Featured Post

Daily Project திருக்குறள்

Dear Readers / Friends, http://DailyProjectThirukkural.blogspot.com/    By interpreting various meanings for every word in a Thirukkur...

January 18, 2016

கள்ளிருக்கும் மலர்க்கூந்தல் ....

மூலம்: எழுத்தாளர் ஜெயமோகன் (சுட்டியைத் தட்டுக)
"கள்ளிருக்கும் மலர்க்கூந்தல் சானகியை மனச்சிறையில் கரந்த காதல் உள்ளிருக்கும் எனக்கருதி உள் புகுந்து தடவியதோ ஒருவன் வாளி"

ராமன் ராவணனை வதம் செய்யும் காட்சிச் சித்திரம்


சில நாட்கள் முன்பு இவ்வரிகளை வாசித்து அதன் பொருளை, காவியத்தின் உச்சத்தை (காவிய உச்சமாக அமைவது அதிமானுடங்கள் இரண்டு மோதிக்கொள்ளும் ஒரு புள்ளி) மானுடன் வழியாக கம்பன் நிகழ்த்தி இருக்கும் கம்பராமயண வரி இது. இதற்கு பொருள் ஜெயமோகனின் எழுத்தால் பார்வையால் பார்க்க முடிந்தது. மானசீகமான் நன்றிகள்.

பொருள் இதோ (நன்றி: ஜெயமோகனின் வலையத்தில் இருந்து [சுட்டியை தட்டவும்]):

காவியம் என்பது கடல்போல் விரிந்து செல்லும் பேருள்ளம் கொண்ட கவிஞனால் கடவுளுக்கு நிகரான இடத்தில் நின்று இவ்வாழ்க்கையை நோக்கி எழுதப்படுவது. அவனுக்கு அந்தத் தளத்தில் மானுட உண்மைகளே கண்ணுக்குப்படுகின்றன, எளிய விருப்புவெறுப்புகள் அல்ல.

கம்ப ராமாயணத்தின் நாயகன் ராமன். அறத்தின் மூர்த்தியாக ஒரு மானுடனைப்பற்றிப் பேசுவதே கம்பனின் நோக்கம். ஆனால் காவியகர்த்தனாகிய கம்பன் கவிதையின் ஆயிரம் கால் புரவியில் ஏறிக்கொள்ளும் போது கம்பன் எனும் மானுடனை சிறிதாக்கி மெலெழுகிறான். அது நிகழாவிடில் அந்நூல் காவியமே அல்ல.

ராமனின் அனைத்துச் சிறுமைகளும் கம்பனால் தான் சொல்லப்படுகின்றன. ராவணனின் அனைத்து மாட்சிகளும் கம்பன் சொல்லாலேயே துலங்கி வருகின்றன. புலவர் குழந்தையே கம்பனில் அள்ளியே தன் காவியத்தை ஆக்கியிருக்கிறார். கம்பன் எவரையும் கீழிறக்கவில்லை. அவன் காவிய உச்சமாக அமைவது அதிமானுடங்கள் இரண்டு மோதிக்கொள்ளும் ஒரு புள்ளி.

ராவணன் ராமனின் அம்பு பட்டு விழும் உச்ச கட்டம். கம்பனின் சொற்கள் இப்படி எழுகின்றன. கோல் பட்டுச் சீறி எழும் ராஜநாகத்தைப் போல…

கள்ளிருக்கும் மலர்க்கூந்தல் சானகியை மனச்சிறையில் கரந்த காதல் உள்ளிருக்கும் எனக்கருதி உள் புகுந்து தடவியதோ ஒருவன் வாளி

இங்கே அரக்கனைக் கொல்லும் அவதாரம் அல்ல, அறமிலியை அழிக்கும் பேரறத்தான் அல்ல ஒரு கணவனும் இருக்கிறான். தன் மனைவி மேல் காமம் கொண்ட அன்னியனின் உள்ளத்தின் ஆழத்து அடுக்குகளுக்குள் சென்று தேடித் தேடித் துழாவிச் சலிக்கும் ஒரு கணவனின் உள்ளத்தை காணமுடிகிறது இவ்வரியில்.

ஒவ்வொரு சொல்லாலும் அந்த நுட்பத்தை நிகழ்த்துகிறான் தமிழ்த் தெய்வம் சன்னதம் கொண்டெழுந்த நாவினன். சீதை கள்ளிருக்கும் மலர்க் கூந்தல் ஆகச் சொல்லப்படுகிறாள். கற்பின் கனலாக அல்ல, மோகவல்லியாக. பித்தூட்டும் பெண்ணாக.

அசோகவனத்தில் கோடை நதியென மெலிந்து தெளிந்து ஒளி கொண்டு தவக்கோலம் பூண்டிருக்கும் நாயகி அல்ல அவன் நினைக்கும் அப்பெண். கள் மலர் சூடி கண்மலர்ந்து சிரித்து ராமனை களி கொள்ள வைத்த இளங்கன்னி. அவன் அங்கு தேடுவது அவளை.

ராவணன் அந்தக் கன்னியை தன் ஊன்விழிகளால் கண்டிருக்கவே மாட்டான், அவனுள் கரந்த காதலன் காணாமலிருப்பானா என்ன?

ராவணன் சீதையை கவர்ந்து வந்தது தெரிந்த காதலே. அப்படியென்றால் கரந்த காதல் எது? எங்கோ ஆழத்தில் அப்பாலும் ஒரு காதல் இருந்ததா? முற்றிலும் வேறானது? கள்ளிருக்கும் மலரா அவன் உள்ளம்?

ராவணனின் நகர்ச்சிறையிலிருந்து அவளை மீட்கலாம் ராமன், மனச்சிறையிலிருந்து எப்படி மீட்பான்? உள்ளிருக்கும் எனக் கருதி தடவுகிறது அம்பு. பதைப்புடன் ஏமாற்றத்துடன் சீற்றத்துடன்…

இன்னும் சிலநாட்களில் அவளை அனல்தேர்வுக்கு அனுப்பப் போகிறவன் அவன். அதற்கு ஒர் சலவைக்காரரின் சொற்கள் மேலதிகமாகத் தேவைப்படுகின்றன , அவ்வளவே. அதற்கான அந்தத் தவிப்பு அவனுள் இப்போதே இருக்கிறது.
இந்த உச்சத்தில் மானுட ராமனின் அம்பு பட்டுச் சரியும் அமரக்காதலனாகிய ராவணனே வாசகனின் கண்முன் பேருருவம் கொள்கிறான். அவனை நோக்கியே காவியகர்த்தனும் கண்ணீர் உகுக்கிறான் எனத் தோன்றுகிறது.

வீழ்ந்தான் அரக்கன் என அலையெழுந்து பூசல் கொண்டாடவில்லை கம்பனின் சொற்கடல். அங்குநிகழும் மானுட நாடகத்தின் உள்ளே புகுந்து தடவிச் செல்கிறது காவியச்சொல் எனும் வாளி. அங்கு கவிஞன் பிரம்மத்தின் சொல்வடிவத் தோற்றமென நின்றிருக்கிறான்.

பின்னும் மனம் விரியும் வாசகன் மட்டுமே பெருங்காதல் கொண்ட கணவனே ஆயினும் , பேரறத்தான் ஆயினும், புவியணைந்த பரம்பொருளே ஆயினும் அவன் மானுடன் என உணர்ந்து , அவன் ஆழம் தன் ஆழமே என உணர்ந்து அவனை மேலும் அறிவான். நீ நான் என இங்கு வந்தவன் அல்லவா என நெகிழ்வான்.


கம்பர்

No comments:

Post a Comment