப்பொழுதும் இதையே நினைத்துக்கொண்டேன்.
7."வாழ்க்கையை கடந்து சென்றபோது எத்தனையோ அனுபவங்கள் சிறு தடயம்கூட இல்லாமல் ஆகின்றன. அது மலையேற்றம் போல ... ஏறும் பொது ஒவ்வொன்றும் சிறியதாகி, அற்பமாகி பார்வையை விட்டு மறையும். உச்சியில் மலையே அற்பமாகி விடுகிறது. வானம் மட்டும் எஞ்சுகிறது"..என்று நீங்கள் கூறும் இடம் அற்புதம். நான் பதின் பருவங்களில் இருக்கையில் என்னுடைய சபரிமலை குரு இதனை யொட்டி கூறியுள்ளார். மலை ஏற ஏற நாம் தேங்காய் களை உடைத்துகொண்டு செல்கிறோம். நம் பாரங்கள்/ பாவங்கள் குறையும் என்று. அவரை நினைத்துக்கொண்டேன். நீங்கள் பொதுவாக மலையெற்றத்திற்கு கொடுத்த விளக்கம் மிக ஏற்ப்புடையாத இருந்தது.
8. நகர வாழ்க்கையில் காதல் எவ்வளவு செயற்கையாகி கொண்டே இருக்கிறது. சிறுவர்களிடம் இருக்கும் பணம் போல என்னும் இடம்!!
9. ஆனால் அழகு என்பது எல்லா இடங்களிலும் இருக்கிறது. சுசீந்திரம்கிற சாக்கடைச் சந்திப்பு முனையில்கூட வானம் அழகு என்னும் இடம்!!
10. தெய்வங்கள் ஊரில் இருந்தாலும் காடுக்கு உரியவர்கள் காட்டில் முளைத்து ஊருக்குள் நிறுவப் பட்டவர்கள். நான் கேட்ட பல புராண கதைகள் காட்டில் நடந்தவை என்று நினைத்துப்பார்கையில் பெரிய அளவில் அதிர்ச்சி இல்லை ஏன் என்றால் உங்கள் தளத்தில் இந்து மதம் எப்படி பட்டது என்று நீங்கள் எழுதிய பல கட்டுரைகள் வாயிலாக அறிந்துள்ளேன்.
11. காடு என்பதை மனிதன் எப்படி உரிமை கொண்டாடுகிறான். ஒரு சாலை மௌனமாக ஒரு திட்டத்துடன் பாம்புபோல நீள்கிறது. .. அதேபோல முயல் காட்டில் எவ்வளவு இயல்பாக உள்ளது. ஆனல் சாலையில் வந்த உடன் மருண்டுவிடுகிறது என்னும் இடம். [ஆண்டுதோறும் 1993 முதல் சபரிமலை சென்று வருவதால் நீங்கள் காட்டை காட்சிப்படுத்தும் பொழுது என்னால் முழுமையாக உள்வாங்கி கற்பனை செய்ய முடிந்தது. உதாரணமாக திசையில்லா காடு, பல பச்சைகள், பல நிழல்கள், பார்த்தது போல் தோன்றும் புதிய இடங்கள். ஆனால் இன்றோ எங்கு பார்த்தாலும் பீடி நாற்றம், ரப்பர் தோட்டங்களின் பரவலான ஆக்ரமிப்புகள், சாலைகள் சென்றுள்ள தொலைவு/வளர்ச்சி. அந்த அழகிய காட்டின் மீது மனிதன் செய்த கொடுமைகளை பார்த்துள்ளேன். 1995களில் வெறும் கஞ்சி மட்டுமே கிடைக்கும். அதுவும் 5ரூபாயுக்குள்ளே. கடந்த பத்து ஆண்டுகளுக்கும் மேல் அங்கே தோசை முதல் சன்னா பரோட்டா வரை கிடைக்கிறது. அது மட்டும் அல்லாமல் மனிதனின் மலம் அங்கே சரியான முறையில் அப்புறபடுத்தாதனால் அங்கு காட்டிற்கு ஏற்படும் சுகாதார கேட்டினை ஒரு சுற்றுசூழல் தன் ஆர்வலுருமான நண்பரின் மூலம் அறிந்து கொண்ட பொழுது நெஞ்சம் கனக்கிறது. அன்றெல்லாம் எப்படி இருக்கும் தெரியுமா என்று சொல்லும்பொழுது பழைய நினைவுகளின் மீது ஏக்கம்/Nostalgia வரவில்லை. மனிதனின் மீது கோபமே வருகிறது. நீங்கள் ஒரு இடத்தில் குறிப்பிட்டு இருந்தீர்கள். காடு மனிதன் அனுபவிக்க படைக்க பட்டாதக எண்ணிக்கொள்கிறான். அற்பமான மனிதன்!! ]
12. நாகரீகம் என்பது நகர் சார்ந்தது. அதற்கு எதிர்ப்பதம் காட்டுமிராண்டி என்று பள்ளிகள் முதலே கற்பிப்பபடுவது. காட்டை வென்றடக்கும் ஊர்களின் கதையே மனித நாகரீகம் போலும். ஆனால் நகரம் என்பது எவ்வளவு செயற்கையானது. காடு எவ்வளவு இயற்கையானது என்று யோசிக்க தவறுகிறோம்.
பொது
மேலே காதல், நகரம் என்று மட்டும் அல்லாமல் நான் பொதுவாக ரசித்த இடங்கள்.
1. அவன் அம்மாவிடம் ஏற்படும் இழப்பினை காதலிக்கும் கணத்தில் அன்னையை கண்டுக்கொள்கிறான் என்னும் இடத்திலும்... பின்பு அடிக்கடி தின்பதற்கு ஏதாவது தந்து முன்போலவே இருந்தாலும் கூட..வெகுதூரத்தில் என்னை உணர்ந்தேன் இடத்திலும்.. ஒரு நிமிடம் நின்று மீள் வாசிப்பு செய்தேன்!
2. பெயர்களில் உள்ள அப்பத்தத்தை பற்றி ஒரு இடத்தில் கூறியிருப்பீர்கள். அவை ஒருபோதும் மந்திரங்களாக முடியாது. எவரும் அதைப் பிடித்து ஏறி முக்தியைத் தொடமுடியாது - என்னும் இடம் அற்புதம். நான் பதின் வயதில் இருக்கையில் நடந்த ஒரு நிகழ்ச்சியுடன் ஒப்பிட்டுக்கொள்வேன். எனது அப்பாவின் பெயர் ஆறுமுகம். இதனை கேட்ட ஒருவர் உங்கள் பெற்றோர்கள் கலப்பு திருமணமா என்று கேட்டார். ஆம் என்றேன். எப்படி பேரை மட்டும் வைத்து அவர் கேட்டார் என்று எனக்கு ஆச்சர்யம். எனது பாட்டியை கேட்டேன். பாட்டி சொன்னாங்க நம்முள்ள அப்படி பெயர் வைக்க மா என்று கேட்டதற்கு பெயர் கடவுளின் சமஸ்கிருத பெயராக இருந்தால் உன்னை கூப்பிடுபவர்களுக்கு முக்தி அடைய வாய்ப்பு உண்டு என்று. அதற்கு ஒரு உதாரணம் கொடுத்தார்கள். துரியோதனனுக்கு புஷ்ப விமானம் வந்துச்சாம். வந்துச்சு ஏன்னா கிருஷ்ணா கிருஷ்ணா என்று கிருஷ்ணனின் பெயரை உச்சரித்துக்கொண்டே இருந்தானாம். அன்றே எனக்கு அபத்தமாக தோன்றியது ஏன்றால் இன்னொரு பக்கம் கர்ணன் அவ்வளவு கொடைகளை அளித்ததனால் முக்தி அடைகிறான் என்று படம் பார்த்து உள்ளோம்.
3. ஒரு மனிதனின் பழக்கங்கள் அவனுடைய மனம்தான். தன் மனதின் மேலேயே பிடி இல்லாத எளிய மனிதர்கள் பிறரது மனம் மீது கட்டளைகளை விதிக்கிறார்கள் ஆலோசனைகள் சொல்கிறார்கள். வருத்தமும் ஆதங்கமும் கொள்கிறார்கள். என்னும் இடம்.
4. "கருமையளவுக்கு அது இளமையை வெளிப்படுத்துவதில்லை. கரிய நிறம் கண்களை நிறைத்து விடுகிறது" போன்ற சிறு சிறு இடங்களையும் ரசித்தேன்.
5. மனுஷ உடல்ல இருந்து மலம் போறது மாதிரி மனசில இருந்தும் போகணும்
6. தருக்கம்னா அது அதருக்கத்தை போய்த் தொடணும். அப்பதான் அதுக்கு மதிப்பு..... ஏன்னா, ஒவ்வொரு தர்க்கத்துக்கும் கண்டிப்பா எதிர் தர்க்கம், சமானமான வலிமையோட இருக்கும்
7. "என்ன ஒரு அசைவு! செயற்கையான பவ்யம், தளுக்கு, வெக்கம் ஒண்ணும் கிடையாது. ஆனா மலர்ச்செடி அசையறா மாதிரி ஒரு மென்மை, நளினம்... பார்வதிதேவி மலைமகளா இப்படித்தான் இருந்திருப்பா சிவனுக்கு பித்துப் பிடிக்க வைக்கிற சிவகாமசுந்தரி." ... ஒரு பெயரை நான் இப்படி நோக்கியது இல்லை. அவ்வளவு அழகு.
8. "ஒரு சங்கீத கச்சேரியில் இருப்பவர்களைப்போல ஒரு மிகையான நெகிழ்வு. ஆனால் நெகிழ்வையே கணக்கு வழக்கின் மொழியில் சொல்வார்கள்" - கச்சேரிகளில் சில நேரங்களில் எரிச்சல் அடையும் அளவுக்கு செய்வார்கள். அவர்கள் கணக்கு போடுவது அவர்களின் உரிமை. ஆனால் பக்கதில் உள்ளவரிடம் கலந்துரையாடும் பொழுது அது என்னை எரிச்சலடைய செய்கிறது.
கடைசியாக/கிளைமாக்ஸ்
அவன் அவளுடைய அருகாமையை அவன் புலன்கள் கொண்டாடும் இடம் தன் அகம் போன்றது என்னும் இடங்கள் அதுவும் காடு போன்றது. பின்பு இருவரும் மலர்களை எறிந்து விளையாடும் இடத்தில் அங்கே உரசுவது மனங்கள். அது சிறுவிளையாட்டு என்னும் இடம். அருகாமையில் இருக்கையில் காற்று வெளியிடையையும் காலத்தையும் நிரப்ப முனைவது. காதல் எவ்வளவு அகம் சார்ந்த ஒரு விஷயம் என்று கூறுகிறீர்கள். ... ஆனால் இவை அனைத்திலும் ஒன்றையும் நிகழ்த்தாமல் காலம் சென்றுக்கொண்டு இருக்கிறது.
அதேப்போல இறுதியில் அவன் நீலியின் அருகாமையை உணர்கிறான். ஆனால் மாமியுடன் ஏற்படும் உறவினால் அவன் காதல் என்னும் கனவினை இழக்கிறான். அங்கே அக்கனவாக நீலி அழும் காட்சி அற்புதம். அவன் கனவை கொன்று/ தொலைத்து நிகழ் காலத்திற்கு வருகிறான். பின்பு வாழ்வில் செல்லும் பொழுது அவன் மனைவியுடன் மகிழ்ச்சியிள்ளாத வாழ்க்கை, மாமியின் நினைவுகள் அவனை ஒரு வழி செய்கிறது. காதலும்/ காமமும் கேளிக்கை ஆகுகிறது. ஒரு கட்டத்தில் மூத்திரம் போகவே கஷ்டப்படுகிறான். அவன் வாழ்வில் தோல்வி அடைகிறான்.
காடு ஒரு நல்ல அனுபவமாக இருந்தது. அதனில் ஒரு 2-3 நாட்கள் அலைந்து கொண்டு இருந்தேன். என்னுடைய வாசிப்பினை யாரிடமாவது கலந்துரையாடிக் காட்டினை இன்னும் அறிந்துக்கொள்ள நினைத்து கடலூர் சீனுவிற்கு அழைத்தேன். அவர் நான் காணாத இடங்களையும் தளங்களையும் காண்பித்தார். அப்போழுது தான் நான் ஆழமாக வாசிக்காத இடங்களை தெரிந்துக்கொண்டேன். அவரும் என்னை தொகுத்துக்கொள்ள ஊக்குவித்தார். ஆதலால் முதல் முறையாக தொகுத்துக்கொள்ள முனைந்தேன்.
காடு போன்ற படைப்பிற்கு மிக்க நன்றி!
அன்புடன்,
ராஜேஷ்