Featured Post

Daily Project திருக்குறள்

Dear Readers / Friends, http://DailyProjectThirukkural.blogspot.com/    By interpreting various meanings for every word in a Thirukkur...

January 20, 2025

உன்னை யாரும் அணைத்துக் கொள்ளவில்லையா

”மார்போடு கண்கள் மூடவா” என்பதின் ஆன்மீக தொடர்ச்சி.

17-Jan-2025 - 18-Jan-2025

வெள்ளிமாலை கல்வி சார்ந்த ஒரு ஆய்வு செய்வதில் இருந்தேன். அதை பற்றி விசாரிக்க அவளை அழைத்தேன். அவளிடம் அதைப்பற்றி கதைத்துவிட்டு உறங்கினேன். 

நான் சற்று அயர்ச்சியுடன் படத்துக்கொண்டிருக்கிறேன். அவள் எனக்கு பணிவிடை செய்கிறாள். பின் தன் அன்றாட வேலைகளை அன்றாடத்திற்கே உரிய அலட்டலில்லா இயல்புடன் ஒரு சுங்கடி ஸ்டையில் நைட்டியில் செய்துகொண்டிருக்கிறாள். அவளை அப்படிக்காண்பது அதுவே முதல்முறையா? பலவேறு அலைச்சல்களில் நாம் சிலவற்றை நிதானமாக அசைப்போட நினைப்பதில்லை. ஆனால் அப்போது அவளை நான் என் மனதில் அசைப்போட்டேன். எங்களுள் அப்படி ஒரு அந்நியோனமா என்று உணர்கையில் என் உடலெல்லாம் நான் உணர்ந்த பரவசமென்பது ஒரு பசு நல்ல இதமான வெய்யிலில் ஆர அமர பெறவிரும்பும் கதகதப்பைபோன்றது. அப்படி ஒரு லயிப்பு.

அவளைப்பார்த்துக்கொண்டே இருக்கிறேன். அவள் செய்யும் ஒவ்வொரு அசைவும் என்னுள் தித்திப்பைக்கூட்டிக்கொண்டே சென்றது. இப்போது யோசிக்கையில், ஒரு கூழாங்கலை எத்திசை தொட்டலும் அழகு எத்திசையில் நோக்கினாலும் எப்படி நோக்கினாலும் அழகு. அதுப்போல் அவள் அசைவுகள் என்னுள். 

(புத்தகத்தின் அட்டைப்படத்தை தலைப்பைமட்டும் வைத்துக்கொண்டு photoshop செய்துவிட்டேன்)

எனக்குள அவளை அப்போதே சென்று அணைத்துக்கொள்ள வேண்டும்போல் இருந்தது. எழுந்துச்சென்று வேலையில் இருந்தவளை அணைத்துக்கொண்டேன். அவளும் என்னை அணைத்துக்கொண்டது அவளுக்கு என்னை அணைத்துக்கொள்ள ஏங்கியதாகப்பட்டது. அவளை நான் எழுந்துச்சென்று அணைத்துக்கொண்டேன் என்றா சொன்னேன். தெரியவில்லை. அவளை அவ்வளவு எளிதாக சென்று அணைத்துக்கொண்டேனா என்று. எளிதல்ல. என்னை நானே அத்தனை முறை உசாவினேன். இவ்வணைப்புத்தான் நம் உறவை ருசுபிக்கும்மா என்ன? இல்லை. இல்லை. அவ்வணைப்பு எனக்கு தேவைப்பட்டது. அந்த சில நிமிடங்கள் எனக்கு நாள் முழுதும்  மனதுள் ஒளிபரப்பு ஒரு காலை சூரியனாக இருந்தது. 

ஒரு அணைப்புத் தரும் அணுக்கத்தின் உத்திரவாதம் வேறு ஏதாவது தந்துவிட முடியுமா என்ன? ஆனால் அவளை அணைக்க ஏன் இந்த கூச்சம் தெரியவில்லை. எதை எதையோ நார்மலைஸ் செய்யும் இந்த உலகம் ஹகையும் நார்மலைஸ் செய்திற்கலாம் குறைந்தது இரு தசாப்த்தங்கள் முன்பே.

மனுஷ்யபுத்திரனின் “உன்னை யாரும் அணைத்துக்கொள்ளவில்லையா?” கவிதை தொகுப்பை அந்த தலைப்பிற்க்காகவே வாங்கவேண்டும். அதுவும் அது விற்றுத்தீர்க்கும் முன்பே.