ஆத்திச்சூடியில் ஒரு சொல் இருக்கிறது. “வையத் தலைமை கொள்”. பாரதி ஒவ்வொருவரையும் பார்த்துச் சொல்கிறான் வையத் தலைமை கொள். இதில் ஒரு முரண்பாடு உண்டு.
வையகம் ஒன்றுதான். அதற்கு நான் தலைமை ஏற்றுக்கொண்டால் அந்த சொல் உங்களுக்கு இல்லையா? அப்படி சொன்னால் இந்த வையத் தலைமை கொள் என்கிற சொல்லுக்கு என்ன பொருள். சில இலக்கியச் சொற்களுக்கு பொருள் அற்புதமாக இருக்கிறது. ஆனால் பொழிப்புரை தந்தவர்கள் தவறாக தந்து விடுகிறார்கள். ஒரு வார்த்தைக்கான பொருள் எப்போது நமக்கு புரிந்துபோகிறதோ வாழ்க்கைக்கான அர்த்தம் அப்போது புரிந்து போகிறது.
“வையத் தலைமை கொள் என்பதற்கு ஒரு உதாரணம் சொல்கிறேன். இன்று போலியாக நடித்துக்கொண்டிருப்பவர்களுக்கு இந்த உலகம் கோடி ரூபாய் கொட்டிக் கொடுக்கிறது. ஆனால் அதுவே ஒரு உண்மையான சிந்தனையாளனுக்குத் தரமாட்டார்கள். அப்படியென்றால் சிந்தனையாளர்கள் எல்லாம் கோடீஸ்வரர்களாக மாற மாட்டார்களா? சுகி சிவம் சொல்வார், “நான் கோடீஸ்வரன்தான், எப்போது தெரியுமா”? நான் சுகி சிவம் பேசுகிறேன் என்று சொன்னால் தமிழகத்தில் ஒரு கோடி காதுகள் எப்போது திறந்துகொள்கின்றனவோ அப்போது நான் கோடீஸ்வரன் ஆகிறேன்.” இப்போது எனக்கு “வையத் தலைமை கொள்” என்ற வார்த்தைக்கு அர்த்தம் புரிகின்றது. நீங்கள் எந்தத் துறையில் இருந்தாலும் நீங்கள் அந்தத் துறையில் வல்லமை பெற்றீர்களென்றால் “வையத் தலைமை” கொண்டிருக்கிறீர்கள் என்று பொருள். எந்தத் துறையை கையில் எடுத்தாலும் அந்தத் துறையில் முழுமையாக ஈடுபாடு கொண்டு அந்த உச்சத்தை தொடுவதற்கான வாய்ப்பு. அதுதான் வல்லமை. அது ஒவ்வொருவரிடத்திலும் இருக்கிறது. நான் இன்றைக்கு ஒரு வார்த்தையை விதைக்கிறேன். நண்பர்களே! அந்த வார்த்தையை உங்கள் மன அறையில் எழுதி வைத்துக்கொள்ளுங்கள். உங்கள் குழந்தைகளுக்கு மந்திரமாக சொல்லிக் கொடுங்கள். “வியப்பது வீழ்ச்சி” யாரைப் பார்த்தும் நீங்கள் வியக்காதீர்கள்.
நன்றி: நமது நம்பிக்கை