Featured Post

Daily Project திருக்குறள்

Dear Readers / Friends, http://DailyProjectThirukkural.blogspot.com/    By interpreting various meanings for every word in a Thirukkur...

April 07, 2021

மண்ணில் உப்பானவர்கள்


கடந்த 3 நாட்களாக சித்ரா பாலசுப்ரமணியன் அவர்கள் எழுதிய ”மண்ணில் உப்பானவர்கள்” என்ற புத்தகத்தை வாசித்தேன். இப்புத்தகம் உப்பு சத்தியாகிரஹம் என்னும் மகத்தான யாத்திரையை பற்றியது. விடுதலை நோக்கிய பயணத்தை பற்றிய புத்தகம்.

இப்புத்தகத்தில் பல தளபதிகளின் வாயிலாக இந்திய விடுதலை நோக்கிய இப்பயணம் முழுவதும் காந்தி வருகிறார். அது அவருடைய மகத்தான ஆளுமையை காட்டுகிறது. காந்தியை ஏக கதாநாயகனாக காண்பிக்காவிட்டாலும், பல எளியோர்களும் தலைவர்களும் இதன் நாயகர்களானாலும், இவர்களை விடுதலை நோக்கிப் பயணம் செய்ய வைத்ததில் காந்திக்கு மிக பெரிய பங்கு உண்டு என்பதை இப்புத்தகம் முழுக்க  நேரடியாக காணலாம்.

இன்றைய காலகட்டங்களில் ஒரு நாள் நடைபெறுகின்ற அரசியல் பேரணிக்கு சில பல கோடி ரூபாய்களில் பணத்தை செலவு செய்கின்றனர். அனைத்தும் ஆதாய நோக்கோடு மட்டுமே. ஆனால் 80 ஆண்டுகள் முன்பு தகவல்தொடர்பு வசதிகளும் போக்குவரத்து வசதிகளும் இல்லாத காலக்கட்டங்களில் எளியோர்களை தாமகவே முன்வந்து இப்போராட்டத்தில் பங்கேற்க மனதில் எழுச்சியை உருவாக்க விதையை விதைத்தவர் காந்தி. மிக எளிமையாக நடந்த போராட்டம்.

வழி நெடுக்கிலும் நான் கண்டவை/ கற்றவை/ பெற்றவை

1) இப்படிப்பட்ட மிகப்பெரிய போராட்டத்திற்கு தேவை ஒழுக்கமும் மனதிடமும் அச்சமின்மையும் சுயகட்டுப்பாடும். அதற்கு தகுதியானவர்களை பல வாரங்கள் ஆசிரமத்தில் தயார் செய்கிறார் காந்தி. இவர்களுக்கு ஒரு நாளில் பின்பற்ற வேண்டிய பணிகள் பற்றி ஒரு தெளிவான அட்டவனை / திட்டம் உண்டு.   காலை 4 மணிக்கு எழுந்து இரவு 9 மணிக்கு உறங்குவது வரை. சத்தியாகிரஹிகள் தினமும் நாட்குறிப்பு எழுதவேண்டும் என்று கூறுகிறார்.

2) உணவு, உடை, தங்குமிடம் மிக எளிமையாக இருத்தல் வேண்டும். அவற்றை செல்லும் வழியில் மக்கள் கொடுப்பதில் இருந்து பெற்றுக்கொள்ள வேண்டும். எளிமையை கடைப்பிடிக்க வேண்டும்

3) காந்தி ஒரு ஊருக்கு செல்வதற்கு முன்பாக ஒரு குழு (விடியலின் படை) சில மணி நேரம் முன்பே சென்று தங்குவதற்கு தேவையான அனைத்தையும் தயார் செய்யும்

4) காந்தி கைது செய்துபட்டால் போராட்டத்தை தொடர அடுத்தகட்ட தலைவர்களை காந்தி கண்டைந்து அவர்களை போராட்டத்தை வழிநடத்த கூறியுள்ளார்

5) முதலில் உப்பு சத்தியாகிரஹப் போராட்டத்தை யாரும் பெரிதா எடுத்தகொள்ளவில்லை என்றாலும் இப்போராட்டத்தின் பிரமாண்டத்தை காந்தி திடமாக நம்பினார்

6) மற்றவர்களை விட ஓய்வின்றி அதிகம் உழைத்தவர் காந்தி. கடிதங்கள், கட்டுரைகளை, நேர்காணல்கள், உரையாடல்கள், பேச்சு என காந்தி நாள் முழுவதும் ஒரு நோடிக்கூட வீண் செய்யாமல் உழைத்திருக்கிறார்.

7) வழி நெடுக்கில் தீண்டாமை, சாதிய பாகுபாடு ஆகியவற்றை கறாராக கண்டிக்க காந்தி ஒரு போதும் தயங்கவில்லை. ஆங்கிலேயரிடம் இருந்து விடுதலை என்பது அதிகார மாற்றம் அல்ல. மக்களுக்கு கிடைக்கும் சுதந்திரமும் சுயமரியாதையும் தான் உண்மையான விடுதலை என்கிறார். தீண்டாமை ஒழிக்காமல் விடுதலை பெற்று ஒரு பயனும் இல்லை என்கிறார்.

8) போராட்டத்தில் பெண்களின் பங்கு மிக அவசியம் என கருதிகிறார் காந்தி. 

9) அரசாங்கத்திற்கு அனைத்தையும் அறிவித்துவிட்டே செய்கிறார்.

10) இப்பொழுது தேவை ஒத்துழையாமையே என்பது காந்தி அளித்த செய்தி. மக்கள் ஒத்துழையாத பொழுது அரசுகள் அதிகாரம் செய்ய முடியாது என்று திடமாக நம்பினார். அதனை மற்றவர்களும் உணரும் படி செய்தார்.

11) தண்டி போன்ற சிறு கிராமம் பலரின் வருகையை தாக்குபிடிக்காது. ஆதலால் அனைவரும் அவரவர் உணவு இருப்பிடத்தைப் பார்த்துக்கொள்ளவேண்டும் என்கிறார்

12) ஒரு பிடி மண் என்றாலும் அதில் தான் இத்தேசத்தின் கௌரவும் உள்ளது என்ற செய்தியை எல்லார் மனதிலும் கடத்துகிறார்

13) இந்த யாத்திரை எளியோர்களால் ஆனது. நகரங்களும் தார் சாலை வழிகளும் அல்லாமல் கிராமங்கள் மூலம் மட்டுமே காந்தி பயணித்து இருக்கிறார். அவ்வாறே கடைக்கோடி எளியோரையும் தன் செய்தியின் மூலமாக சென்றுஅடைகிறார் காந்தி.

14)  பல செல்வந்தர்கள் தங்களது வசதிகளை சொத்துகளை துறந்து காந்திய கொள்கையை பின்பற்றி எளிய வாழ்கையை மேற்கொண்டு இப்போராட்டத்தில் பங்கேற்றனர். 

15) வயதையும் உடல்நலனையும் பொருட்படுத்தாமல் பலர் ஒவ்வொருநாளும் 15 முதல் 25 கிலோமீட்டர் தூரம் வரை நடந்துள்ளனர். 

16) உறவுகளை பேணுவதில் காந்திக்கு நிகர் காந்தியே. அதனால் தான் அவருடன் நூற்றுக்கணக்கான தளபதிகள். காந்திய பண்புகள் இருந்தாலும் அவரவருக்கு தனி அளுமைகள் உண்டு. 

17) சர்வதேச ஊடங்களுடன் காந்தியின் தரப்பையும் இந்தியாவின் தரப்பையும் முன்வைக்க சிறந்த ஊடகியவியலாளர்களை தேர்ந்தெடுத்து அப்பொறுப்பை அவர்களிடம் அளிக்கிறார் காந்தி.

18) எத்தகைய நிலையிலும் சமநிலை குலையாமல் இருக்கிறார் காந்தி

19) எல்லா வாரமும் திங்கட்கிழமை அன்று அவருடைய மௌனவிரதத்தை கடைப்பிடிக்கிறார். எந்த ஒரு புதிய செயலை செய்யும் முன் இரண்டு நாட்கள் மௌன விரதமும் உபவாசமும் இருக்கிறார் காந்தி. அவ்வாறே ஒரு போராட்டத்திற்கு மனதளவிலும் உடலளவிலும் தயாராகிறார் காந்தி.

20) உப்புச் சட்டத்தை மீறவேண்டியதின் அவசியத்தை செல்லுமிடமெல்லாம் கூறிக்கொண்டே செல்கிறார் காந்தி

21) நேரம் தவறாது செயல்களை திட்டமிட்டபடி செய்பவர் காந்தி.

22) கூட்டம் கூடினால் மட்டும் போதாது மக்களும் போராட்டத்தில் பங்கேற்க வேண்டும் என்று நினைக்கிறார் காந்தி

23) ஆடம்பரமாக நடைப்பெறவேண்டிய போராட்டம் அல்ல இது. இந்த விடுதலை எளியவர்களுக்கானது.  மிக மிக எளிமையாக நடைபெற வேண்டியது. வல்லரசு கனவுகள் இல்லை ஏனெனில் இத்தேசம் எளியவர்களுக்கானது என்பதை தன் உடன் இருப்போருடன் சொல்லிக்கொண்டே இருக்கிறார். மக்கள் தாமாகவே வந்து பங்கேற்கும் போராட்டமே வெற்றி பெறும் என்று நம்பினார் காந்தி.

24) சுதந்திர கணலை மக்களின் மனதில் மூட்டிக்கொண்டே இருந்தவர் காந்தி

25) உப்பையும், நூற்று செய்த கதர் ஆடைகளை பலர் விற்று இப்போராட்டத்திற்கு பணம் சேர்த்துக்கொடுத்துள்ளனர். ஆனால் பணத்தை விட மக்களின் பங்கேற்ப்பே மிக அவசியம் என்று காந்தி கருதுகிறார்.

26) ஒவ்வொரு ஊரின் வழியாக செல்லும் பொழுதும் ஆங்கிலேயர்கள் கிராமத்துமக்களுக்கு கடுமையான உத்தரவுகளை போடுகிறது. ஆனால் கிராமத்து மக்கள் போராட்டத்திற்கும் தண்ணீரும் உணவும் தங்குமிடமும் கொடுத்து தங்கள் ஆதரவை தந்துக்கொண்டே இருக்கிறார்கள்

27) உப்பு சத்தியாகிரஹம் நாடு முழுவதும் பல்வேறு இடங்களில் நடக்கிறது. அதுவே காந்தியின் வெற்றி. 

28) முக்காடு போட்டுக்கொண்டு வீட்டை தாண்டாத பெண்கள் கூட இப்போராட்டத்தில் அதிக எண்ணிக்கையில் பங்கேற்கின்றனர்

29) உப்பு சத்தியாகிறத்தை முதலில் இருந்து நம்பியவர் இராஜாஜி. வேதாரண்யத்தில் இராஜாஜி உப்பு சத்தியாகிரஹத்தை தலைமையேற்று நடத்தினார். அதற்கு பலரை கறாரான முறையில் நேர்காணல்கள் வைத்து தேர்வு செய்து நடத்தினார். 

30) எண்ணற்ற எளியோர்களும் பல தலைவர்களின் பங்கேற்பே இப்போராட்டத்தை வழி நடத்தியது.

உப்பு சத்தியாகிரஹம் துவங்கியப் பிறகு புதிய இந்தியா பிறந்தது எனலாம். அதில் சுதந்திரத்தின் கணலை வளர்த்து அதனை தொடர்ந்து பாதுகாத்தார் காந்தி. தன்னலமற்ற பலரின் தியாகத்தாலும் பெருஞ்செயல்களாலும் கிடைத்து இந்தச் சுதந்திரம். அதனை இப்புத்தகம் வாசிக்கும் தோறும் உணர்ந்தேன். அத்தகைய உணர்வை தன் எழுத்தில் மூலம் சாத்தியப்படுத்திய சித்ரா பாலசுப்ரமணியன் அவர்களுக்கு நன்றிகள் பல.

சீரான Tone-இல் அழகிய தரமான  புகைப்படங்களுடன் இப்புத்தகம் பதிப்பித்த தன்னறம் நூல்வெளி (பதிப்பகத்திற்கு) பாராட்டுக்கள். பெரும்பாலான தலைவர்களின் புகைப்படங்களை பார்த்துக்கொண்டே சென்றது ஒரு தனி வாசிப்பு அனுபவத்தை தந்தது.

அனைவரும் படிக்கவேண்டிய மிக முக்கியமான புத்தகம்.

No comments:

Post a Comment